Advertisement

வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா?

சமீப காலமாக பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம். வங்கியில் போட்ட பணம், மீண்டும் கிடைக்குமா... வங்கிகள் நஷ்டம் அடைந்தால், அரசே எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என, அச்சமடைந்து உள்ளனர். அதற்கு காரணம், மத்திய அரசு தாக்கல் செய்ய இருந்த மசோதா!அச்சத்தை போக்க வேண்டியது, மத்திய அரசின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரும் இதை அறிந்து கொள்ள வேண்டியதும் முக்கியம்!
கடந்த, 2008ல், அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான, 'லேமென் பிரதர்ஸ்' திவால் ஆனதும், மடமடவென உலகெங்கும் உள்ள நுாற்றுக்கணக்கான வங்கிகள் திவாலாயின; உலகப் பொருளாதாரம் சரிவடைந்தது.வங்கிகளை துாக்கி நிறுத்த, பல நாடுகள், அரசு பணத்தை செலவிட்டன. அதற்காக, மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டது.
அந்த ஆண்டில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் நடந்த, 'ஜி 20' மாநாட்டில், 'வங்கித்துறை நஷ்டத்தை சரி செய்ய, பொதுமக்கள் வரிப்பணம் ஏன் வீணடிக்கப்பட வேண்டும்?' என்ற பலமான கருத்து எழுந்தது.இந்நிலையில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள், பன்னாட்டு நிதியமைப்புகளை உள்ளடக்கிய, நிதி ஸ்திர அமைப்பு, சுவிட்சர்லாந்து நாட்டின், பாசில் நகரில் ஏற்படுத்தப்பட்டது.
'நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை துாக்கி நிறுத்த, முதலீட்டாளர்கள் தங்கள், 'டிபாசிட்'களின் பெரும் பகுதியை தியாகம் செய்ய வேண்டும்' என, இந்த அமைப்பு, 2011ல் கருத்து தெரிவித்தது. இது, 2014ல், ஆஸ்திரேலியாவின், பிரிஸ்பேன் நகரில் நடந்த, 'ஜி 20' மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இதையடுத்தே, நம் மத்திய அரசு, 'நிதி தீர்மானம் மற்றும் வைப்பு காப்பீடு' என்ற மசோதாவை தயார் செய்தது. இதை, பார்லிமென்டில் தாக்கல் செய்து, சட்டமாக்க விரும்பியது.
இந்த மசோதாவின், 52வது ஷரத்து தான், முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. இதன் படி, முதலீட்டாளர், 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால், வங்கிகள் திவாலாகும் போது, ஒன்பது லட்சம் ரூபாய் கூட தர முடியாது எனக் கூறலாம்...ஐந்து ஆண்டு டிபாசிட்டை, 20 ஆண்டுக்கு கூட நீட்டிக்கலாம்; கடன் பத்திரங்களாக மாற்றம் செய்யலாம் என்பன போன்ற அம்சங்கள், முதலீட்டாளர்களை பயமுறுத்துகின்றன.
இதை, மத்திய அரசின் நிதி நிர்வாக எதேச்சதிகார முடிவு என, சில பொருளாதார வல்லுனர்கள் விமர்சிக்கின்றனர்.ஏராளமான மூத்த குடிமக்கள் தங்கள் கடுமையான உழைப்பின் சேமிப்பை வங்கிகளில் முதலீடு செய்து, வட்டியை வைத்து வாழ்க்கை நடத்துபவர்களாக உள்ளனர்.பெண் திருமணத்திற்காக, ஐந்து ஆண்டுகள் கழித்து எடுப்பதற்காக போட்ட பணத்தை, 20 ஆண்டுகள் கழித்து தான் எடுக்கலாம் என்றால் எப்படி... சேமிப்பு கணக்கில் போட்ட பணம், பங்குகளாக மாற்றப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
ஏன் இந்த நிலை என்பதையும் பார்க்கத் தான் வேண்டும்!வங்கி அதிகாரிகளின் ஊழல்களாலும், கடன் வாங்கிய பெரு முதலாளிகள், கடனை திருப்பி செலுத்தாததாலும், வங்கிகளின் வாராக் கடன், 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டது. அதாவது, வங்கிகளின் மொத்த டிபாசிட்டில், 12 சதவீதத்துக்கு மேல் வாராக்கடன் உள்ளது.இது, வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, மத்திய அரசு, இந்த நடவடிக்கையை எடுக்கத் துணிந்துள்ளது என்கின்றனர், வல்லுனர்கள்.எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மசோதாவில் உள்ள குறைகளை சரி செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கிகளின் ஸ்திரத்தன்மை, ரிசர்வ் வங்கி மீதான மக்களின் நம்பிக்கையை, மத்திய அரசு குலைக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.
முதலீட்டாளர்களுக்கு சிறிய அளவில் வட்டியை தந்து, லாபத்தில் பங்கு தராத வங்கிகள், நலிவடையும் போது, அவர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் அரசே அதற்கு ஒத்துழைக்கலாமா என்ற ஆழமான கேள்வியும் வைக்கப்படுகிறது.இதுபோன்ற கேள்விக்கணைகள் பாய்ந்ததும், மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, 'இது வெறும் மசோதா தான்; சட்டமில்லை. அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு, முதலீட்டாளர்களின் பணம் பாதுகாக்கப்படும்; பீதி அடைய வேண்டாம்' என, விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், கடந்த ஆண்டு, மத்திய அரசு திடீரென மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நினைத்து, மக்கள் பயந்து போயுள்ளனர்.
இந்த மசோதா, சட்டமானால், பழைய படி, மிளகாய் டப்பா, தலையணை அடியில், அரிசிப் பானையில் பணத்தை வைத்துக் கொள்ள வேண்டிய நிலை உருவாகுமா... 'டிஜிட்டல் இந்தியா' என்பது கானல் நீராகுமா... என்ற கவலைகள் எழுகின்றன.கடந்த மத்திய பட்ஜெட்டின் போது, 'மூத்த குடிமக்களின் டிபாசிட்களுக்கு, 8 சதவீத வட்டி தருவோம்' என, மத்திய அரசு அறிவித்தாலும், மிக குறைவான வட்டியையே, வங்கிகள் தருகின்றன என்பதை, பொதுமக்கள் நினைவு கொள்கின்றனர்.
ஆக, மத்திய அரசின் வாக்குறுதியின் நம்பகத்தன்மையை, அரசின் சில நடவடிக்கைகள் சந்தேகம் கொள்ள வைக்கின்றன.உலக நாடுகள் சிலவற்றில் நடந்தது என்ன என்பதையும் கவனிப்போம்!கிரீஸ் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது, வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் அழுது புலம்பியவர்களை பார்த்து, நாமும் கண்ணீர் வடித்தோமே!அதை விட மோசமான நிலை, நம் நாட்டிலுள்ள பண மதிப்பிழப்பு நேரத்தில் நடைபெற்றதே... பல உயிர்கள் பலியாயினவே... நாம் சம்பாதித்த பணத்தை, நாமே எடுக்க முடியாமல் அல்லாடினோமே!
அதுபோல, பணத்தை இழந்த இத்தாலி நாட்டு முதியவர் துாக்கிட்டு இறந்தது எவ்வளவு பேருக்கு தெரியும்... ஆஸ்திரியா மூத்த குடிமக்களின் டிபாசிட்டில், 54 சதவீதம், நலிவடைந்த வங்கிகளை மீட்க, வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டது.'பெயில் இன் எனும் நிதித் தீவிரவாத சட்டம், ஐ.எஸ்., பயங்கரவாதிகளை விடக் கொடுமையானது' என, எல்லென் பிரவுன் என்ற வங்கித்துறை பெண் நிபுணர், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த, 2013ல், சைப்ரஸ் நாட்டின் வங்கியில், ஒரு லட்சம், 'யூரோ' கரன்சிக்கு மேலிருந்த முதலீடுகள், 37.5 பங்குகளாகவும், 22.5 சதவீத பின் பங்குகளாகவும், 30 சதவீதம் முடக்கவும் செய்யப்பட்டது.இது போல, பல நாடுகளில் பொதுமக்களின் பணம், வங்கிகளால் பறிக்கப்பட்டது, நம் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?
இன்று, வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க, முதலீட்டாளர்களின், 1.33 லட்சம் கோடி ரூபாய் உதவுகிறது. இதில், அரசின் முதலீடு, 76 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே!வங்கிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படலாமா!வங்கிகளின், 19.5 சதவீதம் முதலீடு, 'ஸ்டாசுடரி லிக்குடிடி ரேஷ்யோ;' 4 சதவீதம் கேஷ் ரிசர்வ் ரேஷ்யா ஆக, 23.5 சதவீதம், ரிசர்வ் வங்கியிடம் உள்ள நிலையில், இந்திய வங்கிகள் திவால் என்ற பேச்சுக்கே இடமில்லை என, அடித்துக் கூறுகின்றனர், அரசை நடத்துபவர்கள்.
அதே நேரத்தில், உலக வங்கிகள் அரங்கில், 'பெயில் இன்' என்ற சட்டம், தன் கொடுமையான வேலைகளை துவங்கி விட்டது என்ற செய்தியும் உண்மை தானே!அரசு என்ன செய்ய வேண்டும்?'பெயில் இன்' சட்டம் தேவை என, கையெழுத்திட்ட, 24 நாடுகளில், ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேஷியா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் உட்பட, 13 நாடுகள், அதை அமல்படுத்த அஞ்சுகின்றன. இப்படிப்பட்ட சட்டத்தை, இந்தியா கொண்டு வர ஏன் துடிக்க வேண்டுமா!
மேலும், 'பெயில் இன்' என்ற விஷயமே, 'ஜி 20' நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டது தானே... இதில், நம் நாட்டு, சுதேசி கொள்கை என்ன ஆயிற்று?இந்த மசோதாவை, பார்லிமென்ட் ஏற்றுக் கொண்டாலும், மத்திய அரசு கைவிடுவதே இந்திய மக்களுக்கு நிம்மதியை தரும்.பன்னாட்டு நிதி நிறுவனங்களின் அறிவுரையாலும், அழுத்தத்தாலும், வங்கி முதலீட்டு, 'பாசில்' குறியீடு - 3ஜ எட்டுவதற்காகவும், இலகுவாக வாணிகம் செய்யும் குறியீட்டை மேம்படுத்தவும், அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஏழ்மை நாடான இந்தியாவில், வங்கிகளின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க வேண்டிய கடமையும், பெரும் தொழில் முதலைகளிடமிருந்து வாராக் கடன்களை வசூலிக்கும் பொறுப்பும், மத்திய அரசுக்கு உள்ளது.அப்பாவி முதலீட்டாளர்களை, 'உதவிகரமான முட்டாள்கள்' என, கம்யூனிஷ கொள்கையை அறிமுகம் செய்த லெனின் வர்ணித்தது போல இல்லாமல், 'நாட்டு மாந்தரெல்லாம் தம்போல் நரர்கள் என்ற கருதார், ஆட்டு மந்தையாமென்று உலகை அரசர் எண்ணி விட்டார்' என்ற பாரதி குமுறலையும், நினைவில் ஏந்தி, ஏழை முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்!
டாக்டர் ந.ராமசுப்ரமணியன்பொருளாதார நிபுணர்
இ-மெயில் krusaamgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Raj Pu - mumbai,இந்தியா

  சுதேசி கொள்கை முழங்கிய அறிவுஜீவிகள் இன்று முடங்கிப்போய்விட்டார்கள்

 • murasu - madurai,இந்தியா

  இந்த ஆள் ஒரு பிஜேபி அடிவருடி . அனைத்தும் டுபாக்கூர் கருத்து. செல்லா நோட்டுக்கு காது கிழிய ஜால்ரா அடித்த கூட்டம்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  //பழைய படி, மிளகாய் டப்பா, தலையணை அடியில், அரிசிப் பானையில் பணத்தை வைத்துக் கொள்ள வேண்டிய நிலை உருவாகுமா...// அப்படியே மறைத்துவைத்தாலும், பழைய நோட்டுகள் இன்று முதல் செல்லாது என்று சொல்லிவிட்டால் போச்சு.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  சிறு சேமிப்பை நம்பி வாழ்பவர்கள் நாம், கடனை வைத்து காலம் தள்ளுபவர்கள் மேற்கத்தியர்கள். அவர்களோடு சேர்ந்தால் பன்றியுடன் சேர்ந்த கன்றுக்குட்டி போல நாமும் நாறவேண்டியதுதான்.

 • Gopalakrishnan Padmanabhan - Coimbatore,இந்தியா

  மதிப்பிற்குரிய முனைவர் திரு ந. இராமசுப்ரமணியம் அவர்களுக்கு வணக்கம். வங்கிகளின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேம்படுத்தவேண்டும் என்ற தங்கள் கருத்தை வரவேற்கிறேன். வங்கிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பொறுப்பு வங்கி ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இருக்க வேண்டும். தற்போது இந்த நம்பகத்தன்மை அரசு காப்பாற்றிவிடும் என்ற அடிப்படையில் உள்ளது. வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற அல்லது நாணயமற்ற நடவடிக்கைகளின் விளைவுகளை மக்கள் வரிப்பணத்தை கொண்டு அரசாங்கம் சீர் செய்யும் போக்கு நிலவுகிறது. இதனால் அரசாங்கத்தை இயக்கும் அரசியல்வியாதிகள் மற்றும் அதிகார வர்க்கம் வங்கி நிர்வாகத்துடன் இணைந்து கூட்டு சதியில் ஈடுபடும் போக்கு உள்ளது. தற்போது உத்தேசித்துள்ள "bail in" கொள்கை மூலம் வங்கியின் நம்பக மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதியாக்கும் பொறுப்பு வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஊழியர்களுக்கு அதிகமாகிறது. வங்கியின் நிதிநிலை கேள்விக்கிடமாகும்போது பொது மக்கள் அந்த வங்கியில் டெபாசிட் செய்ய முன் வரமாட்டார்கள். அதனால் வங்கி நிர்வாகம் தன்னிச்சையாக தகுதியற்ற கடன் வழங்கும் போக்கு மட்டுப்படும். வங்கித்துறையின் நீண்ட நாள் நன்மைக்கு புதிய சட்டம் அவசியம் என்று கருதுகிறேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement