Advertisement

இல்லற வாழ்வில் இனிது பயணிக்க!

இல்லற வாழ்க்கை என்பது கணவன், மனைவி வாழ்நாள் முழுவதும் அன்புடன் ஒருவருக்குஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் இருந்து அறவாழ்க்கை மேற்கொண்டு வாழ்வதாகும். அன்று இருந்த தலைமுறை நடத்திய இல்வாழ்க்கைக்கும், இன்றைய இளைய தலைமுறை நடத்தும் இல்வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. திருமணம் என்பது ஆயிரம் காலத்துபயிர் என்றும், இன்னார்க்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்த உறவு என்றும், முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசீர்வதித்து ஏற்படுத்தப்படும் இந்த உறவு ஆயுள் முழுவதும் பிரிக்க முடியாத பந்தம் என்றும், உணர்வு பூர்வமாக கருதப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த தெய்வீக பந்தத்தில் நம் கலாசாரம், பண்பாடு மற்றும் குடும்பத்தின் கவுரவம் அனைத்தும் சார்ந்திருந்து வந்துள்ளது. திருமண வாழ்க்கையானது அன்பு, பற்று, பாசம் ஆகியவற்றால் பின்னப்பட்ட ஒரு பாதுகாப்பு வலையாக கருதப்பட்டது. இல்வாழ்க்கைக்கான சமூக நெறிமுறைகளும் உண்டு.

பெண்ணின் மேலாண்மை : இல்வாழ்க்கையில் பெண்களின் ஆதிக்கம் அதிகம். சென்ற தலைமுறை வரை பெண்கள் வேலைக்கு செல்வது என்பது மிக குறைவு. பெண் தன் அறிவு, ஆற்றல், திறமை ஆகியவற்றை முழுமையாக வெளிப்படுத்த வாய்ப்புகள் இருப்பதில்லை. ஆனால் குடும்ப வாழ்க்கையில் குடும்பத்திலுள்ள அனைவரையும் அரவணைப்பாக, அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவராக, வீட்டு வேலைகள் அனைத்தும் தாங்கக் கூடியவராக, குழந்தைகளை பராமரிப்பவராக, குடும்ப வருவாய்க்கு ஏற்ப பணத்தை செலவிடுபவராக, குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் வெளியில் தெரியாமல் சமாளிப்பவராக பல பரிணாமங்களில் மேலாண்மை செய்வது பெண்களின் பங்காகும். இவ்வாறு குடும்பத்தில் நல்லாட்சி செய்ய தியாகம், சகிப்பு தன்மை மற்றும் குடும்ப அக்கறை பெண்களிடம் இயற்கையாகவே இருந்து
வந்துள்ளது. மேலும் உறவு பற்றி போதிக்கவும், உறவில் பலவீனம்ஏற்படும் போது சரி செய்யவும் வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள். பிரச்னைக்கு தோள் கொடுக்க, குடும்ப பாரங்களை தாங்க உற்றார், உறவினர்கள் உடனே வருவர்.

இன்றைய மாற்றங்கள் : இன்றைய பரபரப்பான சூழல் இல்வாழ்க்கையில் பலமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.இன்று பெண்களின் வளர்ச்சி அளப்பரியது. ஆண்களுக்கு சமமாக பெண்கள் தம் திறமை களை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.பெண்கள் அதிகளவில் வீட்டை தாண்டி வெளி உலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பெண்களின் சாதனை பயணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்து
உள்ளது. கூட்டுக்குடும்ப பழக்க வழக்கங்கள் காலாவதியாகி கொண்டு வருகிறது. இல் வாழ்க்கையில் பெண்களின் பங்கும் மாறி விட்டது. இன்றைய திருமண வாழ்வில் எடுக்கக் கூடிய அனைத்து முடிவுகளுக்கும் கணவன், மனைவி இருவர் மட்டும் காரணமாகின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கை பயணம் இன்பகரமாக செல்கிறது. புரிதல் இன்றி மன
முதிர்ச்சி இன்றி அவசர கதியில் எடுக்கப்படும் முடிவுகளால் பயணம் தத்தளிக்கிறது.
அன்பும், அறனும்அன்பும், அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது
என்பது திருவள்ளுவர் வாக்கு. இந்த திருக்குறள் இன்று மட்டுமல்ல எந்த காலத்திற்கும் பொருந்தும். அன்பை மையமாக கொண்டது தான் நம் வாழ்க்கை முறை. அன்பு விலை மதிப்பிட முடியாது. உணர்வு பூர்வமானது. அன்பு குடிகொண்ட உள்ளத்தில் சுயநலம் இருக்க
முடியாது. அச்ச உணர்வு உண்டாவதில்லை. அன்பு பரஸ்பரமானது. அன்பு கொண்ட நெஞ்சங்களிடையே ஏற்படக்கூடிய இணைப்பு வலுவானது. இருவரிடையே அன்பு இடைவெளி விழும் போது பந்தம் பலவீனமாகிறது. அன்பு அடிமனதிலிருந்து ஆழமாக இருக்க வேண்டும். கணவன், மனைவியிடையே அன்பு தங்கு தடையின்றி வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அறவாழ்க்கை சமூகம் சார்ந்தது. நல்ல எண்ணம், நல்ல செயல்கள், நல்ல சொல் ஆகியவை சமூகத்தில் நாம் யார் என்பதனை அடையாளம் காட்டும். அன்பு, அறநெறிகளோடு இல்வாழ்க்கையை இனிமையாக்கி கொள்வது கணவன், மனைவி இருவர் கைகளில் தான் உள்ளது. இது மனம் சார்ந்தது. அதற்கேற்ப பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.மனவாழ்வில் கணவன், மனைவி இருவருமே சமமாக பார்க்கப்படுகின்றனர். இதில் ஒருவர் உயர்ந்தவர், மற்றவர் தாழ்ந்தவர் என்பதே இல்லை. இருவருக்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு. கருத்து வேறுபாடு, பூசல்கள், விவாதங்கள், சண்டை, சச்சரவு இல்லாத வாழ்க்கை கிடையாது. இவைகள் இல்லாத உறவு போலியானது. இருவரும் தவறுகள் செய்வதற்கு வாய்ப்புகள் கொண்டவர்களே. திருந்திக் கொள்வதற்கும், அடுத்த வரை சுட்டிக்காட்டி திருத்தவும் கடமைப்பட்டவர்கள்.

வாழ்க்கை பாடம் : வாழ்க்கையின் பாடத்தை ஒரு சிறிய விளையாட்டு விளக்குகிறது. இரண்டு சிறுவர்கள் மெல்லிய ஒரு நுாலை வைத்து விளையாடுகின்றனர். ஐந்து அடிநீளம் கொண்ட அந்த நுாலின் இரு நுனிகளை ஆளுக்கு ஒரு நுனியாகபிடித்து கொள்ள வேண்டும். இருவரில் ஒருவர் அந்த நுாலை பிடித்து இழுத்து அறுப்பதற்கு முயல வேண்டும். மற்றவர் மறு
முனையை பிடித்து கொண்டு அறுந்து விடாமல் பாதுகாப்பாக கடைசி வரை வைத்திருக்க முயல வேண்டும். அறுக்க நினைப்பவர் ஒரு பக்கமாக இழுத்தால் மற்றவர்
நுால் அறுந்து விடாமல் அவர் இழுக்கும் பக்கமாக வேகமாக நகர்ந்து நுால் தொய்வாக இருக்கும்படி செய்து நுால் அறுந்து போகாமல்பார்த்து கொள்வார். நுால் அறுந்து போகாமல் பாதுகாக்கும் சிறுவன்,மிகத்திறமையாக நகர்ந்து நகர்ந்து ஈடு கொடுத்து வெற்றி பெறுவான்.
அந்த நுால் போன்றது தான் வாழ்க்கை. இரண்டு பேரும் விறைப்பாக இழுக்கும் போது நுால் அறுந்து விடும்.கணவன், மனைவி நடுவில் பரஸ்பர நம்பிக்கை வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி நேர்மையுடன் வெளிப்படையாக உள்ளதை உள்ளபடி பகிர்ந்து கொள்ள
வேண்டும். ஒருவருக்கொருவர் வாக்கு தவறக் கூடாது. ஒருவர் கருத்துக்கு மற்றவர் மதிப்பளிக்க வேண்டும்.

பங்கம்விளைக்கும் நட்பு : திருமணத்திற்கு முன் ஆண், பெண் இருவருக்கும் நட்பு வட்டம் உண்டு. நட்பு வட்டத்தில் நிறைகுறைகள் பரிமாறப்பட்டிருந்திருக்கலாம். திருமணத்திற்கு பின் அத்தகைய வார்த்தைகள் கூட்டத்தில் கையாளப் படும் போது மனக்காயம் ஏற்பட வழி உண்டு. கேலி, கிண்டல்கள் ஒரு வரையறைக்குள் வைத்து கொள்வது அவசியம். நண்பர்கள் கூட்டத்தில் ஒருவரின் குறைகளை மற்றவர் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. திருமண பந்தத்திற்கு பங்கம் விளைவிக்கும் நட்பு தவிர்க்கப்பட வேண்டும்.மனைவி வேலை பார்த்து சம்பாதிக்கும் பல தம்பதிகளின் வீடுகளில் மனைவி அலுவலகத்திலும்,வேலை பார்த்து விட்டு வந்து
வீட்டிலும் வேலை பார்க்கும் நிலை ஏற்படுவதுண்டு. கணவன் வீட்டு வேலைகளை மனைவி
யுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

முரண்பட்ட கருத்துக்கள் : திருமண உறவில் உறவினர் பங்கு, சமுதாய உணர்வு மிக
முக்கியம். ஒருவர் குடும்பத்தின் மீது மற்றவருக்கு மரியாதைவேண்டும். உறவினர்கள் குறித்து முரண்பட்ட கருத்துக்கள் கூறுவதை இருவருமே தவிர்க்க வேண்டும். உறவினர்களை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யும் போது, நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம். உறவினர்கள், சமூகத்தினர்கூடுகின்ற விழாக்களில் இயன்றவரை கலந்து கொள்வது உறவை பலப்படுத்தும். ஜாதி, மதம், சமயம் கடந்த திருமணங்களில் ஏற்படும் சமுதாயச் சூழலை எதிர்கொள்ள இத்தகைய நிகழ்வுகள் பயன்தரும்.வாழ்க்கை வாழ பணம் தேவை. ஆனால் பணம் தான் வாழ்க்கை
என்பது இல்லை. பணத்தை விரட்டி விரட்டி சம்பாதிக்க இல்லற வாழ்வின் இன்பத்தை தொலைக்க வேண்டியதில்லை. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவதிப்படுவதை விடுத்து
வாய்ப்புக்கு ஏற்ப திட்டமிட்டு சிக்கனமாக சந்தோஷமாக வாழ பழக வேண்டும்.
மனதுக்கு பிடித்தவரை மணம் புரிந்தால் வாழ்க்கை முழுமை அடைந்து விட்டது என்று
எண்ணுகிறோம். ஆனால் திருமண பந்தம் ஆயுள் முழுவதும் நிலைத்து நிறைவாக வாழ கணவன், மனைவி இருவருக்கும் மனப்பூர்வமான தியாக உணர்வு வேண்டும்.

-முனைவர் அ.சண்முகசுந்தரம்
விருதுநகர்
93677 66155

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Baskaran R - Thoothukudi,இந்தியா

    இளைஞர் நலத்திலும் சமூக நலத்திலும் தாங்கள் கொண்ட அக்கறையைப் பிரதிபலிக்கிறது. நன்றி... பாராட்டுகள்.... தொடரட்டும் தூய பணி....

  • MaRan - chennai,இந்தியா

    நல்ல கட்டுரை அய்யா நிச்சயம் ஒரு பத்து பேராவது படித்து பயன் பெறுவார்,,நீங்கள் நலமுடன் வாழ்க இது போன்ற நல்ல விஷயங்களை நீங்கள் அடிக்கடி பகிர வேண்டும்,, நன்றி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement