Advertisement

விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள்!

போலி சாமியார்களிடம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அவர்களை நம்ப வேண்டாம். எவ்வித தகுதி, பாரம்பரியமும் இல்லாத அந்த போலிகள், தங்கள் செயல்களால், உண்மையான சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளுக்கு, அவப்பெயரை ஏற்படுத்தி
வருகின்றனர்.போலி சாமியார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, தகுந்த சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற குரல், ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.
உண்மையான இறை பக்தன், தன்னை கடவுளுக்கு ஒப்பாகவோ அல்லது தன்னிடம் சக்தி இருப்பதாகவோ, பாமர மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
இல்லற வாழ்க்கையையும், அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை, துறவியர் என்கிறோம். சமுதாயத்தை விட்டு ஒதுங்கி, காடு மலைகளில் தவம் செய்பவர்களை, முனிவர்கள் என, கூறுகிறோம்.
வேதங்களை அறிந்து, உலக வாழ்வியல் அறிவை பெற்றவர்களை, ரிஷிகள் என்றும், இந்த மூன்று நிலைகளையும் கடந்து நிற்பவர்களை, சித்தர்கள் என்றும் கூறுகிறோம்.
இந்நிலையில், இப்போது இருக்கும் சாமியார்கள் எங்கிருந்து வந்தனர் என்ற கேள்வி எழுகிறது.நாட்டில் உலவும் போலி சாமியார்கள், இரண்டு வகையாக உள்ளனர். ஒரு வகை, குட்டு வெளிப்பட்டு மாட்டிக் கொண்டவர்கள். இன்னொரு பிரிவினர், இன்னும் குட்டு வெளிப்படாமல், தப்பித்துக் கொண்டிருப்பவர்கள்.
சாமியார்களை தீவிரமாக கண்காணித்தால், இப்போது இருக்கும் ஒட்டுமொத்த சாமியார்களும் மாட்டிக் கொள்வர் என்பது நிச்சயம். 50 கி.மீ.,க்கு ஒரு போலி சாமியார். இவர் ஏரியாவுக்குள் அவர் வர மாட்டார்; அவர் ஏரியாவுக்குள், இவர் வர மாட்டார். இது தான், இத்தகைய சாமியார்களின், தொழில் கொள்கை.
மக்களை மூளைச்சலவை செய்து, முட்டாளாக்கும் கும்பல்கள், ஹிந்து மதத்தில் மட்டுமல்ல, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்திலும் இருக்கின்றனர். ஏமாறுபவன் இருக்கும் வரை, ஏமாற்றுபவன் இருப்பான்.பெரும்பாலான சாமியார்களின் மோசடி நடவடிக்கைகளால், உண்மையான சாதுக்கள், ஞானிகள், துறவியர் என, மக்களுக்கு நன்மையை மட்டும் செய்து வந்த, காஞ்சி பெரியவர் போன்றவர்களின் ஆன்மிக தொண்டுகளை கூட, சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்க வைக்கிறது.
உண்மையான சாமியாருக்கு, தகுதிகள் ஏதுமிருக்க வேண்டுமா என, கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியாது.தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான், பிறரின் ஆரவாரமான வார்த்தை ஜாலத்திற்கு மயங்கி, அவர்களை கடவுளுக்கு நிகராக நினைக்க ஆரம்பித்து, தொழுது, அப்படியே அவர்
களின் ஒவ்வொரு அசைவுக்கும், அடிமையாகி விடுவர்.நம் மக்களின் மன நிலை, இப்போது அப்படி தான் உள்ளது.ராஜஸ்தானில் ஆசிரமம் நடத்தி வந்த, பிரபல சாமியார், பலாஹாரி மஹராஜ், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 21 வயது சட்டக்
கல்லுாரி மாணவி, புகார் அளித்துள்ளார்.

யாரோ தெரியாத, தொடர்பே இல்லாத ஒரு மாணவியை, அந்த சாமியாரே தேடிப்போய் பலாத்காரம் செய்யவில்லை. அவளின் பெற்றோர், 20 ஆண்டுகளாக, இவரின் ஆசிரமத்திற்கு பணிவிடை செய்திருக்கின்றனர்.இந்த சாமியாரின் கட்டளைப்படி தான், தன் மகளை, சட்டம் படிக்கவே வைத்துள்ளனர். சட்டம் படித்த பெண்ணுக்கு, நீதிபதி பதவி வாங்கித் தருவதாக ஆசைக்காட்டி, மோசம் செய்ததாக புகார் அளித்துள்ளனர்.
எத்தனை முறை அடிபட்டாலும், கேவலப்பட்டாலும், அசிங்கப்பட்டாலும், ஏமாற்றப்பட்டாலும், நம் மக்கள் திருந்துவதாக இல்லை. திருந்தாத மக்களை மூடர்களாக வைத்து, சாமியார்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.இந்த மாதிரி சம்பவங்களால், ஆன்மிகவாதிகள் என்றாலே, 'அலர்ஜி'யாகி விடுகிறது.அந்த காலத்தில், மடம், கோவில் மற்றும் ஆசிரமம் போன்றவை, ஆன்மிகத்தை மட்டும் தேடி, அதை உணர்ந்து, அதன் மகிமையை மக்களிடம் கொண்டு சேர்க்கும்
இடங்களாக இருந்தன.


நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த, காஞ்சி மஹா பெரியவர், நடத்திய அற்புதங்கள் ஆயிரம். இறைவனின் அருளால், பல அற்புதங்களை நடத்தியவர், அவர். சூழ்நிலைகளை பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே, தன் சக்திகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்தியவர்.
அதனால், மக்கள் நிம்மதியும், அமைதியும் அடைந்தனர் என்பது நிதர்சனம். ஆனால், இக்கால கட்டத்தில், மடம், சாமியார்கள், ஆசிர்வாதங்கள் என்பவை, எதை நோக்கி போகின்றன?
எதற்காக, அவர்கள் இந்த வேடமணிந்து உள்ளனர்; யாரை காப்பாற்ற இந்த மடங்கள் நடத்தப்படுகின்றன; யாருடைய ஆதரவு கையில் இருக்கிறது என்பதெல்லாம், மக்களுக்கும் தெரியும்!தெரிந்திருந்தும் வெளிச்சத்தில் மாட்டி, தன்னை இழக்கும் விட்டில் பூச்சிகளாக, மக்கள் ஏன் இப்படியான ஆசாமிகளிடம் மாட்டிக் கொள்கின்றனர்?
அந்த காலத்தில், சாமியார்கள், நல்லவர்களாக வாழ்ந்து, நல்ல விஷயங்களை மக்களுக்கு, ஆசியும், அருளும் அறிவுரையுமாக வழங்கினர். மக்களும் அறிவுரையை ஏற்று, தப்பு காரியங்கள் செய்யாமல், தவறான பாதையில் செல்லாமல், அமைதியாக வாழ்க்கை நடத்தினர்.
அப்போது, எங்குமே போலியோ, மோசடியோ, அசிங்கமான பலாத்காரமோ நடைபெறவில்லை. ஆனால் இன்று...மக்களின் மனதில் குப்பை. எப்படியாவது மற்றவனை அழித்து முன்னேற வேண்டும் என்ற துடிப்பு. எந்த குறுக்கு வழியாக இருந்தாலும், முன்னேறி விட வேண்டும் என்ற வெறி...
இதற்காக, அவர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடாதோ, அத்தனையையும் செய்ய முனைகின்றனர். அதனால் ஏற்படும் மன அழுத்தம்... என்ன செய்கிறோம் என, பகுத்தறிவோடு ஆராய முடியாத அளவிற்கு ஓட்டம். அதனால், மோசடி சாமியார்களிடம்
தஞ்சம் அடைகின்றனர்.

போலி சாமியார்களும், மக்களின் கெட்ட எண்ணத்தை போக்கி, நல்வழிப்படுத்துவதற்கு பதில், இத்தகையவர்களின் அதி பயங்கர வெறியை, நெய் ஊற்றி, எரிய வைத்து குளிர் காய்கின்றனர்.இதில் நெருப்பாக அலைபவனை குற்றம் சாட்டுவதா... அந்த நெருப்பை அணைந்து விடாமல், கொழுந்து விட்டு எரிய செய்து, குளிர் காய்பவனை குற்றம் சொல்வதா?
பிரச்னையின் ஆரம்ப புள்ளி எங்கிருக்கிறது என அறிந்து, தெரிந்து, அதை அழித்தால் போதும்.இத்தனை போலி சாமியார்கள் உருவாக காரணம் என்ன என்பதை, நம்மைப் போல, சாதாரண மக்கள் ஒரு கணம்... ஒரே ஒரு கணம் சிந்தித்தால் போதும்.போலி சாமியார்களை, அடுத்த வினாடியே ஒழித்து விட முடியும்!மத விஷயம் மற்றும் வழிபாட்டு முறைகளை, இவர்களிடம் போய் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?
சாமியார்கள், மிகுந்த பேச்சு திறமை கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்த வார்த்தை ஜாலங்களில், சில பெண்கள் புத்தி பேதலித்து விடுகின்றனர். மிகுந்த மன தைரியம் கொண்ட பெண்கள், தங்களுக்கு ஏற்படும் பிரச்னை, அதனால் ஏற்படும் மன வேதனை போன்றவற்றின் காரணங்களை கண்டுபிடித்து, தன்னம்பிக்கையோடு
போராடுகின்றனர்.

அது தான் புத்திசாலித்தனம்!எந்த காரியத்தையும், தைரியமாக முன்னின்று அலசி, ஆராய்ந்து, அந்த வினாடியிலேயே அந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய பெண்கள், தம் நிலை மறந்து, சாமியார்களிடம் தஞ்சமடைவது
தவறானது.எந்தக் காரியத்தையும் அதிக கவனம் எடுத்து, ஒருமுக தன்மையோடு செய்யும் போது, தீர்வு ஏற்பட்டு விடும் என்பதை தெரியாதவர்களா பெண்கள்?சித்து வேலை காட்டும், குண நலன் சார்ந்த, மன நோய்கள் கொண்ட சாமியார்களிடம், தீர்வுக்காக கையேந்தி, பின், தங்கள் வாழ்க்கையையே தொலைப்பது என்ன நியாயம்?ஆன்மிக அதிசயம் என்ற பெயரில், பல சித்து வேலைகளை காட்டி, பெண்களை மயக்குவதை, பழகி வைத்திருக்கின்றனர். இவர்களுக்குள் உள்ள ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா... பெண்களின் அடிப்படை நம்பிக்கையான பக்தியையும், பயத்தையும், மூலதனமாக்கிக் கொண்டவர்கள் என்பது மட்டுமே.
இல்லாத மனசாட்சி உறுத்துவதாக நினைத்து, மன அமைதிக்காக பல குற்றங்களை செய்பவர்கள். இவர்களிடம் தஞ்சம் புகுவதால், போலி சாமியார்கள் உருவாக்கப்படுகின்றனர்.வாழ்க்கை நெறியில் நியாயமான, இயல்பான குணத்தோடு வாழும் போது, சாமியார்கள் நம்மை நெருங்க முடியாது. மத பாரம்பரியத்திற்கு உட்படாத, சர்ச்சைக்கிடமான வகையில் செயல்படும் சாமியார்களிடம், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இது தான், போலி சாமியார்கள் பிரச்னைக்கு தீர்வு.
இ - மெயில்: rajimani1418gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தரம்கெட்ட சாமியார்கள் தான் இன்று தரணியெங்கும்.

 • Baranidharan Kalastri - chennai,இந்தியா

  அழகிய ஆழ்ந்த விழுமங்களுடன் இருந்த நமது சனாதன தர்மத்தினை கிறித்துவர்களுடன் சேர்ந்து புளுகி சிறுமைபடுத்திய ஈவேரா மற்றும் அவரது வழித்தோன்றல்களின் உபயம் இன்றைய நிலை. ஆனால் அதைப்பற்றி யாரும் விவாதிப்பதில்லையே. தொடர்ந்து இந்துமதத்தினையும் இந்து பண்டிகைகளையும் அசிங்கப்படுத்தும் அரசியல் விபசாரிகளை யாரும் கண்டித்து எழுதுவதில்லையே.

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  நிச்சயம் உரத்த சிந்தனை செய்ய வேண்டிய விஷயம் .நன்றி.

 • Senthil - Bangalore,இந்தியா

  இன்றைய சாமியார்களின் ஒரே நோக்கம் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து பணக்கார வாழ்க்கை வாழ்வது, இதில் அரசியல் வாதிகளை மிஞ்சி விட்டார்கள். ஆனாலும் பணத்துக்கு ஆசை படாத உண்மையான சாமியார்களும் உண்டு என்பதையும் மறுக்க முடியாது.

 • NRK Theesan - chennai,இந்தியா

  பகுத்தறிவோடு ஆராய முடியாத அளவிற்கு ஓட்டம்?பகுத்தறிவு என்ற பெயரில் போலி பகுத்தறிவுவாதி நாயக்கன் வளர்ப்பு மகள் என்று பெண்டாளவில்லை ?உயிர் கொடுத்த மகளை மகளே இல்லை என்று போலி பகுத்தறிவு கட்டுமரம் அடுத்தவன் மனைவியை கணவன் உயிருடன் இருக்கும் பொழுதே ஆடடையாய் போட்ட கூத்தாடி பகுத்தறிவுவாதி நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல என்று சொன்ன அண்ணா என்று சொன்னவளை ஆட்டையை போட்ட போலி பகுத்தறிவுவாதி மிகுந்த பேச்சு திறமை கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்த வார்த்தை ஜாலங்களில், சில பெண்கள் புத்தி பேதலித்து விடுகின்றனர்.மிகுந்த மன தைரியம் கொண்ட பெண்கள்,(கூடையில் எந்தப்பூ ) தங்களுக்கு ஏற்படும் பிரச்னை, அதனால் ஏற்படும் மன வேதனை போன்றவற்றின் காரணங்களை கண்டுபிடித்து, தன்னம்பிக்கையோடு போராடுகின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement