Advertisement

'ஆப்பரேஷன் குபேரா' நடப்பது எப்போது?

ஏழை - எளிய மக்கள் தங்களின் அவசர, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, சில சமயங்களில் வசதி படைத்த தனியாரிடம் இருந்து கடன் வாங்கும் பழக்கம், தொன்று தொட்டு இருந்து வந்தது தான். இது மாதிரியான கடனை, 'கைமாத்து' என, நம் முன்னோர்
வழங்கினர்.
கைமாத்தில் வட்டி இருக்காது; ஆனால், நட்பும், உறவும், உண்மையும், கருணையும், அன்பும் இருக்கும். அதே கைமாத்து தான், இன்று வியாபாரமாக மாறி
விட்டது.
இதில், வட்டி மட்டுமே இருக்கும்; நட்புக்கும், உறவுக்கும், உண்மைக்கும், கருணைக்கும், அன்புக்கும் இடமே கிடையாது.
பணத்தை வட்டிக்கு கொடுத்து சம்பாதிப்பதை, ஏராளமானோர் தொழிலாக செய்கின்றனர்.
அத்தகையவர்களின் துவக்க காலத்தை பார்த்தால், மிகவும் எளிமையாக இருப்பர். பின், வட்டிக்கு வட்டி வாங்கி,
மாட மாளிகைகளும், கூட கோபுரங்களையும் எழுப்பி
விடுகின்றனர்.
அவர்களைப் பார்த்து, பிறரும், இந்த அநியாய தொழிலில் ஈடுபட்டு, தனக்கும், தான் சார்ந்துள்ள சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கின்றனர்.
பணத்தை கடனாக கொடுத்து, வட்டி வாங்குவதற்கு எவ்வித தத்துவார்த்தமும் கிடையாது.
'வங்கிகள் வட்டி வாங்கத் தானே வியாபாரம் செய்கின்றன... உலக வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகளும், நாடுகளுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கத் தானே செய்கின்றன.
அதுபோல தான், நாங்களும் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கிறோம்' என, யாரும் சொல்ல முடியாது.
வட்டி, எவ்வளவு என்பதில் தான், பிரச்னை உள்ளது. வங்கிகள் வாங்கும் வட்டியும், கந்து வட்டியும் ஒன்றா... இல்லவே இல்லை!
வங்கியில் வட்டிக்கு பணம் வாங்கி, கட்ட முடியாமல் போனால், சொத்துகளை, 'ஜப்தி' செய்து ஈடுகட்டி கொள்வர். ஒரு பைசா கூட, அதிகமாக வாங்குவதில்லை.
ஆனால், கந்து வட்டி கும்பல்கள், ஈவு இறக்கமே இல்லாமல், குட்டி போடுவது போல, வட்டிக்கு வட்டி, அதற்கு வட்டி என வசூலித்து, ஒரு கட்டத்தில், பணம் வாங்கியவரை போண்டியாக்கி விடுகின்றனர் அல்லது தற்கொலைக்கு துாண்டி விடுகின்றனர்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் போல, ஏராளமானோர் இந்த தொழிலில் உள்ளனர். கிராமங்கள் துவங்கி, பெரு நகரங்கள் வரை, இத்தகையோர் பரவியுள்ளனர். இத்தகையவர்களை ஒழிக்க, அரசுகள் அறிமுகப்படுத்திய சட்டங்கள், பயனற்று போயுள்ளன.
கந்து வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள், கடனை திருப்பி வசூலிக்க, குண்டர்களை ஏவி, மூன்றாம் தரமாக நடந்து கொள்வர். அவர்கள் பிடியில் அப்பாவி ஏழைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க,
தமிழகத்தில், 2013ல், 'அதீத வசூல் தடை சட்டம்' அமல்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின்படி, ஆண்டுக்கு, 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பவர்களுக்கு, மூன்றாண்டு கடுங்காவல் சிறை மற்றும், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம்.
இச்சட்டத்தால் பலன் அடைந்தவர்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். கடந்த, ஐந்தாண்டுகளில் மட்டும், தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையால், 604 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என, காவல்துறை புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
எனினும், கந்து வட்டி கொடுமை, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த படி தான் இருக்கிறது.
குறிப்பாக, நாள் வட்டி, வார வட்டி, ராக்கெட் வட்டி, கம்ப்யூட்டர் வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி போன்ற வட்டிகளால், பல அடித்தட்டு மக்கள் தினமும் ஏமாற்றப்பட்டும், அல்லல்பட்டும்
வருகின்றனர்.
அப்பாவி மக்களின் சூழ்நிலைகளை சாதகமாக்கி, கந்து வட்டி கும்பல், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த படி தான் இருக்கிறது.
கருணை காட்ட வேண்டிய ஏழைகளிடத்தில் கோபமும், கோபம் காட்ட வேண்டிய கந்து வட்டிக்காரர்களிடத்தில் கருணையும் காட்டும் காவல் துறையினரின் போக்கும், காலம் காலமாக தொடர்ந்தபடி தான் இருக்கிறது.
கந்து வட்டிக்காரர்கள் எப்படியெல்லாம், விஞ்ஞானப் பூர்வமாக சிந்தித்து, ஏழை, எளியவர்களிடம் வட்டி வசூல் செய்கின்றனர் என்பதை நினைக்கும்போது,
பாரதியாரின், 'நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்...' என்ற கவிதை தான்,
ஞாபகத்திற்கு வருகிறது.
 காலையில் கடனாக பெறும், 900 ரூபாயை, மாலையில், 100 ரூபாய் வட்டியுடன், 1,000 ரூபாயாகக் கொடுக்க வேண்டும். இது, நாள் வட்டி.
 10 ஆயிரம் ரூபாய் கடன் பெறும் ஒருவருக்கு, 8,500 ரூபாய் தான் கொடுக்கப்படும்.
 இதை, வாரம் ஒருமுறை, 1,000 ரூபாய் வீதம், 10 வாரத்தில் கொடுக்க வேண்டும். இது, வார வட்டி.
 1,000 ரூபாய் கடன் வாங்கி, தினமும், 100 ரூபாய் வட்டி கட்டி, 10வது நாள் முடிவில், 1,000 ரூபாயை திருப்பிக் கொடுப்பது, ராக்கெட் வட்டி.
 1,000 ரூபாய்க்கு பத்தே நாளில், 1,000 ரூபாய் வட்டி. 8,000 ரூபாய் வாங்கி, ஒரு வாரத்தில், 10 ஆயிரம் ரூபாயாக கொடுப்பது, கம்ப்யூட்டர் வட்டி. 8,000 ரூபாய்க்கு வாரத்திற்கு, 2,000 ரூபாய் வட்டி.
 காலை, 6:00 மணிக்கு பணம் வாங்கினால், நான்கு மணி நேரத்தில், 15 சதவீத வட்டியுடன் பணத்தை கொடுத்து விட வேண்டும்.
தவறினால், வாடகை கார் நிறுத்தி வைக்கும் போது, மீட்டர் ஏறுவதை போல, மணிக்கு மணி வட்டி ஏறிய படியே இருக்கும். இது, மீட்டர் வட்டி.
வெளிச்சத்துக்கு வராத பல விதமான கந்து
வட்டிகளும் உண்டு.
வட்டி வாங்குவது, மஹா பாதகச் செயல் என, இஸ்லாமிய மதம் கூறுகிறது. 'வட்டியை உண்போர் சைத்தான் தீண்டியவன் போல் பைத்தியமாகவே எழுவர்... வட்டி வாங்குகிறவன் வீட்டு நிழலில் நிற்பது குற்றம்... வட்டி வாங்குவது விபசாரம் செய்வதை விடக் கொடிய குற்றம்' என்கிறது, இஸ்லாமிய மதம்.
இந்து மதம், 'வருணாசிரம முறைப்படி வட்டி வாங்கலாம்' என, குறிப்பிடுகிறது. கிறிஸ்துவ மதமும், 'நியாயமான
வட்டி வாங்கலாம்' என, கூறுகிறது.
வட்டிக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறல்ல; ஆனால், சட்டத்திற்கு முரணாக, அதிக வட்டிக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தான் தவறு.
மக்களின் உயிரைக் குடிக்கும் கந்து வட்டி மோசடியை, உடனடியாக, முழுமையாக தடுக்க முடியாவிட்டாலும் கூட, அரசு நினைத்தால், அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், சட்டத்தை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமும், 'மைக்ரோ' கிரெடிட் முறையில், கடன் தேவைப்படுபவர்களுக்கு சிரமமின்றி, எளிய முறையில் வங்கி கடன் கிடைக்க, வழி வகை செய்வதன் மூலமும், கந்து வட்டி கொடுமையை, நிச்சயமாக குறைக்க முடியும்.
சமீபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில், ஒரு குடும்பமே தீக்குளித்து பலியானது போல, 1914ல் கேரள மாநிலம், திரு
வனந்தபுரத்தில், ஒரு சம்பவம் நடந்தது. கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த, ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்தவுடனேயே, கேரள அரசு, கந்து வட்டிக்காரர்களின் கொட்டத்தை ஒடுக்க, கந்து வட்டிக்காரர்களை களையெடுக்க, 'ஆப்பரேஷன் குபேரா' என்ற திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்தியது.
இரண்டே மாதங்களில், கந்து வட்டி தொழிலில் ஈடுபட்ட, 773 பேர் கைது செய்யப்பட்டனர்; 1,448 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; 418 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசின் கடுமையான, உடனடியான நடவடிக்கைகளால், கந்து வட்டிக்காரர்களின் அட்டூழியம், கேரளாவில் குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய, கொடூரமான, திருநெல்வேலி கலெக்டர் அலுவலக சம்பவத்துக்கு பின், தமிழக அரசு கண் துடைப்புக்காக மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும், உரிய நடவடிக்கை எடுக்கக் கூறி, ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
இது மாதிரியான, அரசின் மெத்தனமான நடவடிக்கைகளால், வட்டிக்கு பணம் வாங்கிய, ஏழை - எளிய மக்களின் மனதில் ஒரு அச்சம் நிலவுகிறது.
கந்து வட்டி மூலம் கோடிகளை குவித்து, ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் ஒரு சிலரின்
ஆசி, கந்துவட்டிக்காரர்களுக்கு இருக்குமோ என்ற எண்ணமும், மக்களின் உள்ளத்தில் இல்லாமல் இல்லை.
கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, ஏழை, எளிய மக்களை எழுந்திருக்க விடாமல், அவர்கள் முதுகில் ஏறி சவாரி செய்யும், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கந்து வட்டி கும்பலை, இரும்பு
கரம் மூலம் அரசு ஒடுக்க வேண்டும்.
இல்லையென்றால், கந்து வட்டிக்
கொடுமைகள் ஒரு தொடர்கதையாக தான் இருந்து கொண்டிருக்கும்.
கந்து வட்டிக் கொடுமைகளை தடுப்பதற்
கென தமிழக அரசு ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தி, உடனடி, தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கந்து வட்டிக்காரர்களை, காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைப்பதோடு, அவர்களிடம் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்து, நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
கந்து வட்டிக் கொடுமைக்கு ஆளான, விருதுநகர் காரியாபட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சுந்தரம் என்பவர், 2014ல்
உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்றை, நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார்.
'கந்து வட்டி வசூலை தடுக்க கேரளாவில், 'ஆப்பரேஷன் குபேரா' என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்படுவதை போல, தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவு பிறப்பித்தார்.
மூன்றாண்டுகள்
கடந்தும், தமிழக அரசு விழித்து கொண்டதாக தெரியவில்லை.
இனிமேலாவது, கண் திறக்க வேண்டும். கந்து வட்டி கும்பலை தடுக்க வேண்டும். கந்து வட்டிக்கு பணம் வாங்காத வகையில், எளிய
முறையில் கடன் கிடைக்க வழி வகை செய்ய
வேண்டும்.
எல்லா விதமான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு கடன் கிடைக்க, அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இல்லையேல், அந்தந்த தொழில்களில் ஈடுபட்டு உள்ளவர்கள், தாங்களாக ஒன்று சேர்ந்து, ஒரு நிதியத்தை ஏற்பாடு செய்து, அதன் மூலம், அவசர காலத்தில் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
என்னவாக இருந்தாலும், பணத்தை விட உயிர் பெரிது என்பதை, கந்து வட்டி கும்பல்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்!
இ- - மெயில்: gomal_44yahoo.com

-- நா.பெருமாள் -
மாவட்ட வருவாய்
அலுவலர் - பணி நிறைவு

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Paranthaman - kadappa,இந்தியா

    வங்கிகள் தவிர தனியார் எவரும் அவர்களிடமுள்ள ரொக்கத்தை சாதாரண வட்டிக்காகவோ கந்து வட்டிக்காகவோ கைமாத்தாகவோ தரக்கூடாது. அதை உடனடியாக சட்டத்தின் மூலம் தடை செய்யவேண்டும். மக்களிடை சுழன்று செல்லும் பண புழக்கம் மனித சமூகத்தின் அன்றாடஜீவாதார தேவைக்காக அனைத்து வித பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் மீந்தவற்றை சேமிப்பதற்கும் அரசு வழங்கிய அரிய சாதனமாகும். இதை ஆதிகாலத்தினர் பண்டமாற்று நாணயம் என்று சொன்னார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement