Advertisement

பதவிக்கு தயாரா நீங்கள்

நம்மில் பலருக்கும் இந்த நாட்டின் உயர்பதவியில் அமர வேண்டும் என்ற கனவு இருக்கும். ஒவ்வொருவருக்கும் அந்த கனவு நிறைவேறும் நாளில்தான் இந்த வாழ்வு நிறைவுபெறும். அந்த
கனவினை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் ஏற்படும் போதெல்லாம் நம்முடைய முயற்சிகள் எல்லாம் தீவிரம்அடையும். நிச்சயமாக நாம் அந்த பதவிக்கு தகுதியானவராக மாறி இருக்கும்போது அந்த பதவி வரும். நமது தகுதிகளே அந்த பதவிக்கான பெருமையைப் பெற்றுத்தரும். அதைப் பொறுப்புடன் நிறைவேற்ற பாடுபட வேண்டும்.
பதவிகள் என்பது அலங்காரமல்ல. அது ஒரு பொறுப்பு. நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு அழகிய வாய்ப்பு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் அந்த பதவியில்
அமர்ந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பொறுத்து அவரோடு நம்மை ஒப்பிடத் தொடங்குவார்கள்.நாம் வேகமாக செயல்பட தொடங்கினால் அந்த வேகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். நமக்கு முன்னால் அந்த பதவிக்கு ஆசைப்பட்டு காத்திருந்தவர்கள், கிடைக்காத ஏமாற்றத்தால் ஏதேனும்ஒரு சிறிய வாய்ப்பு வருமா ? அதன் மூலமாக நம்மை எவ்வாறு பலவீனப்படுத்த முடியும் என்ற யோசனையோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை சவால்களையும் முறியடித்து சரியானவர்களை அருகிலே வைத்துக் கொண்டு செயலாற்றுவதே மிகச் சிறந்த தலைவனுக்குரிய குணநலனாகும்

“அந்த சீட்ல எத்தனை முக்கியமானவங்க உங்காந்திருந்தாங்க”
“கொஞ்சமாவது நமது பதவிக்கு நாம் பெருமை சேர்க்கணும்”
என்றவாறு பல பேச்சுக்களை நாம் கேட்டுக்கேட்டு சலித்துப் போயிருப்போம். நம்முடைய
பதவிகளைக் காப்பாற்றும் பொருட்டு நாம் நடக்கத் தொடங்கி, நம்முடைய சுயமரியாதையை அடகு வைக்க ஆரம்பித்தோம் என்றால் நிச்சயமாக நம்மால் மிகச்சிறந்த நிர்வாகியாக இருக்க முடியாது.

சுயத்தை இழந்தோம் : பதவிகள் என்பது முகங்களல்ல
முகமூடிகள்…அவ்வப்போது கழட்டி எறியுங்கள்
(சதா பாரதி)
நம்மில் பலரும் பதவிகளுக்குள் முகம் புதைத்து தங்களது உண்மையான சுயத்தை இழந்து நிற்கிறோம். நம்முடைய பதவிக்கு கிடைக்கும் மரியாதை வேறு. பதவிகளைத் தாண்டியும் நமக்கு கிடைக்கும் மரியாதை வேறு. அந்த மரியாதைதான் நம்மை நம் சுயத்தை பலருக்கும் அறிமுகம் செய்கிறது. அப்படிப் பட்ட மரியாதையைப் பெற வேண்டும் என்றால் நாம் பதவிகளைத் தாண்டிய மனிதர்களாக உலா வருவது அவசியமாகிறது. தலைவர்களாக உலா வந்த பலரும் அவ்வாறே நடந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.தலைமை என்பது ஒருவகை முள்கிரீடம். தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பாக அந்த தலைமையை நினைப்பவர்கள் ஒருபோதும் தவறு செய்வதில்லை. மாறாக அதை தனது அதிகாரத்தை பயன்படுத்த கிடைத்த வாய்ப்பாக கருதுபவர்கள்நிச்சயமாக காலத்தால் மறக்கடிக்கப்பட்டே அழிந்துபோவார்கள் என்பதற்கு வரலாறே சாட்சியாக நிற்கிறது. தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்கள் விடுதலைக்காகவே கழித்த நெல்சன் மண்டேலா, தனது சொத்தையெல்லாம் நாட்டு விடுதலைக்கு இழந்து நின்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை, சிறைக்குள்ளே தொழுநோயால் பீடிக்கப்பட்ட சுப்ரமணியம் சிவா, கடைசி நாட்களில் கவனிக்க ஆளின்றி அரசு மருத்துவமனையில் மரணமடைந்த கக்கன், கல்விக்கண் திறந்த காமராஜர், திருப்பூர் குமரன், துாக்குக்கயிறைக்கூட மகிழ்ச்சியாகவே முத்தமிட்ட பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள், வறுமை தன்னை வாட்டியபோதும் கூட பாடல்களாலே பரங்கியரைப் பதற வைத்த பாரதி என்றே நீளும் பட்டியல்கள் நமக்குச் சொன்ன பாடம் இவர்கள் யாரும் அதிகாரத்தால்மக்கள் மனதில் இடம்பெறவில்லை.

மரியாதை : பதவிகளைத் தாண்டிய மரியாதை இவர்களிடம் இருந்தது என்பதே உண்மையான ஒன்றாகும். தலைமை பதவிக்கு வர விருப்பமுள்ளவர்கள் முதலில் கீழ்படியக் கற்றுக் கொள்ள வேண்டும். எளிய மனிதர்களின் வாழ்வினை புரிந்துகொண்டு அந்த வாழ்க்கையினை தன் வாழ்நாளில் கடைபிடித்து வாழ முயற்சிக்க வேண்டும். அவ்வாறு வாழ்ந்தவர்கள்நிலையான வெற்றிகளையும் அன்பையும் அனைவரிடமும் பெற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
நம்முடைய முயற்சிகளில் பெரும்பாலும் வெற்றி பெறக் காரணம் நாம் துணிந்து எடுக்கும் சில முயற்சிகளே ஆகும். அந்த முயற்சிகள் சில நேரங்களில் தவறாகவும் போவதுண்டு. ஆனால்
நிச்சயமாக அது வீணாகப் போவதில்லை. ஏதேனும் ஒரு நல்ல பாடத்தை நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டே செல்லும். பல தருணங்களில் நாம் தோல்வியாக நினைக்கும் நிகழ்வுகளை
யோசித்துப் பார்க்கும்போது நமக்கு ஒன்றுமட்டுமே ஞாபகம் வரலாம்.அந்த தோல்விக்கு காரணம் நம்முடைய சோம்பலும், சரியான வாய்ப்பு கிடைத்தும் நாம் பயன்படுத்தாமல் போனதாகவும்இருக்கலாம். அந்த நேரத்தில் நாம் இப்படியெல்லாம் செய்திருந்தால் வெற்றிபெற்றிருக்கலாம் என்று ஒவ்வொரு நிகழ்வும் கடந்த பின்னரே ஞானோதயம் பிறக்கும். நல்ல தலைவனுக்குஉரிய குணங்களில் நிச்சயமாக இருக்க வேண்டிய ஒன்று சரியான நேரத்தில் திடமான முடிவெடுப்பதே ஆகும். அதே நேரத்தில் எடுத்த அந்த முடிவினை நோக்கி அனைவரையும் நம்பிக்கையோடு அழைத்துச் செல்வதுமே ஆகும்

வெற்றியும் தோல்வியும் : மிகப்பெரிய வெற்றி என்று நாம் கொண்டாடும் பலதும் நமக்கு
உண்மையான மகிழ்ச்சியைக் கொடுத்திருக்காது. பலராலும் தோல்வி என்று முத்திரை குத்தப்பட்ட ஒன்று நமக்கு நன்மையை வழங்கியிருக்கும். அதை விட மிகச்
சிறந்த அனுபவத்தைப் பெற்றுத் தந்திருக்கும். உலகிலேயே தேர்தல் களத்தில் மிக அதிகமான தோல்விகளைச் சந்தித்தவர் என்றால் அது ஆபிரகாம்லிங்கனாகத்தான் இருக்கும்.
ஆனால் அவரை இந்த மானுடம் உள்ளவரை யாரும் மறக்கமுடியாது.
அதுபோலவே மிகப்பெரிய வெற்றி என்று பலராலும் கொண்டாடப்பட்ட தருணங்களைச் சந்தித்தவர்கள் தன்னுடைய சுயத்தையும், மகிழ்ச்சியையும் இழந்து போலியான வேஷம் கலைந்து தற்கொலை போன்ற மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டனர் என்பதையும் இந்த
உலகம் அறியும். அதனால் இந்த அழகிய வாழ்வு ஒரு அற்புத வரம் போன்றது. அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டாலே போதும் நாம் பலருக்கும் வழிகாட்டலாம்.
இங்கே வாழும் அனைவருக்கும்ஏதேனும் இலக்கு இருக்கும். இலக்குகளை நாம் நிர்ணயித்துவிட்டு அதை நோக்கி பயணிக்க வேண்டும்.இலக்கியம் என்ற சொல்லக்கு கூட இலக்கு + இயம் என்றே பிரித்து ஏதேனும் இலக்கை நோக்கி அது இயம்பக்கூடியதாக இருக்க வேண்டும் என்றே
நினைக்கிறார்கள். இலக்கியம் போலவே வாழ்க்கை என்பதால் நாமும் நம்முடைய இலக்கினை நோக்கிய அழகிய பயணத்தைத் தொடங்கிவிடுதல் நலமான ஒன்றாகிவிடும். பெரும்பலான நேரங்களில் வெற்றி என்ற ஒன்றை நோக்கிய பயணத்திலே பலரும் ரசிக்க வேண்டிய நல்ல வாழ்க்கையையும் வாழ்வையும் இழந்துவிட்டு பின்னர் வருத்துப்படு
வதும் உண்டு “ எவ்ளோ தியாகம் செஞ்சேனு தெரியுமா?. அப்பவே என்னால அப்படி வாழ்ந்திருக்க முடியும். ஆனால் எல்லாம் உங்களுக்காகவே” என்றபடி பேசும் பலரையும் பார்த்திருப்போம். அவர்களின் தியாகங்கள் மதிக்கப்பட வேண்டியதுதான். அதற்காக கடந்து வந்த பாதையை ரசிக்காமல் நாம் வாழ்க்கைச் சுற்றுலாவை ஒரு போதும் ரசித்துவிட இயலாது.
வெற்றி பெற்றவர்கள்

“ காமராசர் என்ன படிச்சாரு?” : இது பலரும் பல நேரங்களில் கேட்கும் கேள்வி. பலரும்
தங்களையோ அல்லது தங்களைச் சார்ந்தவர்களையோ நியாயப்படுத்துவதற்காக கேட்கும் கேள்வி. ஆனால் அவர் கல்வி கற்கவில்லை என்றால் நம்மால் நம்ப இயலுமா? அவர் படிக்க
வில்லை என்ற வகையில் மட்டுமே இன்னமும் பார்த்து கொண்டிருந்தோம் என்றால் அதைவிட மடத்தனம் வேறேதுமில்லை. கல்வியறிவை நம் அனைவருக்கும் வழங்கிய
கல்விக்கண் திறந்தவர் என்றே அவரை நாம் அறிமுகம் செய்கிறோம். உண்மையில் படித்த பலராலும் சாதிக்காத ஒரு விஷயத்தை அவர் செய்துகாட்டினார் என்பதே அவருடைய தலைமைப்பண்புக்கு சான்று. அவரிடமே கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு “படிக்காத என்னையே பல நேரங்களில் நீங்கள் சிறந்த நிர்வாகி என்று புகழ்கிறீர்கள். சரியாக பள்ளிப்படிப்பை முடிக்காத நானே இத்தனை பெரிய காரியங்களை செய்ய தொடங்கும்போது, இப்போது அந்தக் கல்வியை தங்கு
தடையின்றி படிக்கும் நம் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மிகச்சிறந்த தலைவர்களாக வருங்காலத்தில் மலர வாய்ப்புள்ளது. எனவேதான் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நான் பள்ளிக்கூடங்கள் அதிகமாக திறக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டேன்” என்றார். வெற்றி பெற்ற ஒருவருடைய ஏதாவது ஒரு குணத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அதன் வாயிலாக நாமும் அதே போல வெற்றி பெற்றுவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கை பலருக்கும் உண்டு.
மிகப்பெரிய பதவிகளில் உள்ளவர்களைப் பார்க்கும்போது
நம்முடைய மனதிற்குள்ளே நாமும் அவரைப்போல வர வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்புதான். அந்த இடத்தை அடைய வேண்டும். அதற்காக நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். நம்முடைய முயற்சிகளையும் பணிகளையும் அதிகப்படுத்தி உழைக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர் இருக்கும் இடத்தை எப்படியாவது அபகரித்துவிட்டு அந்த இடத்தை நாம் பிடிக்க வேண்டும் என்ற கீழான யோசனைகள் எப்போதும் ஒரு நல்ல தலைவனுக்கு வரக்கூடாது. ஒருவரை தள்ளிவிட்டு நாம் ஓடுவதில் சுகமேதும் இல்லை. தடுக்கி விழுந்தவனைக்கூட ஒரு கையால் துாக்கிவிட்டு அவனுக்குரிய வாய்ப்புகளையும் தந்து நாம் வளர்வதிலேதான் உண்மையான வளர்ச்சி இருக்கும்.

-முனைவர் நா.சங்கரராமன்
உதவி பேராசிரியர்
எஸ்.எஸ்.எம். கலைஅறிவியல் கல்லுாரி
குமாரபாளையம்
99941 71074

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement