Advertisement

அம்மா என்றால் அன்பு! : இன்று அன்னை சாரதாதேவி பிறந்த நாள்

தெய்வீக தம்பதிகள் எப்படி இருக்க வேண்டும்' என்பதற்கு மிக சிறந்த ஒரு முன்னுதாரணம் அன்னை சாரதா தேவியார். ராமகிருஷ்ணரின் முதல் சிஷ்யை. ஒரு சிஷ்யை எப்படி இருக்க
வேண்டும், ஒரு சந்நியாசினி எப்படி இருக்க வேண்டும், சிறந்த குரு எப்படி இருக்க வேண்டும், தற்கால பெண்கள் ஆன்மிக பலத்துடன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணம் சாரதாதேவியார். இன்று அவரது பிறந்த நாள்.

நம்ப முடியாத எளிமை, அடக்கம் உடையவராக சாரதாதேவியார் வாழ்ந்தார். ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் இருவரும் ஒருவரை ஒருவர் தெய்வமாக கருதி வாழ்ந்தனர். 'செல்வம் என்பது சிந்தனையின் நிறைவே' என குமரகுருபரர் கூறியதற்கு, சாரதாதேவியார் நல்ல உதாரணம். அவர் ராமகிருஷ்ணர் மறைந்த பிறகு, ராமகிருஷ்ணர் பிறந்த ஊரான காமார்புகுரில்
உணவுக்கும் வழியில்லை என்ற நிலையில் சிரமப்பட்டார். அந்த நிலையிலும் அவர் தன்
கஷ்டங்களை மற்றவர்களிடம் கூறி, சலித்துக்கொள்ளாமல் மனநிறைவுடன் இருந்தார்.
ராமகிருஷ்ணர், 'குருதேவர்' என்ற நிலையிலும், சாரதாதேவி யார், 'குருதேவியார்' என்ற நிலையிலும் இருந்தனர். சேற்றுமீனின் உடலில் சேறு ஒட்டாதது போல், உலகப்பற்று கொண்டவர்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையிலும் மிகவும் உயர்ந்த ஆன்மிக நிலையில் சாரதாதேவியார் வாழ்ந்தார்.

அன்னபூரணி தங்கியிருப்பாள் : சாரதாதேவியார் அனைவரிடமும்குறிப்பாகப் பெண்களிடமும், ''ஒரு விநாடி கூட வேலையின்றி இருக்கக் கூடாது,'' என எச்சரிப்பது வழக்கம். ''ஏதாவது ஒரு
வேலையில் நீங்கள் எப்போதும் ஈடுபட்டிருந்தால், சலனம் இல்லாத (அலைபாயாத) மனதைப் பெற முடியும். ஒருவர் வேலைகளைச் சரியாகச் செய்வதன் மூலம், வேலையின் பந்தங்களில் இருந்து விடுபடவும் முடியும்,'' என கூறுவார். மேலும் அவரது சிஷ்யை ராஜலட்சுமிதேவியிடம், ''பெண்களுக்கு வேலை என்பதே மங்களகரமானது. ''எந்த வீட்டில் பெண் நன்றாகச் சமைத்து மக்களுக்கு உணவு தருகிறாளோ, அந்த வீட்டில் அன்னபூரணி நிரந்தரமாகத் தங்கியிருப்பாள் என தன் தாயார் எப்போதும் கூறுவது வழக்கம். தாயார் மற்றவர்களுக்கு உணவு அளிப்பதை மிகவும் விரும்பினார்,'' என கூறியிருக்கிறார்.உடனே ராஜலட்சுமி, ''நீங்கள் அதனால்தான் அந்த வீட்டில்
பிறந்தீர்களா?'' என கேள்வி எழுப் பினார். அதற்கு சாரதாதேவியார் புன்சிரிப்புடன், ''நான் யார்?
எல்லாமே ஸ்ரீ குருதேவர்தான்,'' என பதிலளித்தார். ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு, தம் 33-வது வயதில் அன்னை பிருந்தாவனத்திற்கு யாத்திரை சென்றார். அங்கு ராதா ரமணர்
கோயிலில் அவர்,'பகவானே! மற்றவர்களிடம் குறைகள் காணும் பழக்கத்தை என்னிட
மிருந்து முற்றிலும் நீக்கி விடு! என்றுமே நான் பிறரிடம் குற்றம் காணாதிருக்க அருள் புரியுங்கள்' என மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். அன்னையின் இந்தப் பிரார்த்தனையை பகவான்
நிறைவேற்றினார் என அவரது பிற்கால வாழ்க்கை உணர்த்துகிறது.

குற்றம் பார்க்காதே! : பிற்காலத்தில் அன்னை தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம், ''ஒருவனுக்கு நாம் ஆயிரம் நன்மைகளைச் செய்திருந்தாலும், ஒரே ஒரு தீமை செய்தோமானால் உடனே அவன் நம்மிடம் கோபித்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொள்வான். பிறருடைய குற்றத்தை மட்டுமே பார்ப்பது சாதாரண மனிதனின் குணம். ஆனால் மற்றவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களையும் கண்டு பாராட்டும் குணத்தை நாம் பழகிக்கொள்ள வேண்டும். எந்த மனிதனிடமும் குணம், குற்றம் ஆகிய இரண்டும் இருக்கும். குணத்தை மட்டுமே பார்த்துக்
குறையைத் சொல்லாத பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். எப்போதும் இடைவிடாமல்
பிறரிடமுள்ள குறைகளையே பார்ப்பவனுக்கு, எங்கு பார்த்தாலும் குறைகள் மட்டுமே தெரியும். அவன் கண்கள் குறை காணும் கண்களாகவே மாறிவிடும்,'' என கூறியுள்ளார்.
இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்வது குறித்து அன்னை, ''இறைவனின் திருப்பெயர் ஆல விதை போன்று எவ்வளவு சிறியதாக இருக்கிறது பார்! அந்தப் பெயரை ஜபம் செய்வதில் இருந்து சரியான நேரத்தில் மிகப் பெரிய தெய்வீக உணர்வுகளும் பக்தியும் பிரேமையும் பொங்கி எழுகின்றன,'' என கூறியுள்ளார். மற்றொரு முறை அன்னை, ''ஜபத்தின் மூலமும், மற்ற தவங்கள் மூலமும் முன்வினையின் முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன. இறைவனை பக்தியாலும் பிரேமையாலும் மட்டும்தான் அடைய முடியும்,'' என குறிப்பிட்டிருக்கிறார்.

கங்கையில் எப்படி நீராடல் : ஒரு முறை சாரதாதேவியார் கங்கையில் நீராட சென்றார்.
அப்போது கோலப்மா என்ற பக்தர், ''அம்மா, உங்கள் உடல் நலனுக்காக உடம்பில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு கங்கையில் குளியுங்கள்,'' என்றார். அதற்கு அன்னை, ''நான் அதுபோல் செய்தால் மற்றவர்களும் என்னைப் பின்பற்றுவர். உடம்பில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு கங்கையில் குளிப்பது முறையான செயல் அல்ல. இது சம்பிரதாயத்துக்கு மாறானது,'' என்றார்.
கங்கையில் இருந்து அன்னை குளித்துவிட்டு வரும்போது, வழி ஓரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. குளித்துவிட்டு வருபவர்கள் எல்லோரும் ஒரு குடத்தில் தண்ணீர் கொண்டுபோய் அதற்கு ஊற்ற வேண்டும் என்பது பழக்கம். அதன்படி அன்னையும் கங்கையில் குளித்துவிட்டு வரும் போதெல்லாம், தண்ணீர் கொண்டு போய் மரத்திற்கு ஊற்றிவிட்டு கையெடுத்துக் கும்பிடுவார்.
ஒரு முறை பக்தர் ஒருவர் அன்னையிடம் மந்திர தீட்சை குறித்து, ''மந்திர தீட்சையின்
அவசியம் என்ன? தீட்சையின் போது பெறும் மந்திரத்தை ஜபம் செய்வதை விட, கடவுளின்
ஏதாவது ஒரு பெயரை ஜபம் செய்தால் என்ன,'' என வினவினார். அன்னை, ''மந்திரம்
ஒருவரின் உடலைத் துாய்மை ஆக்குகிறது. புனித மந்திரத்தை ஜபம் செய்வதால் ஒரு மனிதன் புனிதமடைகிறான். வேறு எதற்காக இல்லாவிட்டாலும் உடல் துாய்மை அடைவதற்காகவாவது மந்திரம் மிகவும் முக்கியம். அதை தீட்சை சமயத்தில்தான் குருவிடமிருந்து பெற முடியும்,'' என பதிலளித்தார்.

எதையும் வீணாக்கக் கூடாது : எப்பொருளும், எந்த விதத்திலும், அது மிக மிகச் சாதாரணமாக
இருந்தாலும் கூட வீணாவதைப் பார்த்தால் அன்னை வருத்தப்படுவார். ஒரு முறை நீண்ட துாரத்தில் இருந்து ஒருவர் அன்னைக்கு கூடையில் பழங்கள் அனுப்பியிருந்தார். பழங்களை எடுத்துக் கொண்டதும், சீடர் ஒருவர் அந்தக் கூடை எதற்கும் உதவாது என நினைத்து வெளியே துாக்கி எறிந்தார்.அன்னை அந்தக் கூடை நன்றாகவும், பயன்படுத்தக் கூடியதாகவும் இருப்பதைப் பார்த்தார். உடனே வெளியே இருந்து அதைக் கொண்டு வரச் செய்து நன்றாகக் கழுவி, 'பிறகு தேவைப்படும்' என வீட்டிற்குள் வைக்க கூறினார்.பொருட்களை வீணாக்கக் கூடாது என்பது குறித்து அன்னை தன் சீடர் ஒருவரிடம், ''மகனே! உலகத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர்
உபயோகம் இருக்கிறது. மக்களுக்கு எது பயன்படுமோ அதை நாய்க்குப் போடாதே; ஆடு, மாடு, நாய் ஆகியவற்றுக்கு எவை பயன்படுமோ அவைகளை மண்ணில் போடாதே; அவற்றைக் குளங்களில் உள்ள மீனுக்குப் போடு. எந்தப் பொருளும்யாராவது ஒருவருக்கு நிச்சயம் பயன்படும். ஆதலால் எதையும் வீணாக்காதே,'' என்றார். அவரது பிறந்த நாளில் அவரது நினைவை போற்றுவோம். அவர் காட்டிய வழியில் வாழ்ந்து மகிழ்வோம்.

--சுவாமி கமலாத்மானந்தர்
தலைவர்ராமகிருஷ்ண மடம், மதுரை
0452- -- 268 0224

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement