Advertisement

ஜாதிகள் மறையுமடி பாப்பா!

நாட்டின் முன்னேற்றத்திற்கு, ஜாதிகள் மிகப்பெரிய சாபக் கேடு. இன்றைய அரசியல் நிலைமை, ஜாதி ஓட்டு வங்கிகளை நம்பி உள்ளது. இட ஒதுக்கீடு மற்றும் பிற சலுகைகளை பெற விரும்பும் குழுக்கள், தங்களை பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, எஸ்.சி., - எஸ்.டி., என அறிவிக்கும்படி, அரசை வற்புறுத்துகின்றன.

ஆனால், உண்மையான தேவையுடையோர், புறம் தள்ளப்படுகின்றனர். போலியான ஜாதிச் சான்றிதழ்கள் பெறுவது அதிகமாகி, வேலைவாய்ப்பில் குழப்பம் ஏற்பட்டு, பலரின் முன்னேற்றத்தை அரித்து விடுகிறது.ஜாதி முறை, 'வர்ணவியவஸ்தா' என, சம்ஸ்கிருத மொழியில் கூறப்படுகிறது. வர்ணம் என்றால், நிறம். தோலின் நிறத்தை வைத்து, ஜாதி முறை வந்துள்ளது. கறுப்பு நிறத்தை விட, சிவந்த நிறம் அதிக மதிக்கப் பெற்றதாக கருதப்படுகிறது; இன்றும் இந்நிலை நீடிக்கிறது.

பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என, நான்கு வகை தொழில் முறையிலான ஜாதிகள், முன்னர் தோன்றின. இதிலிருந்து உட்பிரிவுகள் பல நுாறு தோன்றி, இன்று நாட்டை பயமுறுத்துகின்றன; 1,000 உட்பிரிவுகள் நாட்டை கூறு போடுகின்றன.தொழில் புரிவதில் பேதம் இல்லை. தொழில் புரிவதாக சொல்லி, ஜாதி அமைப்பது தான் குற்றம்.

சமுதாய அமைப்பில், விவசாயம் மிக முக்கியம். அதில், ஜாதிக்கு முக்கியத்துவம் இல்லவே இல்லை. அது போல, கைவினைத் தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், தொழில் பிரிவுகள், சமுதாயத்தில் ஜாதி பிரிவுகளாக மலர்ந்து, விரிந்து, படர்ந்து பரவி உள்ளன.
அதன் பிடியில், ஒட்டுமொத்த சமுதாயமும் தத்தளிக்கிறது. அதனால், தேசிய முன்னேற்றம் தடைபடுகிறது. முடிவு,

பொருளாதார வீழ்ச்சி; மக்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்றத்தாழ்வு.ஜாதி தலைவர்கள் பெரும் நிலக்கிழார்களாகவும், தொழிலதிபர்களாகவும் வலம் வருகின்றனர். விவசாயம் முக்கியத்துவம் இழந்து, விவசாயிகள் பட்டினியால் இறக்கின்றனர். ஏழை தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டத்தில் சிக்கி, தங்கள் வருவாய் இழந்து அல்லல்படுகின்னர்.

கி.பி., 1757ல், லண்டன் மாநகரை விட, வங்கதேசத்தின் முன்னாள் தலைநகரம், முர்ஷிதாபாத் சிறப்புற விளங்கியதாக, லார்டு ராபர்ட் கிளைவ், தன் புத்தகத்தில் தெரிவித்து உள்ளார்.ஆங்கிலேயர்கள் படிப்படியாக, இந்தியாவை தங்கள் வசம் கொண்டு வந்து, உற்பத்தி மற்றும் விற்பனை தளமாக மாற்றி, இந்தியாவை சுரண்டி, அவர்கள் நாட்டை வளமாக்கி, நம்மை தரிசாக்கி விட்டனர்.

ஆரம்ப கால ஆங்கிலேய வருவாய் ஏடுகளை பார்த்தால், இன்னார் மகன் இன்னார் என்றும், அவர் எந்த தொழில் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், தற்போது செய்யும் தொழில் என்னவென்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால், ஜாதி பிரிவை வருவாய் ஏடுகளில் பராமரிக்கவில்லை. இதன் மூலம் அறிவது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட அலுவலகத்தில், அந்த பகுதியில் உள்ள மக்களின் தொழில் முறை தகவல்கள் தான், அரசுக்கு தேவையே ஒழிய, ஜாதிகள் தேவையில்லை என்பது தெளிவாகிறது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலம் முடிந்து, ஐந்து ஆண்டுகள் வரை, வருவாய் ஆவணங்கள் அவ்வாறு தான் இருந்தன. பொதுத் துறை, நீதிமன்ற ஆவணங்கள், தனிநபர் கொடுக்கல் - வாங்கல் ஆவணங்களில் கூட, ஜாதி பெயர்கள் இடம் பெறவில்லை.ஆங்கிலேயர்கள் படிப்படியாக, நம் நாட்டில் உள்ள விவசாயம் மற்றும் கைத்தொழில்களை நசுக்கி, மழுங்க வைத்து, இயந்திரமயமான தொழில்களுக்கு வழிவகுத்தனர்.

பெரும் முதலீட்டை செய்ய முடியாத பெரும்பாலான மக்கள், தாங்கள் செய்யும் குலத்தொழில்களை பரம்பரையாகவும், முறையாகவும் செய்ய முடியாமல், நகரங்களுக்கு இடம்பெயர்ந்து பிழைப்பு நடத்தினர். இங்கு தான் நிற பேதம், ஆண்டான், அடிமை பேதம் தோன்ற
ஆரம்பித்தது.படித்த பிரிவினர் சாக்கு போக்கு சொல்லி, அரசிடம் சலுகைகளை பெற, தங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினராக கருதக் கோரி, அரசு அலுவலர்களை திசை திருப்ப ஆரம்பித்தனர்.
தங்களிடம் சலுகை பெற்ற காரணத்தை வைத்து, அரசு அவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தத் துவங்கியது. அதன் விளைவு தான், இன்று வளர்ந்து பூதமாக நிற்கிறது.

ஆங்கிலேயர்கள் மற்றும் பிற நாட்டினர் வராமல் இருந்திருந்தால், இந்நிலை இன்று வரை தொடர்ந்து தான் இருக்கும். வளம் கொண்ட மேலை நாடுகளை காட்டிலும் சிறப்பாக இருந்திருப்போம்.ஒருவரின் தொழில் மற்றும் மதிநுட்பத்தை பிறருக்கு சொல்லி கொடுத்தனர். தொழில் பரம்பரை ஏற்பட்டது; குழப்பங்கள் இல்லை. தொழில் தகராறுகள் இல்லை; சங்கங்கள் இல்லை.
சண்டை சூழ்ச்சிகள் இல்லை. தேர்தல்கள் இல்லை; கள்ள ஓட்டு இல்லை. உற்பத்தியுடன் தொழிற்கல்வியும், ஒழுக்கமும் போதிக்கப்பட்டது.

ஜாதிகளுக்கு சலுகைகள் அளிப்பதன் மூலம் இழப்பு பன்மடங்கு அதிகமாகி விடுகிறது. பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகிறது. பரம்பரைத் தொழில் முறைகள், தற்போது அரிதாகி விட்டன. ஆனால், தேவைகள் பெருகி விட்டன.முன்பு இருந்த நிலை போல, உற்பத்திப் பொருட்களை, தனிநபர்களால் செய்ய முடியாது. பெருகி விட்ட மக்கள்தொகை தான், இதற்கு காரணம்.

குருகுலக் கல்வி நிலை மாறி, கூட்டுக்கல்வி முறை வந்து விட்டது. ஓர் ஆசிரியரிடம், அவரின் மகன் அல்லது மகள் மட்டுமல்லாது, பலரும் கல்வி கற்க முடியும். கற்ற பின் அனைவரும், ஆசிரியர் தொழில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அவரவர் திறமைக்கேற்ப தொழில் செய்து, பொருள் ஈட்டலாம். இதில், ஒருவரை ஒருவர் பேதம் காட்டுவதில், அர்த்தம் இல்லை.
இந்த நடைமுறை, ஜாதிய முறைகளை ஒழிப்பதற்கு, சிறந்த ஒரு வாய்ப்பாகும். ஒருவருடைய குலத் தொழிலை, அவரின் வாரிசுகள் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பிறப்பால் ஏற்பட்ட களங்கம், ஜாதி ரீதியாக மறைந்து போய், மீண்டும் பழைய நிலையான, தொழில் முறையான புதிய சமுதாயம் உருவாக, ஒரு புதிய நிலை தோன்ற ஆரம்பித்து விட்டது.
டாக்டர்கள், பொறியியல் நிபுணர்கள், கணினி மென்பொருள், வன்பொருள் நிபுணர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், தொழில்நுட்ப வாதிகள், வியாபாரிகள், ஓட்டுனர், பழுது பார்ப்பவர், உணவு விடுதி, கல்வியாளர், பணியாளர், உதவியாளர் என, மீண்டும் பண்டைய நிலையை, நாம் காணத் தான் போகிறோம்.

சில சமூக அமைப்புகள் தான், ஜாதிக் கொடிகளை உயர்த்தி பிடிக்கின்றன. இதற்கு பின்புறம், ஓட்டு வங்கி அரசியல் உள்ளது. அதிக எண்ணிக்கையில் ஓட்டுகள் பதிவு செய்யப்படுவதே, இதற்கு அத்தாட்சி.தொழில் வளர்ச்சி ஒன்றே முக்கியமாக கருதப்படும் போது, குறுகிய ஜாதிய சிந்தனைகள் அடிபட்டு மறைந்து போகும்.

இன்னும், 10 - 20 ஆண்டுகளில், ஜாதிகள் முழுமையாக ஒழிய வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது. திறமை உள்ளவர்களே வெற்றி பெற தகுதி உள்ளவர்கள். அவர்களை தான் தொழில், வணிக, சமூக நிறுவனங்கள் தேடுகின்றன.அவ்வாறு செய்யும் போது, ஜாதி அமைப்பு முற்றிலும் மறைந்து விடும். தடையில்லா முன்னேற்றம் காண, ஜாதிகள் தேவை இல்லை.
ஆதிதிராவிடர்கள், தொழில் ரீதியாக முன்னேற வேண்டும். அவ்வாறு முன்னேறினால், அவர்களை பாரபட்சமாக பார்க்கும் போக்கு மாறி விடும்.

கழைக்கூத்தாடிகள், ஒரு காலத்தில் நல்ல சமூக அந்தஸ்தில் இருந்தனர். இன்று, அவர்கள் அரிதாக காணப்படுகின்றனர். அவர்கள் ஜாதியும் இல்லாமல், நாதியும் இல்லாமல் போய் விட்டனர்.
அவர்களை, அரசு உட்பட யாராலும் முன்னேற்ற முடியவில்லை. அதே நேரத்தில், எந்த ஜாதியும் இல்லாமல், இசை, நடனம், நாட்டியம், நாடகம், சினிமா, 'டிவி' என, புதிய இனம் தோன்றி, அது பெரிய தொழிற்சாலையாக, இன்று உலா வருகிறது.

அதில், ஜாதி விபரங்கள் இருந்தாலும், வெளி உலகிற்கு தெரிவதில்ல; தெரிந்தாலும் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. பெருகி வரும் தொழில்நுட்பம், இந்தியாவில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு, மிகப்பெரிய காரணியாக இருக்கும்.

தொழில் பயிற்சி பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், ஜாதி மற்றும் கிராமத் தொழில் கமிஷன் மற்றும், 'டானிடெக், டிரைசெம்' போன்ற திட்டங்களில், ஜாதி பேதமின்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.
வங்கி நிதி, மகிளா உதய் நிதி, ஸ்ரீசக்தி யோஜனா, மைக்ரோ மற்றும் மீடியம் என்டர்பிரைசஸ் போன்ற திட்டங்களின் மூலமாகவும் நிதியுதவி பெற்று, தொழில் செய்து முன்னேறலாம்.

கனிமங்கள், நிலக்கரி, எண்ணெய், ரசாயனம், மின் சாதனங்கள், துணி, தோல் பொருட்கள், பிளாஸ்டிக், பெயின்ட், ஆட்டோ மொபைல் போன்ற பெரிய தொழில்களை துவங்க, பல்வேறு திட்டங்களை உருவாக்கி, அதன் மூலம் வியத்தகு முன்னேற்றங்களையும் நாம் காணலாம்.
இதனால் நாட்டில், ஜாதி மறையும்; புது ஜோதி தெரியும்.ஆண்களும், பெண்களும் ஒருவரை விரும்பி நெருங்கும் போது, அங்கு ஜாதிகளுக்கு இடமில்லை.

ஜாதியை துாக்கிப் பிடிக்கும் பண்டைய வழக்கங்களை, தற்போதும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நாட்டில், சட்டத்திட்டங்கள் விரைவாக மாற ஆரம்பித்துள்ளன.பழைய மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை தற்போதைய இளம் தலைமுறையினர் எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். அதை சட்டபூர்வமாக ஆக்கவும் தலைப்பட்டு உள்ளனர்.

புதிய சூழ்நிலைகள் உருவாகத் துவங்கி விட்டதால், பழைய முறைகள் கைவிடப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை, தற்போது இல்லை. புதிய யுகம், மாற்றங்களுக்கான யுகமாக உள்ளது.அதுவே, சமூக ஒற்றுமையின் பிரதிபலிப்பு. ஜனநாயகம் மற்றும் சமத்துவம் பேசும் அனைவரும், ஜாதிகள் மூலம், உயர்வு தாழ்வு காண்பது, அவமானகரமானது மட்டுமின்றி, நாட்டில் அரசியல் அமைப்பு சட்டத்தையும் மீறும் செயல்.

பிறரை தாழ்த்தி, தரக்குறைவாக பேசவோ, நடத்தவோ கூடாது. அவ்வாறு செய்தால், அதற்கு சட்ட ரீதியான தண்டனையும் உள்ளது. அபராதம் மற்றும் ஆறு மாத காலம் முதல் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் தர, சட்டம் அனுமதிக்கிறது.எனவே, பிறப்பை பொருட்படுத்தாமல் திறமையை மையப்படுத்துங்கள். தொழில் முன்னேற்றம், தனிநபரையும், தாய் நாட்டையும் முன்னேற்றும். மாறி வரும் பொருளாதார மேம்பாட்டு சூழல், மக்களை மனமாற்றம் காண வைத்து, ஜாதிகளை ஒழிக்கும்.

கலப்பு திருமணங்கள், ஜாதிகளை களை எடுக்கும், சமூக மாற்றத்தை ஏற்படுத்தும். சம உடைமை சமுதாயம் படைக்கப்பட்டு, நாடும் முன்னேறும்!

இ - மெயில்: poornacharimdgmail.com
- மா.தச.பூர்ணாச்சாரி -
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ramtest - Bangalore,இந்தியா

    இன்றும் ஆணவக்கொலை நடக்கிறது ....எந்த அளவிற்கு ஜாதி வெறி ஊறிப்போய் இருக்கிறது என பார்த்துக்கொள்ளுங்கள்.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement