Advertisement

இரவை மிரட்டும் வெளிச்சப் பிசாசுகள்!

குழந்தையாக இருக்கும்போது இரவில் அம்புலிமாமா, காமிக்ஸ் புத்தகங்களில் சித்திர கதைகள் படித்திருப்போம். நள்ளிரவு, கும்மிருட்டு, அங்கே ஒரு வெளிச்சப்புள்ளி தோன்றி, திடீரென பெரிதாக தொடங்குகிறது. உற்றுப்பார்த்தால் ஒரு பயங்கரமான பிசாசு தனது வாயில் கொள்ளிக்
கட்டையை வைத்துக்கொண்டு நம்மை நோக்கி வரும். பயத்தில் எல்லோரும் ஓட ஆரம்பிப்போம். அடுத்து 'தொடரும்' எனப்போட்டு திகில் கிளப்புவர். புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அம்மாவின் அருகில் வந்து படுத்துக்கொள்வோம். ஆனால் இப்போதைய குழந்தைகள் அப்படி இல்லை. பல வீடியோ கேம்களை டவுண்லோடு செய்து துப்பாக்கி ஆப்சனை பயன்படுத்தி பேய்களையும், எதிரிகளையும் ஓட ஓட விரட்டு கின்றனர். ஆண்ட்ராய்டு போன் நம்மையும், நமது வாழ்க்கை முறையையும் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. இரவில் விளக்கை அணைத்து போர்வைக்கு உள்ளே, வெளியே, தலை அருகே என பல வித வெளிச்சப்புள்ளிகள் நம்மை மிரட்டுகின்றன. பேசுவதற்கு கூட அலுப்புத்தட்டி போனில் ஸ்மைலி, மெசேஜ் அனுப்பும்
நாகரிக வளர்ச்சியால், தொழில் நுட்பம் என்ன முன்னேற்றத்தை பெற்றாலும், துாக்கம், சந்தோஷம், குடும்ப ஒற்றுமை, அன்னியோன்யம், தாம்பத்யம் என பலவற்றை நாம் இன்று இழந்துவிட்டோம்.

துாங்கா மனிதர்கள் அதிகரிப்பு : 'செயற்கை வெளிச்சம்' எனும் மாயையில் நாம் சிக்கியுள்ளதாகவும், இந்த வெளிச்சப் பிசாசினால் உலகளவில் நமது துாங்கும் நேரம், சமூக மனோபாவம் மாறி வருகிறது என்றும் அதிர்ச்சிகரமான ஒரு தகவலை பிரிட்டனின் நரம்பு வல்லுனர்கள் குழுமம் தெரிவித்து உள்ளது. செயற்கை ஒளிதரும், ஒளிரும் தன்மையுள்ள எல்.சி.டி., எல்.இ.டி., பிளாஸ்மா, அலைபேசி, டெக்ஸ்டாப், லேப்டாப், 'டிவி' போன்றவற்றால் உலகளவில் துாங்கா மனிதர்கள் அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர்களும் எச்சரிக்கை விடுக்கின்றனர். இவற்றின் ஒளியால் மெலட்டோனின் எனும் ஹார்மோன் சுரப்பு குறைந்து, இயற்கையான துாக்கம் கெடுகிறது என்று 10 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் முடிவை நார்வே விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். உலகெங்கும் டீன் ஏஜில் உள்ளவர்களில் 2 பேருக்கு ஒருவர் இரவு உறங்கப்போகும்போது அலைபேசி அல்லது லேப்டாப்பை குறைந்தது அரைமணி நேரம் பயன்படுத்துகின்றனர். இதனால் மெலட்டோனின் மட்டுமின்றி டெஸ்டோஸ்ஸ்டீரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டுக்கு ஆளாகி, துாக்கத்துடன் சேர்த்து தங்கள் இளமையையும் இழக்கின்றனர்.

நீங்கள் எப்படி : தினமும் 7 அல்லது 8 மணி நேரம் நிம்மதியாக துாங்குகிறீர்களா?
நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்! 10 மணி நேரம் துாங்கியும் புத் துணர்ச்சி இல்லையா? அல்லது வெறும் 4 மணி நேரம் துாங்கினாலும் சுறுசுறுப்பாக இருக்கிறீர்களா? எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் இரவில் விரைவாக துாங்கப்போய், வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் துாங்குபவர்களுக்கு இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் வரும் வாய்ப்பும் குறைகிறது. ஒருநாள் முழுவதும் எந்த ஏற்றத்தாழ்வுமின்றி தங்களது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் களுக்கு இரவில் நிம்மதியான துாக்கம் உண்டாகிறது. மேலும் இரவில் அமைதியாக துாங்கி காலையில் எழுந்திருப்பவர்களுக்கு, வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு குறைவாகவே காணப்படும். அதுமட்டுமின்றி மதிய உணவுக்கு பின்சற்றுநேரம், அதாவது 30 நிமிடங்கள்மட்டும், அமர்ந்த நிலையிலோ
அல்லது மல்லாந்து சாய்ந்தநிலையில் துாங்கி ஓய்வு எடுப்பவர்களுக்கு இன்சுலின் சுரப்பு சற்று
அதிகரிக்கிறது.கடும் வேதனையுடன் சிகிச்சை பெற வரும் நோயாளிகள்கூட 10 நிமிடத்திற்கு ஒருமுறை அலை பேசியை பார்ப்பது என்ற இரட்டை மனநிலையிலேயே மருத்துவரிடம் உரையாடுகின்றனர். மிகவும் மோசமான உடல்நிலையுடன் உறவினர்களை கூட்டிவரும் இளவயதினரும் நோயாளியும், மருத்துவர்களும் என்ன பேசுகின்றனர் என்பதில் ஆர்வம் காட்டாமல் எதிரில் அமர்ந்து அலைபேசியை நோண்டி கொண்டிருக்கின்றனர். இதனால் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை நோயாளியும், உடன் இருப்பவர்களும் புரிந்துக்கொள்ள முடியாமலேயே போய்விடுகிறது.

இரவில் வேண்டாமே : சில நாட்களுக்கு முன் மருத்துவமனைக்கு வந்த ஒரு இளம்பெண் என்னிடம், 'குழந்தைகளை கவனிக்க கூட என்னால் முடியவில்லை. எனது குழந்தையை துாங்க வைத்துவிட்டு, அலைபேசியை எப்போது நோண்டலாம் என்றே தோன்றுகிறது.
நான் அலைபேசியை பார்த்தால், எனது குழந்தையும் துாங்காமல் என்னை நோண்டுகிறாள். அலைபேசியை பிடுங்குகிறாள். இதில் இருந்து எப்படி மீள்வது, மன நோயாளியாகி விடுவேனோ என்ற பயம் உள்ளது' என்றார் பரிதாபமாக.இது ஒரு வினோத அடிமைத்தனம் என்பதை புரியவைத்து, 'இரவில் படுக்கையறையில் அலைபேசி வேண்டாம்' என்று ஆலோசனை கூறினேன். தற்சமயம் பகலில் மட்டுமே ஆண்ட்ராய்டு அலைபேசியை பயன்படுத்துவதாகவும், தானும் குழந்தையும் சீக்கிரமே துாங்கி விடுவதாகவும், ஒரு மாதமாக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.ஆண்ட்ராய்டு மற்றும் லேப்டாப் என்ற வெளிச்சப் பிசாசுகளால் துாக்கம் கெட்டு நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா? கவனச்சிதைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் பருமன், மனஅழுத்தம், இதய பலகீனம் ஆகியன. உட்கொண்டதுமே துாக்கத்தை ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்தினால்கூட, இரவு படுப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன் அலைபேசி, லேப்டாப் மற்றும் 'டிவி'யை பயன்படுத்தினால், துாக்கம் வராமல் தவிப்பை ஏற்
படுத்தும். ஆகையால் துாக்க மாத்திரை டோஸ் இரண்டு மடங்காகும் வாய்ப்பும் உண்டாகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாற்று வழிகள் உண்டு : இரவில் பவுர்ணமி நிலவைப்போல், ஒளிரும் லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போன் திரைகள் நமது மூளையை சுறுசுறுப்பாக்கி துாக்கம் வருவதை தடுக்கிறது. அதுமட்டுமின்றி, குனிந்து கொண்டோ அல்லது சாய்ந்து உட்கார்ந்து கொண்டோ இவற்றை பயன்
படுத்துவதால் விரைவில் கழுத்துவலி, முதுகுவலி உண்டாகிறது. பெரும்பாலானோர் இயர் போன் மற்றும் புளூடூத் பயன்படுத்தி வெர்டிகோ என்னும் 'பொசிஷனல் தலைச்சுற்றுக்கு' ஆளாகின்றனர். கண்களில் வறட்சி ஏற்படுகிறது. 'கார்பல் டன்னல் சின்ரோம்' என்ற மணிக்கட்டு பாதிப்பும் உண்டாகிறது.அலுவலக பணி மட்டுமின்றி, குடும்ப உறவுகளும் தற்சமயம் வாட்ஸ் ஆப், பேஸ்புக் என தொடர்புகளில் இருப்பதால் ஆண்ட்ராய்டு அலைபேசி பயன்
படுத்துவது தவிர்க்க இயலாததாகிவிட்டது. ஆரோக்கியமான வாழ்வும், ஆழ்ந்த துாக்கமும் வேண்டும் என்பவர்கள் ஆண்ட்ராய்டு போன்களின் உபயோகத்தை இரவில் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மாற்று வழிகளை பின்பற்றலாம்.இமெயில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் பார்க்க வேண்டும் போல் கட்டாயமோ, ஆசையோ ஏற்பட்டால் படுக்கை அறையைவிட்டு எழுந்து போய், ஹால் அல்லது அடுப்படியில் வைத்து பார்த்துவிட்டு வேலை முடிந்ததும், மூடி அணைத்து பையில் வைத்துவிட வேண்டும். ஹாலை தவிர பிற இடங்களில் கம்ப்யூட்டரை பயன்படுத்துவது, அலைபேசியில் அலாரம் செட் செய்வதை தவிர்க்கலாம். இதற்கு பதிலாக அலாரம் உள்ள மலிவான கடிகாரத்தை படுக்கை அறையில் பயன்படுத்தலாம். ஏனெனில் அலாரம் என்ற போர்வை போர்த்தி அலைபேசி உங்கள் படுக்கையறை வரை வந்துவிடும். படுக்கும்போது அலைபேசி அல்லது லேப்டாப் பயன்படுத்துவதால் பின் கழுத்துவலி, முதுகுவலி தோன்றி இடுப்பு வரை பெல்ட் போட வேண்டிவரும். குழந்தைகள் எப்படி நிம்மதியாக துாங்குகிறார்களோ அதுபோல் மனதை அமைதியாக வைத்து விட்டு துாங்க போகலாம். இனியாவது இரவின் மடியில்
குழந்தையாய் உறங்க ஆரம்பிப்போம்.'ஒருநாள் முழுவதும் வாட்ஸ் ஆப், பேஸ்புக் பார்க்காமல் இருந்தால், ஏதோ இழந்தது போன்று தவிப்பாக உள்ளது. எதிர்மறை எண்ணங்கள்
மனதில் தோன்றுகிறது. நான் புறக்கணிக்கப்படுகிறேனோ என்ற தாழ்வு மனப்பான்மையையும்
உண்டாகிறது. யாருக்காவது அட்வைஸ் செய்து கொண்டிருக்க வேண்டும் போலவே தோன்றுகிறது. நிம்மதியாக துாங்க செல்ல முடியவில்லை. படிப்பும் கெடுகிறது' எனக்கூறுபவர்கள் அதிகரித்துகொண்டே இருக்கிறார்கள்.

உறவு மேம்பட... : சொந்த தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தலாம். உறவினர்கள், நண்பர்களை நேரிலோ, அவர்களின் வீட்டு தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பேசலாம். இரவில் குழந்தைக்கு கதை சொல்லியோ அல்லது கதை கேட்டோ பொழுது போக்கலாம். பத்திரிகைகள், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம். புத்தாண்டு, பொங்கல் ஆகியவற்றிற்கு தபால் மூலம் வாழ்த்து தகவல் பரிமாற்றத்தை ஆரம்பித்து வைப்போம். இதனால் உறவு மேம்படும்.சமீபத்தில் இறந்த ஒரு நண்பரின் வீட்டிற்கு 10 நாட்கள் கழித்து துக்கம் விசாரிக்க சென்றேன்.முகவாட்டத்துடன் சோகம் கலந்த தொனியுடன் என்னிடம் பேசிய அவரது மனைவி, '24 மணி நேரமும் போன், வாட்ஸ்ஆப், பேஸ்புக் என யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பார். அவரது பேஸ்புக்கில் 1000க்கும் மேற்பட்டோர் இருப்பதாக பெருமைப்பட்டு கொள்வார்' என்றார். பின் சற்று தயங்கியபடியே 'ஆனால், அவர் இறந்தன்று நண்பர்கள் வெறும் 10 பேர் மட்டுமே வந்தார்கள். அதுதான் மிகவும் வருத்தமாக இருந்தது'
என்றார். அர்த்தம் பொதிந்த பார்வையுடன் என்னை பார்க்க மனசு வலித்தது!

- டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ்
சித்த மருத்துவர், மதுரை
98421 67567

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Murugan - Bandar Seri Begawan,புருனே

    அவரது பேஸ்புக்கில் 1000க்கும் மேற்பட்டோர் இருப்பதாக பெருமைப்பட்டு கொள்வார்' என்றார். பின் சற்று தயங்கியபடியே 'ஆனால், அவர் இறந்தன்று நண்பர்கள் வெறும் 10 பேர் மட்டுமே வந்தார்கள். அதுதான் மிகவும் வருத்தமாக இருந்தது' என்றார். அர்த்தம் பொதிந்த பார்வையுடன் என்னை பார்க்க மனசு வலித்தது - வலிமையான (வலியான) வார்த்தை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement