Advertisement

இவர்களை தட்டிக் கேட்க ஜெ., இல்லை!

ஜெயலலிதா மறைவுக்கு பின், 11 மாதங்களாக தமிழகத்தில் நடந்து வரும் கோமாளி கூத்துகளை, இந்தியா மட்டுமின்றி, உலகமே பார்த்து கொண்டிருக்கிறது.கடந்த, 2016, செப்., 22ல், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல், சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அவர்களின் உறவினர்கள் தினகரன், திவாகரன் போன்றோர், உற்சாகம் அடைய துவங்கி விட்டனர்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை தினகரன், திவாகரன் போன்றோர் எங்கே இருந்தனர்; எப்படி இருந்தனர் என்ற விபரம் அறிந்தவர் யாருமில்லை.காட்டில் சிங்கம் ஒன்று, 'நானே ராஜா; நானே மந்திரி. நான் வைத்தது தான் சட்டம். நான் தான் இந்த வனத்தை, நுாறு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வேன். எனக்கு கட்டுப்பட்டு இருப்போர், இங்கே இருக்கலாம். இல்லையேல், வெளியேறலாம்' என, மற்ற விலங்குகளை அடக்கி, ஆண்டு கொண்டிருந்தது.

'சிங்கமாயிற்றே... அதன் சொல்லுக்கு கட்டுப்படுவதை தவிர வேறு வழியில்லை. இந்த வனத்தை விட்டு, வேறு எங்கே போக முடியும்... சகல வசதிகளும், இந்த வனத்தில் தானே உள்ளன' என எண்ணி, சிங்கத்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, கை கட்டி, வாய் பொத்தி இருந்தன, மற்ற விலங்குகள்.

ஒரு நாள், சிங்கம் திடீரென உடல் நலம் குன்றி, இறந்து விட்டது. அதுவரை அடக்கமாக இருந்த மற்ற விலங்குகள், 'நான், நீ' என, போட்டி போட்டு, காட்டுக்கு தலைவனாக மாற ஆசைப்பட்டன. இதனால், அந்த விலங்குகளுக்குள் சண்டை மூண்டது.ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டதால், அந்த காடே, ரணகளமாயிற்று!

இப்படியொரு தருணத்தை எதிர்பார்த்து, காத்திருந்த சிங்கத்தின் எதிரியான யானை, சண்டை போட்டுக் கொண்டிருந்த மற்ற விலங்குகளை துரத்தி விட்டு, சிங்கத்தின் இடத்தை பிடித்து, காட்டுக்கு ராஜாவாக உட்கார்ந்து விட்டது.ஒற்றுமையின்மையால், சிம்மாசனத்தை, யானை பிடிக்கும் நிலை உருவாகி விட்டது.இந்த காட்டு அரசியல் தான், இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

காட்டு தர்பார் நடைபெறுவதற்கு முக்கிய காரணம், ஜெயலலிதா தான்.தனக்கு பின் கட்சியை வழிநடத்தக் கூடியவர், 'இன்னார் தான்' என, அவர் அறிவிக்காமல் இருந்ததே, இந்த நிலைமைக்கு காரணம். தனக்கு அடுத்து, கட்சிப் பொறுப்பை வசிக்கக் கூடியவர், இவர் தான் என, யாரையும் அவர் அடையாளம் காட்டவில்லை.

கட்சியின் பொதுக்கூட்ட மேடை, கட்சி மாநாடு அல்லது பொதுக் குழுவில் யாரையும் அவர் முன்னிலைப்படுத்தவில்லை; யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.காரணம், 'நானே கட்சியின் நிரந்தர பொதுச்செயலர்; நானே தமிழகத்தின் நிரந்தர முதல்வர்' என்ற, தவறான சிந்தனையில் இருந்ததால், ஏற்பட்ட விளைவு தான் இது!அது போல, அவரை அண்டியிருந்தவர்கள் சுருட்டியதையும், அறியாமல் இருந்து விட்டார். அவர்கள் தனக்கு எதிராக, எந்த நேரத்திலும் மாறுவர் என்பதும் புரியாமல் இருந்து விட்டார்.

அவருக்கு ஆலோசனை சொல்ல, அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் யாருக்கும் தைரியமில்லை. பத்திரிகையாளர், சோ ஒருவரின் ஆலோசனைகளை அவர் அவ்வப்போது கேட்பதாக சொல்வதுண்டு. ஆனால், அவரும் இதைப்பற்றி, ஜெ.,யிடம் பேசினாரா என, தெரியவில்லை. எம்.ஜி.ஆர்., உருவாக்கி, ஜெயலலிதாவால் பலம் வாய்ந்த கட்சியாக வளர்க்கப்பட்ட, அ.தி.மு.க., இன்று ஒரு திறந்த மடம் போல ஆகிவிட்டது. யார் யாரோ, என்னன்னவோ பேசுகின்றனர்; செய்கின்றனர். தட்டிக் கேட்க, ஜெ., இல்லை!

அவர் இருக்கும் வரை, இந்த வீர, சூர, தைரிய புருஷர்களான, தினகரன், திவாகரன் போன்றோரை, தமிழக மக்களுக்கு யார் என்றே தெரியாது. ஜெயலலிதாவால் துரத்தியடிக்கப்பட்டிருந்தனர் என்பது, அவரின் மறைவுக்கு பின்னே, பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.ஆனால் இப்போது, இந்த வீரப்புலிகள், 'நாங்கள் தான், ஜெயலலிதாவை இத்தனை ஆண்டுகளாக காப்பாற்றி வந்தோம். அவருக்கு அரசியல் சொல்லி கொடுத்ததே சசிகலா தான். அவர் மட்டும் இல்லையென்றால், ஜெயலலிதாவால், ஜொலித்திருக்க முடியாது' என, வாய் கூசாமல் பேசுகின்றனர்.

காமராஜருக்கு பின், தமிழகத்தில், காங்கிரஸ் எப்படி சிதறுண்டு போனதோ, அதே நிலைமை இப்போது, அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.தன்னைத்தானே பொதுச்செயலராக அறிவித்துக் கொண்ட, சசிகலா சிறையில் உள்ளார். அவரால் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்ட தினகரன், திஹார் சிறையிலிருந்து ஜாமினில் வந்துள்ளார். எந்த நேரத்திலும், மீண்டும் அங்கு செல்வார் என்ற நிலை தான் தென்படுகிறது.

ஏனெனில், அவர் மீது பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஆனால், தினகரனோ, எதை பற்றியும் கவலைப்படாமல், தனக்கென சில ஆதரவாளர்களை சேர்த்து, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, சிரித்த படி படமெடுத்து ஆடுகிறார். 'ஆட்சியை கவிழ்ப்பேன்' என, மிரட்டுகிறார். 'அ.தி.மு.க.,வை கைப்பற்றுவேன்; முதல்வராவேன்' என, சூளுரைக்கும் தினகரன், தன் உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறை, 'ரெய்டு' நடத்தியதும், பேசிய பேச்சு இருக்கிறதே... பொன் எழுத்துக்களால், பொறிக்கப்பட வேண்டியவை; வருங்கால அரசியல்வாதிகள் கட்டாயம் மனதில் இருத்த வேண்டியவை!

'நாங்கள் யாருக்கும், எதற்கும் பயப்படாதவர்கள். எங்கள் குடும்பத்தில், 1 வயது பிஞ்சு முதல், 85 வயதான எங்கள் அப்பா வரை, நாங்கள் யாருக்கும், எதற்கும் பயப்படாதவர்கள்' என்றார்.
அவரின் கூற்றுப்படி, 'ஊரை அடித்து உலையில் போடுவோம்; எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயார்' என்பதாகத் தான் உள்ளது.ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என,
தன்னைத் தானே கூறிக் கொள்பவரின் பேச்சு, இப்படியா இருக்கும்?

'சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு, நியாயமாகவும், நேர்மையாகவும், நாட்டின் இறையாண்மைக்கு
பங்கம் விளைவிக்காமலும், பாரபட்சமின்றியும் பணியாற்றுவேன்' என, உறுதிமொழி எடுக்கும் அரசியல் தலைவர்கள், அதை வெறும் வார்த்தையாக தான் வைத்துள்ளனர்; பின்பற்றுவதில்லை.நாட்டையும், அரசியலையும் துாய்மைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என, இளைய தலைமுறையினர் துடிப்புடன் இருக்கும் போது, தினகரன் போன்ற அரசியல்வாதிகளால், அரசியல், அப்பாவிகளால் வியாதியாக பார்க்கப்படுகிறது.இந்நிலை மாற வேண்டும்! காமராஜர், தீரர் சத்திய மூர்த்தி, ராஜாஜி, கக்கன், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்ற தலைவர்களை சுற்றியிருந்த தமிழக அரசியல், இப்போது, இந்த சூரர்களையும், அவர்களின் அடி வருடிகளையும் நோக்கி திரும்பியுள்ளது, வேதனை அளிக்கிறது.

வாக்காளர்களுக்கு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும், சுத்தமான அரசியலை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. தமிழக அரசியலில், நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக பலர், இன்னமும் நேர்மையாக, கை சுத்தத்துடன் உள்ளனர்.அவர்களை பார்த்தாவது, அரசியல் என்ற பெயரில், சொத்து குவிக்கும் கும்பல் திருந்த வேண்டும்.

நாம் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும், நமக்குப் பயனைத் தருகிறதா, அதிகாரத்தைப் பிடிப்போருக்கு பலனைத் தருகிறதா என, ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். கிரிமினல்களையும், கோடீஸ்வரர்களையும் உருவாக்க நம் ஓட்டுகள் பயன்படக் கூடாது. ஓட்டுக்காக, அவர்கள் கொடுக்கும் சொற்ப பணம், இலவசங்களுக்கு சிலர் ஆசைப்படுவதால், நம்மை பிச்சைக்காரர்களாக ஆக்கி விட்டு, அவர்கள் கோடீஸ்வரர்களாகின்றனர் என்பதை உணர வேண்டும்.தமிழகத்தை போல, இலவசங்களுக்கு மக்கள் கையேந்தி நிற்கும் நிலை, உலகத்தில் எந்த நாட்டிலும் கிடையாது!அது போல, தமிழகத்தைப் போல வளமான மாநிலமும், இந்தியாவில் இல்லை. நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள், இவ்வளங்களை சுரண்டி எடுத்து, அவர்கள் வளமாகி விட்டனர்.

தமிழகம் வளர்ந்ததா, ஆட்சி புரிந்தோர் வளர்ந்தனரா என, நியாய தராசுத்தட்டில் நிறுத்தி பாருங்கள்; யார் வளர்ந்தனர் என்பது, துல்லியமாக தெரியும்.ஓட்டளித்த வாக்காளர்கள், இன்னமும், ஓட்டு வீட்டில் வசிக்கையில், சமீபத்தில், 187 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில், ஜெயலலிதாவை அண்டி பிழைத்த கும்பல், எந்த அளவுக்கு வளர்ந்துள்ளனர் என்பதை, அவர்களின் பங்களா வீடுகள், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துகள், நகைகள் மூலம் அறிந்தோமே!இவர்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து, முதல்வர் பதவியில் அமர்ந்து, மக்கள் தொண்டாற்ற போகின்றனராம்!என்னவொரு சோதனை, தமிழக மக்களுக்கு!

இத்தகையோருக்கு தமிழக அரசியலில் இடம் அளிக்காதவாறு, தமிழக மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.நமக்கு இப்போதைய தேவை, புதிய தலைமை; நேர்மையான ஆட்சியாளர்கள்; தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள சாதாரண தலைவன்.லஞ்சம், ஊழல், முறைகேடான சொத்து குவிப்பால் வீழ்ச்சி அடைந்துள்ள தமிழகத்தின் மதிப்பு, இனியும் வீழ, நாம் காரணமாக இருக்க மாட்டோம் என, உறுதி எடுப்போம்!

- வ.ப.நாராயணன் --

சமூக ஆர்வலர்

இ-மெயில்:

vbnarayanan60gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  ஊழல் மற்றும் சொத்து குவிப்பு அதிகார மையம் போன்றவை நம் நாட்டில் அரசியல்வாதிகளுக்கு ஒரு சாதாரண விஷயமாகி விட்டது. டெல்லியில் சோனியா விலிருந்து ஆரம்பித்து, லாலு, பவார், கருணா, நாயுடு என நீண்டுகொண்டே போகிறது இந்த ஊழல் அரசியல்வாதிகளின் பட்டியல். இதற்க்கு அதிமுகவும் விதிவிலக்கல்ல. ஆகவே, எதோ அதிமுக ஒரே கட்சிதான் மிக பெரிய தவறிழைத்து போல் பேசுவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு சமம்.ஆனால், இந்திய அரசியல் இவ்வளவு தரம் தாழ்ந்து குட்டிசுவராக போனதற்கு மூலகர்த்தாக்களான இந்திரா மற்றும் கருணா போன்றவர்களை இந்த தேசம் மன்னிக்க கூடாது. ஏனெனில் இவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த சூது விளையாட்டை மற்றவர்களும் ஆடவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகள் இவர்கள் போல் ஊழலில் ஈடுபடவில்லை என்றால் அரசியலில் நிற்க முடியாத சூழ்நிலயை இந்த கயவர்கள் உருவாக்கி இருப்பதனால், வேறு வழியின்றி எல்லோரும் இந்த தவறை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் நாடு கெட்டு குட்டி சுவராவதோடு இல்லாமல், இந்த பிரச்சனை ஒரு தீரா நோய் என்ற கட்டத்தை எட்டிவிட்டது. இனிமேல் எந்த ஒரு நாணயஸ்தனும் அரசியலில் வந்து மக்களுக்கு உண்மையான சேவை செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதுதான் கருணாவின் குடும்பமும் இந்திராவின் குடும்பமும் இந்தியாவுக்கு செய்துள்ள மிகப்பெரிய துரோகம் இந்த சூழலிலிருந்து நாட்டை மீட்டெடுக்க மோடி சிலபல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் 15 - 20 வருடங்கள் ஆட்சியில் இருந்தால் முழுவதுமாக சீர்செய்ய முடியும். இடையில் அவருக்கு மக்கள் ஆதரவு குறைந்து தடை ஏற்பட்டு வேறு கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில், இந்த நோய் நம் நாட்டின் தலைவிதி ஆகிவிடும். பிறகு விடிவே கிடைக்காமல் போய்விடும். மோடியும் எந்த சஞ்சலங்களும் இல்லாமல், இதே போல் நல்லாட்சி செய்வாரானால், என் கணிப்பின் படி 2025 கு பிறகு நாட்டில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படும். நல்லது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்

 • Paranthaman - kadappa,இந்தியா

  அவர் பெயரில் யாரோ சேர்த்த சொத்தை அவரா எடுத்துக்கொண்டு போனார். அவரது சொந்தங்களுக்கு விட்டுப்போனாரா. இரண்டும் இல்லை. அவர் குற்றவாளி இல்லை. மோசடிகள் அவரை நம்பவைத்து குற்றவாளி ஆக்கிவிட்டனர்.

 • spr - chennai,இந்தியா

  "நமக்கு இப்போதைய தேவை, புதிய தலைமை நேர்மையான ஆட்சியாளர்கள் தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள சாதாரண தலைவன்" இப்படிப்பட்ட ஒருவரை இந்த காலத்தில் காண முடியாது காண்போம் என்றால் அது கனவு. அரசியலிலும் வியாபாரத்திலும் புகுந்தவர் யோக்கியமாக இருப்பது இயலாத காரணம் எனவே இருப்பதில் யோக்கியமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர் தவறு செய்தால் தூக்கியடிக்க நாம் தயாரானால் மட்டுமே தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் ஓரளவு நேர்மையான ஆட்சி நடக்கும் நேரு முதல் நேற்றைய ஜெயலலிதா வரை இந்த அளவுகோலில்தான் நாம் தலைவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் ஒவ்வொரு தலைவனும் ஏதோ ஒருவகையில் அயோக்கியன்தான். அவர்களை நாம் அடையாளம் கண்டுபிடிக்கும்வரை அவர்கள் நல்லவர்களே கம்சன் நரகாசுரன் துரியோதனன் போன்றோரின் உறவுகளுக்கு, அவர்களால் பலன் அடைந்தவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் கூட நேர்மையில்லாதவரே

 • M.Vadivelu - Mangaf,குவைத்

  இந்த கொள்ளை கூட்ட தலைவி ஜெயா கிரிமினல் எண் 1.கட்டுரையாளர் வசதியாக எதை மறைக்க முயற்சி செய்கிறார் .

 • Paranthaman - kadappa,இந்தியா

  சசிகலாவின் மகுடியில் 33 ஆண்டுகளாக ஜெயா லலிதா மயங்கி இருந்துள்ளார். அவரை எதுவும் கேட்க முடியாமல் செய்துள்ளனர். மேலும் அவரது திருமணமற்ற தனிப்பட்ட வாழ்க்கையும் எம்.ஜி.ஆர் அளித்த அரசியல் செல்வாக்கும் அவரிடமிருந்த மாபியா கூட்டத்தினருக்கு மிகவும் வசதியாக பொய் விட்டது.

 • Paranthaman - kadappa,இந்தியா

  தன்னுடன் பல காலமாக நெருங்கி இருந்த அநியாயக்காரர்களை பொறுக்க முடியாத கட்டத்தில் ஜெயா தட்டிக்கேட்டதால் தான் அவரை இறந்து போக செய்தனர்.

 • ganesan - dindigul,இந்தியா

  நியாயமான தரமான ஒரு கருத்து ஆமோதிக்கிறேன்

 • Govind Raj - Malacca City,மலேஷியா

  வாங்க ஐயா நாராயணன் என்னமோ தினகரனும் திவாகரனும் சசிகலாவும் தான் இத்தனைக்கும் காரணம் மத்த எல்லாரும் உத்தமங்க போல உள்ளது உங்கள் பதிவு இதுக்கெல்லாம் மூலம் யாரு? ஆணிவேர் எங்க இருக்கு இந்த தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது அதையும் சொல்லுங்க சும்மா திருடிட்டான் சொத்து சேர்த்துட்டான் சொன்னா எப்படி இத்தனைக்கும் காரணம் ஜெயலலிதா என்னும் நீங்கள் கூறும் சிங்கம் தானே இப்ப சிங்கம் இல்ல செய்த தவறும் அதன் விளைவும் நானும் நீங்களும் இப்ப படுற அவதிக்கு காரணம் சிங்கத்தை அதன் பேரை காப்பாத்த என்ன ஒரு பதிவு அப்படியே அந்த நல்ல தலைவர் யாருன்னும் கொஞ்சம் சொல்லுங்க

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  தட்டி கேட்க வேண்டிய நேரத்தில் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement