Advertisement

மனச்சோர்வுக்கு மருந்து!

ப்போதெல்லாம் தினமும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பாதிப் பேருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனச்சோர்வு காரணமாக ஏற்படும் நோய்களே அதிகம்' என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். 'இது பள்ளிக் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் கிழவர் வரை எல்லோருக்கும் இருக்கிறது' என்கிறது மருத்துவ புள்ளி விபரம்.இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைமுறை, சிதைந்துபோன உறவுமுறை, மறைந்துபோன கூட்டு குடும்ப மகிழ்ச்சி, அதிகரித்து வரும் மதுப்பழக்கம், தன் வேலை, தன் வீடு எனும் குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி... மனச்சோர்வுக்கு இப்படிப் பொதுவான பல காரணங்களைக் கூற முடியும். குறிப்பிட்டுச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மனக்காயங்கள், பாலியல் வன்முறைகள், இளவயதினருக்குக் காதல் தோல்வி, வேலையின்மை அல்லது படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாதது போன்றவை காரணமாகின்றன.வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப் பளு, குறைந்த சம்பளம், கடுமையான பணிச்சூழல்போன்றவற்றால் மனச்சோர்வு ஏற்படுகிறது. பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், குழந்தையின்மை, அடங்காத பிள்ளைகள் முதலியவை மனச்சோர்வைக் கொண்டு வருகின்றன. தனிமை, வெறுமை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, நாட்பட்ட நோய்நிலை, நலிந்துவரும் உடல்நிலை ஆகியவற்றால் மனச்சோர்வு வந்து முதியவர்கள் துன்பப்படுகின்றனர்.


அறிகுறிகள் என்ன

மனச்சோர்வின் முதற்கட்ட அறிகுறியாக வழக்கமான வாழ்வியல் நடைமுறைகளும் கடமைகளும் மாறும். அதீத உறக்கம் வரும். சோம்பேறித்தனமாக இருக்கும். சாப்பிடப்பிடிக்காது. உடல் மெலிந்து பலவீனம் அடையும். தலைவலி, உடல்வலி எனப் பலதரப்பட்ட வலிகள் தொல்லை கொடுக்கும்.இந்த வலிகள் எல்லாமே மனம் சார்ந்தவை என்பதால், வலி போக்கும் மருந்துகளுக்குத் தற்காலிக நிவாரணமே கிடைக்கும். பல மருத்துவர்களையும் மருந்துகளையும் மாற்றினாலும் வலிகள் மறையாது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இயலாமை தலைதுாக்கும். மனம்உற்சாகம் இழக்கும்.அடுத்தகட்டத்தில் முகத்தில் சிரிப்பு மறைந்து, களை இழந்துவிடும். கலகலப்பாகப் பேசுவதும், பழகுவதும் குறைந்துவிடும். மற்றவர்களிடமிருந்து ஒதுங்கிப் போவதும் தனிமையை விரும்புவதும் நிகழும். வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் போகும். குடிப்பழக்கம், போதைப்பழக்கம் ஏற்படும். ஆஸ்துமா, உறக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற துணை நோய்கள் தலைதுாக்கும்.
இறுதிக்கட்டத்தில் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் குறைந்து, வாழ்க்கையில் தான் தோற்றுவிட்டதாகத் தோன்றும். தான் எதற்கும் லாயக்கில்லை, என்னால் எவருக்கும் பயனில்லை, என்னை எவருக்கும் பிடிக்கவில்லை, எதிர்காலம் இருண்டதாக இருக்கிறது போன்ற எதிர்மறை எண்ணங்கள் மீண்டும் மீண்டும் மனசுக்குள் 'ரீவைண்ட்' ஆவதால், 'இனி வாழ்ந்து பயனில்லை' என முடிவுக்கு வந்து, தற்கொலை முயற்சிகளில் இறங்குவர்.

என்ன சிகிச்சைமனச்சோர்வின் அறிகுறிகளை வைத்து அதைக் குறைந்த நிலை, மிதமான நிலை, கடுமையான நிலை எனப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. மனச் சோர்வைப் போக்கும் மருந்துகள்தான் சிகிச்சையில் முக்கியம் என்றாலும், கூடவே சிந்தனை சார்ந்த நடத்தைப் பயிற்சிகளும், உறவுகள் மேம்பட ஆலோசனைகளும் தேவைப்படும். மனச்சோர்வு கடுமையாக உள்ளவர்களுக்கு 'மின்துாண்டல் சிகிச்சை' தரப்படும்.
ஆனாலும், அறிவியல் வளர்ந்தோங்கி நிற்கும் இக்காலத்திலும், மோசமான மனச் சோர்வு உள்ளவர்களுக்குப் பேய் பிடித்துவிட்டது; செய்வினை செய்துவிட்டனர்; பில்லி சூனியம் வைத்துவிட்டனர் என எண்ணி, வேண்டாத சிகிச்சைகளை மேற்கொள்கிறவர்களும் உண்டு.


எப்படித் தடுப்பதுமனச்சோர்வு தானாகச் சரியாகிவிடும் என மட்டும் காத்திருக்காதீர்கள். மருத்துவச் சிகிச்சைகளோடு சுயமுயற்சிகளும் முக்கியம். உதாரணமாக, இதன் ஆரம்பக்கட்டத்தில் சோம்பேறித்தனம்தான் முக்கியப் பிரச்னையாக இருக்கும். அப்போதே, அதைச் சரிசெய்யா விட்டால், வாழ்க்கைமுறையையே சீர்குலைத்துவிடும். எனவே,முதலில் உங்கள் அன்றாட நடைமுறைகளை ஒழுங்குபடுத்துங்கள். குறிப்பிட்ட நேரத்தில் எழுவது, குளிப்பது, செய்தித்தாள் வாசிப்பது, வெளியில் செல்வது என முறைப்படுத்துங்கள். நேரத்துக்குச் சாப்
பிடுங்கள். உணவு இல்லாத களைப்பு மனச்சோர்வை அதிகப்படுத்தும். உங்கள் மீதே எரிச்சல்கொள்ள வைக்கும்; கோபம் வரும். இந்தப் போக்கு சுய முயற்சித் தடுப்புகளைத் தகர்த்துவிடும் என்பதால் இந்த யோசனை.ஓய்வு நேரங்களில், உங்கள் வழக்கமான பணிகளிலிருந்து விலகி, புதிதாக ஏதாவது மேற்கொள்ளுங்கள். உதாரணமாக, இசை கற்கலாம். ஓவியம் தீட்டிப் பழகலாம். புதிய சமையல் ரெசிபியை முயற்சி செய்யலாம். ஒரு தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றலாம். நட்பு வட்டத்தை விரிவாக்கி, மனம்விட்டு உரை
யாடலாம்.


குறிக்கோள்


உங்களுக்கென சில குறிக்கோள்களை வைத்துக்கொண்டு அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள். குறிக்கோள் என்பது பெரிய அளவில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சீக்கிரத்தில் இலக்கை அடைகிற ரீதியில் இருந்தாலே போதும். உதாரணமாக வீட்டை, படுக்கை அறையைச் சுத்தப்படுத்துவது, புத்தகங்களை அடுக்கிவைப்பது, தோட்டத்தில் புல் வெட்டுவது போன்றவற்றால் மனம் உற்சாகம் அடைந்து, மனச்சோர்வை விரட்டிவிடும்.மது குடித்தால் மனச்சோர்வு மறைந்துவிடும் என்ற தவறான எண்ணம் பலரிடம் காணப்படுகிறது. மது மனச்சோர்வை இன்னும் மோசமாக்குமே தவிர சீராக்குவதில்லை. எனவே, மதுவை மறந்துவிடுங்கள். மாறாக, மனதில் தேங்கி நிற்கும் பிரச்னைகளை நெருங்கிய நண்பரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.அப்போதுதான் மனச்சுமை கொஞ்சமாவது குறையும். பிரச்னைகளை உங்களிடமே பூட்டிவைப்பதுதான் தவறு. இரும்புக் குழாயைத் துரு அரித்து விடுவதைப்போல உள்
மனப் பிரச்னைகள் உங்களை பாடாய்ப்படுத்திவிடும்.உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளுங்கள். முப்பது நிமிடங்கள் போதும். அது நடைப்பயிற்சியாகவோ நீச்சல் பயிற்சியாகவோ இருக்கலாம். இம்மாதிரியான பயிற்சிகளின்போது மூளைக்குள் 'என்டார்பின்' எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மனச்சோர்வு நீங்க மருந்துகளைமட்டும் நம்பாமல் மேற்சொன்ன சுயமுயற்சிகளையும் மேற்கொள்ளும்போது, பிரச்னைகள் தீர்வது எளிதாகிவிடும். மீண்டும் மனச்சோர்வு ஏற்படுவது தடுக்கப்படும்.


குடும்பத்தினரின் பங்குமனச்சோர்வு உள்ளவர்களுக்குக் குடும்பத்தினரின் ஆதரவும், ஊக்கமும் மிகவும் அவசியம். பாதிக்கப்பட்டவரின் மனநிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது முக்கியம். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும். அவரைத் திறந்த மனதுடன் பேச வைக்கவும், அவர் கூறுவதைப் பொறுமையுடன் கேட்டுப் பதில் சொல்லவும் குடும்பத்தினர் பழகிக்கொள்ள வேண்டும்.அவர் சின்னச் சின்ன வேலைகளில் ஈடுபட உதவ வேண்டும். அவர் சீரான உணவு சாப்பிடவும், சரியான உறக்கம்கொள்ளவும், தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் உதவினால் இன்னும் நல்லது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாகச் சாப்பிடுகிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.
மனச்சோர்வு உள்ளவர்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருந்தால், அவரை ஊன்றிக் கவனித்து, தனிமையைப் போக்கி, நல்ல உறவுச்சூழல்களை உருவாக்க, குடும்பத்தில் உள்ளவர்களால்தான் முடியும்.-டாக்டர் கு. கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம் gganesan95gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    அருமை. மனசோர்வு ஏற்பட்டால் தினமலர்.காம் வெப்சைட் திறந்து அரசியல் செய்திகளுக்கு இங்கு வாசகர்கள் பதிவிடும் கருத்துகளை படித்தாலே மனசோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

  • Snake Babu - Salem,இந்தியா

    அருமையான கட்டுரை அய்யா நன்றி, தற்போதைக்கு தேவையான ஒன்று, இப்போது நாம் பொதுவாகவே உடலளவிலும் மனதளவிலும் பலகீனமாகவே இருக்கிறோம், நம்முடைய உறவுமறையிலும் பெரிதும் சொல்லிக் கொள்ளும்படியும் இல்லை எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பாலே உள்ளோம், எந்திர தனமான வாழ்க்கை. மனிதம்... சமூகம் என்ற நிலையில் இருந்து குறுகி தனி மனிதனுக்குள் அடங்கி இருக்கிறது. மீடியா வளர்ச்சியும் ஒரு காரணமாக கூறலாம். எதற்கெடுத்தாலும் பதற்றம், வெயிலடித்தால் பதற்றம், மழை பெய்தால் பயம். ஆட்சி நிர்வாகமோ கொடுமை. அதை சமாளிக்கும் விதத்தில் போடப்படும் பிட்டுகள். அதிக பதட்டமுடையவை, எல்லாம் எதிர்மறை செய்திகள், இவை எதிர்மறை எண்ணங்களை வளர்கின்றன. வலுத்தவன் வாழ்வான் என்ற நிலைக்கு போய் கொண்டிருக்கிறது. சரி, மன்னியுங்கள். எதற்கு எதிர்மறை விசயத்திற்கு போக வேண்டும். இதிலிருந்து எப்படி மீள்வது. எப்போதும் உற்சாகமாக இருக்கவேண்டும். குழந்தை இருந்தால் அதனோடு நேரம் செலவிடுவது, செடிகொடிகள் இருக்குமெனில் அது கூட. எதுவும் இல்லையா, மனதிற்கு பிடித்த இடத்திற்கு கொஞ்ச நேரம், கோவில் சர்ச் பள்ளிவாசல் கொஞ்ச நேரம் ......... எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும், மனசோர்வுக்கு காரணமே இந்த ஏற்றுக்கொள்ளாத தன்மையே. எதையும் ஏற்கும் தன்மை வைத்துவிட்டால் சோர்வு தானாவே ஓடிவிடும். அய்யா நம்மை கவனித்துக் கொள்வதற்காகவே ஒய்வு நாள் வருகிறது. வாரப்பளுவை இறக்கிவிட்டு தனக்காக கொஞ்ச நேரம் எது பிடிக்குமோ அதை செய்வது. புத்தகங்கள் படிப்பது, செய்தித்தாள் வேண்டவே வேண்டாம், தியானம், நகைசுவை காட்சிகள். பூங்கா, கடற்கரை இப்படி வைத்துக் கொண்டால் எல்லா நாளும் நல்லநாளே. வேலையை கஷ்டப்பட்டு செய்யாமல் இஷ்டப்பட்டு செய்தால் எல்லாம் சந்தோசமாக மாறிவிடும். நின்று, கவனி செல் இந்த மூன்றை எல்லா செயலுக்கும் அளவிட்டு செயலில் இறங்கினால் எல்லாம் வெற்றியே. நம்முடைய ennakalai செயல் நேர்மறையாக வைத்துக்கொண்டால் சோர்வு என்று ஒன்று இருக்கவே இருக்காது. நன்றி வாழ்க வளமுடன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement