Advertisement

பரட்டையை பாபாவாக ஆக்கியது இவர்கள்!

சில மாதங்களுக்கு முன், 'டிவி'யில் செய்தி பார்த்து கொண்டிருந்த போது திடீரென்று, 'பிரேக் நியூஸ்' அறிவிப்பு வந்தது.
அந்த நடிகர் திடீரென்று வானத்திலிருந்து குதித்தது போல அவரைச் சுற்றி, 'மைக்' நீட்டப்படுகிறது. அந்த நடிகர் வேறு யாருமில்லை... விஷால்!இதோ, அவரிடம் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி.
'நடிகர் கமலை நீங்கள் ஆதரிப்பீர்களா?'
'அவர் தான் இன்னும் அரசியலுக்கு வரவில்லையே.. அவர் வந்தால் அது பற்றி யோசிக்கலாம்' என்கிறார்.அடுத்த ஊடக நிருபர் தொடர்கிறார்.'ரஜினியை ஆதரிப்பீர்களா?''வந்த பிறகு இந்த கேள்வியை கேளுங்கள்' என்றார், விஷால். ஒரு பெண் நிருபர் கேட்ட கேள்வி தான், உச்சந்தலையில் சூட்டைக் கிளப்பியது.
அவர், 'விஷால் சார்... நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?'
அதற்கு அவர், 'நான் அரசியலுக்குவர விரும்பவில்லை' என்றார். இருப்பினும், 'மைக்'குகள் அவரை விடுவதாக இல்லை.அவர்கள் கேட்ட கேள்விகள் பத்திரிகையாளர்கள் கேட்பது போல் இல்லை. ரசிகர்கள் கேட்பது போல இருந்தது.இவரை மட்டுமல்ல, பல நடிகர்களின் வாய்க்குள் தங்களது மைக் மண்டைகளை திணித்து, குமட்டும் கேள்விகளை கேட்டு, அரசியல் வாந்தியை எடுக்க வைத்து விடுகின்றனர்.
'யாரோ உனக்கு பில்லி சூன்யம் வைத்து இருக்கின்றனர்; அதை நான் எடுத்துத் தருகிறேன்' என, ஊதுகுழல் மூலம் வயிற்றில் ஊதி, ஏதோ ஒன்றை எடுப்பது போல, 'டிவி' ஊடகங்களின் மைக் மண்டைகள், நடிகர்களின் வயிற்றுக்குள் வலுக்கட்டாயமாக, ஊது ஊது என ஊதி, 'இந்தா முதல்வர் உருண்டை' என, உருட்டி திரட்டி காட்டுகின்றனர்.
சில நேரங்களில், இந்த மைக் மண்டைகள் பரபரப்பு செய்திகளை பற்ற வைக்கும் தீப்பந்தங்களாக கூட, நம் கண் முன் காட்சியளிக்கின்றன.ஆட்சியை பிடிக்க கனவு காணும் நடிகர்கள் மற்றும் அவர்களை அரசியலுக்கு இழுக்கும் ஊடகங்கள் முன், சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்!தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்துதிரைப்படக் கனவுகளோடு சென்னைக்கு வந்து, அரை வயிறும் கால் வயிறுமாக, பட்டினி கிடந்து, கிராமங்களில் மூச்சற்றுப்போன தன் உறவுகளை கூட மறந்து, சினிமாவே மூச்சு எனக் கிடப்பர், சிலர்.
அவர்கள் தான் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள்.தமிழ் திரையுலகில் சப்பாணியை சண்டியர் ஆக்கியதும், பரட்டையை, பாபாவாக ஆக்கியதும் இவர்கள் தான்!ஆரம்ப காலங்களில் இவர்கள் பட்டினி கிடந்து, சிந்தித்து எழுதிக்கொடுத்த வசனங்களை பேசி பேசி, புகழின் உச்சிக்கு சென்றவர்கள் தான் முதல்வர் கனவு காணும் முன்னணி நாயகர்கள்!
இப்படி இயக்குனர்கள், கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் உதிரத்தில் கிடைத்த புகழை, மக்கள் மத்தியில் வைத்து, அரிதாரம் பூச வந்த இவர்கள், அரசியலுக்கு வரலாமா... என்பது தான் என் கேள்வி.
நடிக்க வாய்ப்பு கேட்டு, பிரபல இயக்குனர்களின் வீட்டு வாசலில் தவமிருக்கும் போது, நடிகர்கள், 'ஐயா உங்க படத்துல நடிக்க ஒரு சின்ன வாய்ப்பு கொடுத்தா போதும்' என்று தான் கேட்டிருப்பர்.தவிர, 'ஐயா உங்க படத்துல நடிச்சு.. நாளைக்கு நான் கட்சி ஆரம்பிச்சி மந்திரி ஆகி ஆட்சியைப் பிடிக்கணும்' என, கேட்டிருப்பரா... அப்படி கேட்டால், அவர்கள் முன் என்ன பறந்திருக்கும் என, கற்பனை செய்து பாருங்கள்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வாசலில் தவமிருந்து வாய்ப்புகள் வந்த பின், இந்த நடிகர்களுக்கு பதவி ஆசையும் வந்து விடுகிறது.நடிகர்களை வெளிநாடுகளில் நடிகர்களாகவே பார்க்கின்றனர். தமிழகத்தில் மட்டும் தான், நடிகர்களை நாட்டை ஆள வைக்கப் பார்க்கின்றனர். ஆனால் இங்கு தான், படத்தில் நடிக்கும் ஆடு, மாடு கோழி கூட முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகின்றன. இது, தமிழனுக்கு சாபக்கேடு!
நடிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
சில நுாறு தையல் இயந்திரங்களையும், ஊனமுற்றோருக்கு சைக்கிள்களையும், அதில் அச்சடித்த உங்கள் பெயர் பலகையுடன் கொடுத்து விட்டு, ஒட்டுமொத்த தமிழர்களை ஆள நீங்கள் ஆசைப்படுவது என்ன நியாயம்?
பாசத்திற்குரிய தமிழ், 'டிவி' ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்!இனி, நடிகர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள்... வந்தால் மட்டுமே கவலைப்படுங்கள்!நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தும், வந்தது குறித்தும், வரப்போவது குறித்தும், 'டிவி' ஊடகங்கள் அடிக்கும் அட்டகாசங்கள் இருக்கிறதே... கொடுமை!
நவக்கிரகங்கள் போல ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கப் பிடிக்காத, ஐந்து அல்லது ஆறு பேர் அமர்ந்து, அளக்க ஆரம்பித்து விடுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள் அல்லது ஜாதி தலைவர்களாகத் தான் இருப்பர்.ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்க மாட்டார். இவர்கள் தான் தமிழகத்தின், 'அதாரிட்டி' மாதிரி, ஒருவருக்கு ஒருவர் பேச விடாமல், பேசி கொள்கின்றனர். பல நேரங்களில் பேசியே, கொல்கின்றனர்.
மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டியை அங்குள்ள ஊடகங்கள் அரசியலுக்கு அழைக்கின்றனவா?எனவே, பரபரப்பு செய்திகளுக்காக நடிகர்களை துாக்கிப்பிடிக்கும் காவடி கலாசாரத்தை, ஊடகங்கள் கை விட்டே ஆக வேண்டும்.நடிகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
தமிழகத்திலிருந்து, 18 மைல் துாரத்தில் கொத்துக்குண்டுகள் மூலம் பல லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த போது, குரல் கொடுத்திருந்தால், நீங்கள் அரசியலுக்கு வாருங்கள்.கூட்டத்தைக் கண்டவுடன் வெறிக்கும் மாடுகள் போல கோஷங்களைக் கண்டவுடன், பதவி கனவு காணாதீர்.நான்காம் துாண்கள் எனப்படும் ஊடகங்கள், சமூக அறத்தை மட்டுமே தாங்கி பிடிக்கட்டும். வீண் செய்திகளை தள்ளிப்பிடிக்கட்டும்!அனகோண்டா பாம்பு போல, அனைத்தையும் விழுங்காமல், அன்னம் போல அல்லவை நீக்கி, நல்லவை நாடி, ஊடக அறக்கொடி பறக்கட்டும்!
சிந்து பாஸ்கர்இ - மெயில்: sindhubaskarwritergmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement