Advertisement

குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறதா

ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தை தொழிலாளர் முறைகளும் நம் சமூகத்தை விட்டுதள்ளி வைக்கப்படுகிறதா என்றால் மவுனம் தான் சமூகத்தின் பதிலாக இருக்கும். காலம் காலமாக கருவிலேயே அழிக்கப்படுவதும், காசுக்காக பிச்சை
எடுக்க வைப்பதும் தொடர்கதையாகிக் கொண்டே தான் இருக்கிறது. கடுமையான சட்டங்களும்,
தண்டனைகளும் சமூகத்தை அச்சுறுத்தினாலும் கண்ணை மறைக்கும் கண்மூடித்தனமான சம்
பவங்கள் அரங்கேறாமல் இல்லை.

தாய்மை : நம் சமூக கட்டமைப்பில் ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறாள் என்றால், அவள் தாய்மை அடையும்போது தான். இதுதான் காலம் காலமாகசமூகம் நமக்கு சொல்லி கொடுத்த பாடம். அதனால் தான் வள்ளுவனும் வாழ்க்கை துணை நலம் எனும் அதிகாரத்திற்கு அடுத்த நிலையிலேயே மக்கட்பேறு எனும் அதிகாரத்தை பதிவு செய்து இருக்கிறான். தாய்மையின் அன்பும், அரவணைப்பும் அவள் கருவுற்ற நாளில் இருந்தே துவங்கிவிடுகிறது. தனக்காக மட்டும் உண்டு வாழ்ந்தவள் தன் உறவிற்கும் சேர்த்து உண்ண தன்னை பழக்கிக் கொள்கிறாள். அன்று ஆரம்பிக்கும் தொப்புள்கொடி உறவை அவர்களது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்
திலும் மெழுகாக தன்னை உருக்கிக்கொள்கிறாள். குழந்தைக்கும் தாய்க்குமான உறவின் வலிமையை விட இந்த உலகில் வேறு ஏதும் இருக்க முடியாது.

குழந்தை பருவம் : போட்டி, பொறாமை, பகை, கஷ்டம், நயவஞ்சகம், கோபம், கெட்ட எண்ணங்கள், புகழ்ச்சி, இகழ்ச்சி மொத்தத்தில் இந்த சமூகத்திற்கு கேடு விளைவிக்க கூடிய எந்த எண்ணமும் இல்லாத பருவம் தான் குழந்தை பருவம். தாயின் முகம் பார்த்தால் சிரிக்கும், பசியெடுத்தால் அழும் இதை தவிர வேறுஏதும் தெரியாது தெளிந்த நீரோடை பருவம். யாழும் குழலும் போட்டி போட முடியாத மழலை பருவம் தான் வாழ்க்கையின் வெற்றிக்கான சூட்சுமத்தை கற்றுத் தருகிறது. தன்னம்பிக்கையும், விடா முயற்சியையும் குழந்தையின் நடை பழகும் பருவத்திலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். தத்தித் தாவி எழுவதும், கீழே விழுவதும் பின் முயற்சிப்பதும் இறுதியில் அது நினைத்ததை அடைவதையும் ஒவ்வொரு மனிதனும் அனுபவித்துத்தான் வந்திருப்பார்கள்.வெற்றிக்கான விதை குழந்தை பருவத்திலேயே
விதைக்கப்பட்டு விடுகிறது.

குழந்தை வளர்ப்பு : கோடி கொடுத்தாலும் கிடைக்காத சொத்துக்களாகத்தான் ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர் போற்றி வளர்க்கின்றனர். அவன் நல்லவனா, கெட்டவனா என்பதை
சமூகத்தின் பின்புலம் தான் முடிவு செய்கிறது. சமூகத்தின்நிகழ்வுகளும், நகர்வுகளும் தான் அவனை நகர்த்தி செல்கிறது.அன்னையின் வளர்ப்பு தான் ஒரு குழந்தையை நல்லவனா,
கெட்டவனா என்று முடிவு செய்கிறதா என்றால் யோசிக்க வேண்டியது தான். எந்த தாயும் தன் பிள்ளை கெட்டவனாக வளர வேண்டும் என்று நினைப்பதுமில்லை, வளர்ப்பதுமில்லை.
எல்லாத்தாயும் தன் மகன் சமூக அக்கறையுள்ள சான்றோனாக வளர வேண்டும் என்று தான்
நினைப்பது தான் நிதர்சன உண்மை. ஆனால் சமூகத்தின் சீரழிவுகளும், சமூக பின்புலமும் ஒருவனின் வாழ்வியலை திசை திருப்பும் காரணிகளாக அமைந்து விடுகின்றன.
பத்து வயது சிறுமி பாலியல் வன்மத்துக்கு உள்ளாக்கப்படுகிறாள். அவள் இந்த சமூகத்தில் இருந்து எதனைக் கற்றுக் கொள்ள முடியும். சமூகத்தின் மீதான வெறுப்பும், குற்ற உணர்வும் தானே அவள் அடி மனதில் புரையோடி கிடக்கும். இதற்கு எந்த தாயை குறைகூற முடியும்.
சாராயம் குடித்துவிட்டு வந்து தினமும் தன் தாயுடன் மல்யுத்தம் செய்யும் தகப்பனை பார்த்து வளர்ந்து பிள்ளை சாராயத்தை வெறுப்பானா, சமூகத்தை வெறுப்பானாஇந்த சமூகம் அவனுக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன? இப்படியானவட்டத்திற்குள்ளும், வன்மத்திற்குள்ளும் வளரும் குழந்தைகள் வன்மத்தை உள்வாங்கி கொள்கின்றன. வெறுப்பும், மனஅழுத்தமும் குழந்தை பருவத்திலேயே குடிகொள்கின்றன.தன் அடிப்படை உரிமைகளும், உணர்வுகளும் பறிக்கப்படும் போது தான் அவன் எதிர்கால வாழ்வு திசை மாறுகிறது. வாழ வழிகாட்ட வேண்டிய பொறுப்பு சமூகத்தின் ஒவ்வொரு தளத்திற்கும் உண்டு.

குழந்தை தொழிலாளர் : கூட்டைவிட்டு பறக்கும் குஞ்சுகளின் சிறகு ஒடிந்துவிட்டது போல பள்ளிக்கு செல்லும் வயதில் பட்டறையின் பயணம் துவங்கி விடுகிறது.கைவிரிக்கப்பட்ட குடும்பம் காரணமா, இல்லை குடும்பத்தை கைவிட்ட சமூகத்தை குற்றம் சொல்வதா. வேலைக்கு செல்லும் வயதினை அரசு நிர்ணயம் செய்கிறது. ஆனால் பதினைந்து வயது குழந்தையை நம்பி பல குடும்பங்கள் ஒற்றிய வயிறோடும், ஈரம் சொறிந்த கண்களோடும் ஒரு வேளை உணவுக்காக தவம் இருக்கிறதே, பள்ளி பையை துாக்காமல் கையில் மண்வெட்டியும், கூடையும் துாக்கி சுமக்கிறானே, புத்தகப் பை சுமக்கும் தோளில் குடும்பத்தை சுமக்கிறானே. இதற்கெல்லாம் காரணம் சமூகத்தில் விரவிக் கிடக்கும் வறுமையும், அறியாமையும் தானே.சாராயம் குடித்து செத்துப்போன அப்பன், வீட்டிலே முடங்கிப்போன ஆத்தா; எந்தப் பாவமும் செய்யாத குழந்தை வாழ்க்கையோடு எதிர்த்துப்போராட வேண்டிய கட்டாயம் இதுதான் அவனை குழந்தை தொழிலாளியாக
அடையாளம் காட்டி நிற்கிறது.உதவி செய்ய ஊரும் இல்லை. உறவும் இல்லை. தன் வயிறை தானே நிரப்பிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ; இப்படி ஆரம்பிக்கிற வாழ்க்கை பயணம் வாழ்வின் கடைசி வரைக்கும் தொழிலாளியாகவே வாழவேண்டிய சூழலை அவனுக்கு இந்த சமூகம் ஏற்படுத்தி கொடுத்து விடுகிறது. இதில் அவன் தானாக விழவில்லை தள்ளிவிட்டுத்தான் விழுந்து விடுகிறான்.

உதவிடுவோம் : அகரம் கூட எழுத தெரியாமல் இன்றைக்கு எத்தனை குழந்தைகள் நகரங்களின் சாலைகளிலும் குப்பை மேடுகளிலும் குப்பை பொறுக்குகின்றனர்; பிச்சை எடுக்கின்றனர். உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் கூட இல்லாமல் எத்தனை குழந்தைகள் குடும்பங்களும் ரோட்டோரங்களிலும், பஸ் ஸ்டாண்ட்களிலும் குடும்பம் நடத்துகிறது. நம்மால்முயன்றளவிற்கு அநாதை குழந்தைகள், வறுமையில் வாடும் குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள் ஆகியவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு வாழ்க்கையின்
வசந்தத்தை அறிமுகப்படுத்தலாம். சமூகம் இவர்களை ஒதுக்கிவைக்காமல் சமூகத்தின் அன்பையும் அரவணைப்பையும் செலுத்தினால்வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு இவர்களை அழைத்துச் செல்லலாம். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் கொண்டாடிய
இடத்தில் குடியிருக்கும்.; இப்படியான தெய்வத்திற்கு இணையான குழந்தைகளை இந்த சமூகத்தில் கடத்துவதும், கடத்தி வைத்து பணம் பறிப்பதும், கொலை செய்வதும், பாலியல் வன்மத்திற்கு உள்ளாக்குவதும், பாவத்திலும் மகாபாவமாகும். இப்பேற்பட்ட பாவசெயலை மறந்து இச்சமூகம் நல் வழியில் பயணிக்க வேண்டும்.

-எம்.ஜெயமணி
உதவி பேராசிரியர்
ராமசாமி தமிழ் கல்லுாரி காரைக்குடி. 84899 85231

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement