Advertisement

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 17

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.
இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.

23.க.ஆனந்த், MCA,MFM, MPhil, PGITM, (Phd)
ஓட்டை குடத்தை வைத்து தண்ணீர் பிடிப்பது போன்று தமிழக அரசு செய்வது. அரசு பள்ளிகளுக்காக மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்காக அரசு பல லட்சம் கோடி செலவு செய்கிறது. ஆனால் தனியார் பள்ளிகள் சில ஆயிரம் மட்டும் செலவு செய்து நல்ல ரிசல்ட் தருகின்றனர். தனியார் பள்ளிகள் பல லட்சம் மாணவர்களின் பேரெண்ட்ஸ் படிப்பு இல்லாதவர்கள் மற்றும் கூலி வேலை செய்பவர்கள் தான். ஆனால் தனியார் பள்ளிகள் நல்ல ரிசல்ட் கொடுக்கின்றனர். ஏன்? அரசு பள்ளிகள் நல்ல ரிசல்ட் தரவில்லை. ஏன் எனில்
1.TET, SET, NET எக்ஸாம் வருடம்தோறும் அனைத்து ஆசிரியருக்கும் வைக்க வேண்டும். ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதி 80 % மார்க் எடுக்க வேண்டும். அரசு பணிகளை தொடர உங்களுக்கு சம்மதமா? ஓடிபோங்கள், காற்று வரட்டும். வளர்ந்த நாடுகளில் இந்த முறை உள்ளது.
2. போலீஸ் துறையில் உள்ளது போல அரசு ஊழியர்களும் சங்கங்கள் ஏற்படுத்த கூடாது; என்று சட்டம் கொண்டு வந்து அனைத்து அரசு ஊழியர்களின் சங்கங்களை கலைக்க வேண்டும்.
3. நன்று படித்த ஒருவர் தான் ஆசிரியராக வேலை செய்ய தகுதி. குறைந்தபட்சம் 10, 11, 12 + DEGREE , BEd; 80 % மார்க் ஆசிரியர் எடுத்திருக்க வேண்டும்..
4.அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் எல்லாம் கட்டாயம் அரசு பள்ளிகளின் தான் படிக்கணும் என்பதை முதலில் சட்டம் ஆக்குங்கள்.


தினமலர் விளக்கம்: பள்ளிகளில் தன்னாட்சிமுறை செயல்படுவதற்கு முன்னால், கட்டாயம் செய்யப்பட வேண்டியவைகள் என்று தாங்கள் சில 'சட்டங்களை' கூறியுள்ளீர்கள். தாங்கள் வலியுறுத்தியது போலவே, இன்னும் சிலரும் எடுத்துக்காட்டி, கடிதம் எழுதியுள்ளார்கள். சில கடிதங்களுக்கு தினமலர் விளக்கமும் அளித்திருக்கிறது. அதாவது, இது முதலில் செய்யுங்கள், பின் அதைச்செய்யுங்கள். இதுதான் தங்கள் கடிதத்தின் அடிப்படைச்செய்தி.
தினமலர் கூறுவது, இந்த முறை, 'இதற்குப்பின் அது' என்ற முறை இந்த காலக்கட்டத்தில் சரியான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.
காரணங்கள்: 1. பத்தாண்டிற்கும் மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. இதன் விளைவு: ஒரு பாடத்தில் பத்தாண்டு வளர்ச்சி மறுக்கப்பட்டு, அதைப் படிக்கும் நம் மாணவர்களின் அறிவு பத்தாண்டிற்குப் பின்னால் தள்ளப்பட்டது. எந்தவொரு கல்வியாளரும் இதைப் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
2. இந்த சூழலால், நம் மாணவர்கள் அகில இந்திய கல்வித் தரத்திற்கு உயராமல், மிகவும் பின்தங்குவதால், வேலை வாய்ப்பை இழக்கின்றனர்.
3. மாற்றப்படாத பாடத்திட்டத்தைச் செயல்படுத்து வதில், அதாவது முக்கியமாக, ஆசிரியர்களின் சம்பளம், மாணவனின் சக்தி, அவன் படிப்பிற்காகப் பெற்றோர்கள் செலவிட்ட பணம்- அவ்வளவும் வீணாகி விட்டது.
இன்று, பாடத்திட்டம் மாற்றியமைக்கும் நல்ல முடிவில் அரசு உறுதியாக இருப்பது, நம் மாணவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஒன்று. தரம் குறைந்த பாடத்திட்டம் மாணவனுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாது. தரம் உயர்த்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு நல்ல வழிகளைப் பின்பற்றுகிறது. இந்தத் தருணம் தான் பள்ளிகளில் தன்னாட்சி முறையைச் செயல்படுத்த சரியான நேரம். காரணம்: தன்னாட்சி பெறும் பள்ளிகள் மிகவும் கடுமையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம், தரம் நிர்ணயிக்கப்படுகிறது; நிச்சயிக்கப்படுகிறது.
தாங்கள் கூறியுள்ளது போல், 'இது முதலில்' என்று எண்ணினால் இந்த 'முதல்' நிறைவு பெற எத்தனை ஆண்டுகள் என்று, ஒரு பேச்சிற்கு, குறிப்பிட்டாலும், அத்தனை ஆண்டுகள், மாணவர் நலன் காற்றில் பறக்க விடப்படுகிறது. இன்று ஏற்பட்டிருக்கும் தரப்பாதிப்பு போதும்; இதற்கு மேலும் தொடருவது, தொடர விடுவது, சமூகப் பொறுப்புணர்வு ஆகாது. ஆதலால் தான் நாம் பள்ளிகளில் தன்னாட்சி முறையை வலியுறுத்துகிறோம்.
தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள மற்றொரு செய்தி: தனியார் பள்ளிகளில் நல்ல 'ரிசல்ட்' கிடைக்கிறது. ஏராளமான பொருள் செலவில் இயங்கும் அரசு பள்ளிகளில் கிடைப்பதில்லை. தாங்கள் இதற்குக் காரணத்தையும் எடுத்துக் காட்டியுள்ளீர்கள். ஆசிரியர்களின் தகுதியை குறிப்பிட்ட கால அளவில் சோதித்துக் கொண்டிருக்க வேண்டும்; அரசு ஊழியர்களின், ஆசிரியர்களின் சங்கங்கள் கூடாது. அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளில் படிக்கவேண்டும். இவ்வளவும் அரசின் அதிகாரத் திற்குட்பட்டவை. விருப்பம் வேறு; சாத்தியம் வேறு. விருப்பம் சாத்தியமாவதற்கு ஒட்டுமொத்த சமூக மாற்றம் நிகழ வேண்டும். அது நம் இன்றைய குறிக்கோளிற்கு மிகவும் அப்பாற்பட்டது; சிக்கலானதும் கூட.
நாம் சொல்வதெல்லாம், நோயாளி, நோய் முழுமையாகத் தீர்ந்த பிறகுதான் வாழுவேன் என்று சொன்னால், அது எப்படி விவேகமாகாதோ, அதே போன்று தான் கல்வித்தரம் தருவதும். நோய் தீர மருந்து இன்று தேவை. அவசர தேவை. பின்னால் நோய் தடுப்பைப் பற்றி சிந்திக்கலாம்; சிந்தித்தாக வேண்டும். 'பள்ளிகளில் தன்னாட்சி' என்ற அவசர மருந்தைக் கொடுப்போம் இன்று; பின் 'நோயற்ற' கல்வித்தரம் அமையும் முறைகளைச்சிந்திப்போம்; சிந்தித்தே தீர வேண்டும்.
சுருக்கமாக கூறினால், 'பள்ளிகளில் தன்னாட்சி' என்ற சாலையை முதலில் போட்டு விட்டால், அதற்குப் பின் நீங்கள் கூறும் ஆசிரியர்கள் தரம், தகுதி, கட்டுப்பாடு ஆகிய வாகனங்கள் அந்த சாலையில் தானாக ஓட ஆரம்பித்து விடும். அவ்வளவுதான்.

-தொடரும்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement