Advertisement

மாணவர்களுக்கு தேவை பண்பாட்டுக் கல்வி

இன்று பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கான கல்வியை முழுவதுமாக ஆசிரியர்களிடம்
ஒப்படைத்து விட்டு விலகி விட்டார்கள். தாங்கள் 'தரமானது' என கருதும் ஒரு பள்ளிக் கூடத்தை தேர்ந்தெடுத்து இரண்டரை வயதில் குழந்தைகளை சேர்த்து விடுவதும், பிறகு கூடுதலாக மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவதும் மட்டுமே குழந்தைகளுக்கு அதிகபட்சமாக கொடுக்கும் கல்வி என பெரும்பாலான பெற்றோர் முடிவு செய்து விடுகின்றனர். அது நிச்சயமாக இல்லை. பெற்றோரும் தாத்தா, பாட்டி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்காத கல்வி முழுமையான கல்வியாக அமையாது.பெரும்பாலான கல்விக்கூடங்கள் பொருளாதார தேடலுக்கான கருத்துகளை மட்டுமே மைய மாகக் கொண்டு பாடத்திட்டத்தை உருவாக்கி கற்றுத் தருகின்றன. 'பொருளாதாரத் தேடல்' என்பதும் பொருளாதாரத் தேவை என்பதும் மிக அவசியம்தான். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவ்வாறு உருவாக்கப்படும் பொருளாதாரம் 'பண்பாட்டு பொருளாதாரமாக' இருக்க வேண்டும். அதுதான் நிலையான பொருளாதாரமாக நிற்கும்.
அதாவது பண்பாட்டு பின்புலத்தில் நின்று சேர்க்கப்படுகின்ற பொருளாதாரம்தான் அழியாமல் நிற்கும்.

பண்பாட்டுக்கல்வி : பெற்றோரையும், உறவினர்களையும் உதாசீனப்படுத்திவிட்டு தனக்கு மட்டுமாக சேர்த்துக் கொள்கிற செல்வம் தனிமனித ஆபத்தை விளைவிக்கும். இந்த வகை
செல்வம் பொருளாதார வளர்ச்சிதான், இன்று நம் சமூக அமைப்பையே குலைத்து போட்டு வருகிறது. ஒழுக்கத்தோடு சேர்ந்த அறிவுதான் பண்பாட்டுக்கல்வி. இந்த பண்பாட்டுக் கல்வியாளர்
களால் படைக்கப்படுகிற சமுதாயம் தான் நிரந்தரமானது. இந்த சமுதாயத்தில் விளைவிக்கப்படுகிற பொருளாதார வளர்ச்சிதான் உண்மையான பொருளாதார வளர்ச்சி. இந்த ஒழுக்கம் நிறைந்த
கல்வியை தனி நபரால் வழங்கிவிட முடியாது. தனியொரு நிறுவனத்தால் கூட சாத்தியமாகாது. அதற்கான விதை குடும்பச் சூழலில்தான் விதைக்கப்பட வேண்டும். இந்த பண்பாட்டுக் கல்வியானது குழந்தைப் பருவம் தொடங்கி குமரப்பருவம் வரை வயதுக்கேற்ற வகையில் கற்றுத்தரப்பட வேண்டும். இங்குதான் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் பங்கு அவசியமாகிறது. ஏனென்றால் உறவுகளோடு இருந்த உணர்ந்து கொள்வதே ஒரு கல்விதான்.
அதிகாலை நேரம் தான் படிப்பதற்கு ஏற்ற நேரம் என்று சொல்கிறோம். அந்த நேரத்தில் தான் சுறு
சுறுப்பாக படிக்க முடியும். ஆனால் நம் பள்ளிக்கூடங்கள் செயல்படும் நேரம் பொதுவாக நம்மை சோர்வடைய செய்கிற நேரமாகத்தான் இருக்கிறது. காலை 10:00 மணி
முதல் மாலை 4:00 மணி வரை என்பது மாணவர்களின் மூளையை சலிப்படையச் செய்கிற நேரம் தான். இதற்காக இப்போது பள்ளி நேரத்தை மாற்றுவது சாத்தியமல்ல. ஆனால் அதிகாலை எழச்
சொல்வது, இறைவணக்கம் செய்ய சொல்வது, சிறு சிறு உடற்பயிற்சிகள்
செய்யச் சொல்வது, படிக்கச் சொல்வது போன்ற பழக்கங்களை வழக்கப்படுத்துவது அவசியம்.

நீதிபோதனை : பள்ளிக்கூடங்களில் 5 மணி நேரம் தொடர்ந்து கற்பிப்பது என்பதும் சலிப்பு ஏற்படுத்தும். செயல்பாடுகள் கொடுப்பதும், நீதி போதனை செய்வதும் பாடத்தின் பகுதிகளாக மாற வேண்டும். இவ்வளவும் செய்தாலும் கூட பள்ளி கூடத்தில் ஒரு குழந்தை 25 சதவீதத்தை
தான் கற்றுக் கொள்கிறது. சக நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் போது இன்னொரு 25 சதவீத கல்வி அந்தக் குழந்தைக்கு கிடைக்கிறது. பெற்றோரிடம் சேர்ந்து 25 சதவீதத்தையும், தான் கற்ற விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது மீதி 25 சதவீதக் கல்வியையும் கற்றுக் கொள்கிறது.குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். அதற்கு கூட்டுக்குடும்ப முறையில் வாழ்வதும், சகிப்புத்தன்மையும் பெற்றோர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும். ஆனால் இன்று கணவன் மனைவிக்குள்ளே ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. நிலைமை இப்படி நீடிப்பதால்தான் பண்பாட்டுக் கல்வி என்பதை பார்க்க முடியாமல் போகிறது. எனவே முதலில் எதிர்கால தலைமுறையின் நலவாழ்வை கருத்தில் கொண்டு பண்பாட்டுக்கல்வி தருவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
பிஞ்சு மனம் கொஞ்சும் மனம்ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எப்போது
வேண்டுமானாலும் பசிக்கும். முறை வைத்து மூன்று வேளை சாப்பிடாது. திரும்ப திரும்ப சாப்பிடும், விளையாடும். எனவே 5 வயது வரை குழந்தைகள் தாயுடனே இருக்க வேண்டும். இந்த வயதில் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு என்று எதையும் சொல்லி பாடம் நடத்தக் கூடாது. எனவே இந்த வயது குழந்தைகளை முழு சுதந்திரத்துடன்விட்டுவிட வேண்டும். ஒரே இடத்தில் உட்கார விடாமல் ஓடியாட விட்டுவிட வேண்டும். அவர்களுக்கு இந்த வயதில் தேவை பாதுகாப்பு மட்டுமே. இந்தப் பாதுகாப்பை பெற்றோர் தான் தரவேண்டும். அதுபோல இந்த வயதில் நற்பண்புகளை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன. நல்ல பழக்க வழக்கங்களை தனிப்பாடமாக
கற்பிக்கவோ சொல்லிக் கொடுக்கவோ தேவையில்லை. பெற்றோர் நடத்தையில் இருந்தே குழந்தைகள் நல்ல பண்புகளை கற்றுக் கொள்கிறார்கள்.எனவே பெற்றோர்தான் நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும். இதற்கும் இப்போது சிக்கல் முளைத்திருக்கிறது. குழந்தைகள் பெற்றோரை விட்டு விலகி வாழ்கிறார்கள் அல்லது தொலைவில் வாழ்கிறார்கள். தாய்--மகள், தந்தை--மகன் இவர்களிடையே இடைவெளி அதிகரித்திருக்கிறது. சிறிய வயதில் அறிவுரை கூறி திருத்தப்படாத குழந்தைகளை பெரியவர்கள் ஆன பின்பு திருத்த முடியாது.

நற்பண்புகள் : சமைக்கும் போதே உப்பு போட்டு சமைத்தால் தான் நன்றாக இருக்கும். சமைத்து இறக்கிய பிறகு உப்பு போடுவது என்பது அந்த அளவுக்கு சரியாக இருக்காது. எனவே சிறு வயதிலேயே நற்பண்புகளை கற்பிப்பது தான் நல் லது. ஆனால் இன்று பல பெற்றோர், உப்பில்லாத சமூகத்தைத்தான் படைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு அடுத்த கட்ட வயதில் அதாவது ஆறுமுதல் பத்து வயது வரை உள்ள வயதில் செயல்பாடுகளின் அடிப்படையிலான கல்வியை உளவியல் அறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பதினோரு வயது முதல் பதினாறு வயது வரையிலான கட்டத்தில் தர்க்க ரீதியான ஆய்வுப் பூர்வமான விஷயங்களைக் கற்றுத் தரவேண்டும். அனுபவங்களை சொல்லித்தர வேண்டும். நீதிக் கதைகளை கற்றுத் தர வேண்டும். புதுப்புது இடங்களுக்கு அழைத்து செல்லலாம். சுற்றுச்
சூழல் பாதிப்புகளைப் பற்றிக் கற்றுத் தரலாம். இதற்கெல்லாம் பள்ளிக் கூடத்தை மட்டுமே நம்பி இருக்காமல் குடும்ப உறுப்பினர்கள் கூடுதல் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
20 வயதுக்கு மேல் உள்ள காலம் என்பது சக்திகளின் காலம். பலத்தின் காலம். ஒவ்வொரு
மாணவனும் சமூகத்தில் நல்ல மனிதராக வாழ விரும்பும் கனவுகள் தோன்றும் காலம். இந்த சமயத்தில் தங்களது பிள்ளைகளை சரியான வழியில் நெறிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பில் பெற்றோரும், உறவினர்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒழுக்கமான சமுதாயம் : இப்படி ஆசிரியர்களோடு பெற்றோரும் உறவினர்களும் இணைந்து உருவாக்கித் தருகிற கல்வி, ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கும். அந்த சமுதாயம் நல்லதொரு குறிக்கோளை நோக்கி நகரும். குடும்பத்தில் கொடுக்கப்படும் கல்வியில்தான் இதயத்தோடு இதயம் இணைந்து, மனதோடு மனது இணைந்து நல்ல மாற்றங்களை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் பெரிய குடும்பங்களில் இருந்துதான் பல சிக்கலான விஷயங்களை பிள்ளைகள் கற்றுக் கொள்ள முடிகிறது. சிக்கலான சூழ்நிலைகளில் பெற்றோர்
நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து பிள்ளைகள் தீர்வுகளையும் கற்றுக் கொள்கிறார்கள். பெற்
றோரின் நடத்தைகள் குழந்தைகளின் நடத்தைக்கு ஆதாரம். பெற்றோரின் இருப்பைக் காட்டும்
கண்ணாடி தான் குழந்தைகள்.பள்ளிகள் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே குழந்தைகளுக்கு கற்பிக்கின்றன. ஆனால் குடும்பமோகாலம் முழுவதற்கும் ஏதோ ஒரு பாடத்தை கற்றுத் தந்து கொண்டே இருக்கிறது. அதனால்தானே பாடினார்கள் 'நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்' என்று!

-முனைவர். ஆதலையூர்
த. சூரியகுமார்
கல்வியாளர், மதுரை
98654 02603

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement