Advertisement

உங்களை நம்பித்தான் நாங்கள்!

ஒரு வாரத்திற்கும் மேலாக, தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அரசு பஸ்கள் இயங்கவில்லை. சாமானிய மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் பேருந்துகள் இல்லாததால், மக்கள் சிரமங்களுக்கு ஆளாயினர்.
ஆனால், வேலைநிறுத்தம் செய்பவர்கள் மீது ஏற்படும் வெறுப்பு, ஏனோ இந்த முறை உருவாகவில்லை. நம் தற்காலிக கஷ்டம், அவர்கள் காலம் முழுக்க துயரத்தை உணர வைத்தது.கொஞ்ச நாள் முன், ஒரு பஸ் டிரைவர் நெஞ்சு வலிக்கிறது பஸ்சை ஓரமாக நிறுத்தி, அதில் பயணம் செய்த அனைவரையும் காப்பாற்றினார்.
மாரடைப்பு ஏற்பட்டிருந்ததை பற்றியோ, தன் குடும்பத்தை பற்றியோ யோசிக்காமல், டிரைவர்கள் பேருந்தை ஓட்டி வருகின்றனர். அவர்களின் உடல் நிலையை பற்றி யாராவது, எப்போதாவது கவலைப்பட்டிருப்போமா?
மழை, வெயில், குளிர் எதையும் ஓட்டுனர்கள் பொருட்படுத்தியதே இல்லை.பண்டிகை தினங்களில் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கத்தான் அவர்களுக்கும் ஆசை இருந்திருக்கும். ஆனால், நாம் நம் குடும்பங்களுடன் பண்டிகைகளை சந்தோஷமாக கொண்டாட, அவர்கள் பணி செய்தனர்.பஸ்சில் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள், அரசியல் விவாதங்கள், மாணவர்களின் கலாட்டாக்கள், தகராறுகள், காதல்கள், டிராபிக் பிரச்னைகள் எல்லாவற்றையும் சகஜமாக எடுத்துக் கொண்டனர்.அதுவே அவர்களுக்கு பழக்கமாகி விட்டிருந்தது.
அதுவும், சென்னை நகர சொகுசு பேருந்துகள் இருக்கின்றனவே... அடடா, அதை ஓட்டவே தனி தைரியம் வேண்டும். காயலான் கடைக்கு போக வேண்டிய நிலையில் இருக்கும், பல பேருந்துகளை சாதுர்யமாக ஓட்டியவர்கள் நம்டிரைவர்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு சேர வேண்டிய நிதியை தர அரசிடம் பணம் இல்லையாம்!
கூவத்துார் ரிசார்ட்டில் கூத்தடிக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கொட்ட பணம் இருக்குது. ஆனால், உழைப்பவர்களுக்கு தர பணமில்லை. கேட்டால், போக்குவரத்து துறை லாபத்தில் இயங்கவில்லை என்கின்றனர்.தனியார் பேருந்துகள், ஆம்னி பஸ்கள் பல மடங்கு விலையில் டிக்கெட் விற்று கொள்ளையடிக்க, பர்மிட் கொடுத்தது யார்?
வேலைநிறுத்தத்தால், தமிழக அரசுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என, யோசித்து பார்க்க வேண்டும்.அமைச்சர்களின் கார்களை ஓட்டும் டிரைவர்களுக்கு தரும் சம்பளத்தை, அதை விட பெரிய வாகனமான பஸ்சை ஓட்டுபவர்களுக்கு ஏன் தரக்கூடாது?
பேருந்து ஓட்டுனர்கள் உங்களை போல் இல்லை. ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைக்கின்றனர். அவர்களில் யாருக்காவது கார் இருக்கா சார்?மனைவி, பிள்ளைகளை காரில் அழைத்து செல்ல அவர்களுக்கு ஆசையிருக்காதா?அவர்களுடைய சம்பளத்தில் பிடித்த பணத்தை, ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கு தருவதாக சொன்னதை தான் திரும்ப கேட்டனர்.இதில் என்ன தவறு?
எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பளத்தை தங்கள் இஷ்டப்படி அவர்களே தீர்மானிக்கின்றனர். அவர்களுக்கு ஏன் சம்பள உயர்வு மற்றும் பிற சலுகைகள்?அவர்களை போல டிரைவர்களால், சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்ள முடியுமா... லஞ்சம் வாங்க முடியுமா?எந்த பிரதிபலனும் பாராமல் மக்களுக்கு உழைக்கும் அவர்களுடைய வயிற்றில் அடிப்பது நியாயமில்லை.
டிரைவர்கள் சம்பளத்தில் மாதா மாதம் பிடித்த, பி.எப்., தொகை, விடுமுறையில் பணி புரிந்ததற்கான பணம், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் தரும் பணம் போன்றவற்றை தான் கேட்கின்றனர்.மாதா மாதம் பென்ஷன் கொடுக்க தான் இந்தப்பணத்தை பிடிப்பதாக சொன்ன அரசு, சரியாக அதை கொடுத்ததா?
திடீரென, 'ஸ்டிரைக்' செய்து மக்களை திண்டாட வைத்து விட்டதாக அமைச்சர் சொல்கிறார். மக்களை திண்டாட வைப்பதும், திணற வைப்பதும் அரசியல்வாதிகள் தான்.சாதாரண மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் பேருந்துகளை ஓட்டாமல் நிறுத்திய டிரைவர்களும், மக்களுடைய நிலையை சற்று யோசிக்க வேண்டும்.
நாங்களும் உங்களை மாதிரி உழைக்கும் வர்க்கம் தான். எங்களுக்கு கார், டூ - வீலர் கிடையாது. உங்களை நம்பி தான் எங்கள் காலை வேளை துவங்கும்.இரவு துவங்கும் போது, நீங்கள் தான் எங்களை பத்திரமாக வீட்டில் சேர்த்தீர்கள். பெண்களுக்கு, பாதுகாப்பான வாகனம் பஸ் தான்!நீங்களும் காக்கி உடை போடுவதாலோ என்னவோ, ஒரு வித நம்பிக்கையும், தைரியமும் இருந்தது.
நீங்கள் முதல் நாள் ஸ்டிரைக் ஆரம்பித்த சமயம், பஸ்சிற்காக நெடுநேரம் நின்றிருந்தேன். பெரியமேட்டிலிருந்து, பெரம்பூர் செல்வதற்கு, பஸ்சில், ஆறு ரூபாய் தான் ஆகியிருக்கும். ஆட்டோவில், 150 ரூபாய் வாங்கினார்.என்னை மாதிரி ஆட்களால் ஒரு நாளைக்கு தான் தர முடியும். ஒவ்வொரு நாளும் தர முடியுமா? என்னைப் போல, எத்தனை பேர் இந்த இன்னல்களை சந்தித்து இருப்பர்.
உங்கள் குடும்பத்தினரே வெளியே செல்ல வேண்டும் என்றால், ஆட்டோவிற்கு எவ்வளவு செலவிட வேண்டும். நீங்கள் அரசிடம் கேட்கிறீர்கள்; நியாயம் தான். நாங்கள் யாரிடம் கேட்பது... நாங்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தோம்?பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள், வேலையே இல்லாவிட்டாலும், 50 ரூபாய் டிக்கெட் எடுத்து ஊர் சுற்றி வருபவர்கள் யாருமே உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா?
உங்களுடைய பிள்ளைகள் எப்படி பள்ளிக்கு சென்றனர்... உங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்ய வேண்டியது தான்; தப்பே இல்லை.ஆனால், அது மக்களை இவ்வளவு துாரம் கஷ்டப்படுத்துவதாக இருக்கக் கூடாது. ஏனென்றால், நீங்களும் மக்களில் ஒருவர் தான்!
இந்தப் போராட்டம் இவ்வளவு துாரம் செல்ல, அரசும், போக்குவரத்துத்துறை ஊழியர்களும் தான் காரணம். இரண்டு பேருக்குமே சாமானிய மக்களை பற்றிய அக்கறை இல்லை.மற்ற பிரச்னைகளை, கோரிக்கைகளை ஒரு புறம் வையுங்கள். போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வேலை என்று ஒன்று நிரந்தரமாக இருப்பதே நல்ல விஷயம். அதில் தானே உங்கள் குடும்பத்தை நடத்த முடிகிறது!
ஆனால், ஒரு வாரமாக எங்களை போன்றவர்களின் குடும்பத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல், நாங்கள் தவிப்பதை உங்களால் உணர முடியாதா... உங்களை பற்றியும் சிந்தியுங்கள்; எங்களையும் எண்ணிப்பாருங்கள்!நான் பேருந்தையே நம்பியிருக்கும் ஒரு சாமானியன். நீங்கள் என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்றீர்கள். பத்திரமாக திரும்ப கொண்டு வந்து சேர்த்தீர்கள்.ஆனால், உங்கள் முகத்தை நான் பார்த்தது கிடையாது. எனக்கு உங்களுடைய பெயர்கள் தெரியாது. ஒரு முறை கூட உங்களுடைய நல்ல சேவைக்கு நான் நன்றி சொன்னது இல்லை. தற்போது அதை உணர்கிறேன்!
மீண்டும் அதே உத்வேகத்துடன் வேலையை பாருங்கள். உங்களை நம்பித் தான் என்னை போன்ற சாமானியர்கள் உள்ளனர். அப்சல்எழுத்தாளர்
writer.afzal1gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement