Advertisement

உயிருள்ள போதே உதவலாமே!

*கந்து வட்டி கொடுமையால், திருநெல்வேலி மாவட்டத்தில், கூலித் தொழிலாளி இசக்கிமுத்து, மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்
*வாராக்கடன்களால் திணறி வரும் வங்கிகளுக்கு, புத்துயிர் ஊட்டும் வகையில், 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது

இந்த இரண்டு செய்திகளுக்கும், ஏதாவது சம்பந்தம் உள்ளதா என, நீங்கள் ஐயுறலாம். ஆனால், உண்டு! இந்தக் கட்டுரையை எழுத எத்தனிக்கும் போதே, 'உருப்படுமா இந்த நாடு...' என, தலைப்பிட தான் நினைத்தேன். ஆனால், உடனடியாக அந்த எண்ணத்தை வாபஸ் பெற்று கொண்டேன். காரணம்... 'இந்த தேசம் உருப்பட வேண்டும்' என, கனவு காணும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். அப்படி கனவு காணும் நானே, இந்த கட்டுரைக்கு, அவ்வாறு தலைப்பிட கூடாது என, தீர்மானித்தேன்.

ஒரு நாட்டை மன்னன் ஆண்டாலும் சரி, அந்நாட்டு மக்களால் ஆளப்பட்டாலும் சரி, நாட்டை நிர்வாகம் செய்ய, பணம் அவசியம். அந்த பணத்தை, அரசாங்கமே, தன்னிடம் ரிசர்வ் வங்கி இருக்கிறது எனக் கருதி, இஷ்டம் போல அச்சடித்து கொள்ள முடியாது.நாட்டு மக்களிடமிருந்து வரியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து, சேரும் தொகையை வைத்தே, நாட்டை நிர்வகிக்கும். மன்னராட்சி காலங்களில், வரி வசூலில் பிரச்னை ஏதும் இருந்ததாக தகவல்கள் இல்லை.வறட்சி மற்றும் பஞ்ச காலங்களில், வரி செலுத்த மக்கள் அவதிப்படுவதாக அறிந்த அப்போதைய மன்னர்கள் சிலர், 'குடிமக்கள் வரி செலுத்தத் தேவையில்லை' என, அறிவித்தனர் என்பதை படித்துள்ளோம்.மேலும், பஞ்சத்தில் மக்கள் உயிர் பிழைத்திருக்கத் தேவையான தானியங்களை, அரசாங்க சேமிப்பு கிடங்கிலிருந்து மன்னர்கள் வழங்குவதும் உண்டு.

ஆனால், மக்களாட்சியில், மக்களிடமிருந்து வரி வசூலிக்க, வருமான வரித்துறை என, பல துறைகளை மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ளன.கடந்த, 20 ஆண்டுகளாக, 'டோல்கேட்' என்ற ஒன்றை, ஆங்காங்கே, நெடுஞ்சாலைகளில் அமைத்து, அந்த வழியாக செல்லும் வாகனங்களிடமிருந்து, ஒவ்வொரு முறையும் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசாங்கம் போட்டு வைத்திருக்கும் சாலைகளை, வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதற்காக, வாகனம் வாங்கும் போதே, 'சாலை வரி' என்ற ஒன்றை, மொத்தமாக செலுத்தி இருக்கிறோம்.மன்னர்கள் ஆட்சி காலத்தில், மக்கள் முறையாக வரி செலுத்தினர். வரி கட்ட முடியாவிட்டால், மன்னனிடம் சென்று முறையிட்டனர். அவரும் பெரிய மனது வைத்து, தள்ளுபடி செய்துள்ளார்.காரணம், மன்னனுக்கும், மக்களுக்கும், நேரடி தொடர்பு இருந்தது.

'சிம்சன்' நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர், மறைந்த, கே.குருமூர்த்தி. 1967- தேர்தலில், தென் சென்னை லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக, அண்ணாதுரையை எதிர்த்து போட்டியிட்டுத் தோற்றவர்.அந்த தொழிற்சாலைகளில் பணியிலிருந்த, 10 ஆயிரம் ஊழியர்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பார். தொழிலாளி ஒவ்வொருவரின் விபரங்களும், இவர் விரல் நுனியில். மன்னராட்சியும் ஏறக்குறைய அப்படி தான். ஆனால், மக்களாட்சியில், ஆள்பவர்களுக்கு மக்களோடு நேரடியாக எவ்வித தொடர்பும் கிடையாது; தன் கட்சிக்காரர்களை தவிர!

இதன் விளைவு, ஆட்சியாளர்கள் மக்களை நம்புவதில்லை. மக்கள் அனைவரையும் திருடர்களாகவும், ஏமாற்றுக்காரர்களுமாகவே பார்க்கின்றனர். அது போல மக்களும், ஆட்சியாளர்களை நம்புவதில்லை. தங்கள் வருமானத்தை சுரண்ட வந்தவர்களாகவே பார்க்கின்றனர். அதனால், அரசாங்கம் குறுக்கு வழியில் யோசித்து, 'ஆடிட்டர்கள்' என்ற கணக்கு தணிக்கையாளர்களை உருவாக்கியது. அரசாங்கத்திற்கு அவர்கள் விசுவாசமாக இருப்பர் என நம்பி, தனி மனிதர் அல்லது நிறுவனத்தின் கணக்கு, வழக்குகளை தணிக்கை செய்து, ஆடிட்டர்கள் சான்றளிப்பதன் அடிப்படையில், வருமான வரிவசூலிப்பது என்ற ஒருதிட்டத்தை அரசு கடைப்பிடிக்க ஆரம்பித்தது. ஆனால், அவர்களது அந்த தணிக்கை பணிக்கு, அரசாங்கம், ஊதியமோ, சம்பளமோ, கமிஷனோ, அன்பளிப்போ வழங்காது. அதை அந்த ஆடிட்டர்கள் தணிக்கை செய்யும் தனி நபர் அல்லது நிறுவனத்திடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும்; எப்படி இருக்கிறது கதை!

ஆடிட்டர்கள் தங்கள், 'திறமையை' அரங்கேற்ற ஆரம்பித்தனர்.ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ அவர்களது வருமானத்திலிருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமான வரி கட்ட வேண்டி வந்தால், கூட்ட வேண்டியதைக் கூட்டி, குறைக்க வேண்டியதை குறைத்து, 10 அல்லது, 15 ஆயிரம் ரூபாய் கட்டுமாறு செய்து கொடுப்பர். மீதி, 85 ஆயிரத்தில், 20ஆயிரம் ரூபாய், ஆடிட்டர் பீஸாக போகும். 65 ஆயிரம் ரூபாய் தனி நபர் அல்லது அந்த நிறுவனத்திடம், கணக்கில் வராத கறுப்புப் பணமாக சேரும்.ஆனால், மன்னராட்சி காலத்தில், இந்த, ஆடிட்டர் என்ற, 'கான்செப்டே' கிடையாது.இருந்திருந்தால், ஏதாவது ஒரு புலவர், ஏதாவது ஒரு பாடலில், அந்த ஆடிட்டர்களை பற்றி, புட்டுப்புட்டு வைத்து இருப்பார்.அரசை ஏமாற்றுவது எப்படி, வரி கட்டாமல் தவிர்ப்பது எப்படி என, நாட்டுக்கு வர வேண்டிய வரி வருமானத்திற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கும் ஆடிட்டர்களை தான், அரசுகள் தலையில் துாக்கி வைத்து கொண்டாடுகின்றன.

இப்போது, முதல் செய்திக்கு வருவோம். கந்து வட்டிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி, அசலும் வட்டியுமாக, மூன்றரை லட்சம் ரூபாய் கட்டிய பிறகும், 'இன்னும் பாக்கி இருக்கிறது' எனக் கூறி, குடியிருந்த வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டதால், மனமுடைந்த திருநெல்வேலி இசக்கிமுத்து, கலெக்டர் அலுவலகம் முன், குடும்பத்தோடு, தீவைத்து, இறந்து போனார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, கட்டாமல், 'டிமிக்கி' கொடுத்து, பிரிட்டனுக்கு சென்று, வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார், விஜய் மல்லையா.அவரை போன்றவர்கள்வங்கிகளில் வாங்கியுள்ள கடனை வசூலிக்க முடியாமல், 'வாராக்கடன்' என்ற தலைப்பில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பெரும் தொகையை எழுதி வைத்துள்ளன. அது போன்ற தொகைகளை ஈடு செய்ய, வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கொடுக்க போகிறதாம்!கடைத் தேங்காயை எடுத்து, வழிப் பிள்ளையாருக்கு உடைக்க போகிறாதாம்!

வங்கிகள் தேசிய மயமாக ஆக்கப்பட்டிருந்தாலும், அந்த வங்கிகள் மத்திய அரசுக்கு சொந்தமானதல்ல; அவற்றின் நிர்வாகமே தனி. கிடைக்கும் லாபமும் அவற்றிற்கே சேரும்.வங்கி அதிகாரி, நகர்வாலா என்பவருக்கு, அப்போதைய பிரதமர், இந்திரா, போன் செய்து, '70 லட்சம் ரூபாயை கொண்டு வந்து கொடு' என, உத்தரவிட்டார். அதன் படி, இந்திரா சொன்ன இடத்திற்கு, வங்கியிலிருந்து பணத்தை எடுத்து கொண்டு போய் கொடுத்தார், நகர்வாலா.
அது போல இப்போது, எந்த வங்கி அதிகாரியும் கொடுக்க முடியாது. ஏன், இந்திரா போல, பிரதமர் நரேந்திர மோடி அல்லது நிதியமைச்சர்,அருண் ஜெட்லி நேரில் சென்று கேட்டால் கூட, எந்த வங்கி அதிகாரியும் கொடுக்க மாட்டார்.அப்படி இருக்கும் போது, வங்கிகளுக்கு வாராக்கடன்களால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட, மத்திய அரசு நிதியை அள்ளி கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

அந்த தொகை ஒன்றும், அருண் ஜெட்லியின் சொந்தப் பணமல்ல; மக்களின் வரிப்பணம். அதாவது, நமக்கு சொந்தமான பணம்.வங்கிகள் தங்கள் வசூல் திறமை குறைவால், வசூலிக்க முடியாமல், வாராக்கடன் என்ற தலைப்பில் எழுதி வைத்திருக்கும் தொகையை, மத்திய அரசு நிதியிலிருந்து கொடுத்து, ஈடு கட்டுவது மாதிரி, கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து போன்ற அப்பாவிகளுக்கும் கொடுக்கலாமே! மத்திய, மாநில அரசுகளின், 'கஜானா'விலிருந்து எடுத்து கொடுத்து உதவ முன்வந்தால், கந்து வட்டி கொடுமையால், குடும்பத்தோடு உயிரை மாய்த்து கொள்ளும் கொடுமை தவிர்க்கப்படுமல்லவா! உயிர் போன பின் கொடுக்கும் நிவாரண தொகையை, உயிரோடு உள்ள போதே கொடுத்து உதவலாமே!அது தான், மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் உள்ள வித்தியாசம்!

மன்னராட்சியில் மக்கள், பஞ்சத்தால், வறட்சியால், நோயால் மாண்டிருக்கலாம். கந்து வட்டி கொடுமையால் மாண்டதாக தகவல் உண்டா?ஆனால், மக்களான நம்மால் ஆளப்படும், நம், மக்களாட்சியில் அது நடந்து கொண்டிருக்கிறது. மல்லையா போன்றோர் மீது காட்டும் கரிசனத்தை, இசக்கிமுத்து போன்றோரிடமும் காட்டலாமே!
எஸ்.ராமசுப்ரமணியன் -
எழுத்தாளர்
இ-மெயில்:essorresgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • leelavathi - cuddalore,இந்தியா

    எனக்கும் இது போன்ற பிரச்னை தான் 5 லட்சம் ரூ கடனுக்கு வட்டி மட்டுமே கட்டுகிறேன் இதை பேங்கு டியூவாக கட்ட மாட்டேனா ஆனால் கொடுக்க யாரும் இல்லை அய்யா எஸ்.ராமசுப்ரமணியன் சொல்வது முற்றிலும் உண்மை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement