Advertisement

விற்பனைக்கு வரும் கற்பனையின் விளைவுகள்

அரசின் மிக உயர்ந்த பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெறுபவர்கள். இன்றைய இளைய சமுதாயத்தில், கல்வியறிவிலும், நுண்ணறிவிலும், சிந்தனைத்திறனிலும், சிறந்தவர்களாகக் கருதப்படுவர். அந்தத் தேர்விலேயே அறிவியல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சித்திருக்கிறார் ஒருவர். பின் விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், அந்த குற்றச் செயலை செய்திருக்கிறார். இப்போது அவர் வெற்றி மட்டுமல்லாமல், இவருடைய பயிற்சியாளர், இவரது மனைவி பெயரில் நடத்தி வந்த பயிற்சி நிலையத்தில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வெற்றி என அனைத்தும், சந்தேகத்துக்கு இடமாகி விட்டது. இவர் பயன்படுத்திய தொழில்நுட்ப தந்திரம், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான, இரண்டு திரைப்படங்களில் நகைச்சுவையாகக் காட்டப்பட்டது.

நான், உதவி ஆணையாளராக இருந்தபோது, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சம்பவ இடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் சடலத்துக்கிடையே, ஆங்காங்கு மிளகாய்ப் பொடி துாவப்பட்டிருந்தது. என்னுடன் வந்திருந்த உதவி ஆய்வாளர், ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டு, 'சார், அந்தப் படத்தில் கதாநாயகன், காவல்துறை மோப்ப நாய்களை திசை திருப்புவதற்காக பயன்படுத்திய யுக்தி சார் இது' என்றார். பொழுதுபோக்குக்காகவும், மனமகிழ்ச்சிக்காகவும், கேளிக்கையாகவும் நாம் நினைத்திருக்கும் திரைப்படம் என்கிற ஒரு ஊடகத்தில், ஒருவர் புகுத்திய கற்பனைக்காட்சி, நிஜமாக நடந்திருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன், தன் ரத்த சொந்தங்கள் ஒன்பது பேரை மிகக் கொடூரமாகக் கொலை செய்த ஒருவனும், தனக்கு அந்த எண்ணம் ஏற்பட்டதற்கு காரணமாக, ஒரு திரைப்படத்தை தான் சுட்டிக் காட்டியிருக்கிறான்.

சமுதாயத்தைப்பற்றி அறிஞர் ஒருவர் குறிப்பிடும்போது, 'இந்த சமுதாயம் ஒன்றும் அன்னப் பறவையல்ல... நல்லதை எடுத்து கெட்டதை விலக்கித் தள்ள... அகப்பட்டதை அப்படியே கவ்விக் கொள்ளும் காக்கை' என்றார்.

தவறான தொடர்பில் இணைந்த இருவர், அப்பாவி கணவனை, கூலிப்படையின் துணையோடு கொலை செய்யும் கொடுமையைக்கூட ஏற்று, அப்படியே பின்பற்ற இந்த சமுதாயத்தில் பல அறிவிலிகள் இருப்பது, எதை வெளிப்படுத்துகிறது... இந்த சமுதாயத்தில் பரப்பப்படும் நல்ல விஷயங்கள் மட்டுமின்றி, தீய சங்கதிகளும் மக்களின் மனதை, குறிப்பாக, அதிக அனுபவமில்லாத, எதையாவது செய்து தன்னைப் பிரபலபடுத்திக் கொள்ள வேண்டும்; இந்த சமுதாயம் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று எண்ணும் இளைஞர்களின் மனதை வெகுவாக ஆக்கிரமித்து, களங்கப்படுத்தி விடுகிறது.

அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும், ஒரு தனிமனிதனின் கற்பனை தான் காரணமாக இருக்கிறது; பின், அது பலரது கற்பனைக்கு ஆட்பட்டு, வளர்ச்சி அடைகிறது. ஆனால், அதனால் விளைந்த நன்மைகளையெல்லாம், யாரோ ஒரு சிலர், தங்களின் மோசமான கற்பனையில், தன் சொந்த லாபத்துக்காக, தவறாக பயன்படுத்தி, மோசமான விளைவை ஏற்படுத்தி, அந்த தொழில்நுட்பத்தையே குறை கூறும் அளவுக்கு செய்து விடுகின்றனர்.

கற்பனை படைப்பாளிகள், இயற்கை அவர்களுக்கு வரமாகத் தந்த கற்பனை வளத்தை, இந்த சமுதாயத்தில், மனித இனத்தின் மனதைப் பக்குவப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தா விட்டாலும், மன மகிழ்ச்சிக்காகவும், கேளிக்கைக்காகவும் கூட பயன்படுத்தலாம்; மாறாக, அவர்களின் மனதை மாசுபடுத்தப் பயன்படுத்துவது, அந்த இயற்கைக்கு செய்யும் துரோகம்.

இவர்களுடைய கற்பனை ஏன் வன்முறை, பழி வாங்குவது, ஆளைக் கடத்தி சிறை வைப்பது, மிரட்டி பணம் பறிப்பது, கொலை செய்வது, வெடிகுண்டு வைப்பது இவற்றையே சுற்றி வருகிறது? சில நம்ப முடியாத உண்மை வன்முறை சம்பவங்களை, செய்தித்தாள்கள் மிக சுருக்கமாக விவரிக்க பயன்படுத்தும் வார்த்தைகள், 'திரைப்படத்தில் வரும் காட்சி போல' என்பதே!

வாழ்க்கையில் தன் அன்றாட தேவைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாதவன், சம்பாதிக்கும் வழிமுறையைக்கூட தேர்ந்தெடுக்காதவன், பல தீய பழக்கங்களுக்கு அடிமையானவன், தன் தோற்றத்துக்கும், தகுதிக்கும் கொஞ்சமும் ஒவ்வாத உயர்ந்த நிலையில் உள்ள ஒரு பெண், தன்னை விரும்ப வேண்டும், அவளை மணந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவதும், அது இயலாதபோது, தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்வது அல்லது அவளது வாழ்க்கையை முடிப்பது என்ற தகாத முடிவுக்கு போவதற்கு காரணம், 'காதல்' என்ற ஒரு சாதாரண உணர்வுக்கு, நம் கற்பனை படைப்பாளிகள் கொடுத்த அபரிதமான அழுத்தமே!

சமுதாயத்தில் நிகழும் அன்றாட நிகழ்வுகளை கதையாகக் காட்டும் போது, அதில் சுவைக்காக சேர்க்கும் சில மிகைப்படுத்துதல்கள், சமுதாய மக்களின் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

சில சாகச நிகழ்ச்சிகளைக் காட்டும் போது, 'இதை யாரும் உண்மையில் செய்து பார்க்க முயற்சிக்க வேண்டாம்' என்றும், 'அப்படி செய்யும் முயற்சியில் ஏற்படும் ஆபத்தான விளைவுக்கு நாங்கள் பொறுப்பல்ல' என்றும் எச்சரித்த பின் தான் காட்சியைத் துவக்குகின்றனர். அது போன்று எல்லா திரைப்படங்களுக்கும்,தொலைக்காட்சித் தொடர்களுக்கும் முன் எச்சரிக்கை விடுப்பது மிகவும் செயற்கையாகத்தான் இருக்கும். நம் படைப்புகள் எல்லை மீறாமல், உண்மையில் சுவைக்காக அளவோடு சேர்க்கும் கற்பனையைத் தாண்டி, மனதை பாதிக்கும் வக்கிரங்கள் வேண்டாமென்பதே சமூக நலம் நாடும் நல்லவர்கள் வேண்டுகோள்.

இப்போதெல்லாம் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும், வெளியாகும் முன்பே பல எதிர்ப்புகளையும், தணிக்கைகளையும் சந்தித்து தான் வெளியாகிறது. தனிப்பட்ட ஒரு பிரிவினரை அல்லது தொழில் செய்வோரை கேலி செய்வதாகவோ, இழிவுபடுத்துவதாகவோ வசன வரிகள் அமைந்து விட்டால் கூட, சம்பந்தப்பட்டவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பி, அதற்கு தடை பெற்று விடுகின்றனர். ஆனால், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மறைமுகமாக மாசுபடுத்திக் கொண்டிருக்கும் விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

பழங்கால விட்டலாசார்யாவின் மாயாஜால தெலுங்கு படங்களின் மொழிபெயர்ப்பு திரைப்படங்கள், சிறுவர்கள் வட்டாரத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. இன்று வரும் சமூகப்படங்களும், தொலைக் காட்சித்தொடர்களும் அவற்றை மிஞ்சிவிட்டன. பேய்கள் வராத படங்களும் இல்லை; தொடர்களும் இல்லை என்றாகிவிட்டது.

மூட நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் மாந்திரீக காட்சிகளுக்கும் குறைவில்லை. அவற்றையெல்லாம் பார்ப்பவர்கள் என்ன தான் எச்சரிக்கை விடுத்தாலும், 'இப்படியெல்லாம் ஒன்று இல்லாமலா காட்சியாக காட்டுகின்றனர்?' என்று பேச ஆரம்பித்து, அத்தகைய மாந்திரீக பேர்வழிகளைத் தேடிப்போக ஆரம்பித்து விடுவர். பிறகு என்ன... போலி சாமியார்கள் பாடு கொண்டாட்டம் தான்!

கற்பனைக்கு கரை போட்டால் சுவை இருக்காது; கரை கடந்த கற்பனை தான் சுவை என்று வாதிடும் படைப்பாளிகள்,'வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே' என்ற பழந்தமிழ் திரைப்படப் பாடல் வரிகளை நினைவில் கொள்ள வேண்டும்!

அதுபோன்ற விற்பனையின் விளைவு தான், இன்று நாம் காணும் குற்றம் மலிந்த சமுதாயம். குற்ற செயல்முறைகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்வது என்பது, குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் கையாளும் யுக்திகளில் ஒன்று. ஆனால் அது இன்று, கிட்டத்தட்ட பயன்படாத முறையாகப் போய் காவல்துறைக்கு ஒரு சவாலாக இருப்பது, இது போன்ற யுக்திகளின் பரிமாற்றம் தான்.

பொறியியல் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களில் சிலர், தங்களின் ஆடம்பர செலவுக்காக சங்கிலி பறிப்பு குற்றத்தில் ஈடுபடுவதென்பது மிகவும் வேதனைக்குரிய செய்தி. பல நல்ல பயன்களை அளித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக ஊடகம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பல அப்பாவிகளின் வாழ்க்கையை வீணடித்ததையையும், அழித்ததையும், இந்த சமுதாயம் பார்த்தபடி தான் இருக்கிறது.

சுத்தமான சமுதாயத்தை தேடியலையாதீர்கள்; படைப்பாளிகளான நீங்கள் தான் சுத்தமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நீங்கள் விற்பனை செய்யும் உங்களது கற்பனை, இந்த சமுதாயத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தட்டும்.

மா.கருணாநிதி,

காவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு),

இ.மெயில்: spkarunagmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement