Advertisement

குழந்தைகள் விரும்பும் பாடநூல் சாத்தியமா?

கட்டடம் எழுப்பப்படுவதற்கு ஒரு வரைபடம் எவ்வளவு முக்கியமோ அதே முக்கியம்
வாய்ந்தது பாடத்திட்ட வரைவு. இப்பாடத்திட்ட வரைவு சார்ந்தே பாடப்புத்தகம் அமையும். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்ற பழமொழிக்கு ஏற்ப பாடத்திட்டம் என்ற தேர், குழந்தை எனும் அச்சாணியில் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், சுதந்திரமான
சிந்தனை மற்றும் செயல்பாடு, மற்றவர்களின் நலனிலும், உணர்வுகளிலும் அக்கறை, நெகிழ்வுத் தன்மையோடும் படைப்பாற்றலோடும் புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளக் கற்றல், ஜனநாயக நடவடிக்கைகளில் தானாகவே முன்வந்து பங்கேற்றல், சமூக மாற்றத்திற்கும் தானாகவே முன் வந்து பங்களிப்பு செய்தல், ஆகியவற்றை நோக்கி ஒரு குழந்தையைத் தயார் செய்யும் பொறுப்பு கல்விக்கு உள்ளது.தற்போது வெளியிட்டுள்ள தமிழக கலைத்திட்ட வடிவமைப்பு
2017(பாடத்திட்ட வரைவு அறிக்கை) மேற்சொன்ன அத்தனை கூறுகளையும் கொண்டுள்ள தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு-2005ன் வழிக்காட்டுதலில் அமைக்கப்பட்டுஉள்ளது. 1. பள்ளிக்கு வெளியில் உள்ள வாழ்க்கையைப் பள்ளி அறிவோடு தொடர்பு படுத்துதல் 2. பொருள் உணர்ந்து கற்றல் 3. பாடத்திற்கு அப்பாற்பட்டும் படிக்கும் வகையில் கலைத் திட்டத்தை செழுமைப்படுத்துவது. 4. தேர்வு முறைகளை மேலும் நெகிழ்வாக்குவது போன்ற நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டு மொழிப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தை கதைகள்: ழந்தை பருவத்திற்குப் படைப்பாக்க ஆர்வமும், மட்டற்ற மகிழ்ச்சியும் முக்கியமானவை என்கின்றார் தாகூர். தமிழ்பாடத்திட்டத்தின் சிறப்புக்கூறுகள் என்ற பகுதியில், குழந்தைகள் மொழி வாயிலாக கற்பனைத்திறனை மேம்படுத்தவும், தாமே கற்கவும், நடைமுறை இலக்கணத்தை புரிந்து பயன்படுத்தவும் பாடத்திட்டம் வழிவகுத்துள்ளது. படைப்புத்திறன் களான கதை, பாடல், கட்டுரை, உரையாடல், நாடகம் ஆகியவற்றை உருவாக்கும் திறன்களை வளர்ப்பதாய் பாடத்திட்டம் அமைந்துள்ளது என்கின்றது இக்கலைத்திட்டம். இது பாராட்டுகுரியது. தாய்மொழி யானது அடிப்படை அறிவு, திறமையை பெறுவதற்கு பயன்படும். மேலும் தாய்மொழியில் சிந்திக்கவும், அறிவை சேமிக்கவும் உதவும். தமிழ் இலக்கியம்
குழந்தையின் சொந்தக் கற்பனைத் திறனுக்கு உரமூட்டுவதாக அமைய வேண்டும்.
தற்போதைய பாடப்புத்தகத்தில் உள்ள கதைகள் குழந்தைகளுக்கு அந்நியப்பட்டுள்ளன. அக்கதைகள் குழந்தைகள் மொழியில் இல்லை. குழந்தைகள் விரும்பும் விதத்தில் உருவாக்கப்படவில்லை என்ற உண்மை நிலையைக் கருத்தில் கொண்டு புதிய பாடப்புத்தகக்
கதைகள் உருவாக்கப்பட வேண்டும். கற்றல் அணுகுமுறை என்ற பகுதியில் பாடத்திட்டம் குழந்தை மைய அணுகுமுறையை வலியுறுத்துகிறது. விளையாட்டு முறை, கதை கூறல் முறை, நடித்து காட்டல் முறை, குழுக்கற்றல் முறை, பங்கேற்றல் முறை போன்ற கற்றல் கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மகிழ்வுடன் கற்கும் சூழல் உரு
வாக்கப்பட வேண்டும் என்கிறது. இங்கு குழந்தை மையக்கற்பித்தல் முறையான எளிய செயல்வழிக்கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற தெளிவு இல்லை. செயல்
வழிக்கற்றல் வழிப் போதனா முறை நீக்கப்படுமாகின், ஆசிரியர் அதி
காரத்தினை கையாளும் பழைய வகுப்பறை சூழல் ஏற்பட்டு, பாடத்திட்ட மாற்றத்தின் முக்கிய நோக்கமே பாழ்பட நேரிடும். எப்பவும் போல் மனப்பாடமுறை பின்பற்றப்படும் நிலை உருவாகலாம்!தற்போது நடைமுறையில் உள்ள தொடர் மற்றும் முழுமையான
மதிப்பீடு முறை தொடரும் என்ற தெளிவான வழிக்காட்டுதல் மதிப்பீடு குறித்து உள்ளது போல், கற்பித்தல் முறை குறித்து தெளிவான விளக்கம் இல்லை. இது போதனாமுறையில் மாற்றம்
ஏற்பட வாய்ப்பு உள்ளதை பூடகமாக கூறுவதாக உள்ளது.படைப்பாக்க திறன்வகுப்பறை அறிவை மாணவர்களின் வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்துத் தருமாறு பாடங்கள் எழுதப்பட வேண்டும். சமூக அவலங்களைக் கண்டு அடங்கிப் போகாமல் அவற்றைத் தட்டிக் கேட்க பொங்கி எழும் தன்மையை கல்வியால் அளிக்க இயலும். கருத்து மோதல்களின் போது பொறுப்பற்ற வெறும் பார்வையாளராக இருந்து விடாமல் அதைச் சமாளிப்பவராய்த் தன் கருத்தைத் தயக்கமின்றி வெளியிடுபவராய்க் குழந்தைகளை உருவாக்குவது வகுப்பறையின் கையில்தான் உள்ளது. அதற்கு ஆசிரியரின் பங்கு முக்கியமானது. வகுப்பறையில் இதற்கான வாய்ப்பை உருவாக்கும் விதத்தில் பாடங்கள் எழுதப்பட வேண்டும்.குழந்தைகள் விரும்பும் விதத்தில் பாடப்புத்தகம் அமையுமானால், ஆசிரியர் உதவியின்றி குழந்தைகள் தானாகவே பாடப்புத்தகங்களை கையில் எடுத்து படிக்கும் நிலை உருவாகும்.குழந்தைகள் இயல்பிலேயே விளையாடும், படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர்கள். விளையாட்டிற்கு எனத் தனியான கலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற போதும் துவக்கநிலை வகுப்புகளில் விளையாட்டுப் பாடத்திட்டத்திலுள்ள திறன்கள் பாடத்தோடு இணைத்து கொடுக்கப்படுமா அல்லது தனியாக அதற்கான பாடவேளை ஒதுக்கப்பட்டு புத்தகம் உருவாக்கப்படுமா? என்பதற்கான தெளிவு இல்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்
வழிக்கல்வி கற்றல் முறையில் பாடப்புத்தகத்தில் பாடப்பொருளோடு சில விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. தனிவிளையாட்டாக துவக்கப் பள்ளி அளவில் செஸ், கேரம் போன்ற உள் விளையாட்டுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இருப்பினும் துவக்கப்பள்ளி
அளவில் பாரம்பரிய விளையாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

வெளிநாடுகளில் எப்படி: ஓவியம் வரைதல் திறன், துவக்கப்பள்ளி அளவில் கலைத்திட்டத்தில் இடம் பெறவில்லை. 6 வகுப்பில் இருந்து ஓவியம் தொடங்கப்படுகின்றது. செயல்வழிக்கற்றல், கற்பித்தல் முறையில் ஓவியம் வரைதல் இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த கலைத்திட்டத்தில் துவக்கப்பள்ளி மாணவர்கள் ஓவியம் வரைவதற்கான இடம் உள்ளதா என்பது தெளிவாக இல்லை. ஓவியம் வரைதலே கையெழுத்தை அழகுப்படுத்தும் என்று காந்தி கூறுகின்றார். குழந்தைகள் விரும்பும் ஓவியங்களாவது பாடப்புத்தகத்தில் இடம் பெறுமா?
ஜப்பான், கனடா, சீனா, ரஷ்யா உட்பட 28 நாடுகளில் பாடப்புத்தகம் கிடையாது. இங்கிலாந்தில் பாடப் புத்தகம் மட்டுமல்ல, காகிதத்திற்கே வேலை இல்லை. உலகின் தலைசிறந்த கல்வியை சுவிட்சர்லாந்து , பின்லாந்து, கியூபாவுமே தருகின்றன. இந்த நாடுகளில் பாடப் பொருள்களை அந்தந்தப் பள்ளி ஆசிரியர்களே தயார் செய்கிறார்கள். கியூபாவில் பள்ளி இறுதி தேர்வு என்று ஒன்று இல்லை. வெனிசுலா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பாடப்பொருள் தயாரிக்கும் குழுவிலும், பாடப்புத்தகம் தயாரிப்பிலும் மாணவர்களும் பங்கேற்கின்றனர். எனவே நமது பாடத்திட்ட கருத்துக்கேட்பில் பெற்றோர், பொதுமக்கள் மட்டுமல்லாது, மாணவர்களிடமும் கருத்து பெற வேண்டும். அதற்கான முனைப்பில் ஆசிரியர்கள் ஈடுபடவேண்டும். இத்திட்டத்தை படித்து கருத்து கூற ஒரு வார கால அவகாசம் தந்திருப்பது நீட்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் இன்னும் செம்மையான கலைத்திட்டம் அமைக்க முடியும்.
எப்படி இருக்க வேண்டும்
குழந்தைகள் நேசிக்கும் புத்தகமாக பாடநுால் இருக்க வேண்டும். புத்தகங்களை
விரும்பி குழந்தைகள் தொட வேண்டும். யாருடைய உதவியும் இல்லாமலே குழந்தைகள் பாடப்புத்தகத்தை வாசிக்க வேண்டும். அதற்கு, புழக்கத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி பாடப்புத்தகம் எழுதப்
பட வேண்டும். குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சிக்கு பாடப்புத்தகம் உதவ வேண்டும். குழந்தைகளின் இயல்பை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதாவது குழந்தைகள் தாங்களே செயல்களை செய்து முடிக்கும் வகையில்
எளிமையாக இருக்க வேண்டும்.
அதேவேளையில் குழந்தைகளின் பன்முகத்திறனை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். மனப்பாட முறையை தவிர்க்கும் விதமாக பாடப்புத்தகத்தின் செயல்பாடுகள் அமைய வேண்டும். ஆளுமை நற்பண்பு, உடல்நலம் , ஆக்கதிறன் சிந்தனை, படைப்பாக்க சிந்தனை ஆகியவற்றை வளர்க்கும் விதத்தில் பாடப்புத்தகம் எழுதப்பட
வேண்டும்.
கல்வி என்பது விபரங்களை
கற்பது அல்ல; வாழ்க்கையை
கற்பது. இலக்கு தெரியாமல் உதைபடும் பந்துபோல் அலைக்கழிக்கப்படும் குழந்தைகளுக்கு மாற்று இலக்காக தேர்வு, மதிப்பெண் பெறுவது என்றாகி விட்டது. நீட் தேர்வினை எதிர்கொள்ளும் விதத்தில் அவசர அவசரமாக வெளிவரும் இந்த புதிய பாடத்திட்டம் முரட்டுத்தனமாகக் குழந்தை மீதேறி அவர்களது வளர் இளமைக் குதுாகலங்களைச் சூறையாடுவதாக அமைந்து விடக்கூடாது என்ற அச்சத்துடன் பொறுமையாக இப்பாடத்திட்டத்தை அலச
வேண்டும்.
ஆசிரியர்கள் தங்களது சம்பள விகித அரசாணைகளை தேடித்தேடி வாசிப்பதைப் போல், தமிழ்நாடு பாடத்திட்டவரைவு 2017ன் ஆவணங்களை வாசித்து, குழந்தைகளை மனதில் கொண்டு தேவையான மாற்றங்களை முன்மொழிந்து, மெருகூட்ட வேண்டும்.
-க.சரவணன்
தலைமையாசிரியர்
டாக்டர் டி. திருஞானம்
துவக்கப் பள்ளி, மதுரை
99441 44263

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement