Advertisement

ஆதலினால் காதல் செய்வீர்

முடிந்து விட்டது. 2018 பிறந்து விட்டது. அனைவருக்கும் ஒரு வயது கூடி விட்டது. கடந்தாண்டு செய்தது போல ஒரு டஜன் புத்தாண்டு தீர்மானங்களை எடுத்துக் கொண்டு அதைப் பத்தே நாட்களில் காற்றில் பறக்க விட்டு விட்டு நம் வாழ்க்கையை 'டிவி' தொடர் களிலும், சத்தற்ற உணவைச் சாப்பிடுவதிலும், சமூக வலைதளங்களில் ஜல்லியடிப்பதிலும் கழிக்கப் போகிறோம். எத்தனை நாட்களுக்குத் தான் இப்படி வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகும் மாந்தர்களாகவே வாழ்வது?

தேடிச் சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்திக்
கொடுங்கூற்றெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதர்களைப் போல்
வீழ்வேன் என்று நினைத்தாயா
என பாரதியைபோல இந்தாண்டாவது
பராசக்தியை பார்த்து கம்பீரமாக கேள்வி கேட்க வேண்டாமா?

மொக்கை தீர்மானம் : 'இனி மேல் ஒரு நாளைக்கு பத்து சிகரெட்டுகளுக்கு பதில் ஒன்பதரை சிகரெட்டுகள் தான் பிடிப்பேன்''டிவியின் முன் செலவழிக்கும் நேரத்தை நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திலிருந்து நான்கே முக்கால் மணி நேரமாக குறைப்பேன்'இதுபோன்ற மொக்கைத்
தீர்மானங்களை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று உறுதியான ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டாமா? இந்தாண்டாவது நாம் சாதிக்க வேண்டும். வாழ்க்கையில் ஓர் அர்த்தத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதில் நிறைவையும் மகிழ்ச்சியையும் பெறவேண்டும். இது பத்து சிகரெட் -ஒன்பதரை சிகரெட் தீர்மானம் அல்ல. இதற்கு அசாத்திய துணிச்சல் தேவை.
அந்த ஊர்க்கோடியில் இருந்த பெரிய கிணற்றுக்கு அருகே ஒரு முதியவள் நின்று கொண்டிருந்தாள். கிணற்றுக்குள் பார்ப்பதும், வெளியே பார்ப்பதுமாக நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அங்கே வந்தான்.

''என்ன செய்யப் போகிறாய், பாட்டி''''எனக்கு வயதாகி விட்டது.
உடம்பில் ஆயிரம் வியாதி. எல்லோருக்கும் பிடிக்காதவளாகி விட்டேன்''
''அதனால்'' ''இந்தக்கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்து கொள்ளப்போகிறேன்''
''அப்படியா பாட்டி, யாராவது கிணத்துல விழுந்து சாகறத பார்க்கணும்னு எனக்கும் ரொம்ப நாளா ஒரு ஆசை பாட்டி.. நடக்கட்டும்...நடக்கட்டும்''
அதிர்ந்து போன முதியவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.''சீக்கிரம் பாட்டி.எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. நீ குதிக்கிற பாத்துட்டுப் போகணும்னு காத்துக்கிட்டிருக்கேன். இன்னும் எவ்வளவு நேரம் தான் தண்ணியப் பார்த்துக்கிட்டே இருப்ப''
''அது வந்து... அது வந்து''''சொல்லு பாட்டி''
''நம் ஊர் வைத்தியர் என்னை வென்னீர்ல தான் குளிக்கணும்னு சொல்லியிருக்காரு. கிணத்துல
இருக்கறதோ பச்சைத்தண்ணி. அதான் யோசிக்கிறேன்''சாவுக்கு கூட அஞ்சாதவர்கள்
பச்சைத்தண்ணீருக்குப் பயப்பட்டால் அவர்கள் வேடிக்கை மனிதர்கள் தானே!
இந்த வேடிக்கை மனிதர்களின் கூட்டத்தில் ஒருவராக இருப்பது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா. அப்படியென்றால் இதோடு நான் விடைப்பெற்றுக் கொள்கிறேன். பிடிக்கவில்லை என்றால் மேலே படியுங்கள்.

வாழ்வின் அர்த்தம் : வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்துக் கொள்ள ஒரே வழி காதலில் விழுவது தான்(யோவ். அந்தக் கருமத்துக்குப் பேசாம கிணத்துலயே விழுந்துரலாமேயா) ஆணும்
பெண்ணும் எதிர்பாலின ஈர்ப்பால் ஒருவரின் உடலை மற்றவர் விரும்பும் ஹார்மோன்கள் சம்பந்தப்பட்ட காதலைப் பற்றி நான் சொல்லவில்லை. பாரதி சிலாகித்த காதலைப் பற்றி சொல்கிறேன்.காதல்.... காதல்.... காதல்.... காதல் போயின்... காதல் போயின்.... சாதல்.... சாதல்... சாதல்...
இளம் பட்டிமன்ற பேச்சாளரான அனுக்கிரஹா இந்தக் கவிதை வரிகளுக்கு அருமையான விளக்கம்கொடுத்தார். காதலன் போயின் சாதல்... சாதல்...சாதல்.. என்றோ காதலி போயின் சாதல்...சாதல் என்றோ பாரதி சொல்லவில்லை. காதல் போயின் சாதல் என்று தான் சொல்கிறார்.
வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்க எதையாவது ஆழமாக காதலிக்க வேண்டும். அந்தக் காதலை
அழுத்தமாக வெளிப்படுத்தவேண்டும். நீங்கள் செய்யும் வேலையைக் காதலிக்கலாம்.
சமையல் செய்வதை காதலிக்கலாம். எழுதுவதை, வாசிப்பதை, தோட்டவேலை செய்வதை, மொழியை, கவிதையை, இசையை, நடனத்தை, இறைவனை எதையாவது காதலிக்க வேண்டும். நீங்கள் எதைக் காதலிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எவ்வளவு தீவிரமாக காதலிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

பாடுங்கள்... ஆடுங்கள்
எழுத்தோ, இசையோ,
கவிதையோ, சமையலோ, நடனமோ- இது போன்ற ஒன்றின் காதலை
பெறுவதும் இப்படித் தான். பல துறைகளில் மூக்கை நுழைத்து பாருங்கள். வாயை விட்டு பாடுங்கள்.மனம் போன போக்கில் ஆடுங்கள். பத்திரிகைக்கு சிறுகதை எழுதி அனுப்புங்கள். கவிதை எழுதிப் பாருங்கள். சமையலறைக்குள் புகுந்து அதகளம் செய்யுங்கள். புதிய மொழி ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். இதில் எதையாவது ஒன்றை செய்யும் போது உங்கள் மனதில் ஒரு பல்ப் எரியும். உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும்.உங்கள் காதலியை கண்டுபிடித்து வீட்டீர்கள். அதன் பின் அந்தக் காதலியின் காதலைப் பெற அயராது உழைக்க வேண்டும். ஒரு நாள்
இல்லாவிட்டால் ஒரு நாள் அவள் உங்கள் காதலை ஏற்றுக் கொள்வாள். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். உங்கள் ஆன்மாவிற்கு சிறகு முளைக்கும்.
எனக்கு தெரிந்த ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் -நீங்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்றால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். மேற்கத்திய இசையை முறைப்படி பயின்று கொண்டிருக்கிறார். ஒரு நரம்பியல் சிகிச்சை நிபுணர் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு பட்டயக்கணக்காளர் படுஉற்சாகமாக கரகாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். வங்கியில் உயரதிகாரியாக இருக்கும் ஒரு பெண்மணி, பட்டிமன்ற மேடைகளில் முழங்கி கொண்டிருக்கிறார். இவர்களில் பலர் உலகப் புகழ் பெறவில்லை. பரிசுகளையும், விருதுகளையும் வென்று குவிக்கவில்லை. ஆனால் மிக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஒரு நல்ல கணவனாக, ஒரு நல்ல
மனைவியாக, நல்ல பெற்றோராக நிறைவுடன் வாழ்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள் சங்கத்தில்
இவர்கள் யாரும் அங்கத்தினர்கள் இல்லை.

தயிர் சாதமும், ஊறுகாயும் : அந்த அலுவலகத்தின் கணக்குப் பிரிவில் பத்து பேர் வேலை
பார்த்தனர். அனைவரும் சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவது வழக்கம். ஒருவன் மட்டும் தினமும் தன் சாப்பாட்டு பாத்திரத்தை திறந்து அலுத்து கொள்வான்.''என்ன கொடுமையடா சாமி! இன்னிக்கும் தயிர் சாதம், ஊறுகாய்தானா''பாவம் அவனுக்கு வாய்த்த மனைவி சோம்பேறி போலும் என அனைவரும் அவன் மீது பரிதாபப்பட்டனர். ஒரு நாள் பொறுக்க முடியாமல் ஒரு பெண் அதிகாரி அவனை கேட்டு விட்டாள்.''உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி வேற ஏதாவது சமைக்க சொல்ல வேண்டியது தானே. அவ முடியாதுன்னு சொன்னா ஏதாவது ஒரு ஓட்டலில் சாப்பிட
வேண்டியது தானே''அவன் அமைதியாக கூறினான். ''எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல மேடம். தினமும் ஆபீசுக்கு கிளம்பும் போது பக்கத்துல இருக்கிற ஓட்டலில் தயிர்சாதமும், ஊறுகாயும் வாங்கிட்டு வருவேன்''அவன் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் என
தோன்றுகிறதா... தவறல்ல... அறை வாங்க வேண்டியது அவன் மட்டுமல்ல...நாமும் தான்....
நாம் வாழ்க்கையில் காதலிக்க எந்த விஷயத்தையும் வைத்து கொள்ளாமல் ''சே என்ன வேலைப்பா'' என அலுத்துக் கொள்கிறோம். பாதம் அல்வாவும், முந்திரி ரவா தோசையும் டிகிரி
காப்பியும் நம்மால் வாழ்க்கை ஓட்டலில் வாங்கி சாப்பிட முடியும் என்றாலும் தயிர் சாதத்தையும், ஊறுகாயையும் மட்டுமே வாங்கிக் கொண்டு வருகிறோம். என்னடா பொல்லாத வாழ்க்கை என புலம்புகிறோம். அந்த புலம்பல் வேண்டாம் என்றால் உங்கள் வாழ்க்கையின் காதலை தேடி கண்டுபிடியுங்கள். அது எழுத்தோ, இசையோ, கவிதையோ, ஓவியமோ பேச்சோ, நடிப்போ, எதுவோ ---அதற்காகவே வாழுங்கள்...அதெல்லாம் என்னால் முடியாது சார். வயதாகி விட்டது... தெம்பில்லை என அங்காலய்ப்பவர்கள் கீழ்கண்ட பாரதியின் வரிகளை தினமும் பாராயணம் செய்யவும்.

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்,
நினைவு நல்லது வேண்டும், நெருங்கின
பொருள் கைப்பட வேண்டும்,
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.

-வரலொட்டி ரெங்கசாமி
எழுத்தாளர், மதுரை
80568 24024

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement