Advertisement

இனி எல்லாம் சுகமே

பறவைகளின் பாதைபோல் நாம் பயணிக்கும் பாதை அழகாயிருக்கிறது. ஆனால் பறவைகளாகப் பறக்க மட்டும் நாம் தயாரில்லை. வாழ்வின் அன்றாட நெருக்கடிகள் கொசுக்கடியை விட நமக்குக் கொடுமையாயிருக்கிறது. எதையும் தாங்கிக்கொள்ள வலுவில்லா மனிதர்களாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம். சின்ன ஏமாற்றங்களுக்கும் ஊசிபட்ட பலுானாய் உடன் வெடித்து வெறுமையாகிறோம்.

இழப்புக்கும் இருப்புக்கும் ஊடாடுகிற பெண்டுலங்களாக வாழ்வு மாறிக்கொண்டிருக்கும் நிலையில் நம் ஒவ்வொருவருக்குஉள்ளும் நிறையவே நிறைவேறா ஆசைகள், நிறையவே சோகங்கள், நிறைவேறா ஏக்கங்கள். இப்படி எத்தனை எத்தனையோ. அவை நம் இன்பங்களைத் தின்று செரித்துவிட்டு நின்று சிரித்துக் கொண்டுஇருக்கின்றன. தீதும் நன்றும் பிறர் தரவாரா என்ற நிலையில் என் வாழ்க்கை என் கையிலில்லாமல் வேறு யார் கையில் இருக்க
முடியும்? எல்லாவற்றையும் செய்து விட்டுப் பழிபோட நாம் மனிதர்களை தேடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனந்தமாய் வாழுங்கள் : காற்றின் தீராத கரங்கள் மரங்களின் தலையைப்பிடித்து ஆட்டினாலும் உடைந்து முறிந்துவிழும் மரம் மீண்டும் துளிர்கிறதே! மரத்தின் கரம் வலிமையை நமக்குக் கற்றுத் தந்துகொண்டிருக்க நம்மால் ஏன் அவ்வளவு விரைவாய் மீண்டு வர முடியவில்லை? அந்தந்த நிமிடங்களில் ஆனந்தமாய் வாழ்வது எத்தனை இதமானது! வயது ஆனாலும் எதையும்
அதனதன் இயல்பில் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிற பக்குவம் மட்டும் எப்படி வராமல் போனது? மனதைத் திறக்கும் மந்திரச்சாவி மகிழ்ச்சியே என்பதை ஏன் என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை. காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நம் கோலம் தினம்தினம் நமக்கு நிலைக் கண்ணாடி மூலம் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. எனில், மாற்றங்களையும் புதுமைகளையும் ஏன் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? காரணம் நம் வாழ்வில்
மாற்றங்களை கொண்டுவர நாம் நினைக்கவில்லை.இன்னும் கூட ஆண்டாண்டு காலமாய் பயணிக்கும் அதேபழக்கப்பட்ட பாதையில்தான் பயணிக்கிறோம், ஆண்டாண்டு காலமாய் பேசும் அதே நண்பர்களுடன் மட்டுமே பேசுகிறோம். புதுமையை நம் மனம் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியாமல் பழமையின் பக்கவாட்டில் மட்டுமே பயணித்துக்கொண்டே இருக்கிறது. புதுமையாய்
சிந்திப்பவர்கள் தங்கள் தவறுகளைக் கூட திறனாய்வு செய்து ஏற்றுக்கொண்டு திருந்திவிடுகிறார்கள். அவ்வாறு சிந்திக்க விரும்பாதவர்கள் தாங்கள் செய்யும் தவறுகளுக்கும் நியாயம் கற்பிக்க முயல்கிறார்கள்.

புன்னகையால் புண்களை ஆற்றுங்கள் : கண்ணீர் கண்ணாடியைப்போன்றது; கீழே விழுந்துவிட்டால் நொறுங்கிவிடுகிறது. நம்மையும் குத்திக் கிழித்துவிடுகிறது. காலை எழுந்தவுடன் காலண்டர் தாளோடு காலத்தையும் கிழித்துப் போடுகிறோம். நம் முகவரிகளை முள்வரிகளால் நம்மை முழுமையாய் எழுதிக்கொள்கிறோம். என்ன நடந்தாலும் எதுவுமே நடக்காததுபோல் புன்னகையால் புண்களைக் கழுவுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.எல்லா ரணங்களையும் ஆற்றும் களிம்பு மவுனம்தான். என்ன நடந்துவிட்டதென்று இப்படி வருந்துகிறீர்கள், நீங்கள் நினைத்தபடி இன்று நடக்கவில்லை அவ்வளவுதானே! நேற்று என்பது முடிந்த ஒன்று, நாளை என்பது வந்தால் உண்டு, இந்த நிமிடம் மட்டுமே நம் கையில் எனவே நடந்தவை குறித்து வருந்தாமல் நாளை குறித்துப் பதறாமல் மிக இயல்பாக வாழலாமே!நம் சிக்கல்களின் ஆதிமுடிச்சு நம்மிடம்தான் உள்ளது என்பதை மறந்து யார் யாரிடமெல்லாமோ தீர்வு தேடிப் பயணிக்கிறோம். விதை விழுந்த இடத்தில்தானே செடி எழ முடியும்! உலகே நம்மை வெறுத்தாலும் நம்மை நாம்
வெறுக்காதிருப்போம். இருள் குறித்து ஏன் வருந்தவேண்டும்? இருளில்தானே வாணவேடிக்கைகளை ஆகாயம் மிகத் துல்லியமாகக் காட்டுகிறது, இருள் இருப்பதால்தானே சூரியனால் சுடர்விட முடிகிறது. நம் மனதின் விழிகளால் எல்லாவற்றையும் சரியாகப் பார்க்க முடியாது. அச்சம் அப்புறப்படுத்தப்படும்போதுதான்நம்மால் எதையும் சரியாக செய்ய முடிகிறது. எல்லாவற்றையும் எளிதாக எதிர்கொள்ளப் பழகியவர்களுக்கு எமபயம்கூட எலிபயம் போன்றதுதான். நாம் தினமும் எதிர்கொள்ளும் அன்றாட நிகழ்வுகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் துக்கமும் சோகமும்மிச்சம். நம் பிரச்னைகளை யாரால் சரிசெய்ய முடியும் நம்மைத் தவிர அவற்றை
உருவாக்கியவர்களே நாம்தானே
!
நமக்குள் பயணிப்போம் : எல்லாவற்றிற்கும் காரணம் நான்தான் என்று தன்னையே
நொந்துகொள்வதும், எதற்கும் நான் காரணமில்லை என்று கூச்சமே
யில்லாமல் பொறுப்புத் துறப்பதும் ஆபத்தானது. பொம்மையைத் தொலைத்த குழந்தை தான்தான் அதைத் தொலைத்தது என்கிற உண்மையைத் தொலைத்துவிட்டு அழுகிறது. நம்மை நாம் மதிப்பது, ஏற்றுக்கொள்வது, ஊக்குவிப்பது நம் உயர்வுக்கான அழகான படிகள். எந்த அற்புதத்தையும் நிகழ்த்தாமல் இயல்பாக வாழ்வது கூடக் கவிதைதான். யாருக்கும் நம்மை நிருபிக்க
வேண்டிய அவசியம் இல்லை, யார் தீர்ப்பின் படி நம்மை மாற்றிக்
கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. உலகின் துன்பத்திற்குக் காரணம் தேடி புத்தர் எங்
கெல்லாமோ நடந்தார் வெளியில் தேடிக் கிடைக்காத பதில்
உள்ளுக்குள் தேடியபோது அவருக்கு கிடைத்தது. நாம் தொலைத்த நம் அமைதி நமக்குள்தான் இருக்கிறது தேடி உள்ளுக்குள் பயணிக்க வேண்டியதுதான் பாக்கி.பணத்திற்கும் புகழுக்கும்
ஆடம்பரத் தேவைகளுக்கும் காலம் முழுக்க ஓடியோடி இன்று களைத்து பின்னால் திரும்பிப்
பார்க்கும்போது இழந்தவை அதிகமாய் தெரிகிறது. காலத்தை எப்படி அப்படியே நிறுத்தி பார்க்க முடியும்? வெளியூர் சென்றுவிட்டு வெகுகாலம் கழித்து வீட்டிற்கு வந்தவன் வேகமாய் தான் இல்லாத நாட்களை நாட்காட்டியிலிருந்து கிழித்துப் போடுகிற மாதிரி நாம் இழந்த இன்ப நாட்களைக் காலக் கூடையில் போட்டுவிட்டு நிற்கதியாய் நிற்கிறோம். கவலைப்படக் கூட நேரமற்று பூமியைவிட வேகமாய் சுற்றிக் கொண்டிருந்த நம்மை இந்த ஓய்வுநிமிடங்கள் வெகுவாய் சிரமப்படுத்துவதன் காரணம் நமக்குப் புரியவில்லை.

இயங்குவோம் : மழைத்துளிகள் ஒன்று சேர்ந்து ஓடத்தொடங்கி ஆறாக மாறியது, அதன்பின்னும் அதன் இடைவிடாத இயக்கம் கடலாய் அதை மாற்றியது. ஆனால் நாம் மட்டும் கொஞ்சம் வெற்றி பெற்றவுடன் படிக்கல்லாய் பாதையில் படுத்துக்கொள்கிறோம். புல்லாங்குழலுக்குள் புகுந்த காற்று இசையாய் இறங்கிவருகிறது. இழுத்துக் கட்டப்பட்ட தந்தியிலிருந்துதான் வீணை அழகிசையை மனம் வருடக்கொடுக்கிறது. வினாடிகள் எல்லாம் நிமிடங்களாகி மணிநேரமாய் மாற்றம் பெற்று நாட்களாய் நகர்ந்து வாரமாய் வரம் பெற்று மாதமாய் மலர்ந்து
வருடமாய் நம் வாசல் கடந்து போகிறதே! அவை இயங்காவிட்டால் இந்தப் பூமி எப்படி காலமாற்றம் பெறும்?முகநுாலில் செலவழிக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு கூட நாம் வீட்டிலிருப்போருடன் முகம்கொடுத்துப் பேசுவதில்லை. சகமனிதர்கள் இறைவன் நமக்குக் கொடுத்தவரம். 'அன்பிற் சிறந்த தவமில்லை' என்றான் பாரதி. அன்பு செய்ய இந்த வாழ்க்கை நம்மை மனிதனாய்
படைத்துள்ளது. இதில் நாம் செய்த தவறை நினைத்து நொந்து கொள்வதும் நம்மை வெறுப்பின் சொற்களுக்குள் தந்துகொள்வதும் என்ன நியாயம்? வீணே சுற்றித்திரிந்தபோது உண்மை விளங்கவில்லை, பட்டுத் திருந்தியபின் பாதங்கள் வலிதாங்கவில்லை என்பதுதான் இன்று நமக்கு நிதர்சனம்.ன்ன செய்ய முடியும் நாம் இறங்க வேண்டிய நிலையத்தில் இறங்காமல் இன்பமாய் இருந்துவிட்டோம், இப்போது தொடர்வண்டி வெகுதுாரம் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. உள்ளே அமர்ந்து அழுதுகொண்டிருப்பதில் என்ன பொருளிருக்கமுடியும்? உடனே இறங்கி எதிர்திசை
யிலிருந்து வரும் தொடர்வண்டிக்கு காத்திருந்து அதில் ஏறி நாம் செல்ல வேண்டிய இடத்திற்குப் பயணப்படவேண்டியதுதான். சிறுவயதில் கைதிருந்த நம் ஆசிரியர் அழித்து
அழித்து எழுதச் சொல்வாரே, அதேபோல் அழித்து எழுதலாம் தவறாக நாம் எழுதிய பலவற்றை. அப்போது கிடைக்கும் அவமானங்களையும் அனுபவமாய் கொண்டால், நமக்கு வானம் வசப்படும்.

எதையும் தாங்கும் இதயம் : வாழ்க்கை என்பது தெரியாததைக் கற்றுக்கொள்வதும் வேறுபட்ட பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதும்தான். எந்தச்செயலையும் செய்யாதவன் எப்படித் தவறுகள் செய்வான்? பல சோதனை முயற்சிகளில் ஈடுபடும்போதுதான் நாம் முட்டிமோதி
கீழே விழுகிறோம். விழுவதும் எழுவதற்கே என்று சொல்லாமல் சொல்கிறது இந்த வாழ்வு.
கவியரசு கண்ணதாசன் சொல்வதுபோல், நீ வெற்றிக்காகப் போராடும்போது வீண்முயற்சி
என்றவர்கள் நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள் என்ற கூற்று எவ்வளவு சத்தியமானது! மயங்கிக் கிடக்கும் உள்ளங்களுக்குள்அவர் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகிறார் “ மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா? வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்” எல்லாவற்றையும் வெகுஇயல்பாய் எதிர் கொள்ளப் போகும் நமக்கு இனி எல்லாம் சுகமே!

முனைவர் சவுந்தர மகாதேவன்
தமிழ்த்துறைத்தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி
திருநெல்வேலி. 99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement