Advertisement

காக்கும் கடவுள் காடுகள் : வன ஆர்வலர் சுப்ரபா சேஷன்

கண்களுக்கு எட்டிய துாரம் பச்சைப் பசேலென என பசுமை போர்த்தியிருக்கும் புல்வெளிகள்; உடலை வருடும் இதமான தென்றல்; சுவாசிக்க சுகாதாரமான காற்று; மண்ணை மூடும் மரம், செடி, கொடிகளின் இலைபோர்வை; இவை யாவும் எங்கும் நிறைந்திருக்கும் உலகம் வேண்டும் என்கிறார், சுப்ரபா சேஷன்.

வனங்களின் காவலர்; இயற்கை ஆர்வலர்; இயற்கை எழுத்தாளர், ஆதிவாசிகளின் நலன் விரும்பி என இயற்கைக்காக பத்து வயது முதல் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்து வருபவர். இவரது சேவையை பாராட்டி 2006ல் ஓய்ட்லி விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடவுளின் சொர்க்க பூமியான கேரளாவின் வயநாடு குருகுலா தாவரவியல் சரணாலய நிர்வாக அறங்காவலர், திருவண்ணாமலை பாரஸ்ட் பே டிரஸ்ட் அறங்காவலர் என பல்வேறு பொறுப்புகளிலும் தொடர்கிறார். மதுரையில் தானம் அறக்கட்டளை சார்பில் 'பல்லுயிர் பெருக்கமும், பருவகால மீள்திறனும்' என்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த சுப்ரபா சேஷனுடன் பேசியதிலிருந்து....
* இயற்கை மீதான ஆர்வம் வந்தது எப்படி ?சிறு வயதில் ஜூட் கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படித்தேன். பள்ளி வளாகமே இயற்கை வனமாக காட்சியளிக்கும். சிறு வயதிலேயே இயற்கை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது. என் பெற்றோர் திபெத் அகதிகள் மேம்பாட்டில் ஈடுபட்ட காலங்களில் அவர்களுடன் வனப்பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அவை காடுகளில் கவனத்தை செலுத்த வைத்தது.
* இயற்கை குறித்த விழிப்புணர்வு?அறிவியல் ரீதியாக இந்த புவிக்கு 3 லட்சம் பூக்கும் தாவர இனங்கள் தேவைப்படுகின்றன. இவை சூரிய ஒளியை கொண்டு மாவுச்சத்தை தயாரித்து அதன் மூலம் பிற உயிரினங்களின் வாழ்வுக்கு வித்திடுகின்றன. அமோசான் நிறுவனம் சியாட்டிலுள்ள தன் தலைமையகத்தை பல்வேறு வெப்ப மண்டல தாவரங்களை கொண்ட பசுமைக்குடிலாக வடிவமைத்திருக்கிறது. பருவநிலை மாறுபாடுகளை சமாளிக்க காடுகள் எவ்வாறு உதவுகின்றன, அதற்காக மரங்களை நட வேண்டியதன் அவசியம் என்ன, என்பதை அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். * மற்ற நாடுகளை விட இந்திய தாவரங்கள் குறித்து?இந்திய தேசிய தாவரவியல் புள்ளிவிபரப்படி நாட்டில் கண்டறியப்பட்ட 17 ஆயிரம் தாவர வகைகளில் 5 ஆயிரம் தாவரங்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை. ஆயிரம் தாவர வகைகள் வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை.
* குருகுலா தாவரவியல் சரணாலயம் பணி?மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள தாவரங்களை பாதுகாப்பதற்கான பணியில் சரணாலயம் ஈடுபட்டுள்ளது. உல்ப்காங் தெர்காப் என்பவரால் 1981ல் உருவாக்கப்பட்டது. காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் துணையுடன் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களை ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. * காடுகளின் பரப்பு குறைந்து வருகிறதே?இந்த கிரகத்தில் காடுகளின்றி மனித உயிர் சாத்தியமற்ற ஒன்று. பூமியில் பெருங்காடுகளின்றி வளிமண்டலமோ, உயிர் மண்டலமோ, நீர் சுழற்சியோ, நிலையான பருவநிலையோ சாத்தியமில்லை. மேற்கு தொடர்ச்சி மலை உட்பட பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. பெருகும் தொழிற்மயம், அணைகள், அனல்மின் நிலையங்கள், நில அபகரிப்புகளால் இருக்கும் காடுகளும் அழிந்து வருகின்றன. காடுகளுக்கு பாதிப்பில்லாத வளர்ச்சியே நாட்டை வளப்படுத்தும்.
* காடுகளை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?இயற்கை சூழல் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அழிக்கப்பட்ட இயற்கையை மீண்டும் உருவாக்க வேண்டும். . நமக்கு காற்றும், நீரும், உணவும் யார் தருவர்? தாவரங்களும், காடுகளும் தான் தரும். எனவே அவற்றை பாதுகாப்பது நம் கடமை.
இவரை பாராட்ட: suprabha.seshangmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement