Advertisement

உயர்கல்வி தொட்டுவிடும் உயரம்தான்!

பத்து, பதினொன்று, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. படிக்கும் கவலை பிள்ளைகளுக்கு; படிக்க வைக்கும் கவலை பெற்றோருக்கு. பிள்ளைகளின் உயர்கல்வி அல்லது
விரும்பிய கல்விக்கு பொருளாதாரரீதியான தேவைகளை எப்படி எதிர்கொள்வது என்று தவிக்கத் தொடங்கி விட்டனர் பெற்றோர்.பள்ளியில், கல்லுாரிகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும்
பலரால் மேற்படிப்பை தொடர முடியாமல் போவதற்கு குடும்பத்தில் வசதியில்லாததும் ஒரு
காரணம்.ஆனால் உயர் கல்வி கற்க பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, மத்திய அரசே பல்வேறு கல்விக்கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் நடைமுறையில் கல்விக்கடன் பற்றி யாருக்குத் தெரிந்திருக்க வேண்டுமோ அவர்களுக்கு அதைப்பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் மேற்படிப்பை தொடர விரும்பும் பலருக்கு அது வெறும் கனவாகவே போய் விடுகிறது.

கடன் தரும் வங்கிகள் : உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர்கல்வி கற்க, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராமிய வங்கிகள், மத்திய அரசின் நிதி மற்றும் மேம்பாட்டு கழகங்கள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள் கடன் தருகின்றன.கல்வி கடனுக்காக, கடந்த ஆண்டுகளைப் போல விண்ணப்பம் பெறவும், கடன் வாங்கவும் வங்கிகளின் வாசல்களில் காத்திருக்க தேவையில்லை.மத்திய அரசு, கல்விக் கடனுக்காக பிரத்யேகமாக, துவக்கியுள்ள வித்யா லட்சுமி www.vidyalakshmi.co.in என்ற இணைய தளத்தைப் பயன்படுத்தலாம். 42க்கும் மேற்பட்ட வங்கிகளின் 80க்கும் மேற்பட்ட கல்விக்கடன் திட்டங்கள் இதில் உள்ளன. அதில் உங்களுக்குப் பொருத்தமான திட்டத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வங்கிகளில் கால விரயம், தட்டிக் கழித்தல் போன்ற வங்கிகளின் போக்குகளைத் தவிர்த்து விடலாம். இந்த இணைய தளத்தில் பதிவு செய்யப்படாத வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளில் கடன் பெற வேண்டுமென்றால், அந்தந்த வங்கிகளின் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிப்பது நல்ல பலன் அளிக்கும்.

வங்கிகளின் முடிவு : ஒவ்வொரு கல்விக் கடன் விண்ணப்பத்தின் மீதும் 30நாட்களுக்குள் முடிவெடுக்கவேண்டும் என்பது விதி. கல்விக் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கும் போது, இந்திய
வங்கிகள் சங்கம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தகுந்த
காரணங்களைக் கூறி விதிகளைப் பின்பற்றி மண்டல மேலாளர் மட்டுமே விண்ணப்பத்தை
நிராகரிக்க முடியும்.விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்களில் ஆதார் அட்டையும்,
பான் கார்டும் மிகவும் முக்கியம். எனவே எதிர்வரும் ஆண்டில் விண்ணப்பிக்க விரும்புவோர்
இப்போதே அதற்குறியஏற்பாடுகளை மேற்கொள்ளவும். கல்லுாரியில் சேரும்போது வழங்கப்படும் போனபைடு சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயம்.

எதற்கு கிடைக்கும்

1. கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம்.
2. தேர்வுக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கூட கட்டணம்.
3. போக்குவரத்துச் செலவு - வெளிநாட்டில் படிக்கச் செல்பவர் என்றால் விமானக் கட்டணம்.
4. கல்விக் கடனுக்குரிய காப்பீடு அவசியம் என்றால் அதற்கான சந்தா கட்டணம்.
5. கல்லுாரிகளில் பெறப்படும் காப்புக் கட்டணம், கட்டட நிதி மற்றும் திருப்பித் தரதக்க
வைப்புத் தொகை .(இதற்கு ரசீது தேவை)
6. புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வாங்குவதற்கு.
7. சம்பந்தப்பட்ட படிப்பிற்கு கணினி தேவை எனில் அதற்கும்.
8. படிப்பை முடிப்பதற்கு அவசியமெனில் கல்விச்சுற்றுலா, ஆய்வுக் கட்டுரைக்காக மற்றும் ப்ராஜக்ட் பணிகளுக்கான செலவுகள்.
9. மாற்றுத் திறனாளிகள் அந்தந்த குறைபாடுகளுக்கேற்ப தேவையான கருவிகள் வாங்குவதற்கும்,போக்குவரத்து வாகனங்கள் வாங்குவதற்கும், மாற்றுத் திறனாளிகளுக்கான பொருளாதார மற்றும் மேம்பாட்டுக் கழகம் கடனுதவி வழங்குகிறது.
மேற்கண்ட செலவுகளுக்கான உத்தேச தொகையை (எஸ்டிமேட்) கல்லுாரிகளில் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, நான்காண்டுகள் படிப்பு என்றால் நான்காண்டுகளுக்கும், மூன்றாண்டு படிப்பு என்றால் மூன்றாண்டுகளுக்கும் எஸ்டிமேட்டை கல்லுாரியில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஒட்டு மொத்தமாக அனைத்து ஆண்டுகளுக்கும் ஒரே தவணையில் கடன் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.உதாரணமாக எதிர் வரும் கல்வி ஆண்டில் கல்விக்கடன் பெற
விரும்புபவர்கள் 2018 - 19, 2019 - 20, 2020 - 21, 2021 - 22 என்று கல்வி ஆண்டு வாரியாக எஸ்டிமேட்டை கல்லுாரியில் பெற்று கடன் ஒப்புதலை பெற திட்டமிடவேண்டும்.

எவ்வளவு வழங்கப்படும் : கல்விக் கடனில் மூன்று பிரிவுகள் உள்ளது. முதல் பிரிவில் ரூ. 4.00 லட்சம் வரை கடன்பெறலாம். இதற்கு மாணவர் மற்றும் பெற்றோரின் கையெழுத்து மட்டும் போதுமானது. மாணவர் மைனராக இருந்தால் அவர் இணைக் கடன்தாரர் ஆவார்.
இரண்டாவதாக ரூ. 4.00 லட்சம் முதல் ரூ. 7.50 லட்சம் வரையுள்ள கடனுக்கு மாணவர், பெற்றோர்
மற்றும் மூன்றாவது நபர் ஜாமின்தாரராக பிணைக் கையெழுத்திட வேண்டும். சொத்து அடமானம் தேவையில்லை.மூன்றாவதாக ரூ.7.50 லட்சம் ரூபாய்க்கும் மேல் உள்ள கல்விக்கடன் பெறும்போது, எவ்வளவு கடன் தொகையோ அதற்கு ஈடாக சொத்து அடமானம் கொடுக்க வேண்டும். அது நிலமாகவோ, கட்டடமாகவோ, அரசு கடன் பத்திரமாகவோ, பங்குகளாகவோ அல்லது மியுச்வல் பண்டுகளாகவோ இருக்கலாம்.மாணவர்களின் குடும்பபொருளாதார சுமையைக்
குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு வட்டி மானியத் திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது.
ஆண்டிற்கு ரூ. 4.50 லட்சம் வரை வருமானமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக்கடன் பெறும்போது இச்சலுகை கிடைக்கும். கல்விக் கடனை எவ்வளவு காலத்திற்குள் திரும்பச் செலுத்த வேண்டும்? படிப்பு முடிந்தவுடன் ஓராண்டு அல்லது வேலை கிடைத்த பின்பு 6 மாதங்களுக்கு பின்னர் துவங்கி 15 ஆண்டுகள் வரை மாதத் தவணை முறையில் கல்விக்
கடனைத் திரும்பச் செலுத்தவேண்டும். ஸ்காலர்ஷிப் பெற்றுப் படிக்கும் மாணவர்களுக்கு, அதையே காரணம் கூறி கல்விக் கடன் தர சில வங்கிகள் மறுக்கின்றன. அது தவறு. ஸ்காலர்ஷிப் தொகையை மொத்தக் கல்விக் கடன் தொகையிலிருந்து கழித்துக் கொண்டு மீதியைக்
கடனாக வழங்க வேண்டும்; அல்லது ஸ்காலர்ஷிப் தொகையை வங்கிகள் கல்விக் கடன்தொகையில் வரவு வைக்க வேண்டும். தகுந்த காரணங்களின்றி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், முதல் கட்டமாக அந்தந்த மாவட்டங் களில் உள்ள மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் புகார் செய்யலாம்.அதில் பலன் கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட வங்கித் தலைவருக்கு இ - மெயில் மூலமாக புகார் அளிக்கலாம். அதற்கும் பலன் இல்லை என்றால்
The Chief General Manager
RCPD, Reserve Bank of India,
Central Office Building,
10th Floor, Sahid Bhagat Sing Marg,
Mumbai - 400 001.
என்ற முகவரிக்கு புகார் அனுப்பி நிவாரணம் தேடலாம்.கல்விக் கடன்கள் பெரும்பாலும் மத்திய, மாநில அரசுகளால் தள்ளுபடி செய்யப்படுவதில்லை. கல்விக் கடன் வங்கும்போது உறுதியாக திரும்ப செலுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனேயே வாங்குங்கள். அது உங்கள் எதிர் காலத்திற்கு மட்டுமல்ல, உங்களுக்கு பின்னால் வரும் மாணவ சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்.

-என்.குமரன்எழுத்தாளர், திருப்பூர்
97150 05009

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement