Advertisement

ரவுத்திரம் பழகுவோம்!

பழகியவர்களை யாரென்று கேட்கும் இன்றைய அவசர உலகில் யாருக்கு எது வேண்டுமானாலும் நடக்கட்டும் நாம் அதில் மாட்டிக்கொள்ளவில்லை. நம் குடும்பத்தினருக்கோ, நம்மை சார்ந்தவர்களுக்கோ எதுவும் ஆகவில்லை என கண்டும் காணாமல் செல்லும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.நம் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் நவரசங்களில் அவ்வப்போது சில ரசங்களை வெளிக் காட்டியாக வேண்டும். தகுந்த நேரத்தில் பயன்படாத எந்தவொரு பொருளும், இருந்தும் மதிப்பில்லை. அதே போல் தான், எல்லாம் தேவைப்படும் போது வெளிப்பட்டால் தான் எந்தவொரு உணர்ச்சிக்கும் மதிப்புண்டு. ஆகையால் நம் திறமையால் அனைத்தையும் அடக்கியாள
வேண்டுமே தவிர, நம் உணர்ச்சி களை அடக்கியும், அடங்கியும் வாழக்கூடாது. அப்படியான
உணர்ச்சிகளினால் இன்றளவும் நம்மில் மறைந்து போன, நம்மால் மறக்கப்பட்ட ஒன்றே ரவுத்திரம்.

கோபம் : ரவுத்திரம் என்றவுடன் கண்ணில் கோபத்துடன் கையில் ஆயுதம் எடுப்பதில்லை. கோபம் என்பது வேறு, ரவுத்திரம் என்பது வேறு. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, வார்த்தைகளால் சுடுவது, தன் இயலாமையின் வெளிப்பாடாய் வருவது. இவை தான் கோபத்தின் அடையாளமாய் இருப்பது. ஆனால் ரவுத்திரம் அப்படியல்ல. ரவுத்திரம் என்பது தன் எதிரே நடக்கும்
அநியாயத்தை தாளாமல், மனம் ஏற்றுக்கொள்ளாமல் அதை தட்டிக்கேட்க வெகுண்டெழுதல்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாக ரவுத்திரம் உள்ளது. ஆனால், நமக்கெதற்கு வம்பு என பலரும் ஒதுங்கியே செல்கின்றனரே தவிர ஒற்றுமையாய் கைகோர்த்து எதிர்ப்பதில்லை.

'பாதகஞ் செய்வோரைக் கண்டால்_ நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்து விடு பாப்பா- அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா'
-என்ற முண்டாசு கவிஞனின் வாக்குக்கு இணங்க இன்றைய காலகட்டத்தில் கராத்தே, குங்பூ, சிலம்பம் என தன்னை காக்கும் கலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியளவுகூட, தம் உணர்ச்சிகளை கொண்டே தன்னை காத்துக்கொள்ள இயலும் என்பதையும், அதை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுப்பதில்லை. வந்த பின்பு காக்கும் தற்காப்பு கலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு ஈடாக ரவுத்திர கலைக்கும் கொடுத்தால் ரவுத்திரத்தோடு இணைந்த தற்காப்பு கலை அனைவருக்கும் உபயோகமானதாக அமையும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே இதை கற்றுத்தர வேண்டும்.

புதுமை பெண்கள் : முண்டாசுக்கவிஞன் பாரதி கண்ட புதுமை பெண்ணானவள், 'நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்'', இவை அனைத்தும் ஒருங்கே அமைந்தவள். ஆனால், இதன் அர்த்தம் எத்தனை பேருக்கு புரிந்ததென்று நானறியேன்.
தன்னை சீண்டும் ஆண்களை தன் தீப்பொறி பறக்கும் கண்பார்வையால் சுட்டெரித்து வீறு கொண்டு, வெற்றி கண்டு அறநெறிகளை போதித்து அனைவருக்கும் முன்
மாதிரியாக திகழ்பவளே பாரதி கண்ட புதுமை பெண். அத்தகைய புதுமை பெண்கள் தான் இன்றைய நவீன கால சமுதாயத்திற்கு தேவை என்பதை உணர்ந்து ரவுத்திரம் பழகு.
பயண காத்திருப்பின் போதோ, பஸ் பயணத்தின் போதோ, கூட்ட நெரிசலில் சிக்க நேரும்போதோ, அலைபேசி வழியான மிரட்டலுக்கு ஆட்படும் போதோ பெண்கள் அமைதியாயிருந்தால் இன்னும் அதிகமாய் சிக்கிட நேரிடும். உதாரணமாக, ஒருவன் ஒரு பெண்ணை தீண்டும் போது அவள் அமைதி காப்பதாலேயே நாட்டில் இன்றும் பாலியல் வன்கொடுமை தீர்ந்தபாடில்லை. எதிர்த்து நின்றால் மட்டுமே சிரித்து வாழமுடியும். இல்லையெனில் அடுத்தவர்கள் எள்ளி நகையாட வேண்டியதிருக்கும். எனவே ரவுத்திரத்தின் துணையுடன் முளையிலேயே முழுமையாய் கிள்ளி எறியவேண்டும்.

ஐம்புலன்களும் ஆயுதமே : தப்பு செய்தவர்களை ஆண்டவன் பார்த்து கொள்வான் என அலட்சியம் காட்டாமல் கண்ணில் பட்ட தப்பை தண்டிக்க முடியாவிடினும் கண்டிக்கவாவது வேண்டும். வெளியே சொன்னால் நம் குடும்ப மானம் போய்விடுமோ என அஞ்சாமல் இன்று நமக்கு நடந்தது, நாளை நம்மை போல் மற்றவருக்கும் நடந்துவிடக்கூடாது. அடுத்தவர் எவ
ராயினும் பாதிக்க கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இன்று அடுத்தவனுக்கு நடந்தது நாளை நமக்கு நடக்கலாம் என்பதை உணர்ந்து அநியாயத்திற்கு எதிராய் ரவுத்திரம் பழக வேண்டும்.வேல்குச்சி, கத்தி, துப்பாக்கி மட்டுமே ஆயுதம் என்றில்லை. இவை நம்மிடம் இருந்தால் தான் பாதுகாப்பு என்றில்லை. நம்மை காத்துக்கொள்ளும் ஆயுதம் நம்
மிடமே உள்ளது. உயிரற்ற பொருட்களின் மீது வைக்கும் நம்பிக்கையை உயிருள்ள நம் மீதும், நம் ஐம்புலன்கள் மீதும் வைக்க தயங்குவது ஏனோ? நயவஞ்சகர்களிடம் இருந்து நம்மை காக்க நம் விரல் நகமும், குரல் மட்டும் போதுமே.ஆனால் அத்தகைய விவேகம் கலந்த வேகத்துடிப்பு ரவுத்திர பழக்கத்தினாலேயே வரும். இன்று நம் நடைமுறை வாழ்க்கையில் விதைக்கும் ரவுத்திரமானது நாளை விருட்சமாய் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சிக்காக உயர்ந்து ஓங்கி நிற்கும்.
ஜெயித்தாலும், தோற்றாலும் விபரம் அறியா ரவுத்திரமானது விபரீத விளைவை தரும். ஆகவே முதலில் ரவுத்திரம் தன்னை அறிந்து பழகவேண்டும். விந்தை நிறைந்த உலகில் ரவுத்திரம் அவசியமானதே. ஆனால் அதில் அறிவும் கலந்து இருக்கணுமே தவிர அநாவசியமான, புகழ்தேடும் கருவியாக இருக்கக்கூடாது என்பதில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும். ஐந்தறிவு படைத்த விலங்குகள் கூட தன்னை காத்துக்கொள்ள தன்னை விட பெரிய விலங்குகளிடமோ, அவ்வளவு ஏன் மனிதர்களாகிய நம்மிடமோ தன் சக்திக்கு மீறிய வேகத்தோடு தன்னை காத்துக்கொள்ள போராடும். அப்படியிருக்க நம் சுயமரியாதையை, மானத்தை, நாட்டின் கவுரவம், கலாசாரத்தை யாருக்காகவும், எதற்காகவும் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும். அதுவும் முயற்சித்து தோற்றாலும் பரவாயில்லை. ஒரு முறைகூட முயலாமல் தன் இயலாமையால் நம் இந்திய சகோதர, சகோதரிகள் தோற்று போவதை தான் ஜீரணிக்க முடியவில்லை. வீண் வம்புக்கும் செல்லவேண்டாம். அதற்கெனகுட்டக்குட்ட குனியவும் வேண்டாமே. விடுதலை என்பது யாவருக்கும் பொது என்பதை அறிந்து ஒவ்வொரு நொடியும் செயலாற்ற வேண்டும். அதர்மம் அடிபடும் போது தான் தர்மம் வெளிப்படும். அதே போல் தான் திரும்ப திரும்ப வெகுண்டெழும் போது தான் அந்த ரவுத்திரம் வெடியாய் வெளிப்படும்.

தவறு நடந்தால் : ஒருவர் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என ஏமாற்றும் போது தட்டிக்கேட்க நாம் தயக்கம் காட்டினால், நாளை அவனே கோடிக்கணக்கில் மக்களிடம் பணம் சுரண்ட அடித்தளமிட்டது போல் ஆகும். உதாரணமாக ரேஷன் கடைகளில் பத்து ரூபாய் அதிகம் கொடுத்து அடுத்தவர் ரேஷன் கார்டுக்கானபொருளை நாம் வாங்கினால், அதுவே பின்னாளில் ரேஷன் பொருட்களை கடத்தும் துணிவை, விற்பனையாளருக்கு தந்துவிடும். பொருட்களை வாங்கினால் தான் என்றில்லை. மற்றவர்கள் வாங்குவதை ஊக்கப்படுத்தினாலும் தவறு தானே? தப்பு செய்தவர்களை விட, அதை செய்ய துாண்டுபவர்களே தண்டனைக்குரியவர்கள் என்பது யாவரும் அறிந்தது தானே?கண் முன்னால் ஒரு தப்பு நடக்கும் போது கண்டும் காணாமல் சென்றுவிட்டு பின் ஏதேனும் விபரீதம் நடந்ததும் தட்டிக் கேட்டிருக்கலாமா என யோசித்து பயனில்லை. எனவே தட்டி கேட்க தயங்காதீர்கள். உங்கள் பங்கிற்காய் தப்பை தட்டிக்கேட்க தயக்கம்
என்றும் கொள்ளாதே. 'ஜெயித்தாலும், தோற்றாலும் மீசையை முறுக்கு'... ரவுத்திரம் பழகு... தப்பை தட்டிக்கேட்க தயங்காதே..

ஏனிந்த ரவுத்திரம் : நவீனங்கள் நிறைந்த உலகினில் நாளுக்கு நாள் தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருவதை போலவே தொல்லைகளும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டுத்தானே இருக்கின்றன. ஆகவே தான் சாமானியர் முதல் சரித்திரம் படைப்பவர் வரைக்கும் ரவுத்திரம் பழக வேண்டியதாக உள்ளது.அடிமைப்படா வாழ்வுதனை அகிலம்தனில் வாழ ரவுத்திரம் பழகு...
அச்சம் விடுத்து அநியாயம் எதிர்த்து ஆயுதம் தொடுக்க ரவுத்திரம் பழகு...புதுமை பெண்ணாய் பாரெங்கும் பவனி வர ரவுத்திரம் பழகு...லட்சியம்தனில் உச்சம் தொட ரவுத்திரம் பழகு...சாமானியனாய்... சத்ரியனாய்... சாதிக்க ரவுத்திரம் பழகு....களவு இல்லா கட்டுக்கோப்பான
வாழ்விற்கு ரவுத்திரம் பழகு...இந்திய குடிமகனாய் கடமைதனை கண்ணியமாய் செய்ய ரவுத்திரம் பழகு...வளரும் பிள்ளைகள் வல்லரசு நாட்டில் வாழ ரவுத்திரம் பழகு.
அமைதியான உலகினில் அடியெடுத்து வைக்க அச்சாரமாய் ரவுத்திரம் பழகு...
ரவுத்திரத்தை பழகிக்கொள்... பாருக்குள்ளே பாரதியாய் பிறப்பெடுத்திடு!!!.

-ரெ.கயல்விழி, ஆசிரியை
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி, முத்துதேவன்பட்டி
90925 75184

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement