Advertisement

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 15

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.


20. ஸ்ரீனிவாஸன் ஐயர்,
ஸ்போக்கன் இங்கிலீஸ் ஆசிரியர், எர்ணாகுளம் (கேம்ப்)

1) எப்போதுமே கல்வியில் மிகச்சிறந்த மாணவர்கள் தான் திறமையான ஆசிரியர்களாவர் என்ற யூகம் சரியாக இருக்காது. ஒரு சராசரி மாணவன் தனது வெளிப்படுத்தும் திறனால் *கற்பித்தலில் ஒளிர முடியும். *ஏனென்றால், ஆசிரியர் பணியில் நுழைந்தவுடன் மாணவர்களின் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் தர தனது அறிவுத்திறனை செம்மைப் படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். இதனால் *சராசரி மாணவனாக இருந்தவர் ஆசிரியரானவுடன் கற்றலிலும், கற்பித்தலிலும் ஈடுகட்ட முடியும்.

2) எல்லாத்துறைகளிலும் நல்ல திறமையான நபர்களை ஆதரிக்கும் நாம், *ஆசிரியர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது பெற்றோரின் அடிப்படை உரிமையும் கூட. *மற்ற துறைகளில் நாம் ஒருவித நுகர்வோராகிறோம். ஆனால் *ஆசிரியர்கள் நாட்டின் திறன்மிகு மனித வளத்தை உருவாக்கும் சிற்பிகள். * இவர்கள் ஒழுக்க சீலர்களாகவும், அறிவுப்பேழையாகவும், நல்வழிகாட்டிகளாகவும், மனிதநேயப் பண்புடையவராகவும், கற்பித்தலில் முழுமைபெற்றவராகவும் இருத்தல் மிக அவசியம்.

3) எனவே ஆசிரியர் பணிக்கு சேர்வோரை சற்று நுணுக்கமான தேர்வு முறைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
# கற்பித்தலில் நாட்டம்
# கற்பித்தல் திறனை புதுப்பித்துக் கொள்ளுதல்
# புத்தகம் தவிர கூடுதல் தகவல்களை தேடி வழங்குதல்
# உளவியல் முறையில் மாணவரின் கற்றல் குறைபாடுகளை சீர் செய்தல்
#பெற்றோருக்கு பக்குவமாக மாணவரின் சில மன இறுக்க, மனச்சோர்வு நிலைகளை சுட்டிக்காட்டி மருத்துவ சிகிச்சை பெற வழிகாட்டுதல்
#மாணவர்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு அதை பட்டை தீட்ட தகுந்த ஆலோசனை, ஊக்கமளித்தல்
#மிகச்சிறந்த ஆனால் ஏழ்மையான மாணவர்களை வெளியுலகத்திற்கு அறிவித்து உதவி கிடைக்கச் செய்தல்
# தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுதல்
# எல்லாவற்றையும் விட தனது ஒவ்வொரு மாணவனையும் தனது சொந்தக் குழந்தையாக பாவித்து ஒரு தந்தை, தாய் போல கண்டிப்பும், கனிவும் காட்டுதல்
இப்படிப்பட்ட குணநல அமைப்புள்ளவர்களாக தேர்வு நிலையிலேயே வடிகட்டி பணியமர்த்த வேண்டும். ஆசிரியர்கள் ஆயிரம் காலத்துப் பயிரென மனித வளத்தை நல்ல பண்புகளுடனும், கல்வியிற் சிறந்த குடிமக்களையும் பயிர் செய்யும் மனிதவள விவசாயிகள்.

4) இவர்கள் தகுந்த கற்பித்தல் பயிற்சி பெற மறுத்தால் அதை பணிநீக்கம் செய்யும் ஒரு காரணியாக பணிநியமன கடிதத்தில் சேர்க்க வேண்டும். ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடுவோரை ஆசிரியர் பணியிலிருந்து அகற்றி அவர்களை உளவியல் சிகிச்சைக்கு அனுப்பி மருத்துவர் தடையில்லா சான்று கொடுத்தால் மட்டுமே மீண்டும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும். ஒழுக்கமற்றவர்கள் ஆசிரியர் பணியில் தொடர்ந்தால், பல்லாயிரக்கணக்கான ஒழுக்கக் குறைபாடுள்ள மனிதவளத்தை சமுதாயத்தில் உருவாக்கும். நாட்டிற்கு இது பெரும் பின்னடைவை நீண்டகாலத்தில் ஏற்படுத்தும்.

5) ஆசிரியர்கள் கட்டணம் வசூலித்து டியூஷன் எடுப்பதை பணி நீக்கத்துக்கான ஒரு முகாந்திரமாக பணிநியமன ஆணையில் சேர்க்க வேண்டும். மாறாக கல்வியில் பின்தங்கிய மாணவர் நலனுக்கு பள்ளியிலோ அல்லது ஒரு பொது இடத்திலோ கட்டணமில்லா சிறப்புப் பயிற்சியை கல்வி உயரதிகாரி முன்னனுமதி பெற்று சேவையாகச் செய்ய வேண்டும்.
அரசு தரப்பில், ஆசிரியர்களை 'தன்னாட்சி' பெற்ற 'கல்வியாளர்கள்குழு' தேர்ந்தெடுக்கும் ஒரு நிரந்தர அமைப்பை நிறுவ வேண்டும். இந்த தன்னாட்சி அமைப்பு எந்த ஆட்சி மாற்றத்திலும் தடையின்றி செயல்பட வேண்டும்.புதிய பாடத்திட்டம் பணம் சம்பாதிக்க மட்டும் மாணவர்களை தயார் படுத்தும் தற்போதைய பாதையிலிருந்து முற்றிலும் விலகி, மனிதப் பண்புகளுடன் உழைப்பை உயர்வாக எண்ணும் நோக்கத்துடன் இருப்பது மிக அவசியம்.
இப்பொழுது, பலவித தகாத முறை பணியமர்த்தலினால் பெயருக்கு ஆசிரியர்கள் என்ற ஒரு பகுதி ஆசிரியர் வர்க்கத்தையே தலை குனிய வைக்கும் நிலை இனி புதிய பாடத்திட்டத்தின் தாக்கத்தால் மாறும். மாற்றம் ஏற்றம் தரும். அறிவிற்சிறந்த மனிதநேயமுடைய சான்றோரைப் படைக்க புதிய கல்வித்திட்டம் முனைய வேண்டும். வெறும் சான்றிதழோரைப் படைப்பதை முற்றிலும் நீக்க வேண்டும்.


தினமலர் விளக்கம்:
மாணவர்களுடைய கல்வி நலனில் தாங்கள் கொண்டுள்ள மிக ஆழமான அக்கறை தாங்கள் தொடர்ந்து எழுதியுள்ள கடிதங்கள் வெளிப் படுத்துகின்றன. நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தாங்கள் சித்தரித்துள்ள கல்விச்சூழல் உருவாக பலப்பல ஆண்டுகள் ஆகலாம் என்ற நினைப்பின் பின்னணியில் தங்களுடைய அளவிலா ஆர்வம் காணும்பொழுது, நெகிழ்ச்சி. சிறந்த மாணவர்கள் உருவாகப் பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று தாங்கள் கூறியுள்ளவைகளின் சீரான முழுமையைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி.

உண்மையிலேயே, தங்களுடைய ஆலோசனை களைச்செயல்படுத்த பல ஆண்டு பயிற்சி தேவை. சற்றும் சுயநலன் கலக்காத பூரண கடமையுணர்வும் நேர்த்தியான சமூகப் பொறுப்புணர்வும் கொண்ட ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், - அத்தனை பேரும் ஒத்துழைக்க வேண்டும். முடியாது என்று முடிவெடுக்காமல், முடியும் என்ற நம்பிக்கையில் தீர்க்கமான முதல் அடி இன்றைய முக்கிய தேவை. 'கருத்து கேள்' கூட்டங்களில் பேசப்பட்டவைகளை- பேசியவர்கள் இளைய, மூத்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள்- கணக்கிலெடுத்தால், முதல் அடி எடுத்து வைக்க வேண்டிய தருணம் முன்னால் நிற்கிறது என்று உணர முடிகிறது.

கடிதத்தில் தாங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல், ஆசிரியர் நியமனங்களில், 'தன்னாட்சி'யைத் தேர்ந்தெடுக்கும் கல்வி வல்லுநர்களின் நிரந்தர அமைப்பு வேண்டும். அது முற்றிலும் தடையின்றி செயல்பட வேண்டும் என்ற இந்த கருத்தின் சற்று மாறிய உருவம் தான் 'தன்னாட்சி முறை'. நாம் திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம்; கல்வித் தரம் உயர, புதிய பாடத்திட்டம் வரும் நேரம் தான் தர உயர்வை உறுதிப்படுத்தும் அடுத்த நிலையான தன்னாட்சி.
தாங்கள் அனுப்பியுள்ள யோசனைகளைச் செயல் படுத்தும் அதிகாரம் அரசிற்கு இருப்பதால், தயவு கூர்ந்து தங்கள் யோசனைகளை அரசிற்குத் தெரியப்படுத்துங்கள். இது நமது வேண்டுகோள்.


-தொடரும்

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement