Advertisement

மனிதனுக்கு சிரிப்பு அழகு

சிரிப்பு உலகை ஆளும் உன்னத சக்தி. மனதை மயக்கும் மந்திர சக்தி. அனைவரையும் கவரும் அற்புத சக்தி. ஒவ்வொருவரையும் நீண்ட நாள் வாழ வைக்கும் நிரந்தர சக்தி. பூமியில் வாழும் எந்த ஜீவராசிகளுக்கும் கொடுக்காமல், மனிதனுக்கு மட்டும் இறைவன் கொடுத்திருக்கும் விலைமதிக்க முடியாத மிக உயர்ந்த வரம் சிரிப்பு. 'வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது. சிரிப்பு சத்தம் கேட்கும் பொழுதில் அது திறந்து கொள்கிறது' என்பார் கவிஞர் வைரமுத்து. எனவே
பூட்டிக் கிடக்கின்ற வாழ்க்கையை திறக்கின்ற மந்திரச்சாவி சிரிப்பு மட்டும்தான். 'நகைச்சுவை உணர்வு என்னிடம் இல்லை என்றால், நான் எப்போதே தற்கொலை செய்திருப்பேன்' என்றார் காந்திஜி. உலகையே தனது அற்புத நடிப்பாற்றலால் சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் கூட, தனது
பேட்டியில், 'எனக்கு எப்போதாவது அழவேண்டிய சூழ்நிலை வந்தால், மழையில் நனையும்போதுதான் அழுவேன். ஏனென்றால் மழையில் நனையும்போது அழுதால்
யாருக்கும் தெரியாது' என்பார்.

'சிரித்து வாழ வேண்டும். : பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னம்பிக்கையை ஊட்டியவர் சினிமா பாடலாசிரியர் புலமைபித்தன்.உன் சிரிப்பின் நீளம் எவ்வளவோ - அந்தளவு உன் ஆயுளின் நீளம் என்பார்கள்.

சிரிப்பின் மகத்துவம் : சிரிப்புக்கு மொழி, ஜாதி, மதம், ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற பேதமில்லை. அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரே மொழி சிரிப்பு மட்டும்தான். சிரிப்பு நம்மிடம் இருக்கும் போது கோபம், பொறாமை, அச்சம், வெறுப்புணர்வு காணாமல் போய்விடுகிறது. இதைத்தான் கலைவாணர், 'சிரிப்பு - இதன் சிறப்பை சீர்துாக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு
கறுப்பா - வெளுப்பா என்பதை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடி சிரிப்புகளையை நீக்கி, கவலையை போக்கி,மூளைக்கு தரும் சுறுசுறுப்பு இந்த சிரிப்புஇதை துணையாக கொள்ளும்மக்களின் முகத்தில் துலங்கிடும் தனிச்செழிப்பு'என்றார்.

சிரிப்பின் இன்றைய தேவை : வாழ்க்கை என்பது ஒரு தராசு போன்றது. ஒவ்வொரு நாளும் தராசு நம்முன் துாக்கிப் பிடிக்கப்படுகிறது. ஒரு தட்டில் மகிழ்ச்சியை
வைக்கிறோம். மறுதட்டில் கோபம், எரிச்சல், ஆத்திரம், சோம்பேறித்
தனம் போன்றவைகள். நம்மாலோ அல்லது நம்மை சார்ந்தவர்களாவோ அடுக்கப்படுகிறது. மகிழ்ச்சி தட்டை விட இந்த தட்டு கனம்
அதிகமாகி கீழே இறங்கிவிடுவதால்,
அந்த நாள் மகிழ்ச்சியற்ற நாளாக கடந்து போய் விடுகிறது.
ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியை அவர் மனமே தீர்மானிக்கிறது. அந்த மனம் பக்குவப்பட, மனம் லேசாக நமக்கு வழங்கப்பட்ட அருட்கொடை தான் சிரிப்பு.
என்னதான் பணம், பதவி,
உறவுகள் என எல்லாம் இருந்தாலும்,
நாம் விலை கொடுத்து வாங்க
முடியாத விஷயங்களில் ஒன்றுதான் மகிழ்ச்சி. நாம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும், ஒரே
நிமிடத்தில் கோபப்பட வைத்து
விடலாம். ஆனால், அந்த நபரை ஒரே நிமிடத்திற்குள் சிரிக்க வைக்க முடியாது. அதுதான் கோபத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ள பெரிய
வித்தியாசம். இந்த நிலை மாற, குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க, வீடுதோறும் புன்னகை என்ற மலரை நட்டு, தண்ணீர் என்ற மலரை இதயங்களுக்குள் பாய்ச்சி, கவலை என்ற களைக்கொல்லியை வேரோடு பிடுங்கி,
சந்தோஷம் என்ற மலரை துாவினால் இல்லம் சொர்க்கமாகும். உள்ளம்
கோவிலாகும்.
சிரிப்பின் சிறப்பு
'சிங்கார புன்னகை கண்ணாரக்
கண்டாலே சங்கீத வீணையும் எதுக்கம்மா, மங்காத கண்ணுக்கு மையிட்டு பார்த்தாலே, தங்கமும், வைரமும் எதுக்கம்மா' என
குழந்தைகள் சிரிப்பின் மேன்மையை கண்ணதாசன் தனது பாடலில்
அழகாக விளக்குவார்.
மனம் விட்டு சிரித்தால் மார்பு நோய் வருவதில்லை. மனம் விட்டு சிரிக்கும் ஒவ்வொரு முறையும் மரணம் ஒத்திப்போடப்படுகிறது. சிரிக்கத் தெரிந்த மனிதனுக்கு
இரவுகூட பகலாக இருக்கும்.
சிரிக்கத் தெரியாத மனிதனுக்கு பகல்கூட இரவாக இருக்கும்.
இதைதான் வள்ளுவர்,
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிறு ஞாலம்
பகலும் பாற்பட்டன்று இருள்
என மேற்கொள் காட்டுகிறார்.
சிரிக்கும் போது நாம் அதிக
அளவில் பிராண வாயுவை
சுவாசிக்கிறோம். இதனால்
உடலுக்கு புத்துணர்ச்சி
கிடைப்பதோடு, இதயத்தில் ரத்த ஓட்டம் துாண்டப்பட்டு, நாள்
முழுவதும் சுறுசுறுப்பை தருகிறது.
வகுப்பறையில் நகைச்சுவை
வகுப்பு பாட வேளையில்,
ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு
மணவர்கள் சொல்லும் பதில் மூலம் நல்ல நகைச்சுவை பிறக்கும். ஒரு நாள் ஆசிரியர், மாணவனிடம் பாடம் நடத்தும் போது, 'கடலுக்கு நடுவுல ஒரு மாமரம் இருக்கு. அதில் 10 மாம்பழம் தொங்குது, எப்படி பறிப்ப' என கேட்டார்.
உடனே மாணவன், 'நான்
பறவையாய் பறந்து போய்
பறிப்பேன்' என்றான். உடனே
ஆசிரியர், 'உன்னை பறவையாய் உங்க தாத்தாவா மாத்துவாங்க' என்று கேட்டார். பதிலுக்கு
மாணவன், 'கடலுக்கு நடுவுல
மாமரத்தை உங்க தாத்தாவா நட்டு வச்சாரு' என்றான். வகுப்பறை அமர்க்களமானது.
கேள்வித்தாளில் ஒரு கேள்வி- 'வட இந்திய நதிகள், தென்னந்திய நதிகள் குறிப்பு வரைக'. மாணவன், 'வடஇந்திய நதிகள் வட இந்தியாவில் மட்டும் ஓடுகின்றன. தென்னந்திய நதிகள் தென்னிந்தியாவில் மட்டும் ஓடுகின்றன' என பதில் எழுதினான். மாணவனின் பதில் ஆசிரியரை வியக்க வைத்தது.
இல்லங்களில் நகைச்சுவை
இல்லற வாழக்கை சிறந்த குடும்பங்களில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும். அப்போது மனம் மகிழ்ச்சி
அடைகிறது. மனம் மகிழ்ச்சி அடையும்போது சிரிப்பு தானாக வரும். சிரிப்பு தானாக வரும்போது நிறைகள் தெரியும். குறைகள்
தெரியாது. இதனால் குடும்பங்களில் புரிதல் இருக்குமே தவிர பிரிதல் இருக்காது.
ஒருவர் தன் மாமனாரிடம், 'மாமா உங்க பொண்ண
கோவத்துல கன்னத்துல
அறைஞ்சிட்டேன்' என்றார். உடனே மாமனார், மருமகனை பார்த்து, 'இப்ப எந்த மருத்துவ
மனையில நீங்க அட்மிட் ஆகி
யிருக்கீங்க' என்றார். மகளுடைய வீரம், அப்பாவுக்கு நன்றாகவே தெரியும்.
ஒருவர் பெருமையாக, 'நான் கல்யாணத்துக்கு முன் நீளம்
தாண்டுவேன். உயரம் தாண்டுவேன்'
என்றார். இன்னொருவர் 'இப்ப எதை தாண்டுறீங்கா' என்று
கேட்டார். அதற்கு அவர், 'இப்ப என் மனைவி கிழிச்ச கோட்டை தாண்டாமல் வாழுகிறேன்,'
என்றார்.
மனைவி கணவனிடம், 'ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கவா, ரசம் வைக்கவா?'- உடனே
கணவன், 'முதல்ல ஏதாவது ஒண்ணு வை. அப்புறமா அதுக்கு பேர்
வைக்கலாம்' என்றார். போகிற போக்கில் சில நகைச்சுவை தானாக வரும்.
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம். பறவைக்கு அழகு சிறகு. நமக்கு அழகு சிரிப்பு.
மேடைகளில் சிலேடை நகைச்சுவை
ஒரு அருமையான இலக்கிய விழா. கி.வா. ஜகந்நாதன்,
மேடையில் தலைவராக
அமர்ந்திருந்தார். அந்த நேரம்
இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் பேச வரும்போது, சட்டையில் ஒரு பட்டன் அறுந்து கீழே விழுந்து
விட்டது. இதை சமாளிக்க
மேடையில் எல்லோரிடமும் 'பின்கொடுங்க, பின்கொடுங்க' (குண்டூசி) என்று கேட்க, கி.வா.ஜ.,
குறுக்கிட்டு சிலேடையாக, 'குமரி அனந்தன் பின் வாங்கலாமா?' என்று கேட்க, பதிலுக்கு
குமரி அனந்தன் 'கி.வா.ஜ., அவர்கள் ஊக்குவித்தால் நான் ஏன் பின் வாங்குகிறேன்' என்று சொல்ல ஒரே
கலகலப்பு.
ஒரு காலத்தில் காங்., ஆளுங்கட்சி, தி.மு.க., எதிர்க்கட்சி. அண்ணாதுரை எதிர்க்கட்சி
தலைவர். ஒருநாள் சட்டசபையில், அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்பிர
மணியம் பேசிவிட்டு அமர்கிறார். உடனே அண்ணாதுரை எழுந்து, 'மாண்புமிகு அமைச்சர் பேச்சு, ஏசுநாதர் மழைப்பொழிவு செய்தது போல் இருந்தது' என்றார். அவையில் ஒரே கைத்தட்டல்.
உடனே சி.சுப்பிரமணியம் எழுந்து, 'அண்ணாதுரை என்னை ஏசுநாதரை போல் சிலுவையில் அறையாமல் இருந்தால் சரி'
என்றார். உடனே அண்ணாதுரை பதிலுக்கு, 'ஏசுநாதரை சிலுவையில் அறைந்தது அவர்களோடு
இருந்தவர்களே தவிர, எதிர்க்
கட்சிக்காரர்கள் அல்ல' என்றார். மீண்டும் சபையில் ஆரவாரம்.
அந்தளவு சிரிப்பை எல்லா
இடங்களிலும் பார்க்க முடியும்.
சிரிப்பின் இன்றைய தேவை
நான்கு வயது குழந்தை தினமும் 500 முறைக்கு மேல் சராசரியாக சிரிக்கிறது. ஆனால் வாழ்க்கையை எதிர்கொள்ள துவங்கியவுடன்
தினமும் 15 முறை சிரித்தாலே
அதிகமென்றாகிவிட்டது. மனம் விட்டு சிரிப்பது ஹார்மோன்களை
துாண்டிவிட்டு உடலை சம
நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
எனவே,
'சிரிப்பு என்பது கலை
சிரிப்பு என்பது கருவி
சிரிப்பு என்பது மந்திரம்
சிரிப்பு என்பது மகத்துவம்
சிரிப்பு என்பது மருத்துவம்'
எப்போதும் நம் உதடுகளில்
புன்னகை இருக்கட்டும். அது
தரும் தன்னம்பிக்கையை வேறு
எதனாலும் தரமுடியாது.
நாளை என்பதில் நம்பிக்கை வைத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த்துளியை கழற்றி எடுத்துப்
புன்னகை அணிந்து போரை நடத்து.
வாய்விட்டு சிரிப்பதனால்,
நோய்விட்டு போவது மட்டுமல்ல.
நோய் பட்டு போகும்.
எனவே சிரிப்போம், வாழ்வில் சிறப்போம்.
- ச. திருநாவுக்கரசு
பட்டிமன்ற பேச்சாளர், மதுரை
98659 96189

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Kaliyan Pillai - Chennai,இந்தியா

    உண்மைதான் - ஒருவர் மற்றவரைப் பார்த்து புன்னகைக்கும்போது அடுத்தவர் முகத்தில் ஒரு ஒளியைப் பிரதிபலிக்கிறது. அது ஒளியாய் பரவி துக்கமென்னும் இருளை நொடியில் நீக்கக்கூடியது சிரிப்பெனும் ஒளியைச் சிதறச்செய்து உலகை உன்னதமாக்குவோம்

Advertisement