Advertisement

நம்பிக்கை நாட்களாய் மாற்றுவோம்!

உழைக்கத் துடிப்பவர்களுக்குக் காலம் வரமாக அமைகிறது. காலத்தின் மேன்மையை மதிக்காமல் வீண்விரயம் செய்பவர்களுக்கு அதுவே சாபமாய் திகழ்கிறது. விழுந்த தேக்கிலையைக் காலம் அதே மரத்துக்கு எப்படிச் சருகாக மாற்றுமோ அதே போல் நேற்றைய நிமிடங்களை உரமாக்கிக் காலப்பயிர் நம் கண்முன்னே கம்பீரமாய் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்துபோன நாட்கள் கசங்கிய காகிதமாய் நம் கண் முன்னே கசங்கிக் கிடக்க, மெலிந்த காலத்தாட்களோடு வீசி எறியப்பட காத்திருக்கிறது தினமும் கவனிப்புக்குள்ளான பழைய நாட்காட்டி! இழப்புகளோடும் இருப்புகளோடும் எதுபற்றிய கவலையுமின்றி ரயில் பூச்சி போல் மெல்ல நகர்ந்து அப்பால் போய் விட்டது பழைய ஆண்டு.வந்துவிட்டது புத்தாண்டு. எது புத்தாண்டு? நாட்காட்டி மாறுவதுதான் புத்தாண்டா? அதே எண்ணங்களோடும் அதே செயல்களோடும் அதே சோம்பேறித் தனங்களோடும் அப்படியே ஓராண்டினை மாற்றமில்லாமல் தொடங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது? மலர்ந்த குழந்தை தவழ்வதும் தவழ்ந்த குழந்தை நடக்கத் தொடங்குவதும் நடந்த குழந்தை ஓடத்தொடங்குவதும்தானே மாற்றம்? என்ன மாற்றத்தை நாம் இந்த ஆண்டு நம்
இல்லத்திலும் நம் உள்ளத்திலும் கொண்டுவரப் போகிறோம்?நலம் தரும் நல்லாண்டு
கடந்த ஆண்டில் நடந்த சம்பவங்களின் வடுக்களை உள்வாங்கி, இந்த ஆண்டாவது எல்லா வளமும் தரும் நல்லாண்டாக அமையுமா? என்கிற கேள்வியோடு ராசிபலன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறம். புத்தாண்டு விடிகிற புத்தம் புதுநிமிடத்தில் இறைவனின் திருவடிகளைப் பற்றிப் பிடிக்க சென்றோர் மறுபுறம். வெந்ததைத் திண்போம் விதிவந்தால் நகர்வோம் என்று எதைப் பற்றியும் வருத்தமின்றி காலத்தை அதன் போக்கில் எதிர்கொள்வோர் சிலர். காலண்டர்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றன.ஆணிகள் அப்படியேஇருக்கின்றன, நாளையும்
மற்றுமொரு நாளே புத்தாண்டும் இன்னொரு ஆண்டே இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது? இது பிறிதொரு கனக்குரல். எது எப்படியாயினும் என்ன? இருளே அகல், ஒளியாய் நான் வருகிறேன் என்று அகல் விளக்கை ஏற்றி நாம் போற்றுகிற வகையில் நம்மை வந்து அடைந்திருக்கிறது புத்தாண்டு.அன்பின் நாட்கள் பேரன்பின் 365 நாட்களில் ஓரன்பாவது நம்மை பாதித்திருக்காதா? மழைவானில் தவழுகிற ஈசலாய் மன வானில் எப்போதும் சில பூசல்கள்
புத்தாண்டிலும் நமக்குத் தேவையா? ஏறிய நினைவுகளோடு இறங்குவது சிரமம்! வாழ்வது ஒருமுறை அவ்வாழ்வை வாழ்த்தட்டும் பல தலைமுறை என்று வாழவேண்டும். தோண்டியவனுக்கும் தண்ணீர் தருகிறது இந்தப் பூமி! வெட்டியவனையும் வீட்டுக்கதவாகிக் காக்கிறது மரம்! நெகிழியால் நிரப்பியவனுக்கும் கொட்டும் மழை தருகிறது இயற்கை. காலம் முழுக்க மூச்சுக் காற்று தந்து வாழவைக்கிறது இப்பூமி. நீதிமன்ற உத்தரவால் கருவேல முள் மரங்களை அழித்தோம்; ஏரி குளங்களெல்லாம் நிரம்பி வழிகின்றன. இந்த ஆண்டிலிருந்து நம் வீட்டில் விழாக்கள் நடக்கும் நாட்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்போம். மறக்க முடியாத மர நாட்களை இந்த ஆண்டிற்குப்
பரிசாகத் தருவோம். தனிமை கொடுமையை நீக்கும் உயர்வரம் நுால்களே. மன அழுத்தம்
குறைக்கும் மாமருந்தும் நல்ல நுால்கள்தான். அலெக்ஸ்சாண்டரும், பாபரும், அக்பரும், பாரசீக மன்னர் அப்துல் காசிமும் போற்றிப் பாதுகாத்த அறிவுக்கருவூலங்கள் அவை. அழியும் நிலையிலிருந்த சுவடிகளை நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு பன்னிரு திருமுறைகளாய் தொகுக்க ஆணையிட்ட மாமன்னன் ராஜராஜசோழன் வாழ்ந்த தமிழகத்தில் “கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்ற நிலையில் வாசிப்புலகம் இருப்பது நல்லதன்று. காட்சி ஊடகங்களின் பிடியிலிருந்து மீண்டு இந்தாண்டு முதல் நுால்களைப் பரிசளிப்போம். வாரம் ஒரு நல்ல நுாலை வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு உருவாக்குவோம்.மன உறுதி நலந்தரும் நம் இனிய நாட்களை நம்மை வதைக்கும் நாட்களாய் மாற்றியது யார்? தீதும் நன்றும் பிறர்தர வருவதா? நமக்கு நன்மை செய்வதும் நாமே நம்மைச் சீரழிப்பதும் நாமே என்று உணர்வோம். விழாமல் வாழ்வது வாழ்வன்று, விழும்போதெல்லாம் எழுவதே வாழ்வு என்று புரிந்துகொள்வோம்.அன்பைச் செயலாக மாற்றுவதில்தானே வாழ்வின் இனிமையே உள்ளது! அன்பால் எல்லோரையும்
தன்பால் திருப்பும் நாட்களாய் வரும் நாட்கள் மாறட்டும். இருப்பை வெறுப்பால் சிதைக்கும் செயல்கள் இந்த ஆண்டில் வேண்டாம்! நீண்ட நகம் கீறத்தான் செய்யும் நிறைய மென்மனத்தாரின் இதயங்களையும்! சினம் சிந்திய கூர்சொற்களோடு நாம் உதிர்த்த கடுஞ்சொற்கள் குறித்த மறுபார்வை இந்த ஆண்டை வசந்த ஆண்டாக மாற்றும். சுவை தரும் கனிகள் இருக்கும்போது யாரேனும் வேப்பங்காயை எடுத்து உண்பார்களா? நல்ல சொற்களால் எதிர்வரும் காலத்தை நமதாக்குவோம். கசந்த காலம் அப்போது வசந்தகாலமாய் மாறும்.

கடும் உழைப்பு சாதனையாளர்கள் அனைவரும் இரவிலே முயற்சி செய்து மறுநாள் காலையில் சாதனை படைத்தவர்கள் இல்லை. களைப்பிலா உழைப்பும் சலிப்பிலா முயற்சியும் நம்மை அடுத்த படிநிலை நோக்கி உயர்த்தும். காலம் தந்த காயங்கள் எல்லோர் மனதிலும் உண்டு. அதையே நினைத்துக் கொண்டு பொன்னான வாழ்வைப் புண்ணாக்கி கொள்ளக் கூடாது. ஜப்பான் நாட்டில் மகிழ்வான மனநிலையில் மக்கள் இருந்தால் அதிகமாய் மூன்றுமணிநேரம்
தேசத்திற்காகப் பணிபுரிவார்களாம். நாமும் அப்படிச் செய்தால் என்ன? சொர்க்கத்தை நோக்கிப் பயணிப்பதல்ல; இருக்கும் இடத்தையே சொர்க்கமாக மாற்றுவது வாழ்க்கை.
சிரிப்பைச் சிந்தும் இன்முகத்தோடு இந்த ஆண்டை எதிர்கொள்வோம். பாதைகளற்ற பயணத்தில்
அனுபவங்களே பாதங்கள். அனுபவங்களைப் பெற இறைவன் தந்திருக்கும் இன்னொரு நல்ல வாய்ப்பு புத்தாண்டு. கிழிக்காத காலண்டர் தாள்களில் நாம் ஊரிலில்லாத தினங்கள் உறைந்து நிலைத்துஇருக்கிற மாதிரி, நல்ல எண்ணங்களில் நம் வாழ்வு நிலைத்திருக்கிறது. வீட்டின்
விழிகள் அறியும் துாக்கத்தையும் துக்கத்தையும். எனவே சிறுகூட்டை இன்பமாய் வைத்திருக்கும் பறவைகள் மாதிரி நம் வீட்டை அன்பு தவழும் அன்பகமாய் மாற்றிக்கொள்வோம்.
ஓட்டிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை, ஓடிக்கொண்டேயிருக்கும் வரை. இன்ப நாட்கள் உறைந்திருக்கும் உன்னத நாட்களாக இந்த ஆண்டை மாற்றுவது நம் கையில்தான்
உள்ளது. நம்பிக்கை நாட்களாய் நம் நாட்களை மாற்றுவோம். தும்பிக்கை துாக்கி ஆசி கூறுகிற யானைகள் மாதிரி நம்பிக்கை துாக்கி எல்லோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

-பேராசிரியர்சவுந்தர மகாதேவன்
தமிழ்த்துறைத்தலைவர்
சதக்கத்துல்லாஹ்அப்பா கல்லுாரி, திருநெல்வேலி
99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement