Advertisement

குழந்தைகளே குதூகலம்!

இயற்கை தந்த அற்புதம் மனிதன். மானுடத்தின் மகத்துவம் குழந்தை. மானுடத்தின் இறைமையும் குழந்தைதான். ஆதலால் தான் இறைவனின் திருநாமங்கள் எல்லாம் குழந்தைகளின் பெயர்களாயின. குழந்தைகளிடம் நாம் செலுத்தும் அன்பு இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு. குழந்தைகளோடு குதுாகலிப்பதும் அவர்களை குதுாகலப்படுத்துவதும் ஒவ்வொரு பெற்றோருக்கும் அழகும் இலக்கணமும் என்பதோடு அவர்களின் இலக்குமேயாகும். குழந்தையினை பேணி வளர்க்கும் பெற்றோர்கள் இம்மண்ணில் மிகச்சிறந்த பாக்கியசாலிகள்.
“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;” என்ற புறநானுாற்று வரிகளாலும் “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்ற வரிகளாலும், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் திறமையை வளர்த்து ஆன்றோர் நிறைந்த சபைதனில் சான்றோனாய் முன்னிறுத்த வேண்டுமென்று
பொன்முடியாரும் திருவள்ளுவரும் வலியுறுத்துகின்றனர்.குழந்தை அழுதால் அழகு;
சிரித்தால் மகிழ்ச்சி; அடித்தால் ஆனந்தம்; அணைத்துக்கொண்டால் பேரானந்தம். மொத்தத்தில்
குழந்தைகளோடு இருப்பது குதுாகலம். மகிழ்ச்சியைத் தேடி பல்வேறு அரங்குகளில் அலைபவர்கள் தங்களின் குழந்தைகளின் மழலை மொழிகளை கேட்க மறந்தவர்கள் எனச் சாடவும் துணிபவர் நம் வள்ளுவப் பெருந்தகை. உலகின் சிறப்பு வாய்ந்த முக்கிய தினங்களில் முதன்மையான தினம் குழந்தைகள் தினம். நவ.,14ல் நேருவின் பிறந்தநாளில் கொண்டாடி மகிழ்கிறோம். உலகம் முழுவதும் நவம்பர் 20ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடி மகிழ்கின்றனர். குழந்தைகள் தினம் என்பது குழந்தைகள் கொண்டாடும் தினம் மட்டும் அல்ல. நாமெல்லாம்
குழந்தைகளோடு குழந்தைகளாகி குதுாகலிக்க வேண்டிய அற்புத தினம். அரும் பெரும் சக்திகளோடு பிறந்த ஒவ்வொரு குழந்தைகளின் திறன்களை வளர்த்தெடுக்கும் தினம். குழந்தைகளோடு பேசி, விளையாடி பொழுதினை அவர்களோடு பயனுள்ளதாகக் கழிக்கின்ற பெற்றோர்கள் அக்குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் தீபங்கள். குழந்தைகள் சொல்வதைக் கேட்கும்
பொறுமை கொண்ட பெற்றோர்

இவ்வுலகின் பேரறிஞர்கள். : கேள்விகளைக் கேட்கத் துாண்டிய பெற்றோர்களால் தான் ஐசக் ராபி போன்ற நோபல் பரிசு விஞ்ஞானிகளை உருவாக்க முடிந்தது.அறிவும் ஆற்றலும் கோல்கட்டா மாநகரில் பிறந்த நரேந்திரன் என்னும் சிறுவன் வளர்ந்து வருகின்றபொழுது தன்னைச் சுற்றி
யுள்ளவர்களெல்லாம் வசதியாக இருப்பதைப் பார்க்கிறான். தனது தந்தையிடம் எனக்காக என்ன சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்கிறான்.அவனது தந்தை விஸ்வநாதர் அச்
சிறுவனை கண்ணாடிக்கு முன்னால் நிறுத்தி, திடகாத்திரமாக நின்றிருந்த நரேந்திரனைப் பார்த்து அறிவும் ஆற்றலும் மிக்க நீதான் நான் உனக்காக சேர்த்து வைத்த சொத்து என்றார். வாழ்வின் மிகப்பெரிய அளப்பரிய சொத்து தனது அறிவும் ஆற்றலும் தான் என அறிந்ததனால்தான் நரேந்திரன் இன்று உலகம் போற்றும் சுவாமி விவேகானந்தரானார்.மேலும் இதனையே “சக குடிமக்களே நீங்கள் ஏன் செல்வத்தைச் சேர்ப்பதற்காக எல்லா கற்களையும் புரட்டி தேய்த்துப் பார்த்துகடைசியில் அந்தச் செல்வத்தையெல்லாம் யாரிடம் விட்டுவிட்டு செல்லப் போகிறீர்களோ அந்தக் குழந்தைகளின் மேல் அக்கறை செலுத்தாமல் இருக்கிறீர்கள்?” என்றார் அறிஞர் சாக்ரடீஸ்.
ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும் நல்ல குணநலன்களையுமே கற்றுத் தரவேண்டும். இவையன்றி செல்வங்களை மட்டும் சேர்த்து வைத்தால் அது அவர்களைப் பொல்லாத பழிகளில் ஆழ்த்தி துன்பங்களையும் துயரங்களையும் தரும் என்கிறது அவ்வையாரின் நீதிநுால். கல்லாத பிள்ளைகள் பொல்லாத சள்ளைகள் என்பது பழமொழி.
நல்ல ஆரோக்கியமான உடலும் சிந்தனையும் கொண்ட குழந்தைகள்இந்திய தேசத்தின் சொத்துக்கள் மட்டுமல்ல வாழ்வின் கிடைப்பதற்கரிய முத்துக்கள்.

முதல் விஞ்ஞானிகள் : நமது மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பார்வையில்
குழந்தைகள் தான் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள்.குழந்தைகள் நமக்குத் தெரியாமலே நம்மிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்பவர்கள். நாம் அறியாமலே நமக்கு நிறையக் கற்றுக்கொடுப் பவர்கள். நாம் மிகுந்த மதிப்போடும் ஜாக்கிரதையோடும் அணுக வேண்டியவர்கள் என்கிறார் கலாம். குழந்தைகளின் மனம் பக்குவப்படுத்தப்பட்ட நிலம். அங்கே விதைக்கின்ற தானியங்கள் வளர்ந்த பல லட்சம் தானியங்களைத் தரும்.விமர்சனத்தோடு வளரும்குழந்தை குறை கூறக் கற்றுக் கொள்கிறது. பாராட்டுதலோடு வளரும் குழந்தை பாராட்ட கற்றுக் கொள்கிறது.
பகைமையோடு வளரும் குழந்தை சண்டையிடக் கற்றுக் கொள்கிறது.சகிப்புத் தன்மையோடு வளரும் குழந்தை பொறுமையைக் கற்றுக் கொள்கிறது.கிண்டலோடு வளரும் குழந்தை வெட்கப்பட கற்றுக் கொள்கிறது.ஊக்கத்தோடு வளரும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்றுக் கொள்கிறது.அவமானத்தோடு வளரும் குழந்தை குற்றவுணர்வினைக் கற்றுக் கொள்கிறது.
அங்கீகாரத்தோடு வளரும் குழந்தை விரும்பக் கற்றுக் கொள்கிறது.நேர்மையோடு வளரும் குழந்தை நீதியைக் கற்றுக் கொள்கிறது.பாதுகாப்போடு வளரும் குழந்தை நம்பிக்கை வைக்க
கற்றுக் கொள்கிறது. ஒப்புதலோடும் நட்போடும் வளரும் குழந்தை
உலகில் அன்பைக் கண்டுபிடிக்கக் கற்றுக் கொள்கிறது.

குழந்தைகளின் பண்பு : உண்மையில் குழந்தைகள் பள்ளியில் படித்துக் கற்றுக் கொள்வதைக் காட்டிலும் அன்றாடம் தம்மைச் சுற்றி நடப்பதை பார்த்து, அதை அப்படியே செய்து பார்த்துதான் நிறையப் பழகிக்கொள்கின்றன. எனவே குழந்தைகளின் பண்புகளை பக்குவப்படுத்துவது நடத்தைகளை மேம்படுத்துவது என்பது பெற்றோர் பக்குவப்பட்டுக்கொண்டு தங்களது
நடவடிக்கைகளை மேற்படுத்திக் கொள்ளும் நிகழ்வாகும்.உலகுக்கு உண்மையான
அமைதியைக் கற்பிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் குழந்தைகளிடமிருந்து அதைத் தொடங்க வேண்டும் என்றார் காந்தி. சிங்கப்பூர் நாடு துாய்மைக்கு எடுத்துக்காட்டான நகரம். இதற்கு காரணம் அந்நாட்டு பள்ளிக் குழந்தைகளிடமிருந்துதான் துாய்மையினை வளர்த்தெடுத்தார் 'சிங்கபூரின் சிற்பியான' லீ குவான் யூ.உலகில் கிடைக்கின்ற வளங்களில் சிறந்த வளம் மனித வளம். பாரத நாடு இவ்வுலகில் அத்தகைய ஆற்றல் மிக்க மனித வளங்களை அபரி
மிதமாக கொண்டுள்ளது.

சூழலை உருவாக்க வேண்டும் : நல்ல குழந்தைகளை ஒரு நாடு பெற்றால் அந்த நாடு வளம்பெறும் என்பதை பிரெஞ்சு தேசம் நல்ல தாய்மார்களை அடைய வேண்டும்; அப்பொழுது
தான் அது நல்ல மக்களைப் பெற்று நலம் பல பெறும் என்றார் மாவீரன் நெப்போலியன்.
ஒவ்வொரு குழந்தையும் இம்மண்ணில் பிறக்கின்றபோது ஏதாவது ஒன்றைச் சாதிப்பதற்காகத்தான் பிறக்கின்றது. அந்தச் சாதனையை உருவாக்குவதற்கும் ஊக்குவிப்பதற்குமான சூழலையும் தருவதும்தான் நம் கடன்.தற்போதைய உலகமய சூழலில் திரைப்படங்கள், 'டிவி' நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் எதிர்மறைச் சிந்தனைகள்
குழந்தைகள் மனதில் வேரூன்றாத வகையில் விழிப்புணர்வோடு பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து சமூகமும் செயல்படவேண்டும்.ஒவ்வொரு குழந்தையையும் நமது தேசத்தின் கலாசாரம், பண்பாடு மற்றும் தனித்துவத்தை பேணக்கூடியவர்களாக ஆக்குவதோடு, நமது தேசத்தை உலகத்திற்கு முன்னோடியாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஆற்றலும் அறிவும் கூடிய ஆரோக்கியமானவர்களை உருவாக்குவது வளர்ந்த வர்களின் கடமையும் பொறுப்பும்
என்பதை உணர்வோம்.ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து வருகின்றபோது தங்களை வளர்த்த பெற்றோருக்கு நன்றிக்கடனாகச் செய்ய வேண்டியதெல்லாம் இத்தகைய குழந்தை
களைப் பெற்றதற்கு அவரது பெற்றோர் எத்தகைய தவம் செய்தாரோ என்று உலகம் வியக்கும்படி வாழவேண்டும் என்பதை வள்ளுவர்.

'மகன் தந்தைக்கு ஆற்றும்
உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்'
என்ற குறள் மூலம் ஒவ்வொரு குழந்தைகளின் மனதில் பதியவைக்கிறார்.
ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகச் சூழல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள்கடமையினை உணர்ந்து குழந்தைகளைப் போற்றிப் பாதுகாத்து அற்புதமான வாழ்வியல் சூழலை உருவாக்கி தரும்போது ஒரு வளர்ந்த இந்தியாவில் நமது குழந்தைகளும் குதுாகலிப்பது திண்ணம்.
ஆர். திருநாவுக்கரசு

காவல் துணை ஆணையாளர்
நுண்ணறிவுப்பிரிவு
சென்னை
thirunavukkarasuipsgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    கோவில், சர்ச், மசூதி இருக்கும் இடங்களுக்கு பதிலாக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், வனங்கள் இருந்திருந்தால் சிறார்கள் ஒவ்வொரு நாளையும் கொண்டாடி கொண்டிருப்பார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement