Advertisement

தினமும் நடக்குது; இதயம் வலிக்குது!

நம் நாட்டின் பெண் குழந்தைகள், பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றனர் என, அறியும் போது, இதயம் வலிக்கிறது. நாகரிகத்தை நோக்கி நகர வேண்டிய சமுதாயம், மிருகத்தனத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் எழுகிறது.

குழந்தைகள் மற்றும் இளம் வயது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள், பெரும்பாலும் அடுத்த வீட்டுக்காரர்கள், சொந்தக்காரர்கள், அதிகம் தெரிந்தவர்கள் தான்!
முன்பெல்லாம் வீடுகளில், விடுதிகளில் என, வெளியில் தெரியாமல் நிகழ்ந்து வந்த இத்தகைய குற்றங்கள், இப்போது பஸ் நிறுத்தம், ரயில் நிலையம், தெருக்கள், கழிவறைகள், பேருந்துகள் என, மக்கள் நடமாடும் பொது இடங்களிலும் நிகழ்கின்றன.


பாலியல் பலாத்காரங்களால் காயப்படும் குழந்தைகள், வளர்ந்து பெரிய வர்களாகும் போது, மன அழுத்த நோய்க்கும், கொடிய மனச்சிதைவு நோய்க்கும் ஆட்படுவதால், அவர்களின் வாழ்க்கைத்தரம் குறைகிறது; ஆரோக்கியம் கெடுகிறது.'போக்ஸோ' சட்டம் எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் சட்டப்படி, பாலியல் சில்மிஷங்களுக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும்; பாலியல் வன்புணர்வுக்கு ஏழு ஆண்டுகள் முதல், ஆயுள் வரையும் தண்டனை உண்டு.


ஆனால், சாட்சியங்கள் சரியில்லை என்றால் குற்ற வாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க, இதில் வழி உண்டு. பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில், 70 சதவீதத்திற்கும் அதிக மானோர், தங்களுக்கு ஏற்பட்ட கொடூரத்தை, பெற்றோர் உட்பட யாரிடமும் சொல்ல தயங்குவது தான், இதற்குக் காரணம்.


மாற்றுத் திறனாளி பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, 'சாட்சியங்கள் போதுமானதாக இல்லை' எனக் கூறி, டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது.அதன் பின், மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் முதலில் கொடுத்த தண்டனையை உறுதி செய்தது.

பிரச்னை என்னவென்றால், குழந்தைகளிடம் விசாரிக்கும் அதிகாரிகள், சீருடை அணிந்திருந்தால், குழந்தைகளை அது கலவரத்துக்கு உள்ளாக்கும். விசாரணையின் போது, குற்றம் நிகழ்த்தியவரை, எதிரில் நிறுத்தி, சாட்சியம் பெறும் போது, அவரைப் பார்த்து பயந்து, மேற்கொண்டு பேச, குழந்தைகள் அச்சப்படலாம்.இதனால் சாட்சியங்கள் வலுவிழக்கலாம்; அப்போது, குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்!

இச்சூழலைத் தவிர்க்க, பாலியல் குற்றங்களை பதிவு செய்வது, விசாரிப்பது, தடயங்களை சேகரிப்பது போன்றவற்றில், புதிய முறைகளை கையாள வேண்டும். மேல் நாடுகளில், குழந்தைகளின் சாட்சியத்தை, குழந்தையின் முகம் தெரியாத கண்ணாடி அறைக்குள் விசாரித்து, 'வீடியோ' கேமராவில் அதை பதிவு செய்கின்றனர்.


இம்மாதிரியான சாட்சி மையங்களில் விசாரிக்கும் முறையை, நம் நாட்டிலும் பின்பற்றினால், பாலியல் அத்துமீறல்கள், பலாத்காரங்களில் இருந்து நம் குழந்தைகளுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும்; குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பது குறையும்.பா.ஜ., ஆளும் மாநிலங்களில் ஒன்றான, ம.பி.,யில், 11 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை கற்பழித்தால், மரண தண்டனை விதிக்கும் சட்டம், சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இது போன்ற சட்டங்களை, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும். தண்டனைகள் கடுமையாகும் போது தான், பாலியல்குற்றங்கள் குறையும். குற்றமற்ற சமுதாயத்தால் தான், முன்னேறிய சமுதாயமாக, நம் நாடு மாற முடியும்.பாலியல் பலாத்கார வழக்குகள், நீதிமன்றங்களில் பல ஆண்டுகளுக்கு இழுத்து போகும் போது, குற்றவாளிகளுக்கு பயம் குறைந்து விடுகிறது.


எனவே, இந்த குற்றங்களை விரைந்து விசாரிக்க, தனிக்குழுக்களையும், உடனடியாக தண்டனை வழங்குவதற்கு, மாவட்ட அளவில் சிறப்பு நீதிமன்றங்களையும் அமைப்பது அவசியம்.மேலும், பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளான குழந்தைகள், எவ்வித தயக்கமும் இல்லாமல் நடந்ததை பெற்றோரிடம் சொல்லவும், வழக்கு நடந்தால் சாட்சியம் சொல்லவும் தயாராக வேண்டும். அதற்கான அறிவை, குழந்தைகளுக்கு வளர்க்க வேண்டும்.


மேலும், அதற்கான புரிதல்களையும், தைரியத்தையும், குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டிய கடமை, இன்றைய பெற்றோருக்கு அவசியம்.பாலியல் குற்றங்கள் மலிந்து கிடக்கும் நாட்டில், எதிர்காலத்தில் நம் குழந்தைகள் நல்வாழ்க்கை வாழ வேண்டுமெனில், அவர்கள் பெறும் நல்லறிவும், நற்பண்புகளும் தான், அவர்களை காப்பாற்றும்!


அதற்காக, பெற்றோர் தங்கள் குழந்தைகளை நல்ல ஒழுக்கப் பண்புகளுடன் வளர்க்கவும், பாலியல் அறிவை ஊட்டவும் முன் வர வேண்டும்.'தனித்தீவு' வாழ்க்கை தலையெடுத்திருக்கும் இக்கால கட்டத்தில், குழந்தை வளர்ப்பில் பெற்றோர், தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, எஜமானர்களை போல குழந்தைகளிடம் நடந்து கொள்வதை தவிர்த்து, நண்பர்களாக பழகினால், பெற்றோர் சொல்லுக்கு, குழந்தைகள் கட்டுப்படுவர்.


'பெண் பலவீனமானவள்' என்பது, சமுதாயத்தின் பொதுக்கருத்து. அதனால் தான், பெண் பிள்ளைகளுக்கு ஒழுக்க நெறிகளை கற்றுக்கொடுக்கும் சமூகம், ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி தருவதில்லை.பாலியலை பொறுத்தவரை, ஆண் தான் பலவீனமானவன்; ஆணுக்குத்தான் கடிவாளம் தேவை. இந்த புரிதல் இல்லாத பெற்றோர், ஆண் பிள்ளைகளை வளர்ப்பதில் காட்டும் அலட்சியம் தான், பாலியல் வன்முறை எண்ணங்களின் ஆணிவேர்.


'டீன் ஏஜ்' எனப்படும், பதின் பருவத்தினர் செய்யும் சேட்டைகளை நெறிப்படுத்தத் தெரியாத பெற்றோர், பொறுப்பற்று பேசுவதையும், புண்படுத்தும் வார்த்தைகளை வீசுவதையும், நடைமுறையில் காண்கிறோம்.அதனால் அவமானப்படும் ஆண் பிள்ளைகள் தான், பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்; போதைப் பழக்கத்துக்கும் ஆளாகுகின்றனர்.


பள்ளி செல்லும் குழந்தை முதல், டீன் ஏஜ் குழந்தைகள் வரை, கண்ணுக்குள் வைத்து வளர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும். ஆனால், அதை மறந்து விடுகின்றனர்.தன் மீது நம்பிக்கை கொண்ட ஆணுக்குத்தான், 'தன் தரம் மிகுதி' எனும் தெளிவு பிறக்கும்.அவ்வப்போது அவனுக்கு, வயதுக்கு ஏற்ற பாலியல் உந்துதல்கள், கோடை வெயிலாக கொதித்தாலும், 'என் தரத்துக்கு இது போன்ற குற்றங்களை செய்யக்கூடாது' எனும் உணர்வு, பருவ மழை போல் பொழிந்து, குற்றம் செய்வதை தடுத்து விடும்.


பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள், இப்போது எங்கு இருக்கின்றனர்; யாருடன் இருக்கின்றனர்; என்ன செய்து கொண்டிருக்கின்றனர்; பள்ளியிலா... நண்பருடனா... என, எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.பெற்றோரின் கவனம் எப்போதும் தம் மீது உள்ளது என, தெரிந்து கொள்ளும் குழந்தைகள், தவறு செய்ய முயலாது. பெற்றோருக்கு தன் மீது அக்கறை இல்லை என உணறும் குழந்தைகளே, தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, தவறான எண்ணங்களுடன் வளர்கின்றன.
அடுத்து, பெண் பிள்ளைகளை பருவ வயதுக்கு தயார்படுத்தும் பெற்றோர், ஆண் பிள்ளைகளை அவ்வாறு தயார்படுத்துவதில்லை.


அவர்களுக்கான பாலியல் கல்வியை, சக வயது நண்பர்களுடன் சேர்ந்து, அவர்களாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.அதை நல்லவர்களுடன் பழகி, நல்ல விதமாகக் கற்றுக் கொண்டால் கவலையில்லை. கெட்ட சகவாசத்தில், விகாரமாகக் கற்றுக்கொண்டால், சிக்கல் தான்.
நடுநிசி தாண்டியும் தொலைக்காட்சி பார்க்கும் இளைஞர்கள் அதிகம். நள்ளிரவில் காண்பிக்கப்படும் பாலியல் நிகழ்ச்சிகளால், அவர்கள் வழிமாற கூடும்.


குறிப்பாக, 'சுய இன்பம் தவறில்லை; அது பாலியல் இச்சைக்கு ஒரு வடிகால்' என, டாக்டர் என்ற பெயரில் சிலர், பாடம் நடத்துவதால், அந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி, வக்கிரங்களை அதிகம் வளர்த்து கொள்கின்றனர். அது, வரம்பு மீறி, உளவியல் சிக்கலாக மாறும் போது, சிக்கியவர்களிடம் வல்லுறவில் ஈடுபடுகின்றனர்.


இணையதளங்களில் நல்லதை விட கெட்டவையே அதிகம். குறிப்பாக, முந்தைய தலைமுறையினருக்கு, இலை மறைவு, காய் மறைவாகக் கிடைத்த நீலப்படங்கள் இன்று, இலவசமாகவே கணினியிலும், கைப்பேசியிலும் கடலளவு கிடைக்கின்றன.அவற்றை அடிக்கடி காணும் விகார மனங்கள், காம இச்சைகளை வளர்த்து கொள்கின்றன. சந்தர்ப்பங்கள் சரியாக அமையும் போது, குழந்தை என்பதையும் மறந்து, இச்சை களை நிறைவேற்றி கொள்கின்றன.


பாலியல் ரீதியாக திசை மாறும் குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டியது, பெற்றோர் கடமை. அவர்களின் கவனத்தை விளையாட்டு, கல்வி, கலைகள் மீது திருப்பினால், தனிமையில் அவர்கள் இயங்குவது குறையும்; தேவையில்லாத சிந்தனைகள் ஏற்படாது.
சிற்றின்ப ஈடுபாடுகள் மறையும்; இதன் பலனால், பாலியல் குற்றங்கள் குறையும்.
குழந்தைகளுடன் பெற்றோரும் மனம் விட்டு பேச வேண்டும்.


நீதிக்கதைகள் சொல்வது, கஷ்டமான காலங்களை கடந்து வந்ததைச் சொல்வது, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது...கெட்ட வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது, உறவுகளை வளர்ப்பது, ஆன்மிக சிந்தனைகளை ஊட்டுவது போன்றவற்றின் மூலம் நல் வழி காட்ட வேண்டும். அப்போது, அவர்களுக்கு சுய கட்டுப்பாடும், அன்பு, பண்பு, இன்சொல் கலந்த ஒழுக்கமும் இயல்பாகவே அமைந்து விடும்; பாலியல் வக்கிர எண்ணங்கள் ஏற்படாது.


அடுத்து... பாலியல் வன்முறைக்கு குழந்தைகள் பாழாவதை தடுக்க வேண்டிய கடமையும் பெற்றோருக்கு உள்ளது. குழந்தைகளின் புகைப்படங்களையும், பள்ளி, வசிப்பிடம் போன்ற தகவல்களையும், சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது.குழந்தைகளை தனியாக விடுவதை தவிர்க்க வேண்டும். பள்ளி தவிர்த்து, வெளியுலகிற்கு தேவையானதை கற்றுக்கொடுக்க வேண்டும்.
குழந்தை ஆணோ, பெண்ணோ, நேரம் கிடைக்கும் போதெல்லாம், பாலுணர்வு குறித்து இயல்பாக பேசுங்கள்.


குழந்தையின் நடவடிக்கைகளில் மாறுதல் தெரிந்தால், ஆதரவாக விசாரியுங்கள். அடுத்தவர்களுடன் பழகும் போது, எச்சரிக்கை உணர்வு அவசியம் என்பதை புரியச் செய்யுங்கள்.மற்றவர்களின் தொடுதலில் இருக்கும் நோக்கத்தை, குழந்தைகள் உணர வேண்டும். அதற்கு, நல்ல தொடுதலையும், தவறான தொடுதலையும் பிரித்துப்பார்க்க, உடல் குறித்த தெளிவும், பாலியல் அறிவும் புகட்டப்பட வேண்டும்.


தவறான எண்ணத்துடன், குழந்தைகளை யாராவது அணுகினால், மறுக்கப் பழக்குங்கள். இவ்வாறு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அவர்களை காமுகர்களிடமிருந்து காப்பது எளிதாகி விடும்.

- டாக்டர் கு.கணேசன்- - -
மருத்துவ எழுத்தாளர்

இ - -மெயில்:
gganesan95gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement