Advertisement

மாற்றுத்திறனாளிகளும், அதற்கான தீர்வுகளும்

ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் டிச.,3ம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் பேர் ஏதாவதொரு வகையில் ஊனமுற்றவர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் 2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி சுமார் 2.2 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்டுள்ளது.உலக அளவில் ஒவ்வொரு ஏழு பேரில் ஒருவர் மட்டுமே மாற்றுத்திறனாளி என்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தை பொறுத்த
வரை தேசிய சாராசரி அளவைவிட குறைந்து 1.75 சதவீதத்தினர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் என கணக்கிடப்பட்டுள்ளது.

கிராமங்களில் அதிகம்: இந்தியாவில் உள்ள மொத்த மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையில் பெண்களை விட (44 சதவீதம்) ஆண்கள்தான் அதிகம் (56 சதவீதம்) உள்ளனர். அதே போல் நகர்புறங்களை விட (31 சதவீதம்) கிராம பகுதிகளில்தான் அதிகம் (60 சதவீதம்) வசிக்கின்றனர்.
ஊனத்தின் வகைகளை பொறுத்தமட்டில் மாற்றுத்திறனாளிகள் மொத்த எண்ணிக்கையில் 20 சதவீதம் பேர் நடக்க முடியாதவர்கள்.20 சதவீதம் பேர் பார்வையற்றவர்கள். மேலும் 20 சதவீதம் பேர் காது கேளாதோர், 8 சதவீதம் பேர் வாய்பேச இயலாதோர், மற்றொரு 8 சதவீதம் பேர்
பல்வேறு ஊனத்தை கொண்டவர்கள். சுமார் 6 சதவீதம் பேர் மனவளர்ச்சி குன்றியவர்கள், 3 சதவீதம் பேர் மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவிபரம் கூறுகிறது.

கிராமங்களிலுள்ள மாற்றுத் திறனாளிகளின் இன்னல்கள் என்னவென்றும் பார்ப்போம்.

மனவளர்ச்சி குன்றியோர் : கிராமங்களில் மனவளர்ச்சி குன்றியோர் வாழும் குடும்பங்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றன. கூலி வேலை செய்து வாழும் குடும்பங்களில் மன வளர்ச்சி குன்றியோரை கவனித்து கொள்ள பெரும்பாலும் அவர் தம் தாயார் வேலைக்கு செல்ல
முடிவதில்லை. ஆகவே, குடும்ப வருமானம் பாதியாக குறைந்து விடுகிறது. சில குடும்பங்களில் தன் மகனுக்கோ, மகளுக்கோ இதுமாதிரி ஆகிவிட்டதே என்று கவலைப்படும் தந்தையர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விடுவதால் குடும்ப வருமானம் மேலும் குறைகிறது. தாயின் மனச்சுமையும் கடந்து பொருளாதார சுமை வாட்டி வதைக்கிறது.மனவளர்ச்சி குன்றிய இளம் பெண்கள் உள்ள வீடுகளில் தாய் மட்டுமே இருக்கும் சூழ்நிலையில் தங்களின் குறைந்தபட்ச அடிப்
படை தேவைகளுக்காக மட்டுமாவது கூலி வேலை செய்வதற்காக மகளை வீட்டில் வைத்து பூட்டி விட்டு வேலைக்கு செல்லும் தாய்மார்கள் உள்ள குடும்பங்களும் இருக்கின்றன.
இவர்களுக்கு பொருளாதார நிர்ப்பந்தம் தவிர மனவளர்ச்சியற்ற இளம் பெண்களுடைய கற்புக்கோ, அல்லது கிணறுகளில் தவறி விழுதல், ரோடு விபத்து போன்றவை மூலம் அவர்களுடைய உயிருக்கோ ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்ற அச்சமும் ஒரு காரணம்.
ஒரே குடும்பத்தில் இரு குழந்தைகள் மன வளர்ச்சி குன்றி காணப்படும்போது அவர்களின் தாய்படும் துயரம் சொல்லி மாளாது.இவற்றையெல்லாம் இறைவன் நமக்கு அளித்த தண்டனை என்று ஏற்றுக்கொண்டு மனதார இருமகன்களையும் பராமரித்து வரும் தாய் சொல்கிறார். 'நான் ஆரோக்கியமாக இருக்கும் நாட்களில் என் மகன்களை நன்கு பார்த்துக்கொள்வேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத போது இவர்களுடன் நானும் ஒரு ஓரமாக படுக்க நேரும் நாட்களில் நான்படும் சித்தரவதை எனக்கு மட்டுமே தெரியும். பணமிருந்தால் நான் விரைவில் குணமாகி மீண்டும் இவர்களை பார்த்துக்கொள்வேன். ஆனால் பாழாய்போன என் கணவன் தான் அன்றாடம் குடிப்பதற்காக பாத்திரங்களை கூட விற்கிறாரே'' என்று கண்ணீர் மல்க சொல்கிறார்.

வேதனைகள் அதிகம் : யானைக்கால் நோய் தொற்றிய கிராமத்து பெண் ஒருவர் தனக்கு மிகுந்த வலி ஏற்படும் பொழுது அருகில் உள்ள மருத்துவரிடமோ அல்லது 5 கி.மீ. துாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ செல்ல முடிவதில்லை. காரணம், அவரால் பஸ்சில் பயணம் செய்ய முடியாது. ஆட்டோ, டாக்சிகளில் அனுமதிப்பது இல்லை.பயணம் செய்வதற்கு தேவையான அளவு பணமிருந்த போதும் அவரால் பொது வாகனங்களில் செல்ல முடியாமல் தன் காலில் தோன்றும் வலியால் துடித்துப் போகிறார். தொழுநோய் பாதித்த வயதானவருக்கு அவரது
குடும்பத்தினர் கூட உணவும் நீரும் சற்று தள்ளியிருந்தே தருகின்றனர். இதனால் இவர்கள் அனுபவிக்கும் வேதனைகளால் ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து வாழ்கின்றனர்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு ஒருகாலினை ஆப்பரேஷன் செய்து அகற்றிய பெண் 24 மணிநேரமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். கூலி வேலை செய்து கணவர் அளிக்கும் ஆதரவிலும், அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவி தொகையாலும் வாழ்ந்து வருகிறார். காலைக்கடன்களுக்கு கூட இவர் தன் கணவரையே சார்ந்திருக்கிறார்.

முழங்கால் மடித்த குழந்தைகள் : சினிமாவில் குள்ளமாக தோன்றி நடிக்க முழங்கால் வரை மடித்து நடப்பதை பார்த்திருப்போம். ஆனால் பிறவியிலேயே முழங்கால் வரை நேராகவும், அதிலிருந்து பாதம் வரை மடித்தும், வாழும் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் உள்ளன.
காலைக்கடன் கழிப்பதில் இருந்து இரவு உறங்கும் வரை அவர்கள் பெற்றோரின் உதவி
யுடன் தான் நடமாட முடியும். இத்தனை கஷ்டத்தையும் தாங்கி பல மைல் துாரமுள்ள பள்ளி,
மருத்துவமனைகளுக்கு துாக்கியும், சைக்கிளில் அழைத்து சென்று வீட்டுக்கு அழைத்து வரும்
பெற்றோர்களை வணங்கி ஆக வேண்டும். ஊனமுற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் தாயின்
அரவணைப்பில் இருக்கும் வரை பாதுகாப்பாகவே உள்ளனர்.தாயின் இறப்பிற்கு பின் உறவு
களின் பராமரிப்பிலோ தன்னந்தனியாகவோ அல்லது அண்ணன், அண்ணி போன்ற உறவு களின் பராமரிப்பில் தான் வளர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாற்றுப்பராமரிப்பின் கீழ் வந்த மிக குறைந்த நாட்களிலேயே இவர்கள் இறக்க நேரிடுகிறது எனும் உண்மை நம்மை வேதனையுறச்செய்யும். சில சூழ்நிலைகள் சந்தேகப்படும்படியும் அமைந்து விடுகின்றன.

ஆலோசனை : மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்பாடு அடைவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கணிசமான மாற்றுத்திறனாளிகள் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி பெறுவதில் மேலும் பல தடைக்கற்கள் உள்ளன. இவற்றை போக்க அரசு ஒவ்வொரு தாலுகா
விலும் ஒரு உண்டு உறைவிடப்பள்ளி தொடங்கி, உயர் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாவட்டந்தோறும் இலவச விடுதிகள் தொடங்க வேண்டும்.பிரதமர் மோடியின் லட்சியமானதிறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்க வேண்டும். இதற்கு ஏதுவாக கல்லுாரி செல்லும் மாற்றுத்திறனாளிகள் பெண்கள் அனைவருக்கும் மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்க வேண்டும்.
அரசின் நலத்திட்ட உதவிகள் தேவைப்படுவோருக்கு மிகக்குறைவாகவும், தேவைப்படாதோருக்கு அதிகமாகவும் பயனளிக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

மிகவும் மோசமான உடல் பாதிப்புடையவர்கள், ஊரைவிட்டு தொலைவில் குடியிருப்போர், தோட்டம், மலையடிவாரங்களில் வசிப்போர், அரசின் திட்டம் பற்றிய விழிப்புணர்வே இல்லாதோர் பெரும்பாலானோர் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆகவே, அரசின் நலத்திட்ட உதவிகள் (40 சதவீதம்)ஊனமுற்றோரில் இருந்து தொடங்குவதற்கு பதிலாக முழுமையாக நுாறு சதவீதம்
ஊனமுற்றோரிடம் இருந்து தொடங்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே பார்வை தெரியாத பட்சத்தில் அரசு இலவச வீடுகள் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய மிகவும் ஊனமுற்ற குழந்தைகள் வாழும் குடும்பங்
களுக்கு இலவச கழிப்பறை திட்டம் தொடங்க வேண்டும்.அரசு உதவ வேண்டும்
வறுமையான குடும்பங்களில் ஊனமுற்றிருக்கும் குழந்தைகளில் சிலருக்கு அரசு இலவச
சிறிய ஆப்பரேஷன் செய்து, குணப்படுத்தி வாழ்வில் ஒளியேற்றி வைக்கலாம். ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர் பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களாக உள்ளனர். ஊனமுற்றோர் திருமணம் செய்யும் பொழுது பெரும்பாலும் சொந்தத்திலேயே மாப்பிள்ளை, பெண் பார்க்கின்றனர். ஏற்கனவே, நிலவும் பிரச்னையை இது அதிகரிக்கவே உதவும். இந்த தம்பதிகளுக்கு இடையே திருமண முறிவு அதிகமாக காணப்படுகிறது.இதுபோன்ற சூழலால் தனியாக பிரித்து விடப்பட்டவர்களின் மனநிலையும், சமூக மற்றும் பொருளா தார வாழ்வினையும் சீர்குலைக்கிறது. அரசும், அரசு சாரா நிறுவனங்களும் சமூக வல்லுனர்களும் இணைந்து இந்த பிரச்னையை அணுகி ஆவன செய்ய வேண்டும்.தொலைதுாரங்களில் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை பெற ஆம்புலன்ஸ் வசதி,டெலி மெடிசன் முறையில் உதவும் மருத்துவ மையம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் மானியத்துடன் கூடிய கடன்திட்டங்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் ஊனமுற்றோரை எவ்வாறு அழைப்பது? மாற்றுத்திறனாளிகள் என்றா உடல் குறைபாடுள்ளவர்கள் என்றா, உடல் ரீதியாக சவால் விடப்பட்டவர்கள் என்றா என்பது போன்று விவாதம் செய்வதை விட்டுவிட்டு,அவர்களை எவ்வாறு முன்னேற்றுவது, தற்சார்பு அடைய வைப்பது என ஆலோசனை செய்வதே சிறந்த நடவடிக்கை ஆகும்.

பேராசிரியர் எம்.பி. போரையன்
துறைத் தலைவர்
வாழ்நாள் கல்வி மற்றும் விரிவாக்கத்துறை
காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம், திண்டுக்கல்
e-mail: enablementgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement