Advertisement

வழிகாட்டும் தமிழ் இலக்கியங்கள்

ஒரு சமூகத்தின் பின்புலம், அதன் கட்டமைப்பு, பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவை தனி மனித வாழ்வியலை மையப்படுத்தியும், முன்னிறுத்தியும் சுற்றி சுழல்கின்றன. அதே சமயத்தில் தனி மனிதனின் ஒழுக்கம் தடம் மாறும் போது ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்வியல் கேள்விக்குறியாகிறது. இன்றைக்கு சமுதாயத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைக்கு அடிமை, ஏமாற்றுதல், கள்ளக்காதல் போன்றவை தான் பிரதானமாக
நடக்கிறது. பெற்ற தாய் தெருவில் பிச்சை எடுக்கிறாள்; மகன் ஏசி அறையில் ஓய்வு எடுக்கிறான். ஆசைக்கு அடிபணியாத பெண் ஆசிட் வீச்சிற்கு ஆளாகிறாள். போதையில் வாகனத்தை இயக்க போகிற வழியில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறான். இத்தகைய சம்பவங்களில் தனிமனித ஒழுக்கம் எங்கே இருக்கிறது. இந்நிகழ்வுகள் எதிர்கால வாழ்வியலை சிதைத்து சீர்குலைத்து விடும் என்று எச்சரிக்கை செய்தவர்கள் நம் தமிழ் சான்றோர்.

தமிழ் இலக்கியங்கள் : வீரம், விருந்தோம்பல், பொதுவுடமை, கொடை, நீதி, நல் ஒழுக்கம் போன்றவற்றினை உலகிற்கே எடுத்து சொன்னது தமிழ் இலக்கிய ம். வாழ்க்கை எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்று வாழ்க்கைக்கே இலக்கணம் சொன்னது தமிழினை தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை. இது வரலாற்று பதிவு. மனிதன் மனிதனாக வாழ
மனிதனால் மனிதனுக்கு சொன்ன பாடங்கள் தான் தமிழ் சான்றோர் நமக்கு விட்டு சென்ற மிகப்பெரிய சொத்தான தமிழ்தாயின் மடியில் தவழும் தமிழ் இலக்கியங்கள். இன்றைக்கு இவை கடல் கடந்தும் வாழ்கின்றன என்றால் அதில் உள்ள வாழ்வியல் சித்தாந்தங்களும், சீரிய சிந்தனைகளுமே காரணம். தனி மனித வாழ்வியலையும், ஒழுக்க நெறிகளையும் சமூகத்திற்கு அடையாளம் காட்டியது நம் இலக்கியங்கள். எதிர்காலத்தால் சமூகம் இப்படி ஒரு நிலைக்கு
தள்ளப்படும் என பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே விடுக்கப்பட்ட எச்சரிக்கை தான் இலக்கிய
ஓவியங்கள்.

தனிமனித வாழ்வியல் : காதல் என்ற ஒற்றை சொல்லில் தான் குடும்பங்கள் கணவன், மனைவி என்ற கட்டமைப்பிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இக்காதலுக்கு தனி இலக்கிய வகையை உருவாக்கி களவையும், கற்பையும் கவி நடனம் புரியச்செய்து உண்மை காதலை உலகிற்கு எடுத்துரைத்தனர்.இலக்கிய காதலில் உண்மையும், அன்பும் விதைக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் முறையற்ற காதலை யும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் எச்சரிக்க தவறவில்லை. இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற சொல்தான் பல்வேறு உயிர் பலிகளுக்கு பிரதான காரணமாக இருக்கிறது. கணவனை கொன்ற மனைவி, மனைவியை கொன்ற கணவன், பிள்ளைகளை தவிக்க விட்டு சென்ற தாய் இப்படி முறையற்ற காதலில் சமூகம் பயணிக்கும் பயணத்தை நாம் நாள்தோறும் பார்க்கிறோம். பல ஆண்டாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கூட இன்று நீதிமன்றத்தின் வாயிற்கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்கள். உண்மை காதல் உள்ளத்தில் இல்லை என்பது தானே இதன் பொருள்.
முறையற்ற வாழ்வு வாழ்ந்த கோவலனின் வாழ்க்கை எப்படி முடிந்தது என்பதனை சிலப்பதி
காரமும், சீதையின் மேல் கள்ளத்தனமான காதல் கொண்ட ராவணனின் ராஜ்ஜியம் அழிந்து போனதை ராமாயணமும் முன் வைக்கிறது. இவை எல்லாம் தனி மனித
வாழ்வியலுக்கு இலக்கியங்கள் விட்டு சென்ற எச்சங்கள்.

அறவாழ்க்கை : இயன்றதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதுதான் அற வாழ்க்கையின் அடையாளம். ஒருவனிடம் இருப்பதை எப்படி தட்டி பறிக்கலாம் என்று யோசிக்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பறவைகளில் ஒன்றான புறா அடிபட்டு கிடப்பதை பார்த்து அதிர்ந்து போன சிபி சக்கரவர்த்தி தன் தொடையின் சதையை அரிந்த கொடுத்து உயிர் கொடுத்தான். இன்றைக்கு தன்னை பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் சோறு போடுவதை கூட சுமையாக நினைக்கும் கால
மாகிவிட்டது. குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை வழங்கி உயிர்ப்பித்தான் பேகன். படர்ந்து செல்ல இடம் இல்லாமல் கிடந்த முல்லைக் கொடிக்கு தான் வந்த தேரினை அச்செடிக்காக விட்டு சென்றான் பாரி. தன்னை நாடி வந்தோருக்கு பொன்னும், பொருளும், குதிரைகளும் கொடுத்து மகிழ்ந்தான் காரி. நீண்ட நாள் வாழக்கூடிய நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்து அன்பை வெளிக்காட்டினான் அதியமான். நாட்டையும், நகரத்தையும் தானமாக கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்தான் ஓரி. இப்படி கொடுத்து மகிழ்ந்த வரலாறு நம் தமிழ் சமூகத்தின் அடையாளமாகும். இன்றைக்கு இயன்றதையும் செய்யாமல் இருப்பதையும் பிடுங்கிக்கொண்டு ஓடி ஒளியும் சமூகத்தில் தனி மனித ஒழுக்கம் எங்கே இருக்கிறது.

போதை : போதையும், புகையும் இந்த சமூகத்தை சவால் விட்டு சாகடித்துக் கொண்டிருக்கிறது. பல வகையான புதுப்புது போதைகளுக்கு அடிமையாகின்றனர். அதனால் தான் நம்மை தாக்கும் நோய்களுக்கும் புதிது புதிதாக பெயர்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இன்றைய
வாழ்க்கை சூழலில் பிறந்த குழந்தைக்கு சர்க்கரை வியாதி, பத்து வயதில் ரத்த அழுத்தம், 15 வயதில் புற்றுநோய், 20 வயதில் மாரடைப்பு, 25 வயதில் மரணம் நேரிடுகிறது. இந்த வாழ்க்கை
பயணம் எதை நோக்கி பயணிக்கிறது. உடலும் சுத்தமாக இல்லை, உள்ளமும் சுத்தமாக இல்லை பின் எப்படி ஆரோக்கியம் பேண முடியும். இதைத்தான் வான்புகழ்
வள்ளுவன், கள்ளுண்ணாமை எனும் தனி அதிகாரத்தையே படைத்து வாழ்க்கைக்கு வழிகாட்டினான். போதையின் அவல நிலைகளை படம் பிடித்து காட்டினான். ஆனால், இச்சமூகம் போதையின் மாயையில்தானே சிக்கி தவிக்கிறது.எக்கால கட்டத்திலும் நேர்மை தவறாமல் வாழவேண்டும். நாணயமிக்க நாகரிகமான வாழ்வியலை முன்னெடுத்து செல்ல வேண்டும். அது தான் சமூகத்திற்கான பாதுகாப்பாக கருத முடியும். தவறு செய்தது தன் தாயாக இருந்தாலும், தான் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். அப்படி தண்டனை கொடுத்து சரித்திரத்தில் இடம் பிடித்தவன் தான் மனுநீதிச்சோழன். பசுவின் கன்று தேர்க்காலில் சிக்கி இறக்க, இறந்தது பசுவின் கன்றாக இருந்தாலும் அதற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று எந்த தேர்காலில் இட்டு பசுவின் கன்றை கொன்றானோ அதே தேர்க்காலில் இட்டு தன் மகனை கொன்று நீதியை நிலைநாட்டினான். தவறு செய்யாத கோவலனின் கொலைக்கு தான் காரணமாகி விட்டோம் என்பதற்காக தன் உயிரை விட்டான் பாண்டிய மன்னன்.தனி மனித வாழ்வில் உண்மை, உறுதியான மனச்சாட்சியும் எந்தளவிற்கு இருக்க வேண்டும் என்று தமிழ் இலக்கியங்கள் தடயங்களை தடம் பதித்து சென்றிருக்கிறது.தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் தொடங்கி இன்றைய இலக்கியங்கள் வரை அனைத்து வாழ்வியலின் ஒவ்வொரு கூறுகளையும் சமூகத்திற்கு சுட்டிக்காட்டி உள்ளன. நல்லவை, தீயவை தரம் பிரிக்கப்பட்டுள்ளது. வேறு எதையும் படிக்க முடியவில்லை என்றாலும் திருக்குறள் என்ற ஒற்றை நுாலை படித்து
அதன் வழி நடந்தாலே சமூகத்தில் குற்றங்கள் எழ வாய்ப்பு இல்லை.

எது பெருமை : இன்றைக்கு சமூகத்தில்வழக்கத்தில் உள்ள சொல்லாடல்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 'எனது பிள்ளைக்கு தமிழ் படிக்க தெரியாது; தமிழில் பேசமாட்டான்'. இந்த வார்த்தைகள் எங்கே பேசப்படும் தெரியுமா? பெருமை பேசும் இடத்தில், பெருமையாக பேசுவதற்கு இப்படி பேசுவர். கொஞ்சம் யோசித்து பாருங்கள், இது பெருமையா? ஒரு தமிழ்
தாயின் வயிற்றில் கருவாகி உருவாகி தாய்ப்பால் எனும் தமிழ்ப்பாலை குடித்து வளர்ந்த பிள்ளைக்கு தமிழில் எழுத, பேசத் தெரியாது என்பது பெருமையா, அவமானமா? இதனை பெருமை என்று நாம் கருதுவதால் தான் இச்சமூகம் இலக்கியங்களை மறந்து ஒழுக்க சீரழிவால் சிதைந்து கொண்டிருக்கிறது. நல்வழிப்பயணத்திற்கு வழி அமைத்து கொடுத்த இலக்கியங்களை படிப்பதும் இல்லை, படித்தாலும் அதன் வழி நடப்பதும் இல்லை.ஒரு காலத்தில் தாத்தாவும்,
பாட்டியும் கூடவே இருந்தார்கள். ராமயணம், மகாபாரத கதையை சொல்லி பிஞ்சு நெஞ்சில் பதிய வைத்தார்கள். இன்றைக்கு தாத்தாவும், பாட்டியும் முதியோர் இல்லத்தில் கதை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் தானே என்று தரம் தாழ்த்தி தாழ்ந்து போகாதீர்கள். நமது தவ வாழ்க்கை தமிழுக்குள் அடங்கி இருக்கிறது. வாழ்க்கைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருக்கும் தமிழ் இலக்கியங்களை வாசிப்போம், நேசிப்போம், சுவாசிப்போம்.

எம்.ஜெயமணி
உதவி பேராசிரியர்
ராமசாமி தமிழ் கல்லுாரி
காரைக்குடி. 84899 85231

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement