Advertisement

நமக்குள் இருக்கும் அசுரர்கள்

தீபாவளியை கொண்டாடிவிட்டோம். நரகாசுரன் அழிக்கப் பட்டான் என்பது ஒரு குறியீடு
தான். நமக்குள் பல அசுரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அழிக்கப்பட்டால்தான் இது உண்மையான தீபாவளி ஆகும். நமக்குள் இருக்கும் அசுரர்கள் யார் யார்?

1. அறியாமை : இதை ஒரு வேடிக்கையான சம்பவம் மூலம் விளக்கலாம். தீபாவளி விற்பனை நடந்த பஜாரில்ஒருவர் வட்டமான எடை மெஷினை வைத்து பல பேருக்கு எடை பார்த்து சொல்லி கொண்டிருந்தார். வயதான ஒரு கிராமத்து நபர், எடை பார்க்க வந்தார். கனமான தோல் செருப்பு அணிந்திருந்தார். செருப்புகளோடு எடை மெஷினில் ஏற முயன்றார். 'செருப்பை காலில் இருந்து கழற்றி விடுங்கள்' என்றார் மெஷினுக்கு சொந்தக்காரர். அப்படியா என்றபடி செருப்பை கழட்டிவிட்டு எடை மெஷினில் ஏறினார். குனிந்து எடையை பார்த்த மெஷின்காரர், அதைச் சொல்ல நிமிர்ந்தபோது அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. காலில் இருந்து செருப்பை கழற்றிய பெரியவர், அவற்றை கையில் பிடித்தபடி இருந்தார்.இன்னொரு அறியாமையை பாருங்கள். வெடிகளை வெடித்துவிட்டு, மீதி வெடிகளை காலையில் வெடிக்க, பாட்டியிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச்சொன்னான் பேரன். காலையில் பட்டாசு எங்கே என்று கேட்க, 'பிரிட்ஜில் பத்திரமாக வைத்திருக்கிறேன். எடுத்துக்கொள்' என்றாள் பாட்டி.

2. ஆணவம் : கணவன், மனைவி இடையில் சண்டை ஏற்பட்டது. அதன்வேகம் மறுநாள் காலையிலும் தொடர்ந்தது.காலையில் கணவனுக்கு காபி கொடுக்கவில்லை. அவராக
கேட்டாத்தான் கொடுக்கணும் என்ற ஆணவத்தோடு மனைவி இருந்தாள். அவளாக கொண்டு வந்துகொடுத்தால்தான் வாங்க வேண்டும் என்று அவன் காத்திருந்தான்.மொத்தத்தில் காபி ஆறிக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி காபியை சுட வைத்து மூத்த பையனிடம், 'இத உங்கப்பன்கிட்ட கொடுத்து தொலை' என்றாள். பையனும் கொடுத்தான்.
'போடா, இந்த காபியை எந்த நாய் குடிக்கும்' என்றான் கணவன். இப்போது பையனுக்குதான்
குழப்பம். அப்பா, அம்மாவை நாய்ங்கிறாரு. அம்மா, அப்பாவை நாய்ங்கிறாங்க. அப்படினா நான் யாரு?'கணவன், மனைவி இடையே ஏற்பட்ட ஆணவத்தால் நிகழ்ந்த பிரச்னையை பார்த்தீர்களா?

3. ஏமாற்றுதல் : ஒருவர் தீபாவளிக்கு வீட்டில் செய்த பலகாரங்கள் போக, மைசூர்பாகு மட்டும் கடையில் வாங்கலாம் என்று போனார். சுவீட் ஸ்டாலில், '2 கிலோ மைசூர்பாகு குடுங்க' என்று சொல்லிவிட்டு, 'மைசூர்பாகு புதுசுதானே' என்று கேட்டார். 'ஆமாங்க! நேற்று ராத்திரிதான் போட்டு கடைக்கு எடுத்து வந்தேன்' என்றார் கடைக்காரர். 'அப்படியா, மைசூர்பாகு
வில்லைகளை அடுக்கியிருக்கிற விதம், கப்பல் மாதிரி, கோயில் கோபுரம் மாதிரி ரொம்பபிரமாதம்' என்றார் வந்தவர். 'சும்மாவா!இப்படி அடுக்கிறதுக்கு 10 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டோம்'. வாங்க வந்தவருக்கு தலை சுற்றியது.

4. பித்தலாட்டம் : தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சில திரைப்படங்கள் வெளிவந்தன. ஒருவர், ஒரு பெரியவரிடம் ஒரு படத்தின் பெயரை சொல்லி, அதில் தான் நடித்திருப்பதாகவும், அதை பார்த்துவிட்டு அபிப்ராயம் சொல்லும்படியும் கேட்டுக்கொண்டு, ரிசர்வ் செய்த டிக்கெட்டை கொடுத்தார். பெரியவரும் மெனக்கெட்டு படம் பார்த்தார்.ஆனால் ஒரு காட்சியில்கூட அந்த நபர் தோன்றவே இல்லை. படம் பார்த்துவிட்டு கடுப்போடு வந்த பெரியவரிடம் அந்த நபர், 'என் நடிப்பு எப்படி?' என்று கேட்க, 'நீங்க ஒரு சீன்லயும் வரலையே' என்று கோபத்தோடு கொதித்தார் பெரியவர். 'ஐயா, அந்த படத்தில் நான் தீவிரவாதியா நடிச்சிருக்கேன். கடைசி வரைக்கும் தலைமறைவாகவே இருப்பேன்' என்றுக்கூற, பெரியவருக்கு தலைசுற்றியது.

5. பொய் : கடன் வாங்குகிறவர்களுக்கு பொய்தான் மூலதனம். ஒருவர் புதுமுகம் தேடுகிறேன் என்றுஅலைந்தார். 'சினிமா எடுக்கப் போகிறீர்களா' என்று கேட்டபோது, 'இல்ல, பல பேருகிட்ட பொய் சொல்லி கடன் வாங்கிட்டேன். அதான் புதுசா ஆள் தேடிக் கிட்டிருக்கேன்'.
அலுவலகத்தில் விடுமுறை பெறுவதற்காக பலர் இந்த பொய்யை பயன்படுத்துவார்கள். மனைவியோட அப்பா இறந்துட்டார், மனைவியோட அம்மா செத்துட்டாங்க, மனைவியோட அண்ணனுக்கு ஆக்சிடென்ட், குழந்தைக்குகாய்ச்சல், இப்படி பல பொய்களை அவிழ்த்துவிடுவார்கள்.

6. குழப்பம் : காது குத்தனுக்கு(வலி) என்ன செய்யலாம் என்று ஒருவர் மற்றொருவரிடம் கேட்டார். வசதிப் படி செய்யலாம். பணம் நிறைய இருந்தா பிரம்மாண்டமாய் நடத்தலாம். கொஞ்சமாய் இருந்தால்எளிமையாக நடத்தலாம். காது வலிக்க மருந்து கேட்டவர் நொந்து போனார். ரயில்வே ஸ்டேஷனிற்கு வெளியே வடை சுட்டுக் கொண்டிருந்தவரிடம், 'சீக்கிரம் ரெண்டு வடை குடுங்க. ரயிலை பிடிக்கணும்' என்றார் ஒருவர். வடையை வச்சு எலியைதான் புடிக்கலாம். ரயிலை பிடிக்க முடியாது என்று வடை சுடுகிறவர் சொல்ல கேட்டவருக்கு தலைச்சுற்றியது.

7. துவேஷம் : மாமியார் மருமகள் சண்டைக்கு பெரும்பாலும் காரணம் துவேஷ உணர்வுதான். 'என்ன! இந்த தீபாவளிக்கு சீடை, முறுக்குனு அதிகம் பண்ணியிருக்கேயே' என்று ஒருவன் மனைவியிடம் கேட்டான். 'உங்க அம்மாவுக்கு பல் எல்லாம் போயிருச்சின்னு உங்களுக்கு தெரியாதா?' என்று மனைவி சொல்ல, மாமியார் சும்மா இருப்பாரா? சீடைகளை வெற்றிலை உரலில் போட்டு இடித்து துாளாக்கி கொண்டுஇருந்தார்.

ஒரு மருமகள் : எல்லோருக்கும் சுவீட் கொடுத்து கொண்டிருந்தாள். என்ன விசேஷம்? என்று கேட்டபோது, மாமியாருக்கு சுகர் 400க்கு மேல் ஏறிடுச்சாம்.மாமியார் சமயம் பார்த்து
சாடை பேசுவாள். மகனுடைய பிள்ளையை தொட்டிலில் போட்டு தாலாட்டுவாள்.
மண்ணும் நல்ல மண்ணுமன்னவரும் நல்லவருமன்னவரை பெத்தெடுத்த மலைக்குரங்கே தொந்தரவு பேரன் நல்லவனாம். மருமகள்தான் மலைக்குரங்காம். ஏனிந்த துவேஷம்?

8. சுயநலம் : மதிய நேரம் கடும் வெயில்.மயக்கம் போட்டு ஒரு பெரியவர் பிளாட்பாரத்தில் விழுந்துவிட்டார். சிலர் கூடிவிட்டனர். யாராவது சீக்கிரமாக போயி சோடா வாங்கிட்டு வாங்க என்று கத்தினார் ஒருவர். ஓடோடிச் சென்று வாங்கிக்கொண்டு ஒருவர் கொடுத்த போது, வாங்க சொன்னவரே கட, கட வென்று குடித்தார். 'என்ன! பெரியவருக்கு கொடுக்காம நீங்க குடிக்கிறீங்க' என்று கேட்டதற்கு, 'இப்படி யாராவது மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்தா எனக்கு படபடன்னு வரும். அதனாலே நான் குடிக்கிறேன்'.

9. போதை : ஒருவன் பல் வலியோடு மருத்துவமனைக்கு போனான். 'பல்லை புடுங்கிதான் ஆகணும். வலிக்காமல் இருக்க மயக்க ஊசி போடணும்' என்றார் டாக்டர். 'வேண்டாம்
டாக்டர்! எனக்கு ஊசின்னா ரொம்ப பயம். ஒரு இடத்துக்கு போயிட்டு வர்றேன். அப்புறம் பல்லை புடுங்கலாம்' என்றபடி வெளியே போய்விட்டான். நல்ல போதையோடு டாக்டரிடம் திரும்பி வந்தான். புரிந்துக்கொண்ட டாக்டர், 'இப்போ தைரியம் வந்திருச்சா?'

'ம்... ஏகப்பட்ட தைரியம் வந்திருச்சி' : 'எந்த அளவுக்கு?''யாரு என் பல்லில் கை வைக்கிறாங்கன்னு பார்க்கிறேன்'.அதிர்ந்து போனார் டாக்டர்.

10. பொறாமை : ஒருவர் தனது மனைவியை டாக்டரிடம் கூட்டி வந்தார்.'இவளுக்கு வயிற்று எரிச்சல் அதிகமாயிருக்கு. மருந்து கொடுங்க' என்றார். 'எவ்வளவு நாளா வயிற்று எரிச்சல்' என டாக்டர் கேட்க, 'எதிர் வீட்டுக்காரி மூணு மாதத்திற்கு முந்தி வைரக்கம்மல் வாங்கி போட்டுக்கிட்ட நாளில் இருந்து'இதற்கு டாக்டர் எப்படி மருந்து கொடுக்க முடியும்.

11. கோபம் : கோபமே பல பிரச்னைகளுக்கு காரணம். கணவனோடு சண்டை போட்டுவிட்டு அவரது மனைவி அம்மா வீட்டிற்கு சென்றாள். சந்தோஷமாக இருந்தான் கணவன். ஆனால், அன்று மாலையே வீடு திரும்பிவிட்டாள். 'ஏன் அதுக்குள்ள வந்துட்டே' என்று கணவன் கேட்டபோது, 'நான் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போனேன். ஆனா, எங்கம்மா கோபித்துக்கொண்டு அவங்க அம்மா வீட்டிற்கு போயிட்டாங்களாம்'கொஞ்சம் பொறுமையாயிருந்தா இப்படி எல்லாம் நடக்குமா?

12. லஞ்சம் : லஞ்சம் என்று ஒரு பெரிய அசுரன் அனைத்து இடங்களிலும் இருக்கிறான். ஒரு பிரமுகர் சொல்வதை கேளுங்கள், 'லஞ்சம் வாங்கினேன். கைது செய்தார்கள். லஞ்சம் கொடுத்தேன். விட்டுவிட்டார்கள்'

13. வரதட்சணை : இந்த அசுரனால் பல பெண்கள் உரிய காலத்தில் திருமணம் ஆகாமல்
முதிர்கன்னிகளாக ஆகின்றனர். 'ஒரு பெண்ணுக்கு ரொக்க பணத்தோடு 100 பவுன் நகையும் பேசப்பட்டது. 'என்னென்ன நகை எல்லாம் போடுவீங்க' என்று மாப்பிள்ளையோட அம்மா கேட்டாள். பதில் சொன்ன பெண்ணோட அம்மா, 'நீங்க என்ன போடுவீங்க' என்று திருப்பி கேட்டாள். 'நாங்க, 100 பவுனும் சாியாயிருக்கான்னு எடை போடுவோம்'என்றாள்.இன்னும் பல அசுரர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் அழிப்போம்.

முனைவர் இளசை சுந்தரம்
மதுரை
98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement