Advertisement

புன்னகை பூக்களை படர விடுவோம்

ஆடியும் -மகிழ்ந்தும், பாடியும் -களித்தும் பரவசப்படுவது ஒரு வகைக் கொண்டாட்டம். மேம்போக்காக அது பல நேரங்களில் நிகழ்ந்து விடுகிறது. முடிந்த பிறகு வெறுமை நம்மை சுருட்டிக்
கொள்கிறது. உள்ளத்தில் திருப்தி ததும்ப உலகமே பொன்மயமாக, வாழ்க்கையே களியாட்டமாக மாறுவது இன்னொரு வகைக் கொண்டாட்டம். அது எப்போதும் நீடித்து நிற்பது. நினைக்குந்தோறும் ஆனந்த வெள்ளத்தில் நம்மை மூழ்கச் செய்வது.

புத்தாண்டை வரவேற்பதற்காக உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன. இங்கும்
பல இடங்களில் இளைஞர்கள் தங்களை மறந்து ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். அடுத்த ஆண்டு வருவது கொண்டாட்டத்திற்கான காரணமாக இருக்கிறதே தவிர அதை பகுத்துப் பார்த்து எண்ணி மகிழ யாருக்கும் அவகாசம் இருப்பதாகத் தெரிவதில்லை. நாங்களும் கல்லுாரியில் படித்தபோது அது விருந்து உண்பதற்கும், விடுதியில் நடனமாடுவதற்கும் ஒரு சாக்காக இருந்தது, அவ்வளவே.நிகழ்வுகள் கொண்டாடத் தான் புத்தாண்டு மட்டுமல்ல, எல்லா நிகழ்வுகளுமே கொண்டாட்டத்திற்குரியவை. இந்த வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருப்பதற்காகத்தான். எல்லா நிமிடங்களையும் மகிழ்ச்சி மகரந்தம் தடவி திருப்தி சூல் கொள்ளச் செய்வதில்தான் அதன் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. ஆனால் அது மேம்போக்கான, கண நேரக் கொண்டாட்டமாக இல்லாமல் நிரந்தர மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சென்றஆண்டில் எத்தனை நாட்களை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்! நம் வாழ்க்கையிலே எத்தனை நாட்கள் நீங்காமல் நம் ஞாபக மடிப்புகளில் தங்கியிருக்கின்றன!நாம் எதையாவது சாதித்திருந்தால்அந்த நாள் அப்படியே கண்முன் காட்சிக்கு வருகிறது. ஏதேனும் ஒரு நிகழ்வில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருந்தால் அது படம்போல மனத்திரையில் ஓடுகிறது. யாருக்கேனும் உயிர் போகிற தருணத்தில் உதவியிருந்தால் அது நெஞ்சில் நிலைத்து நிற்கிறது. பயனுள்ள முறையில் ஏதேனும் செயல் செய்திருந்தால் அது பளிச்சென்று நினைவுக்கு வருகிறது. நாம் தவித்துக்கொண்டிருக்கும் போதும், தத்தளித்துக் கொண்டிருக்கும் போதும் தாவிக் குதிக்க நேசக்கரம் நீட்டியவர்கள் முகங்கள் மின்னல்போல் தோன்றி மறைகின்றன.

நினைவில் நிற்கும் நாட்கள் : இப்படி நம்மால் சென்றஆண்டில் எத்தனை நாட்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும்! பயனுள்ள முறையில் பயன்படுத்திய நாட்களையே நாம் நினைக்கிறோம், மறக்காமல் இருக்கிறோம். அவை சிலருக்கு ஒற்றைப்படையிலிருக்கும்.யார் நுாறு நாட்களைத் தாண்டிகணக்கில் வைத்துக்கொள்ள முடியுமோ, அவர்களே செம்மையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்று பொருள். அவர்கள் புத்தாண்டை புறரீதியாக மட்டும்
இல்லாமல் அகரீதியாகவும் முழுமையாகக் கொண்டாட முடியும்.உண்மையான புத்தாண்டை எப்படி உருவாக்குவது என்பதை யோசிப்பதே அதற்குச் செய்கிற மிகப் பெரிய வரவேற்பு. அதற்குப் பழைய ஆண்டு அனுபவங்களை துாசித்தட்டிப் பார்க்க வேண்டும். சென்ற ஆண்டைப் பற்றிய விரிவான விமர்சனத்தை நாம் முன்வைக்க வேண்டும். நாம் பெற்றவற்றை, சாதித்தவற்றை, நாம் புதிதாக முயன்றவற்றை, கற்றுக்கொண்டவற்றை, வளர்த்துக்கொண்டவற்றை வரிசை
யாக எழுத வேண்டும். நாம் தொலைத்தவற்றை, இழந்தவற்றை, நம் சோம்பலால் பறிகொடுத்த
வற்றைப் பட்டியலிட வேண்டும். தயவுதாட்சண்யம் காட்டாமல் அந்த உள்முகப் பார்வையை செய்வது அவசியம். நாம் யாருக்கெல்லாம் உதவியிருக்கிறோம், எந்தப் புதிய நண்பர்களைப் பெற்றிருக்கிறோம், எத்தனை புத்தகங்களை வாசித்துஇருக்கிறோம், எந்தப் புதிய
இடங்களுக்குப் பயணம் செய்துஇருக்கிறோம் என்றெல்லாம் குறிப்பெடுக்க வேண்டும்.
இந்த விரிவான பயிற்சியை மேற்கொண்டால் கடந்த ஆண்டை நாம் எப்படி அணுகியிருக்கிறோம் என்பது தெள்ளத்தெளிவாகப் புரியும். ஒருவேளை, நமக்கே நாம் மிகவும் அடர்த்தியாக வாழ்ந்துஇருப்பதைப்போலத் தோன்றினால், சென்ற ஆண்டையும் செண்பகப்பூக்களுடன் நன்றி கூறி வழியனுப்புவோம். பெரும்பாலான புத்தாண்டு வாழ்த்துகள் கடந்த ஆண்டை சபித்தும், வரும் ஆண்டை வாழ்த்தியும் அனுப்பப்படுவதைப் பார்க்கிறோம். உண்மையான கொண்டாட்ட விதை வரும் ஆண்டில் நாம் நினைவு வைத்துக்கொள்ளும் நாட்களை அதிகப்படுத்தினால், ஒவ்வோர் ஆண்டும் அதைப்போல வாழ்வின் அடர்த்தியைக் கூட்டினால் அதுவே மரணமில்லாப் பெருவாழ்வு. அதுவே நீண்ட ஆயுள். அதை எப்படிச் செய்வது என்பதைச் சிந்திப்பதே உண்மையான கொண்டாட்டத்திற்கு நாம் விதைக்கிற விதை, நடுகிற நாற்று, இடுகிற எரு, பாய்ச்சுகிற நீர். வருகிற ஆண்டை முழுமையாக வாழ நாம் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். எதையும் ஒரேயடியாகச் செய்ய முடியாது. எந்த நுாலும் ஒவ்வோர் எழுத்தாகவே எழுதப்படுகிறது. எந்த வயலும் ஒவ்வொரு நாற்றாகவே நடப்படுகிறது. எந்த ஆண்டும் ஒவ்வொரு நொடியாகவே கழிந்து போகிறது.ஆண்டுக்குத் திட்டமிடுவது என்பது நொடிக்கு நொடிமுழுமையாய் வாழ்வதை
உள்ளடக்கியது. அடுத்த ஆண்டில் நாம் விழிப்புணர்வோடு இருப்போம் என்பதே இதற்கான வழி. விழிப்புணர்வுடன் வாழ்கிறவர்கள் நொடியை நிமிடமாக்கும் வித்தையைக் கற்றவர்கள். அவர்கள் பக்கத்தைப் பத்தியாய் வாசிப்பார்கள். அவர்கள் அரைமணி நேரம் செய்கிற பணியை ஐந்து நிமிடத்தில் முடிப்பார்கள். மற்றவர்கள் அரைகுறையாகச் செய்யும் பணியை அவர்கள் அற்புதமாக செய்வார்கள்.விழிப்புணர்வு எதையும் தவம்போல நுகர வைக்கும். அது அர்ப்பணிப்பு உணர்வை எல்லாவற்றிலும் விதைத்து விடும்.நாம் அடுத்த ஆண்டு என்னென்ன பணிகள் செய்யப்போகிறோம் என்பதை வார ரீதியில் வகுத்துக்கொள்ள வேண்டும். படிக்கப்போகிற புத்தகங்களை, பயணப்படப் போகிற இடங்களை, அறிந்துகொள்ளப்போகிற நபர்களை, ஆற்ற வேண்டிய செயல்களை, சாதிக்க வேண்டிய எல்லைகளை, வெற்றிபெற வேண்டிய நிகழ்வுகளை, சேமிக்க வேண்டிய தொகையை, முதலீடு செய்ய வேண்டிய பணத்தை, செலுத்த வேண்டிய கடனை, ஆழமாக்க
வேண்டிய அனுபவங்களை நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒரு புத்தகம் என்று முடிவு செய்தால்கூட ஐம்பது புத்தகங்களை எளிதில் படித்துவிட முடியும். தினம் ஐந்து ஆங்கிலச்சொற்களை அறிந்துகொள்வது என நிர்ணயித்தால் போதும், குறைந்தது 1500 புதிய சொற்களில் புலமை பெற்று விடலாம்.

வானளாவிய சங்கற்பங்கள் : எல்லோரும் புத்தாண்டு தொடங்கும்போது வானளாவிய சங்கற்பங்கள் செய்து கொள்வதுண்டு. அவற்றை அடுத்த வாரத்திலேயே மறந்துவிடுவதுமுண்டு. அது நிகழாமலிருக்க சாத்தியமான எல்லைக்கோடுகளை இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை வாரம் ஒரு முறை சரிபார்த்து அடைந்திருக்கிறோமா என்று பரிசீலிக்க
வேண்டும். எதிலாவது பின்னடைவு இருந்தால் முயற்சியை முழுமையாக்கி உழைப்பை இரட்டிப்பாக்கி தொய்வை சரிசெய்ய வேண்டும். ஒவ்வோர் இரவும் நாம் அடைய வேண்டிய நோக்கத்தைக் காட்சிப்படுத்த வேண்டும்.இந்தப் புத்தாண்டை மனத்தயாரிப்புடன் வரவேற்போம். அடுத்த ஆண்டு வருகிறபோது எண்ணற்ற நாட்களை நினைவில் வைத்துக்கொள்ளுமளவு பசுமையான செயல்களை போகிற வழிகளிலெல்லாம் செய்து முடிப்போம். நம்மால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் முகங்களில் புன்னகைப் பூக்களைப் படர விடுவோம். நாம் எல்லா வகையிலும் மேன்மையடைந்த புத்தாண்டாக இது திகழ முழு மூச்சோடு திட்டமிடுவோம். அவற்றை நோக்கி ஒவ்வோர் அடியையும் அழுத்தமாக எடுத்து வைப்போம். இந்தப் பிரபஞ்சமே மகிழ்ச்சியுடன் நம்மைப் பார்த்துக் கண்சிமிட்டுவது போலத் தோன்றும். நாம் ஆட வேண்டிய அவசியமில்லாமல் மகிழ்ச்சியால் திளைப்பதை உணரலாம்.

-முனைவர்வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.,
அரசுத்துறைமுதன்மை செயலாளர்
iraianbuhotmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement