Advertisement

பேரிடரை எதிர்கொள்வோம்.. பெருவாழ்வு வாழ்வோம் இன்று (அக்.,13) சர்வதேச இயற்கை பேரிடர் குறைப்பு தினம்

மனித இனம் அவ்வப்போது பேரிடரை (பேரழிவை) எதிர்கொண்டுதான் வாழ்ந்து வருகிறது. கடந்த இருபதாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த பேரிடர்களில் சுமார் 13 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும் சுமார் 440 கோடி பேர் பலவிதமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா.வின் பேரிடர் குறைப்பு மையத்தின் அறிக்கை கூறுகிறது.
வளர்ச்சியடைந்த நாடுகளால் கூட பேரிடர்களிலிருந்து தப்பிக்கமுடியவில்லை. 2011-இல் அணு விபத்து, பூகம்பம், சுனாமி என முப்பேரிடர்களை ஜப்பான் எதிர்கொண்டது. பேரிடர்களை எதிர்கொள்வதும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதும்தான் இன்றைய உலகம் எதிர்கொண்டுள்ள சவால்.

பேரிடரை, இயற்கைப் பேரிடர் என்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். சுனாமி, புயல், பெரும்வெள்ளம், கடும் வறட்சி, நில அதிர்வுகள், பூகம்பம் நிலச்சரிவு, பனிச்சரிவு, எரிமலை சீற்றம் என இயற்கை ஏற்படுத்தும் பேரழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கடந்த சில பத்தாண்டுகளில் மனிதனால் உருவாகும் பேரிடர்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. அறிவியல் வளர்ச்சி காரணமாக நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் ஆகியவற்றை வரம்புமுறையின்றி பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஆதிக்கவெறியும் அதிகார பசியும் நம்முள் தலைதூக்கியதன் விளைவாக நொடியில் பல்லாயிரக்கணக்கானோரைப் பலி வாங்கும் நவீன அழிவு ஆயுதங்களினால் நடத்தப்படும் போர், கதிரியக்க பேரிடர், தீவிரவாத நிகழ்வுகள்,
தீ விபத்து, சாலை, கப்பல், விமான விபத்துகள், மின்சார விபத்துகள் போன்றவை பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

ஒழுங்குவிதிகளுக்கு உட்படாத கட்டுமானப் பணிகளும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளும் சுரங்கப்பணி, தொழிற்சாலைகள் போன்றவற்றையும் பேரிடர்களுக்கு வழிவகுக்கின்றன. பெட்ரோலிய வளத்தைக் கண்மூடித்தனமாகச் சுரண்டுதலும் பருவநிலை சார்ந்த பேரிடர்களை ஏற்படுத்துகிறது. நாம் நினைத்தால் நம்மால் ஏற்படுத்தப்படும் இந்தப் பேரழிவு
களைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், இயற்கையால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது
பெரிய சவாலானது.

இயற்கைப் பேரிடர்இயற்கை பேரிடர் என்கிறபோது நமக்கு சட்டென நினைவுக்கு வருவது 2015-ஆம் ஆண்டு இறுதியில் நாம் எதிர்கொண்ட பெரும் வெள்ளமும் 2004-ஆம் ஆண்டு தமிழக கடலோர மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட சுனாமியும் தான். சுனாமி ஏற்படுவதற்கு இயற்கைக் காரணங்கள் ஏராளம் இருந்தாலும் கடலில் நடத்தப்படும் அணு ஆயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம் என்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு கோடி சிறிய பூமி அதிர்வுகளும் (ரிக்டர் அளவுகோளில் 2.9க்கும் குறைவான அளவு) மிகப்பெரிய பூகம்பம் ஒன்றும் (8 க்கும் அதிகமான அளவு) ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய பூகம்பம் சிலி நாட்டில் 1960ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 9.5ஆக பதிவானது. இந்திய பூகம்பங்களில் இமயமலை பகுதிகளில் 1905ம் ஆண்டு ஏப்ரல் மாதம், காங்கரா பகுதியில் ஏற்பட்ட பூகம்பமே மிக பெரியது. இது 20,000 மனிதர்களையும், 53,000 கால்நடைகளையும் சுவாஹா செய்தது.

இந்தியாவின் நிலப்பரப்பில், 11.2 சதவிகித நிலம் வெள்ளத்தாலும், 28 சதவிகிதம் வறட்சியாலும், 7516 கி.மீ. நிலப்பரப்பு புயலாலும், 57 சதவிகித நிலப்பரப்பு நில நடுக்கத்தாலும் பாதிப்படைகிறது.
பேரிடரை எதிர்கொள்ளுதல்இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் அதனை முறையாக நிர்வகித்து மேலாண்மை செய்வதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் எத்தனை நாடுகளில் உள்ளன என்பது குறித்து 171 நாடுகளில் ஐநா சுற்றுச்சூழல் மற்றும் மானுட பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. அந்தப் பட்டியலில் இந்தியா 77-வது இடத்தில் உள்ளது.

இயற்கை பேரிடர்கள் நிகழும் அபாயம் நிறைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. புயல், வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களை எதிர்கொள்வதற்கான பேரிடர் மேலாண்மை ஏற்பாடுகள் தமிழகத்தில் எப்படிச் இருக்கின்றன என்பது குறித்தான தனது ஆய்வறிக்கையை இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் 2013 மே 15 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ''தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைக்கான ஏற்பாடுகள் மோசம்'' என்று அதில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

கடலோர மாவட்டங்களான கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் “அவசரகால நடவடிக்கை மையங்கள் தயார் நிலையில் இல்லை” என்று அந்த அறிக்கை கோபம் காட்டியது. அத்தோடு "அந்த மையங்கள் செயல்படும் நிலையில் இல்லை. இவை செயல்பாட்டில் இருந்திருந்தால், 2011-ல் 'தானே புயல்' தாக்கியபோது கடலோரக் கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கான தகவல்தொடர்பு மிகவும் எளிதாக இருந்திருக்கும்" என்றது.

மேலும், "இந்தப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 'அவசரகாலச் செயல்பாட்டு மையங்களை' (அலுவலகங்களை) அரசின் மற்றத் துறைகள் ஆக்கிரமித்துள்ளன. பேரிடர் மேலாண்மைக்காக ஒதுக்கப்பட்ட சாதனங்கள் கவனிப்பாரில்லாமல் கிடக்கின்றன அல்லது மற்ற துறைகளால் பயன்படுத்தப்பட்டன.

பேரிடர் மேலாண்மைக்காக அமைக்கப்பட்ட மாநில அளவிலான கமிட்டிகளில் சில மாவட்ட கமிட்டிகள் கூடுவதேயில்லை" என்றது அந்த அறிக்கை. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா 1,481 கோடிகளில் ஒரு திட்டத்தையும் அறிவித்தார். இதன் மூலம் புதிய உள்கட்டமைப்பும் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும் என்று கூறினார். இதன் நிலை இப்போது என்ன, தெரியவில்லை.

நாம் செய்யவேண்டியவை

புயலினால் பலத்தசேதம், கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழப்பு, ரயில்வே நடைமேடையில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழப்பு.. என அடிக்கடி வரும் செய்திகள் நம்மை திகிலடிக்க வைக்கின்றன. கோயில் திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடப்பவை. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் கூடுகிறார்கள் என்பது கோயில் நிர்வாகத்துக்குத் தெரியும். ரயில் நடைபாதையில் நிலவும் நெரிசல் குறித்து ரயில்வே நிர்வாகம் அறியாததல்ல. புயலோ, கரையைக் கடப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே அந்தத் திசையில்தான் செல்லும் என்பதை வானிலை ஆய்வு மையம் துல்லியமாகச் சொல்லுகிறது.
ஆனால், இந்த பேரிடர்களையெல்லாம் எதிர்கொள்ள முன்
திட்டமோ பயிற்சி பெற்ற ஊழியர்களோ, பிரத்தியேக அமைப்போ, தயார் நிலையில் இல்லை என்பதால் பேரிடரை சந்திக்கிறோம். ஆக, இயற்கைப் பேரழிவுகளில் உயிரிழப்புக்குக் காரணம் இயற்கை மட்டுமல்ல. மனிதனும்தான்.

கடலோரப்பகுதிகளில் சுற்றுலா தலங்கள் அமைப்பதற்காகவும், இறால் பண்ணை மற்றும் பல கட்டுமான பணிகளுக்காகவும் கடலோர தாவரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. 2004-ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மிக மோசமாக இருந்ததற்கு கடலோர பகுதியிலிருந்த அலையாத்தி காடுகள் அழிக்கப்பட்டது முக்கிய காரணமாகும். கடற்கரை சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக 1991ஆம் ஆண்டிலேயே கடலோரப் பகுதிகளை முறைப்படுத்தும் விதிமுறைகள் இந்திய அரசால் உருவாக்கப்பட்டன. ஆனால் விதிமுறைகளை முழு அளவில் செயல்படுத்தாத காரணத்தினால் இந்திய கடலோரங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

காடுகளை உருவாக்குதல்

*உயரமான இடங்களிலிருந்து மண், பாறைகள், போன்றவை திடீரென சரிதல் நிலச்சரிவு எனப்படுகிறது. மரம். செடி, கொடிகள் மற்றும் காடுகள் அழிக்கப்படும்போதும் இது நிகழ்கிறது. இவ்வகை அழிவை தடுக்க அதிக அளவில் மரங்களை நடுதலும் காடுகளை உருவாக்குதலும் அவசியம்.
சின்ன நிகழ்வுகளின் மூலம் பெரிய விளைவுகளை இயற்கை ஏற்படுத்தும். நுகர்வு கலாசாரம் மேலோங்கியதன் விளைவாக புதை படிவ எரிபொருளை தொடர்ந்து எடுத்து பயன்படுத்தி புவிவெப்பமயமாதலுக்கு வழிவகுத்திருக்கிறோம். இது பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக பேரிடர்களை சந்தித்து வருகிறோம். புவிவெப்பத்தைக் குறைக்க பெட்ரோல், நிலக்கரி போன்ற புதை படிவ எரிபொருள் பயன்பாட்டினைக் குறைக்கவேண்டும்.
வறட்சியையும் பெரும் வெள்ளத்தையும் எதிர்கொள்ள ஏரி,கண்மாய் போன்ற நீர்நிலைகளை பராமரித்துப் பாதுகாக்கவேண்டும். பெருகி வரும் நம் மக்கள்தொகைக்கேற்ப உணவு உற்பத்தி அதிகரித்தால் தான் ஏழ்மையைப் போக்கமுடியும். எனவே மழைக்கும் மண்ணுக்கும் ஏற்றவாறு விவசாய முறைகளை மாற்றியமைக்கவேண்டும்.
மேற்குவங்கம், குஜராத், சிக்கிம், கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பேரிடர் மேலாண்மையை எதிர்கொள்ளும் வகையில் பஞ்சாயத்து அமைப்புகளின் திறனை மேம்படுத்தியிருக்கிறார்கள். நம் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் உறக்கத்தில் இருக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லை. சட்டங்களிலும், ஆணைகளிலும் கூறப்பட்டுள்ளது போல் ஆக்கபூர்வமான பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் கிராமங்களில் செயல்படுவதில்லை.

பேரழிவின் விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பேரிடர்களின் போது செய்யத் தகுந்த மற்றும் தகாத காரியங்கள் குறித்து பயிற்சியளிக்கவேண்டும். ஆபத்துக்காலங்களில் இருக்கும் இடங்களிலிருந்து தப்பிச் செல்லும் வழிமுறைகளை சொல்லிக்கொடுத்தல் அவசியம். பேரிடர்கால மேலாண்மையை சரியாகச் செய்வோமேயானால், பேரிடரை எதிர்கொண்டு பெருவாழ்வு வாழலாம்.

ப. திருமலை பத்திரிகையாளர், மதுரை
84281 15522

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement