Advertisement

எண்ணம் போல வாழ்வு!

உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித
மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம்
சிந்தனைவயப்பட்டதாகவே தோன்றுகிறது.இறுக்கமான மனிதர்களாகவும்,இயந்திர கதியான
மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும்,சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசையெல்லாம் பார்க்க முடிகிறது. சக மனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ,இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல்தனியொரு உலகில் சிந்தனைகளோடே பயணிக்கும் உலகமாக மாறி விட்டது.இதற்கெல்லாம் அடிப்படை யாதென்று சிந்தித்தால் அவரவர்க்கான தனிப்பட்டஎண்ணங்களே ஆகும்.எண்ண
ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது.மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்
களுக்கே உண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

கண்ணதாசன் சொன்னது : பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!'இருக்குமிடம் எதுவோ நினைக்குமிடம் பெரிதுபோய் வரும் உயரமும் புதுப் புது உலகமும் அவரவர் உள்ளங்களே...' இப்படி கண்ணதாசன் எண்ணங்களின் மேன்மை பற்றி அழகுற சொல்லி இருக்கிறார்.
நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் நமக்கானதாக மட்டுமே இல்லாமல் பிறரைச் சார்ந்தும் அமைகிறது.கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு.'வெட்கத்திற்கு அஞ்சி எருமை மாட்டை சாக கொடுத்தானாம்' என்று.
பிறரின் எண்ணங்களுக்காகவே பயந்து வாழும் மனிதர்கள் ஒரு வகை. அடுத்தவர் முன் தன்
மேதாவித் தனத்தைக் காட்டும் மனிதர்கள் மற்றோர் வகை. ஆக இவை எல்லாவற்றிலும் அடங்கியிருப்பது எண்ணங்களே! எண்ணிய முடிதல் வேண்டுமென ஆசைப் பட்ட பாரதியே அடுத்த வரியாக நினைவு நல்லது வேண்டும் என்கிறான். நினைவுகள் நல்லதாக இருப்பின் நெருங்கிய பொருள் கைப்படுவது பாரதியின் பார்வையில் சாத்தியமே.எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று மகிழ்ந்து பாடிய பாரதி வறுமையில் இருந்த கவிஞன் தான். இவ்வாறு எண்ணியவன் நிரந்தரமாக உறங்கி விட்டான்.அவன் விதைத்த எண்ணங்கள் இன்றும் உறங்கவில்லை. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்றும்,கல்வியால் பாரினை உயர்த்திட வேண்டும் என எண்ணிய பாரதியின் எண்ணங்கள் பிறர் நலன் சார்ந்தது. பிறர் நலன் நோக்கிய பாரதி தன் எண்ணங்களாலேயே இன்றும் நம்மிடையே வாழ்கிறான்.

எண்ணிய எண்ணியாங்கு : எண்ணங்களே செயலைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால் தான் எண்ணம் போல வாழ்வு என்றும், எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகளாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணங்களை நாம் எப்படி கை
யாளுகிறோம் என்பதிலேயே வாழ்வின் சூட்சுமம் அடங்கி உள்ளது. உள்ளத்தனையது உயர்வாக வேண்டுமெனில் உயர்ந்த எண்ணங் களை எண்ண வேண்டும். பூ கொடுக்க வரும் பெண்மணியிடம் 'பூ வேண்டாம்' என்று சொல்வதை விரும்ப மாட்டார். 'நாளை வாங்கி கொள்கிறேன்' என்று சொல்ல வேண்டும். இதுவே நேர்மறைஎண்ணம்.என்னால் முடியாது என்று
எண்ணும் எண்ணம் எதிர்மறையான எண்ணமாக உருமாற்றமடைகிறது.பெரும்பாலான மனிதர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதும் இத்தகைய எதிர் மறை எண்ணங்களே. இத்தகைய எதிர் மறையாளர்களிடம் பழகும் போது, நமக்கும் அத்தகைய எண்ணங்கள் நம்மை அறியாமல் புகுந்து விடுகிறது. இது தான் எண்ணங்களின் வலிமை. உன் நண்பன் யாரென்று சொல்! நீ யாரென்று சொல்கிறேன் என்ற பழமொழியின் பின் புலம் இது தான். சிறு வயதில் நாம்
அனைவருமே கேட்ட விஷயம் ஒன்றை இங்கே நினைவு கூறலாம்.நம்மைச் சுற்றி கண்ணுக்குத்தெரியாத தேவதைகள் இருக்கின்றனவாம். அந்த தேவதைகள் நாம் என்ன கூறுகிறோமோ அதற்குஅப்படியே ஆகட்டும் என்று திரும்ப கூறுமாம். ஆகவே தான் நல்லதையே நினைக்க வேண்டும் என்பதாக பாட்டிகள் நம் வீட்டில் அடிக்கடி கூறுவதுண்டு. விக்கலிற்கான அறிவியல் பூர்வ காரணங்கள்கூறப்பட்ட போதிலும், யாரோ நினைக்காங்க போல... என்று
கூறுவதும் எண்ணங்களே.

எண்ண அலைகள் : வோரா எனப்படும் அதிர்வலைகள் நம்மைச் சுற்றி நிறைந்து இருப்பதாகவும், அத்தகைய அலைகள் நேர்மறை மனிதர்கள் இருக்கும் இடங்களில் அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. நல்லா இருக்கீங்களா...என்ற கேள்வியின் எதிர் வினை பதிலை வைத்து
மனிதர்களை இனங் காணலாம். நல்லா இருக்கேன் என்ற பதில் தருபவர்கள் நேர்மறை
எண்ணங்களை உடையவர்களாகவும், ஏதோ இருக்கேன் என்ற பதிலை உடையவர்கள் எதிர் மறை எண்ணங்களை கொண்டவர் களாகவும் அறிந்து கொள்ளலாம்.
துஷ்டனைக் கண்டால் துார விலகு என்பதும் இதனால் தான். உனக்குள்ளே எல்லா ஆற்றல்களும் அடங்கியுள்ளது. நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்த
வனாகவே ஆகிறாய். இது வீரத் துறவியின் வார்த்தைகள். மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர் விடும் போது அசாதரண சக்தி பெறுகிறது. வேடிக்கைக் கதை ஒன்று உண்டு. ஆரோக்கியமான உடலும் உற்சாக குணமும் நிறைந்த ஒருவன் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறான்.அப்போது அவனுக்கே தெரியாமல் முன்பே பேசி வைத்து கொண்ட அவனின் நண்பர்கள் அவனை சந்திக்கின்றனர். ஒரு நண்பன் அவன் அருகில் வந்து என்னடா ஒரு மாதிரி இருக்கே என்று கேட் கிறான். இது போலவே மற்றொரு நண்பனும் உடம்பு சரியில்லையா, டல்லா இருக்கிற என்கிறான். இவ்வாறு வழி நெடுக பார்க்கும் நண்பர்கள் எல்லாம் கேட்கும் எதிர் மறை கேள்விகளால் சிக்குண்ட அவன் ஒரு கட்டத்தில் அதை உண்மையாகவே எண்ணத் தொடங்கி நோய் வாய்ப்பாட்டு படுத்து விடுகிறான். இப்படியான மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கலாம். அத்தகைய குணம் கொண்ட மனிதர்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். மனதின் எண்ணங்
களைப் பலவீனமடையச் செய்யும் சக்திகளின் வலைகளை அறுத்தெறிய வேண்டும். அரசவையில் விகட கவிகளின் மூலம் மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொண்ட அரசர்கள் போல நம் வாழ்வின் மனக் கவலையை மாற்றலாக்கும் மனிதர்களையே நட்புக் கரத்திற்குள் வைத்துக் கொள்வோம். அவர்களே வழியும், ஒளியுமானவர்கள்.

நேர்மறை எண்ணங்கள் : ஒவ்வொரு நாளும் துாங்கச் செல்வதற்கு முன் அன்றைய நாளில் நடந்த நல்லவற்றை பட்டியலிடுங்கள். நான் எல்லா வகையிலும் முன்னை விட சிறந்து வருவதை உணர்கிறேன் என்று மனதிற்குள் கூறிக் கொள்ளும் போது அந்த
எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை உணர முடியும். அதே போன்றே இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்னும் எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு இந்த நாள் என்
வெற்றிக்கான நாளாகும் என்ற நல்ல சிந்தனையை மனதில் உருவேற்றிக் கொள்ள வேண்டும். நம்மைத் தவிர நம்மை யாரும் பிரசவித்துக் கொள்ள முடியாது. எனவே தான் நமக்கான நல்ல எண்ணங்களை நாமே தான் உருவாக்கிட வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நம்மிடம் உள்ள எண்ணங்களே. ஆக்கப் பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். எதை நம் ஆழ் மனம் எண்ணுகிறதோ அதையே நம் செயல்களும் பிரதிபலிக்கின்றன. சபாஷ் நல்லா பண்ற, அசத்தல், பிரமாதம், ஆகா அருமை..இது போன்ற வார்த்தைகள்
எல்லாம் மற்றவர்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர் பார்க்காமல் நம்மிடமிருந்து நமக்காகவர வேண்டும். அகத்தில் தேவையற்ற குப்பைகளைத் தவிர்த்தாலே முகத்தில் புன்னகை வந்து விடும். ஒவ்வொரு நாளும் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத் தான் இருக்கிறோம். அப்படியானால் நம் எண்ணங்களும் அதைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். நம் இலக்கு
களைப் பற்றிய எண்ணங்களை சுற்றி சுற்றி ஓட விடுங்கள். எண்ணங்களுக்கு ஆதரவாய் இருப்பது அடுத்தவர்கள் அல்ல.. ஆழ்மனம் தான். நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்து அதை இயக்கும் இயக்குநராக மனதைப் பழக்கப்படுத்தும் போது அது வழக்கமாகவே மாறி விடும்.

எண்ணங்களை வலிமையாக்க : எத்தனை கோடி இன்பம்வைத்தாய் இறைவா... என்னும் பாரதியின் நேர் மறை சிந்தனையே எண்ணங்களை வலுவாக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தலும், எதையும் இலகுவாகக் கடந்து விடும்பக்குவமும் வந்து விட்டாலே
வாழ்க்கையை அழகாக வாழ்ந்திடலாம். நோய்க் கிருமிகளை பரப்பும் ஏடிஸ் கொசுக்களாக இல்லாமல் நல்ல எண்ணங்களைக் கொண்ட மனிதர்களாக வாழ்வோம்.நினைத்தது எல்லாம் நடக்கணும் என்று எண்ணிப் படுத்த திருடன் முதலில் கட்டில், பின்பு தலையணை என ஒவ்வொன்றாக கேட்க அனைத்தும் கிடைக்கவும், நல்ல உறக்கம் வர நினைப்பவன், உறங்கும் நேரம் புலி வந்து கொன்று விட்டால் என நினைக்க இறுதியில் புலி அவனைக் கொன்றதாக அந்தக் கதை
முடியும். நம் எண்ணங்கள் எத்தகையதாக அமைய வேண்டும் என்பதை இந்தக் கதை
உணர்த்துகிறது அல்லவா? எனவே நல்ல எண்ணங்களால் வாழ்வை வசந்தமாக்கலாம்
எண்ணமது திண்ணமானால் வாழ்க்கையது வண்ணமாகும்.எண்ணங்களை வசமாக்கி
வாழ்வாங்கு வாழ்வோம்.
- ம.ஜெயமேரி
ஆசிரியை, ஊ.ஒ.தொ.பள்ளி
க.மடத்துப் பட்டி
bharathisandhiya10gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement