Advertisement

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 18

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த கருத்துகளையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.


25.வீ.கே.வீரேஸ்வரன்
கால்நடை பராமரிப்பு துணை ஆணையர் (ஓய்வு), கூடுவாஞ்சேரி

பள்ளிகளில்கடைப்பிடிக்க வேண்டிய பாடத் திட்டம் பற்றிய சில கருத்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
1) மும்மொழித்திட்டம்: பள்ளிகளில் மும்மொழித் திட்டம் கடைப்பிடிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், இந்தி மூன்றும் வலுவாக கற்றுத் தரப்பட வேண்டும்.
2) ஆங்கிலவழிக் கல்வி: எந்த வழியில் கல்வி- ஆங்கில வழியா, தமிழ் வழியா- என்பதை அரசு நிர்ணயிக்கிறது. அதற்கு பதிலாக மாணவர்களின் பெற்றோர் நிர்ணயம் செய்ய வேண்டும். பெற்றோர்களின் விருப்பத்தை அறிந்து ஆங்கில/ தமிழ் வழிக் கல்வியை ஒவ்வொரு பள்ளியிலும் அளிக்க வேண்டும். அறிவியல் இருப்பது ஆங்கிலத்தில். மேலும் பள்ளி வரை தான் தமிழ்; கல்லூரிகளில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. எனவே ஆங்கில வழி கல்வியே அனைவருக்கும் வழங்க வேண்டும்.
3) பள்ளிகள் அனைத்திலும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மட்டுமே இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வுகள் நடத்தப் படுகின்றன. எனவே அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரி கல்வி பெற சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமே சிறந்தது.
4) பள்ளிகளில் நீச்சல் குளம் கட்டி, மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும்.
5) 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு, இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டும் பயிற்சி அளித்து, லைசென்சும் வாங்கித்தர வேண்டும்.
6) உடற்பயிற்சி, யோகா கல்வியை கட்டாயமாக்க வேண்டும்
7) ஆரோக்கிய கல்வி: ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதைக் கற்றுத் தர வேண்டும்.
8) விவசாயம், கால்நடை வளர்ப்பு கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் அளிக்க வேண்டும்.


தினமலர் விளக்கம்: கல்வித் திட்டம் எப்படி அமைய வேண்டும் என்று தாங்கள் சில கொள்கைகளை வரிசைப் படுத்தியிருப்பது போன்று, பலரும் தங்கள் கருத்துக்களைச் சொல்லி 'தினமலர்'க்கு கடிதம் எழுதியுள்ளனர். அரசு ஏற்பாடு செய்திருந்த 'கருத்து கேள்' கூட்டங்களிலும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த முறையிலேயே எண்ணற்ற பாடங்களைக் குறிப்பிட்டார்கள். உண்மையில், ஒன்று கூட பயனற்றது என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நல்ல சிந்தனையின் வெளிப்பாடாக, மாணவர் நலனில் அக்கறையை வெளிப்படுத்துவதாக இருந்தது. தாங்கள் எடுத்துக் கூறியுள்ள, மும்மொழித் திட்டம், அனைத்து பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், நீச்சல் பயிற்சி, இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டும் பயிற்சியுடன் உரிய 'லைசென்ஸ்' பெற்றுத் தருதல், ஏழை மாணவர்களுக்கும் ஆங்கில வழிக் கல்வி- இத்தனை கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. இந்தச் சூழலில், இன்றைய நிலையில், நாம் சொல்ல விரும்புவது இவை தான்.

ஒன்று: ஆசிரியர்களாலும் தங்களைப் போன்றவர்களாலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ள சிலவற்றையாவது, தரம் குறையாமல் மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளி நிர்வாகம், தரமான கல்வி தரவேண்டும் என்ற ஆசிரியர்களின் கடமையுணர்வு, தரத்திற்கு மதிப்பளிக்கும் பெற்றோர், எல்லாவற்றிற்கும் மேலாக கல்வித்துறை அதிகாரிகள்- இவ்வளவு பேரும் ஒரு சேர ஒருமித்து இயங்கினால் தான், நமது லட்சியத்தை, தரமான கல்வியை அடைய முடியும்.

இரண்டு: இன்று 'பள்ளிகளில் தன்னாட்சி' வழங்கப்பட வேண்டுமென்றால், மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை 'கட்டாயங்களும்' நிறைவேற்றப்படுகின்றன. எல்லாப் பள்ளிகளிலும் இவ்வளவு சிறப்புகள் அமைய முடியும் என்று கூற முடியாது. சில பள்ளிகளில் தன்னாட்சியை செயல்படுத்தி, அப்பள்ளிகள் உதாரணமாக விளங்க, மேலும் பல பள்ளிகள் இந்த வரிசையில் சேரும். அதனால் தான் நாம் சோர்வின்றித் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது பள்ளிகளில் தன்னாட்சிக்கான பொன்னான நேரமிது.

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement