Advertisement

இளைய சமுதாயமே எழுந்து வா!

இந்திய நாட்டின் மக்கள் தொகை இன்று 120 கோடியை தாண்டி விட்டது. இதில் 80 கோடி பேர் இளைஞர்கள். யார் இந்த இளைஞர்கள். அத்தனையும் இளரத்தம். சற்றே உரசினாலும், உசுப்பினாலும், சூடாகும் ரத்தம். இளமை, வலிமை, வேகம், துடிப்பு, மூர்க்கம், அவசரம் எல்லாமே உச்சகட்டத்தில் உலா வரும் காலம்தான் இளமைக் காலம். இந்த இளைய தலைமுறை
கூட்டத்தில் யார்? யார்? இருக்கிறார்கள். ஆண், பெண் என இருபாலரும் அடங்குவர். படித்தவர்கள், படிக்காதவர்கள். ஆடம்பரமாக வாழும் இளைஞர்கள். சராசரி வாழ்வில், பல சங்கடங்களை
சந்தித்து கொண்டிருக்கும் ஏழை, எளிய இளைஞர்கள். எல் லாம் எனக்கு தெரியும் என இறுமாப்புடன் இயங்கும் இளைஞர்கள். எத்தனையோ நவீன விஷயங்களை தெரிந்து
கொள்ளாமலேயே இருக்கும் இளைஞர்கள். மாணவர்கள், வேலை தேடுபவர்கள், கூலி வேலை செய்பவர்கள், மாத சம்பளக்காரர்கள், சுயதொழில் செய்பவர்கள், அயல்நாடுசென்றவர்கள், செல்ல துடிப்பவர்கள், இவர்கள் எல்லோருமே இளைய தலைமுறையில் இருக்கிறார்கள்.
முதுமைக்காலம் என்பது, அனுபவங்கள் நிறைந்த முதிர்ச்சி கண்ட பக்குவப்பட்ட காலம்.
உடலில் வலு குறைந்து, செயலில் தீவிரம் குறைந்து நிதான ஓட்டம் உள்ள காலம்.

பலம், பலவீனம் : இளமைக்காலம் என்பது ஆற்றல் மிகுந்த காலம். வாழ்க்கை என்னும் மாளிகையின் அஸ்தி வாரத்தை அமைக்கும் காலம். சிக்கல் எதுவானாலும் எதிர்கொள்ளும் துணி வும், உறுதியும், இடையூறுகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், இமைக்கும் நேரத்தில்
முட்டி, மோதி, உடைத்து முன்னே செல்லும் வல்லமையும், புதியது எதையும் கற்று கொள்ளும்
ஆர்வமும், வேகமும் உள்ள காலம். இவையெல்லாம் இளமையின் பலன்கள்.
பலவீனங்களுக்கும் பஞ்சமில்லை. கவர்ச்சிகளுக்கு கணப்பொழுதில் பலியாவதும், எது
முக்கியம், எது முக்கியமல்ல என்று யோசிப்பதற்கு நேரம் இல்லாமல் ஓடுவதும், நல்லது எது, கெட்டது எது என்று முடிவெடுப்பதில் நிதானம் காட்ட மறுக்கின்ற தயக்கம். ஆணின் கம்பீரம், பந்தாவில் பெண்ணும், பெண்ணின் அழகு, கவர்ச்சி, நளினத்தில் ஆணும் மயங்கி கிடக்கும் காலம்.கொம்பு சீவுகிறவனுக்கு சொகுசாய் கொம்பை காட்டுகிற காலம். சுருக்கமாக சொன்னால், பலங்கள் அதிகமாக இருந்தும், பலவீனங்களுக்கு சுலபமாய் அடிமையாகி, பாதை மாறிப்போகிற வாய்ப்பு அதிகமாக இருக்கும் காலம். வாலிபத்தில் வழி தவறினால் வாழ்வெல்லாம் வலிதான், என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.

ஒளிமயமான எதிர்காலம் : இளைஞனே உன்னுடைய ஒளிமயமான எதிர்காலத்துக்கும்,
சார்ந்திருக்கும் உன் குடும்பத்தின் செழிப்பிற்கும், சுற்றியிருக்கும் சமூகத்தின் மேம்பாட்டிற்கும், நீ வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டின் நன்மைக்கு மட்டுமே உன் இளமையின் அதிகபட்ச
ஆற்றலை நீ பயன்படுத்த வேண்டும். உன்னுடைய பலன்களை நீ முழுமையாக அறியும் முன்பாகவே உன் பலவீனங்களால் பாழ்பட்டு விடக்கூடாது. பள்ளி தருவது அடிப்படைக் கல்வி. அது மனிதனை எழுதப்படிக்க வைக்கும். கல்லுாரி தருவது துறை சார்ந்த கல்வி. அது ஒரு
பட்டத்தை கொடுத்து, ''மகனே இனி உன் சமத்து'' என வெளியே அனுப்பி வைக்கும். வேலை கிடைப்பதற்கு வேண்டுமானால் பட்டங்கள் உதவலாம். ஆனால், வாழ்க்கையை வளப்படுத்துவதற்கு கல்லுாரி தரும் பட்டங்கள் மட்டுமே கை கொடுக்காது. உன் வாழ்க்கைக்கு தேவையான கல்வி, கல்லுாரிக்கு வெளியே தான் காத்திருக்கிறது. வெளி உலகில், நீ படிக்க வேண்டிய பாடங்கள்தான் உண்மையிலேயே உன் அறிவை அதிகரிக்கும். அவைதான் வாழ்க்கையில் உன்னை ஏற்றி விடும் ஏணிப்படிகள்.பள்ளியிலும், கல்லுாரியிலும் பாடங்களை படித்தபின்தான்
பரீட்சைகளை சந்திக்கிறாய். வாழ்க்கையிலோ பரீட்சைகளை சந்தித்த பின்தான் பாடங்களையே கற்று கொள்கிறாய். வாழ்க்கை பாடங்கள், கல்லுாரி பாடங்களை போல புத்தக வடிவில் இல்லை. மனிதர்களின் வடிவத்திலும், நிகழ்வுகளின் வடிவத்திலும்தான் இருக்கின்றன.

வல்லவனாக இரு : நீ நல்லவனாக இரு. அதே சமயம் நீ சந்திக்கும் எல்லோருமே நல்லவர்கள் என்று நம்பி விடாதே. எவரிடமும், எதற்காகவும், ஏமாந்து விடாத வல்லவனாகவும் இரு. கற்பது முக்கியம் என்றால், கற்று கொண்டதை கடைபிடிப்பது அதைவிட முக்கியம். அறிந்து கொள்வது என்பது அறிவல்ல. அறிந்து கொண்டதை அலசுவதும், ஆராய்வதும், புதிய கோணங்களில்
நோக்குவதும், அதை பற்றி உனக்கு என்று ஒரு தெளிவான, வலுவான கருத்தை உருவாக்குவதுதான் அறிவு. தீட்டப்படாத கத்தி துருபிடித்துவிடும். தீட்டப்படாத புத்தி துாசிபடிந்து விடும். வெற்றிக்கு வேண்டிய ஆயுதங்களுள் அவசியமான ஒன்று அறிவு. அறிவை ஆழமாக்கு, கூர்மையாக்கு, அகலமாக்கு. அகிலம் உன் கையில்.உனது படிப்போ, பண செழிப்போ, வகிக்கும் பதவியோ தலைக்கனத்தை தந்துவிடாமல், பணிவை தரும்போதுதான் அந்த படிப்புக்கும், பண செழிப்புக்கும் பதவிக்கும் கூடுதல் மரியாதை கிடைக்கிறது. தப்பித்தவறி உனக்கு தலைக்கனம் வந்துவிட்டால், நாளையே உனக்கு தலைகுனிவு வருவதற்கும் வாய்ப்பு உண்டு.

கண்ணியம் : நீ பேசும் பேச்சின் தோரணை மட்டுமல்ல, பேசும் சொற்களும் கூட கண்ணியத்தை காட்டுவதாக இருக்க வேண்டும். கீழ்தரமான சொற்களையும், கடுமையான சொற்களையும் தவிர். அவை கேட்பவர் மனதை நோகடித்து, சாகடிக்கும் வலிமை பெற்றவை. கட்டுப்பாடு என்பது, இளைஞனுக்கு வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் இளையவர்களுக்கு சில கட்டுப்
பாடுகள் விதிப்பது, அவர்கள் கெட்ட வழியில் போய்விடாமல் இருப்பதற்குத்தான். இதை
இளையவர்கள் புரிந்து கொண்டால் வாழ்வில் துன்பம் இல்லை.ஒரு மனிதன் சக மனிதனிடம் காட்டும் பரிவும், இரக்கமும்தான் மனிதநேயம். ஏழை, எளியவர்களுக்கு உன்னால் முடிந்த
உதவிகளை செய். அதுவே மனித நேயத்தின் வெளிப்பாடு. மனித நேயம் ஒரு உயர்ந்த பண்பு என்றால், மனித துரோகம், ஒரு கேவலமான இழிந்த பண்பு.அரசு போடும் அருமையான
திட்டங்களின் பலன்கள், அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும். சட்டங்களின் நோக்கங்கள், சராசரி மனிதனுக்கும் சந்தோஷம் தர வேண்டும். இளைய சமுதாயமே, இதில் உனக்கு இருக்கிறது பங்கு. உனக்கு இருக்கிறது பொறுப்பு.ஆகவே, ரவுத்திரம் பழகு. பாதகம் செய்வோரை கேள்வி கேள். இந்த ஆவேசம் ஆரோக்கியமான ஆவேசம், அவசியமான ஆவேசம். இந்த ஆவேசத்தை உரிய வயதில், உரிய முறையில், உரிய துறையிடம் வெளிப்படுத்து. இது தார்மீக கோபம். குறைகளை சீர்படுத்தும் கோபம். இது தவறில்லை.ஆனால், ஒரே ஒரு எச்சரிக்கை. ஊரை சீர்திருத்துகிறேன் என்று உன்னை சீரழித்து கொள்ளாதே. எதிர்ப்பை காட்டுவதிலும் ஒரு முறை இருக்க வேண்டும். அளவு இருக்க வேண்டும். பக்குவம் இருக்க வேண்டும். உனது ஆவேசம் உன் கண்களை மறைக்க கூடாது. மற்றவர்கண்களை திறக்க வேண்டும்.

எழுந்து வா : இளைய சமுதாயமே நீ இந்த மண்ணின் மைந்தன். இந்த மண் உயர்ந்தால் உனக்கு பெருமை. ''பாரத நாடு பழம்பெரும் நாடு. பூரண ஞானம் பொலிந்த நன்னாடு,'' என்று பாடினான் பாரதி. அன்று முப்பது கோடி மக்கள். இன்று 120 கோடி மக்கள். நாடு சுதந்திரமடைந்து 71
ஆண்டுகள் ஆகிவிட்டது. மக்கள் தொகை பெருகியதைப்போல், மக்கள் வளம் பெருகியதா?
நாடு வளர்ந்து விட்டதா? வளர்ச்சி பாதையில் இருக்கிறதா? இதற்கெல்லாம் விடை கேட்பவன் நீ. நாளை விடை தர வேண்டியவனும் நீ.இன்றைய மாணவன், நாளைய மன்னவன். இன்றைய வாலிபன், நாளை வழி நடத்துபவன். இன்று நீதி கேட்பவன் நாளை நீதி வழங்குபவன். இன்று குடிமகன், நாளை தலைமகன். இன்று எத்தனை குறைகள் என்று குமுறுகின்றவன், நாளை அத்தனை குறைகளையும் போக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவன். நாடு வளரவில்லையே என்று வருந்துபவன், நாளை நாட்டை வளர்த்து காட்ட வேண்டியவன். அந்த இலக்கோடு, உறுதியோடு உயர்ந்து காட்டு, நாட்டை உயர்த்தி காட்டு. இளைய சமுதாயமே, உன்னால் இந்த தேசம்
திக்கெட்டும் புகழ்பரப்பி வாழட்டும். அந்த பெருமை உன்னை சேரட்டும்.

-மகா.பாலசுப்பிரமணியன்
கல்வியாளர், காரைக்குடி
94866 71830

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement