Advertisement

சிக்கனமே சிறந்த மூலதனம்

மனித வாழ்வின் மேன்மைஅறத்தால் நிர்ணயக்கப்பட்டுஇருந்தாலும், அடிப்படை
பொருளால்தான் அமைந்திருக்கிறது என்பதை “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு” என்ற வரிகளால் திருவள்ளுவர் தெளிவுபடுத்துகிறார். ஆதலால்தான் “செய்க பொருளை” என்ற குறளின் வரிகளுக்கேற்ப “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற அவ்வைப் பாட்டியின் வாக்கு களுக்கேற்ப, மனிதன் தேனீயாய் பறந்து, எறும்பாய் ஓடி பணத்தை சம்பாதிக்கின்றான்.பணத்தின் முக்கியத்துவம் அதை ஈட்டுவதைவிட அதை எப்படி செலவு செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. செலவு செய்வதில் நான்கு நிலைகள் உண்டு. அதில் முதல் நிலை சிக்கனம். இரண்டாம் நிலை கஞ்சத்தனம். ஆடம்பரமும், ஊதாரித்தனமும் மூன்றாம் மற்றும் நான்காம் நிலைகளைப் பெறுகின்றன. நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையில்லாத செலவுகளை நீக்கிவிடுவதுதான் சிக்கனம். சிக்கனம், சேமிப்பாய் மாறும்.
வாழ்க்கைக்கு தேவையானவற்றிற்கு கூட செலவு செய்யாமல் இருப்பது கஞ்சத்தனம். கஞ்சனின்பொருட்கள் நிறைய காலாவதியாகிப்போவதுண்டு. மற்றவர்கள் நம்மை உயர்வாக எண்ண
வேண்டும் என்பதற்காக வலிமைக்கு அதிகமாக செலவு செய்தால், அது ஆடம்பரம். ஆடம்பரம்,
மனிதன் கடனாளி ஆவதற்கு அறிகுறி. எதைக்குறித்தும் கவலைப்படாமல் தன் மனம்போன போக்கில் செலவு செய்வது ஊதாரித்தனம். ஊதாரித்தனம், வாழ்வின் அழிவிற்கு அஸ்திவாரம்.
சேமிப்புதான் சிக்கனத்தின் அடித்தளம். வியர்வை சிந்தியும், தனது சிந்தனைகளைச் செதுக்கியும், குழந்தைகள் பாராது, சில நேரங்களில் குடும்பம் பாராது உழைத்து உருவாக்குகின்ற பணத்தை வீட்டிற்கும், நாட்டிற்கும் உபயோகப்படும் வகையில் சேமிக்க வேண்டும். எதிர்காலத் தேவையினை கருத்திற்கொண்டு சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ளும்
மக்கள் சிறுகச் சிறுக சேமிப்பது நடைமுறைப் பழக்கமாகும்.சிக்கன மாநாடு
சிக்கன வாழ்வை வாழாதவர்கள், சேமிப்பை பழகாதவர்கள் அவசரதேவைகளுக்கு மட்டுமின்றி, அன்றாடத் தேவைகளுக்காகவும் கடன்பட நேர்வதுண்டு. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 1924ஆம் ஆண்டு சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு இத்தாலியின்
மிலன் நகரில் அரங்கேறியது. இம்மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்ட சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகளால், உலக சிக்கன தினம் என ஒரு தினம் கொண்டாப்பட வேண்டும் எனவும், இத்தினத்தில்சேமிப்பு, சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் சிக்கனமும், சேமிப்பும் பொருளாதாரச் சமநிலையை பேணுகின்றன என்ற கருப்
பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் நாள் உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகிறது.

உலகின் தலைச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்திற்கும்
அதிகமான கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தந்தவர். அவரிடமிருந்த சிறந்த பண்பு, பணத்தை சேமிப்ப தாகும். அவர் கண்டுபிடித்த படைப்புகளை, இவ்வுலகறியச் செய்வதற்கு அவரது சேமிப்பே துணையாயிருந்திருக்கிறது. அதன்மூலம் அவர் உலகில் அழியாப் புகழ் பெற்று வாழ்கிறார். நம்மைச் சுற்றியுள்ள சிற்சிறு உயிரினங்கள் கூட எதிர்காலத் தேவைக்கு சேமிக்கப் பழகுவது உண்டு. அதில் தேனீயும், எறும்பும் கண்முன்னே தெரிகின்ற அற்புதங்கள். மழையின்
போது விழும் அருவி குளத்தில் சேமிக்கப்படுவதும், விளைச்சலின் ஒரு பகுதியை தங்களின் வாழ்விற்காக சேமிப்பதும் இந்தியப் பண்பாடு. இந்திய வரலாற்றில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த கீர்த்தி மேகவர்ன மன்னரால் பயறு, உளுந்து, சாமை, போன்ற பயிர் தானியங்கள் சேமிக்கப் பட்டதாக தோணிக்கல் சிலாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் சிக்கன சட்டம் : சிக்கனம் இன்றைய கால கட்டத்தில் பணத்தையும், தாண்டி எரிபொருள், நீர், மின்சாரம் போன்றவற்றிற்கும் பொருந்தும். சிக்கனமாய் நீரை செலவழிப்பதோடு, சொட்டுச் சொட்டாய் இணைப்புகளிலிருந்து வெளியேறும் நீரை நிறுத்தினாலே மீண்டும் நாம், நமது மூதாதையர் போல் குளத்து நீர் பருகலாம். ஆற்று நீரை அள்ளிக் குடிக்கலாம். அருகிலிருக்கும் கடைக்குச் செல்ல கை வீசி நடந்து சென்றால் எரிபொருளின் விலை குறையும். ஆரோக்கியம் பெருகும். அறையைவிட்டு வெளியே செல்லும்போதெல்லாம் விளக்கினையும், மின்விசிறியையும், கம்ப்யூட்டரையும், நிறுத்திவிட்டுச் சென்றால் மின்சார வளம் மிகுவதோடு,
வாழ்வின் சேமிப்பு வளமும் கூடும். நேரத்தை திட்டமிட்டு செலவிடுவதும் சேமிப்பேயாகும். இவ்வாறு ஒரு குடும்பத்தில் மேற்கொள்ளும் சிக்கனம் தனிமனித வாழ்வில்
மட்டுமல்லாமல், தேசத்தின் வளர்ச்சியிலும் அது துணைநிற்கும். சீன அரசு 2009 அக்டோபர் 28ல் எரிபொருள் சிக்கனத்திற்காக ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஒரு நாட்டின் தொலைநோக்கு திட்டத்திற்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. பல்துலக்கும் வேப்பங்குச்சியை கூட சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென்றார் மகாத்மா காந்தி. நித்தமும் தனது நாட்குறிப்பில் தனது செலவுகளை எழுதிவைத்து அதில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பவர்கள் சிறந்த குடிமகன்களுக்கு எடுத்துக்காட்டு.புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதைப்போல செல்வந்தர்களைப் பார்த்து அளவுக்கதிகமாகச் செலவு செய்தால் கடனாளியாவது உறுதி.

'ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை'

என்ற குறளின் மூலம், நமது வருவாய் அதிகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. செலவு அதிகமாகப் போய்விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என எச்சரிக்கிறார்
திருவள்ளுவர். அதையும் மீறி செலவு செய்தால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் அவற்றை ஒவ்வொன்றாய் இழக்க நேரிடும்.

பொருளின் அருமை : பொதுவாக உழைப்பவனுக்கு பொருளின் அருமை தெரியும்.
அதனால் அவரிடம் சிக்கனம், அதற்கான சிந்தனை, சீர்திருத்த நடவடிக்கைகள் நிறைய காணப்படும். ஆனால், ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அத்தகைய பண்பு இருந்தால் மட்டும்தான் அக்குடும்பம் வளர்ச்சியடையும். சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் இவையனைத்தும் ஒரு குடும்பத்தில் நிலவ வேண்டுமெனில், 'மனவளம்' தான் வேண்டுமென வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகிறார். நவீன உலகில் வாழ்க்கை நடைமுறைகள் நிறைய மாறினாலும், சேமிப்பிற்கு அடித்தளம் மனித மனோநிலைதான். ஆடம்பரமான செலவு என்ற மனோநிலையை மாற்றி தேவைக்கேற்ப செலவு என்ற மனோநிலையைக் கையாண்டால் சேமிப்பது
நிச்சயம். இதையும் மீறி கடனில் வாழ பழகிவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு ஆளாகவேண்டியிருக்கும். “கடன் வாங்குபவனாகவும் இருக்காதே, கடன் கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில் அது நண்பனையும், பணத்தையும் இழக்கச் செய்வதோடு குடும்
பத்தின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும்” என்கிறார் உலகமகாகவி ஷேக்ஸ்பியர்.
சிக்கனம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையாயிருப்பினும், ஒரு குடும்பமாயிருப்பினும், ஏன்? ஒரு தேசமாயிருப்பினும் அது ஒரு அறநெறி.சிறு குழந்தைகளிலிருந்தே, குழந்தைகளை சேமிக்கப் பழக்கி, அவர்களின் சேமிப்பினை எதிர்பாராத தேவைகளுக்கு அவர்களையே பயன்படுத்தி மகிழச் செய்வதன் மூலம் ஒளிமயமான குடும்பங்களை உருவாக்குவோம். “சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்” என்ற பொன்வரிகளுக்கு பொருந்தி வாழ்வோம்.

ஆர். திருநாவுக்கரசு
காவல் துணை ஆணையாளர்
சென்னை
thirunavukkarasuipsgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ஒரு வார்டு கவுன்சிலரே 10 கார்களில் வலம் வருவதை தடுத்து நிறுத்தினாலே மா பெரும் சிக்கனம். இதை சட்டமாக்கியதிலே மக்கள் சந்தோச படுவார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement