Advertisement

உரத்த சிந்தனை:நோய்களின் கூடாரமா இந்தியா?

மத்திய அரசும், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும், மக்களின் பொது ஆரோக்கியத்தை காப்பதில், எவ்வளவு அலட்சியமாக இருக்கின்றன என்பதற்கு, இதோ, சின்ன உதாரணம்...

கடந்த, 10 ஆண்டுகளில், 30 லட்சம் பேர், 'டெங்கு'வால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 30 லட்சம் பேர், மலேரியா காய்ச்சலால் தாக்கப்பட்டு உள்ளனர்; 6 கோடி பேருக்கு, நீரிழிவு நோய் இருக்கிறது; 30 லட்சம் பேருக்கு, புற்றுநோய் உள்ளது.ஆறு கோடி பேர், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட, உயிருக்கு ஆபத்து தரும் நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 8.6 கோடி பேர், சுவாச நோய்களாலும், மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்களாலும் அவதிப்படுகின்றனர்.

மேலும், ஏழு கோடி பேருக்கு, ஆஸ்துமாவும், 43 கோடி பேருக்கு, காசநோயும் இருக்கிறது; வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களில், பாதி பேருக்கு மேல் ரத்த சோகை உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, 70 கோடி பேருக்கு, சத்துக்குறைவு நோய்கள் உள்ளன!

அண்மையில் எடுத்த புள்ளிவிபரப்படி, 'உலகில், மிக அதிகமாக குழந்தைகள் மரணமடைந்த நாடு - இந்தியா' எனும், 'பெருமை'யையும் பெற்றுள்ளோம். 2000 - 2015 வரையிலான, 15 ஆண்டுகளில் இறந்த, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும், 2.90 கோடி.இது போக, ஏராளமான புள்ளி விபரம் உள்ளது.இந்தியாவில், குழந்தைகளின் ஆரோக்கியம் எவ்வளவு சீர் கெட்டுள்ளது என்பதும், மத்திய, மாநில சுகாதாரத் துறையினர், குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ வசதிகளை செய்வதில், வெகு அலட்சியமாக இருக்கின்றனர் என்பதும், உ.பி.,யில் நிகழ்ந்த, சோகத்தில் தெரிந்தது.

உ.பி.,யின் கோரக்பூர், பி.ஆர்.டி., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, ஆக்ஸிஜன் சிலிண்டர் வினியோகம் தடைபட்டதால், ஒரே வாரத்தில், 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த செய்தியால், அது வெளிப்படுகிறது.கடந்த, 2016 செப்டம்பரில் மட்டும், பி.ஆர்.டி., மருத்துவமனையில், 224 குழந்தைகள், மூளைக் காய்ச்சலால் இறந்துள்ளனர். இந்த செய்தி, தேசிய அளவில் பெரியதாக அப்போது ஆகவில்லை. எனவே, அரசு அதில் அக்கறை செலுத்தவில்லை.

மேலும், ஒரு மாநிலத்தில் தொற்று நோய்கள் பரவும் போது, அதை கட்டுப்படுத்த, போதுமான நிதியை, மாநில அரசு ஒதுக்க வேண்டும். அதுவும், அங்கு மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமாக, தொற்று நோய்களுக்காக ஒதுக்கப்படும், 68 சதவீத நிதி மட்டுமே, மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த, 2015 - -16ல் மட்டும், மத்திய அரசின் பட்ஜெட்டில், தேசிய ஊரக சுகாதார வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகையில், 58 சதவீதம் மட்டுமே, உ.பி., அரசால் செலவிடப்பட்டு உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.மூளைக் காய்ச்சல் போன்ற, உயிருக்கு ஆபத்து தரும் தொற்று நோய்கள் பரவும் போது, அந்த பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும், உ.பி., அரசு எவ்வளவு அலட்சியமாக இருந்துள்ளது என்பதை, இந்திய மருத்துவக் கழக மருத்துவக் குழு, ஆய்வில் தெளிவாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், டெங்கு, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற கொடூர காய்ச்சல்கள், இதற்கு முன் இல்லாத அளவுக்கு, மோசமாக பரவி உள்ளன.'மர்மக் காய்ச்சல்' என்ற பெயரில், பல வைரஸ் காய்ச்சல்களும் எல்லா ஊர்களிலும் பரவி இருக்கின்றன. வீட்டுக்கு ஒருவர், ஏதோ ஒரு காய்ச்சலில் படுத்துக் கிடக்கும் அவலத்தை காண்கிறோம்.

காய்ச்சல் நோயாளிகளால், தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அரசு மருத்துவமனைகளோ, காய்ச்சல் நோயாளிகளின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.
தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை, 40 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும், சுகாதாரத் துறை செயலர் தெரிவித்து உள்ளார். உண்மையான கணக்கு, இதை விட பல மடங்கு அதிகமாகவே இருக்கும்.

டெங்கு மட்டுமல்லாமல், தமிழகத்தில் தற்போது, 2,500 பேருக்கு மலேரியாவும், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஜப்பானிய மூளைக் காய்ச்சலும் பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.மக்கள் பீதியடைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், அரசுகள், புள்ளி விபரங்களை மாற்றி சொல்கின்றன. இப்படி, பிரச்னையை மத்திய, மாநில அரசுகள் மூடி மறைப்பதால், மக்களிடம், டெங்கு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் போகிறது.

மேலும், அதைத் தடுப்பதற்கான முழு முயற்சிகளில் இறங்குவதற்கு, மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகிறது.மழைக் கால துவக்கத்தில், சுகாதாரத் துறையும், மக்களின் மீது அக்கறை கொண்ட, சில உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளும் இணைந்து, கொசு ஒழிப்பு உள்ளிட்ட, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, நம் மாநிலத்தில் வழக்கம்.

ஆனால், தமிழகத்தில், இந்த ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போவதால், அந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.டெங்குவை பொறுத்தவரை, இப்போது இந்தக் கிருமிகள் முன்பை விட, பல மடங்கு வீரியம் பெற்றுள்ளன. இவற்றை மக்களுக்கு பரப்பும் கொசுக்களும், பல மடங்கு பெருகி உள்ளன. இந்த இரண்டையும் கட்டுக்குள் வைப்பதற்கு, போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால், அரசின் நடைமுறைகள் அப்படியில்லை. ஆமை வேகத்தில் தான் உள்ளது என்பது, சோகத்திலும் கூடுதல் சோகம்.டெங்கு பரவும் இடங்களில் மட்டும், சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர். மற்ற இடங்களில் அது பரவாமல் தடுக்க, போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

ஒவ்வொரு உள்ளாட்சியிலும், டெங்கு தடுப்புக்கான செயல்பாடுகளை முடுக்கிவிட, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் அதைச் சார்ந்த மற்ற துறைகளும் இணைந்து, ஆய்வுக்கூட்டங்களை நடத்த வேண்டும்.அந்தந்த பகுதிகளுக்கு தேவையான திடக்கழிவு மேலாண்மை, கொசு ஒழிப்பு மருந்து வினியோகம், பூச்சியியல் நிபுணர்கள் மற்றும் களப்பணியாளர்கள் எண்ணிக்கை போன்றவற்றை தீர்மானித்து, தேவையான நிதியை ஒதுக்கி, முனைந்து செயல்பட வேண்டிய நேரம், இது.

ஆனால், சமீபகாலத்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் கொசுக்களின் பெருக்கம் போன்றவற்றை கணக்கில் எடுத்தால், களத்தில் பணியாற்ற வேண்டிய ஊழியர்கள், பெரும்பாலான உள்ளாட்சிகளில் குறைவாகவே உள்ளனர்.தமிழகத்தில், பூச்சியியல் நிபுணர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. பல உள்ளாட்சி அமைப்புகளில், துப்புரவு பணியாளர்கள், போதிய அளவு இல்லை. ஒருங்கிணைந்த தேசிய கொசு ஒழிப்பு திட்டம், இந்தியாவில் செயல்படவே இல்லை.

துப்புரவு பணிகளை அதிகப்படுத்தி, திறந்த இடங்களில் மலம் கழிப்பதைத் தவிர்த்து, துாய்மையான குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இது போன்ற செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதன் மூலம், இந்த நோய்களின் ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும்.அவலம் என்னவென்றால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், மற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை விட, சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, மக்களுக்கு இலவசங்கள் வழங்கவே, பல ஆயிரம் கோடி ரூபாய் சென்று விடுகிறது.அடுத்து, சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டில், பெரும்பாலான தொகை, மருத்துவத் துறை மூலம் சிகிச்சைக்கும், ஊழியர்களின் ஊதியத்துக்கும் செலவாகி விடுகிறது.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல, நோய்கள் பரவி, பல ஆயிரம் மரணங்களைச் சந்தித்த பின் தான், சுகாதாரத் துறை விழிப்படைகிறது.

நாட்டில், தொற்று நோய் தடுப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், சுகாதார திட்டங்களை, புதிதாக கொண்டு வர வேண்டும். நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குப்பை மற்றும் கழிவு மேலாண்மை விஷயத்தில், கவனம் செலுத்த வேண்டும்.

சுற்றுப்புற சுகாதாரம் பேணுவதிலும், துாய்மையான குடிநீர் வழங்குவதிலும், மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி, இவற்றுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கி, போதுமான களப்பணியாளர்களை நியமித்து, முறையான, சரியான வழிகளில், அரசு இயந்திரம் முனைந்து செயல்பட வேண்டும்.அப்படி செயல்பட்டால், 'தொற்று நோய்களின் கூடாரம் இந்தியா' என, அன்னிய நாடுகள் நமக்கு தந்திருக்கும் அவப்பெயரிலிருந்து மீள முடியும்.

அதே நேரத்தில், பொதுமக்களாகிய நாம் ஆற்ற வேண்டிய கடமைகளும், சில இருக்கின்றன.
'எல்லாமே அரசு செய்யும்' என்ற மனப்போக்கில் இருந்து, முதலில் நாம் விடுபட வேண்டும். தனிநபர்களாக நாம், இந்த சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செயல்படுத்த முன்வர வேண்டும்.

'ஊரெல்லாம் குப்பை...' என, பேசுவோம். 'அந்த குப்பை உருவாக நாம் தானே காரணம்...' என, நினைக்க மாட்டோம். குப்பையை பொது இடங்களில் கொட்டாமல், அதை சேகரித்து, மறுசுழற்சி செய்ய வைத்தாலே, பாதி பிரச்னை தீர்ந்து விடும்.எனவே, முதல் முயற்சியாக, குப்பை மேலாண்மையில், நம் பங்கை தட்டிக்கழிக்காமல் செயல்படுத்துவோம்.

பிரதமர் மோடியின், 'துாய்மை இந்தியா' திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தெருக்களை சுத்தமாக வைத்து கொள்வதில் அக்கறை செலுத்துவோம். சாக்கடைகளில் திடக்கழிவுகளை போடுவதை தவிர்ப்போம்.சுற்றுப்புற சுகாதாரம் பேணி காப்போம். குடிநீரை சேமிக்கும் தொட்டிகளையும், பாத்திரங்களையும் சரியாக மூடி வைப்போம். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முடிந்தவரை, அனைத்து இடங்களிலும் தவிர்ப்போம்.

அரசு அறிமுகப்படுத்தும், இலவச தடுப்பூசி திட்டங்களுக்கு ஒத்துழைப்போம். பொது சுகாதாரம் காப்பதில், நம் பங்களிப்பைச் சரியாக செய்வோம்!ஊர் கூடி தேர் இழுப்பது தான், தமிழரின் மரபு. அது போல, தொற்று நோய் ஆபத்திலிருந்து, நாட்டு மக்களை காப்பதற்கு, நம் அனைவரின் கரங்களும் இணையட்டும். மக்களின் நலம் மீளட்டும்!

இ- - மெயில்:

gganesan95gmail.com

- டாக்டர் கு.கணேசன் -

மருத்துவ எழுத்தாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • MaRan - chennai,இந்தியா

    உங்கள் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது டாக்டர், நம் மக்கள் மாறாமல் எதுவும் சாத்தியம் இல்லை,, அவர்கள் மாறப்போவது இல்லை,, Marathi அதிகம் இருப்பதால் எல்லாத்தையும் மறந்து ஓட்டு போடுவார்கள்,, காச வாங்கிகிட்டு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement