Advertisement

மற்றவர் உரிமையை போற்றுவோம்; மனித உரிமையை : டிச.10 சர்வதேச மனித உரிமை தினம் காப்போம்

மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993ன்படி, மனித உரிமைகள் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தாலும், பன்னாட்டு சட்டங்களாலும் பாதுகாக்கப்பட்டு, இந்திய நீதிமன்றங்களால் நடை
முறைப்படுத்தக்கூடிய உயிர் வாழும் உரிமை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் மாண்பு தொடர்பான உரிமைகளாகும். ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மனித உரிமை பிரகடனம் செய்யப்பட்டது 1948 டிச., 10 ம் நாளில். அந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மனித உரிமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சமத்துவம், சுதந்திரம், வாழ்வுரிமை, மனித மாண்பு என மனித உரிமைகளை வகைப்படுத்தலாம்.

உயிர் வாழும் உரிமை : மனித மாண்புடன் கூடிய வாழும் உரிமையை குடிமக்களுக்கு உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது, வேலைக்கு தகுந்த, வாழ்வதற்கான சம்பளத்தை நிர்ணயிப்பது, மருத்துவ உதவிகள், கல்வி பெறும் உரிமை, இந்தியாவிற்குள், வெளிநாடுகளுக்கு சென்று வரும் உரிமை போன்றவை இதில் அடங்கும்.
உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் உயிர் வாழும் உரிமையை சூழ்நிலைக்கேற்ப
விரிவாக்கம் செய்து கொண்டே வருகின்றன. தற்போது மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்
திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், சமூக பொருளா
தாரத்தில் பின்தங்கியவர்களை உயர்த்த பல்வேறு சட்டங்களை உருவாக்கி வருகின்றன.
இத்தகைய சட்டங்கள்இருந்தாலும் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு முன்கூட்டியே புயல் பற்றியஅறிவிப்பு செய்தும், புயல் வந்தவுடன் வான் வழியில் சென்று
காப்பாற்ற முடியாததால், மீனவர்கள் தங்கள் உயிர் வாழும் உரிமையை இழந்துள்ளனர்.
அனைவருக்கும் மருத்துவ வசதிகள் செய்வது அரசின் கடமை. ஆனால் பொருளாதார வசதிக்கேற்ப குடிமக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதியும் மாறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு திட்டத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கும், ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கும் செலவிடும் பணம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு இல்லை. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அக்கறை செலுத்தும் பட்சத்தில் தான் அரசு மருத்துவனைகள், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு, மக்களின் உயிர் வாழும்
உரிமைகள் பாதுகாக்கப்படும்.

சுதந்திரம் என்றால் என்ன : சுதந்திரமாக தொழில் செய்யும் உரிமை, பேச்சுரிமை, கருத்துக்களை
வெளியிடும் உரிமை, விரும்பிய இடத்திற்கு சென்று வரும் உரிமை, தகவல்களை பெறும் உரிமை, சுய அந்தரங்கத்தில் பிறர் தடையிடா உரிமை போன்றவை சுதந்திரம் என்ற வரையறைக்குள் அடங்கும். மனித உரிமைகளுக்கு எதிராக அரசே சட்டம் இயற்றினாலும், அதை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தை அணுகலாம். இனம், மொழி, பால் மற்றும் மதம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரின் சுதந்திரத்தை பறிக்க கூடாது என சட்டம் கூறுகிறது. ஒருவரை தகுந்த விசாரணை செய்யாமலும், அவரின் விளக்கங்களை விசாரித்து உண்மை அறியாமலும் அவருக்கு தண்டனை வழங்க கூடாது என்பது சட்டத்தின் அடிப்படை. ஆனால் தேசிய குற்ற ஆவண மையம் வெளியிட்ட ஆண்டறிக்கை யில் நாட்டில் 55சதவீதத்திற்கும் மேல் மாநில அரசால் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறைவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ஐந்து வயதிற்குட்பட்டவர்களும் அடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. தடுப்பு காவல் சட்டம்
1950 ஆண்டு லோக்சபாவில் ஓராண்டு மட்டும் நடைமுறையில் இருக்கும் வகையில் இயற்றப்பட்டு, பின் பலமுறை பல்வேறு பெயர்களில் நீடிப்பு செய்யப்பட்டது.
இன்று மனித உரிமைக்கு குரல் கொடுப்பவர்கள் மீதும், சாதாரண வழக்குகளில் குற்றம் சாட்டப்
படுவோரின் மீதும் போதிய விசாரணையின்றி பாயும் இச்சட்டம், பொருளாதார குற்றவாளிகள், சமூக பொருளாதார நிலையில் உயர் நிலையில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படுவோரின் மீதும் பாயாதது வியப்பளிக்கிறது.

மிளிரும் உயர்நீதிமன்றம் : சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அடிப்படை உரிமை. இதன்படி பெண்களை பாதுகாக்க அனைத்து வேலைவாய்ப்புகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் உள்ளது. பெண்கள் நலனுக்காக பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பணியிடத்தில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்றவை இயற்றப்பட்டு பெண்களுக்கு எதிராக புரியப்படும் குற்றங்களை விசாரிக்க மகளிர் தனி நீதிமன்றங்கள் மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய உச்சநீதிமன்றத்திலுள்ள 30 நீதிபதிகளில் ஒரு பெண்நீதிபதி தான் உள்ளார். அதே வேளையில் நாட்டில் அதிக பெண் நீதிபதிகள் கொண்டதாக
தமிழக உயர்நீதிமன்றம் மிளிர்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பளிக்கும் சட்டம் இயற்றப்பட்டு அவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடுஅளிக்க வேண்டும் என்றாலும் நடைமுறையில் அது வழங்கப்படவில்லை. மற்றவர்களும், மாற்றுத்திறனாளிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும்; சம வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் எனசட்டம் கூறினாலும், பல்வேறு அரசு கட்டடங்கள், கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்வகையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறி.

தனி மனித மாண்பு : தனி மனிதனின் மாண்பும், கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டியது மனித உரிமையின் அடிப்படையாகும். மதம், இனத்தின் பெயரால் இது தடைபடக்கூடாது. தற்போது மாட்டிறைச்சிக்காக பசுக்களை கொன்றார்கள் என்பதற்காக தாக்கப்படுகிறார்கள் என சமூக வலைதளங்களில் வெளியாகும் காட்சிகள் மாண்புரிமை எவ்வாறு உள்ளது என்பதை காட்டுகிறது. பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் இயற்றப் பட்டாலும் அதில் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. அந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடர கூட உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலையிருக்கிறது. அரசியலமைப்பு சட்டம் 21ஏ படி 14 வயது வரை கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று அறிவித்தாலும் கூட உண்மை நிலை அப்படியில்லை.

இழப்பீடு பெறலாம் : மனித உரிமை மீறலுக்கு ஆளாவோர் மாவட்ட நீதிமன்ற வளாகங்களிலுள்ள சட்ட பணிகள் ஆணைக்குழுவில் இழப்பீடு கோரி மனு செய்யலாம். பாதிப்புக்கு ஏற்ப மூன்று லட்சம்ரூபாய் வரை இழப்பீடு பெறலாம். கொலை செய்யப்பட்டோர், தாக்குதலுக்கு உள்ளானோர், குடும்ப வன்முறை, சாலை விபத்து மற்றும் எந்தவித வன்முறைக்கும் ஆளானோரும்இழப்பீடு கோரலாம். ஆசிட் வீச்சுக்கு உள்ளாவோர் இழப்பீடு பெறுவதுடன், மருத்துவமனைகளில் இலவச உயர் சிகிச்சை பெறலாம். மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். அரசு அதிகாரிகளின் அலட்சி யமான, கவனக்குறைவான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுகலாம். சமீபத்தில் தீர்ப்பு ஒன்றில் நாடு முழுவதிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறைச்சாலைகளில் இறந்த சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.மனித உரிமையை பாதுகாக்கஅடிப்படை உரிமைகளும், மனித உரிமைகளும் மீறப்படும் போது உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனுக்கள் மூலம் இழப்பீடு பெறுவதுடன், மட்டுமின்றி மீறியவர்கள் மீது தக்க நடவடிக்கையும் எடுக்கலாம். உரிமைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசிற்கு இருந்து, அதை நிறை வேற்றாத போதும் நீதிப்பேராணை தாக்கல் செய்யலாம். ஒரு தனிநபர் மற்றொரு தனி நபரின் மனித உரிமையில் தலையிடும் போது அதுதொடர்பான அரசு அதிகாரிக்கு புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகலாம். தற்போது உச்சநீதிமன்றம் முதல் உள்ளூர் நீதிமன்றங்கள் வரை இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இதன் மூலமும் நீதியை பெறலாம்.மனித உரிமையை பாதுகாக்க தேசிய, மாநில ஆணையங்கள், தேசிய பெண்கள் ஆணையம், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம், சிறுபான்மையினருக்கான ஆணையம் போன்றவை செயல்படுகின்றன. இந்த ஆணையங்களில் எந்த மொழியிலும் புகார் செய்யலாம். மனித உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. நாம் அடுத்தவரின் உரிமையை பாதுகாத்தால் தான் நம் உரிமை பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். மனித உரிமைகளை பாதுகாக்க நம்மாலான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.

முனைவர் ஆர்.அழகுமணி
வழக்கறிஞர், மதுரை
98421 77806

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement