Advertisement

திசையெங்கும் தீபாவளி!

தீப ஒளியே தீபாவளி' என்பர். தீப ஒளி இருளை அகற்றி வெளிச்சத்தைத் தருவதைப் போல் நம்மிடையே உள்ள அறியாமை எனும் இருளை,மனதில் ஞானஒளியை ஏற்றி
விரட்டியடிக்க வேண்டும் என்பதை தீபாவளி வலியுறுத்துகிறது. 'தீப ஒளி பிறருக்கு வெளிச்சம் தந்து வழிகாட்டுவது போல், நாமும்பிறருக்குப் பயன்பட வேண்டும்,' என்பதை தீபாவளி உணர்த்துகிறது. பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து, வீட்டுக்கு வரும்விருந்தினர்களை தித்திப்புப் பண்டங்கள் தந்து, உபசரித்து மகிழ்ச்சியாக இருப்பது போல், எப்போதும் சந்தோஷமாக மனதை வைத்துக்கொள்ளப் பழகிக் கொண்டால், வாழ்வில் நிம்மதி ஏற்படும் என்பதையும் தீபாவளி உணர்த்துகிறது.

தீபாவளி வரக்காரணம் : தீபாவளி கொண்டாடுவதற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்
படுகின்றன. தீபாவளி ஒரு பண்டிகை தான் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பகவான் விஷ்ணு, லட்சுமிதேவியின் திருமண நாளை சிலர் தீபாவளி என்கின்றனர். ராவணனை கொன்ற ராமர் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளி
என்கின்றனர். குருநானக் பிறந்த தினம், ஆதிசங்கரர் ஞான பீடத்தை நிறுவிய தினம், சந்திரகுப்த விக்கிரமாதித்தன் அரியணை ஏறிய தினம் ஆகியவற்றையும் தீபாவளியாக சிலர் கொண்டாடி வருகின்றனர். ராமபிரான் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாள் தான்தீபாவளி என்போரும் உண்டு. மகாபலி சக்ரவர்த்தி அரியணை ஏறிய நாள் தான் தீபாவளி என்போரும், நரகாசுரனை கிருஷ்ண பகவான் வதம் செய்த நாள் தான் தீபாவளி எனவும் கொண்டாடப்படுகிறது. எத்தனை காரணங்கள் கூறினாலும் நரகாசுரனை, கிருஷ்ணர் வதம் செய்யப்பட்ட நாளே தீபாவளியாக பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நரகாசுரனும் தீபாவளியும் : ஸ்ரீகிருஷ்ணனுக்கும், பூமா தேவிக்கும் மகனாகப் பிறந்தவன் தான் நரகாசுரன். அவனுடைய உண்மையான பெயர் 'பவுமன்'. நிறைய வரங்கள் பெற்றவன். 'தாயை தவிர யாராலும் தன்னைக் கொல்ல முடியாது,' என வரம் பெற்றவன். இடையில் அசுர
குணங்கள் வாய்க்கப்பெற்று அட்டூழியம் செய்ததால் 'நரகாசுரன்' என அழைக்கப்பட்டான். அவனை அழிக்க கிருஷ்ணர் சென்றபோது பூமாதேவியின் சக்தியான சத்திய
பாமா தேரோட்டிச் சென்றாள். அப்போது நரகாசுரன் பெற்றிருந்த வரம் ஞாபகம் வரவே தான்
மயங்கியது போல் விழ சத்தியபாமா, நரகாசுரனைக் கொன்றாள் என புராண கால வரலாற்று
நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. எனவே அந்த நாளை அரக்கன் ஒழிந்த நாளாக சந்தோஷமாகத்
தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். இந்தத் தீபாவளியை முதலில் கொண்டாடியவன் நரகா
சுரனின் மகன் பக தத்தன் தான்.

நாட்டிய திருவிழா : மராட்டியத்தில் நாட்டியத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மராத்தியர், தீபாவளியை தாம்பூலம் போடும் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். ராஜஸ்தான்,
தீபாவளி ஆண்டாக கொண்டாடுகிறது. நேபாளத்தில் தீபாவளியை 'திகார்' என்ற பெயரில் ஐந்து நாள் திருவிழாவாகவும், காசியில் மூன்று நாள் திருவிழாவாகவும் கொண்டாடுகின்றனர். கைலாயப் பர்வதத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடியதை நினைவில் கொண்டு தீபாவளி அன்று இரவு முழுவதும் குஜராத்தி மக்கள் சொக்கட்டான் ஆடுகின்றனர். சீக்கியர் விடுதலை தினமாக தீபாவளியை கொண்டாடுகின்றனர். மலேசியாவில் தீபாவளியை 'ஹரி தீபாவளி'
என்றும், ஒடியாவில் தீபாவளிக்கு முதல் நாளே 'எம தீபாவளி' என்றும், பீகாரில் கண்ணன் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்த நாளையும், மத்திய பிரதேசத்தில் மகாவிஷ்ணு பூமிக்கு வந்தநாளையும் கொண்டாடுகின்றனர்.

பட்டாசும் தீபாவளியும் : தீபாவளியோடு நெருங்கிய தொடர்பு கொண்ட நகரம் சிவகாசி.
இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் 90 சதவிகிதம் இங்கு தான் உற்பத்தியாகின்றது. ஒருநாள் தீபாவளிக்காக, இங்கு ஆண்டுமுழுவதும் பல லட்சம்தொழிலாளர்கள் தரமான
பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காசியில் லட்டுத்தேர் பவனி வரும். பவனி
முடிந்ததும் அந்த லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். சிங்கப்பூர், தீபாவளிக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பு சேர்த்துஉள்ளது. கென்யா நாட்டில்தீபாவளிக்கு விடுமுறை உண்டு. ஆஸ்திரேலியா காலண்டரில்தீபாவளி நாளை குறித்துள்ளது. 1962ல் வெளியான திகம்பரச்சாமியார் சினிமாவில் வரும், 'ஊசி பட்டாசே வேடிக்கையாக நீ', என்ற பாடல் தான் தீபாவளி பற்றிய முதல் சினிமா பாடலாகும்.நவீன பட்டாசுகளின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் தாமஸ் பிராக், 1879ல் லண்டன்கிறிஸ்டியன் அரண்மனை அருகே 35 ஆயிரம் சின்ன வண்ண ஒளிக் குச்சிகள் மூலம் 80 ஆயிரம் பேர் முன்னால் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நடத்தினார்.
இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் வணிகர்கள் அங்குதீபாவளியை கொண்டாடுகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயிலில்தீபாவளியன்று அவரை ஆள்தான மண்டபத்தில் எண்ணெய் காப்பிட்டு சந்தனம், மஞ்சனம் நடக்கும். பின் பக்தர்களுக்கு எண்ணெய் மற்றும் சீயக்காய்த்துாள் பிரசாதமாக வழங்குவர்.

தீபாவளி நம்பிக்கைகள் : தீபாவளியன்று குபேரன், சிவனை வழிபட்டு பொக்கிஷம் பெற்றதால் பட்சணம், காசு வைத்து குபேர பூஜை செய்கின்றனர். தீபாவளிக்கு மறுநாள் வீட்டில் உளுந்து வடை சுட்டு இரவு 7:00 - 8:00 மணிக்குள் நாற்சந்தியில் எறிந்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்தால், குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், நோய் நீங்கும் என குஜராத்தி பெண்களின் நம்பிக்கையாக உள்ளது.வட மாநிலத்தில் தீபாவளியன்று லட்சுமி விரதம் இருக்கின்றனர். பீகாரில் பழைய பொருட்களை கழித்து விட்டு துடைப்பத்தை தீயிட்டு தெருவில் எறிகின்றனர். இதன் மூலம்மூதேவியை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக மக்கள் நம்புகின்றனர்.
தீபாவளி அமாவாசைக்குமறுநாள் பிரதமையன்று உப்பு வாங்கி வீட்டில் வைத்தால்
செல்வம் பெருகும் என வட இந்திய மக்கள் நம்புகின்றனர்.தீபாவளியன்று அதிகாலையில்
வெந்நீரில் கங்கா ஸ்நானம் எடுப்பதை முக்கியமாகக் கருதுகின்றனர்.
கங்கா ஸ்நானத்திற்குப் பயன்படுத்தும் எண்ணெய்யில் லட்சுமி தேவியும், அரப்புப்
பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமாதேவியும்,குங்குமத்தில் கவுரியும், மலர்களில் யோகிகளும், தண்ணீரில் கங்காவும், புத்தாடையில் மகா விஷ்ணுவும், இனிப்புப் பண்டங்களில் அமிர்த மும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப்பொறியும் இருப்பதாக ஐதீகம். தீபாவளி வந்தாலே புதுமணத் தம்பதிகளுக்குக் கொண்டாட்டம் தான். தலைத்தீபாவளி என
மாமனார் வீடு சென்று விடுவர்.தீமைகள், அக்கிரமங்கள், லஞ்ச லாவண்யங்கள் ஒழியும் நாளே
தீபாவளி. விருந்தோம்பலை மையமாக கொண்டு வீட்டுக்கு வந்தவரை உபசரித்து ஒருவருக்குஒருவர் வாழ்த்துக்களை கூறிமகிழ்ச்சியாக இருப்போம். இனி அக்கிரமங்களை அழிக்க நாமே அவதாரம் எடுப்போம், என சபதம் ஏற்போம்.

- ரா.ரெங்கசாமி
எழுத்தாளர், வடுகபட்டி
90925 75184

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    காசியில் இருந்து கொண்டு வந்த நீரை குளிக்கும் பொழுது வாலி நீரில் கொஞ்சம் சேர்த்து கொண்டு குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நிறைய பக்தி பத்திரிகைகள் காசி தண்ணீரை சிறு செப்பு குடத்தில் அடைத்து இலவசமாக தீபாவளி மலருடன் இணைத்து தந்திருக்கின்றன. பெரியவர்கள் அப்படி எல்லாம் எதுவும் தேவை இல்லை. நம் வீட்டில் இருக்கும் நன்னீரில் கங்கை அந்த தினத்தில் வாசம் செய்கிறாள். ஆகையால் காசியிலுந்து கங்கை தண்ணீரை கொண்டுவர வேண்டாம் என்றும், காவிரி பாலர் பொருநை என்று அனைத்து நதிகளிலும் கங்கை தான் அன்று ஆதிக்கம் செலுத்துகிறாள். புனித கங்கையாக அவளே அதில் பாய்கிறாள் என்றும் சொல்கிறார்கள். எதை ஏற்பது.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    உங்கள் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கின்ற பகதத்தன் மஹாபாரதப் போரில் பங்கேற்ற அரசனா? யானைப்போரில் உலகிலேயே சிறந்தவன் என்றும், அவன் சொல்படி அவனின் யானை கேட்கும் என்றும் வருகிறது. அவனை யுத்தத்தில் அர்ஜுனன் கொல்ல அந்த மாய கண்ணன் தான் உதவினார் என்றும் அறிகிறோம். ராஜாஜி தனது காப்பியத்தில், கனவனின் சொல்லை மதிக்காத மனைவியை போல பகதத்தனின் யானை அசட்டை செய்தது என்று அவனின் இறுதி யுத்தம் பற்றி எழுதி இருக்கிறார். அந்த பகதததன் தான் உங்கள் கட்டுரையில் சொல்ல பட்டிருக்கும் நரகாசுரனின் மகன் பகதத்தனா?

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    நரகாசுரனை கொன்றது யார்? தாய் பூமாதேவி தானே. தாயாலேயே கொல்லப் படவேண்டிய நிலைவந்ததால் அவன் மனம் திருந்தி தந்தையிடம் தான் இறக்கின்ற இந்த நாளை மக்கள் சந்தோசமாக கொண்டாடவேண்டும் என்று வரம் பெற்றதால் அவ்வாறே நாம் செய்கிறோம் என்று தானே படித்தோம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement