Advertisement

இளைய சமுதாயம் யோசிக்க வேண்டும்

பண்பாடு, கலாசாரம் மிக்க வாழ்வியலை மையமாக கொண்டது தமிழினம். பல்வேறு கலைகளை உலகிற்கு அடையாளம் காண்பித்ததும், உடலுக்கு உரமூட்டிய விளையாட்டுக்களை தத்து எடுத்ததும் தமிழ் பரம்பரை என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தி. பண்டைக்காலம் தொட்டு இன்று வரை வாழ்வியலின் ஒவ்வொரு நகர்விலும் பலவிதமான மாற்றங்கள், ஏற்றங்களை இதை தொடர்ந்து தான் நாம் பயணித்து வருகிறோம். மின்சாரம், தொலைபேசி, இணையம், அலைபேசி இல்லாத காலத்தில் ஒரு விதமான மன அமைதியுடனும், நல்லொழுக்கத்துடன் நம் சந்ததியினர் வாழ்ந்து மறைந்தனர். இது தமிழரின் அடிச்சுவடு என்றால் மிகை ஆகாது. ஆனால், இன்று சகல வசதிகளும் இருக்கிறது. ஆனால், சந்தோஷங்கள் இருக்கிறதா என்றால் கேள்விக்குறியே.

தமிழர் விளையாட்டுக்கள் : இணையமும், அலைபேசியும் இணைந்து இன்றைய இளைய தலைமுறையினரை தம் ஆளுமையால் அடிமைப்படுத்தி வைத்து இருக்கிறது என்பது வருத்தம்
கொள்ளவேண்டிய செய்தியே. தாயம், பல்லாங்குழி, பாண்டி ஆட்டம், சடுகுடு, ஆடுபுலி,
கில்லி அடித்தல் போன்ற நம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டில் இருந்த மன நிம்மதியும் சந்தோஷமும் இன்று காற்றில் பறந்துவிட்டதே. இவ்விளையாட்டுக்களை நாம் மறந்தது
குற்றமா, இல்லை நம் சந்ததியினருக்கு சொல்லி கொடுக்காமல் ஒதுங்கி கொண்டோமா என்ற
கேள்வியும் எழத்தான் செய்கிறது. இந்த விளையாட்டுக்களை நாம் மறந்துவிட்டதன் பிரதிபலன் தான் இன்று புளூவேல் விளையாட்டின் மரணத்திற்கு, நம் இளைய தலைமுறை இரையாகி வருகின்றனர். பாரம்பரிய பண்பாடு சார்ந்த நமது விளையாட்டுக்கள் நம்மை பாதுகாத்தன. இந்த விளையாட்டுக்களின் பெயர்களை கூட அறியாத இளம்தலைமுறையினர் இணையத்தின் விளையாட்டால் ஈர்க்கப்பட்டு இறுதி சடங்கு எனும் வலையில் விழுந்துவிடுகின்றனர்.

புளூவேல் விளையாட்டு : எங்கோ ஒரு நாட்டில் இது ஒரு விளையாட்டு என்று இணையம் அறிமுகப்படுத்தியது. அதன் பயணப்பாதை இந்தியாவையும் எட்டி பார்த்தது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. மதுரையில் கல்லுாரி மாணவரின் மரணம் இவ்விபரீத விளையாட்டு தமிழகத்திலும் தடம் பதித்துவிட்டது என்பதற்கு சாட்சி. விளையாட்டாக ஆரம்பித்து நகர்ந்து செல்லும் ஒவ்வொரு நகர்விலும் தன்னை இழந்து, அதற்கு அடிமையாகி திமிங்கலத்தை விட்டு திமிரமுடியாமல் அது கைகாட்டும் திசைக்கெல்லாம் கைகட்டி, வாய்கட்டி தன்னை முழுமையாக
மூழ்கடித்து இறுதியில் தன்னிடம் இருந்த மூச்சையும் மூட்டை கட்டிவிடுகின்றனர். மிரட்டி, உருட்டி தன்னை அடிமைப்படுத்தி அதிகாரம் செய்யும் இந்த விளையாட்டு.இவ்விளையாட்டில் நடக்கும்மிரட்டல் தொனிக்கு பயந்து அதனை விடவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகி மரணத்தை தழுவுகின்றனர்.இது ஒரு விளையாட்டா இளைய சமுதாயமே கொஞ்சம் யோசித்து பாருங்கள். நமக்கு பின்னால் நம் குடும்பம் இந்த சமு
தாயம், இந்த நாடு நம்மை துாக்கிபிடிக்க காத்துஇருக்கிறது. அவற்றின் துாண்களாக நாம் இருக்க வேண்டியவர்கள். அற்ப சுகத்தின் விளையாட்டு ஒரு உயிரை பறிக்கும் விபரீதம் என தெரிந்தும் ஏன் அதற்குள் விழவேண்டும்.

பெற்றோர்கள் கவனிக்கவும் : பள்ளி, கல்லுாரி முடித்து வீட்டிற்கு வரும் நம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று அக்கறை எடுத்துகொள்ளுங்கள். தனிமையில் இருந்தால் மனம்விட்டு பேசுங்கள், நடப்பு நிகழ்வுகளை சொல்லிக் கொடுங்கள்.நல்லது, கெட்டதை தரம் பிரிக்கும் தகுதியை ஏற்படுத்துங்கள். முடிந்த அளவிற்கு அலைபேசியின் பயன்பாட்டை தவிர்க்க சொல்லுங்கள். நல்ல செய்திகள் பல இருப்பினும், கெட்டுப்போகக் கூடிய வழிகள் இணையத்தில் கொட்டிக்
கிடக்கிறது. அதனால் பாதை மாறாத பயணத்திற்கு வழி அமைத்துகொடுங்கள்.
கடந்த தலைமுறையினருக்கு மன அழுத்தம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால், நமது தலைமுறையில் மன அழுத்தத்தினால் மாண்டுபோனவர்கள் பல பேர். இதற்கு இன்றைய அகச்
சூழலும், புறச்சூழலும் ஒத்துழைக்கின்றன. இதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது நமது கடமை
அல்லவா.

சற்று யோசித்துப்பாருங்கள் : ஒரு பிள்ளையை பெற்று, வளர்த்து ஆளாக்கி பல ஆயிரங்
களையும், லட்சங்களையும் கொட்டி படிக்க வைப்பது எதற்காக, அவனால் இந்த
குடும்பமும், சமூகமும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் தானே. அப்படி என்றால் அவன் தடம் மாறும்போது தடுத்து நிறுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பு தானே. அதனை தட்டிக்கழிக்கும் போது தான் தவறுகள் அரங்கேறுகின்றன.ஒவ்வொரு பிள்ளைக்கும் ஆளுமையை கற்றுக்கொடுத்து அன்பை பறிமாறிக் கொள்ளுங்கள்.ஆபத்தினை உரக்க சொல்லி கொடுங்கள். பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடைவெளியை குறைத்து இணக்கமான வாழ்வியலை வாழ கற்றுக் கொடுங்கள்.

மரணம் தரும் செய்திகள் : சுவாதியின் இறப்பிற்கு பின்பு தான் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா வைத்தனர். பள்ளி பஸ் ஓட்டை வழியே பள்ளிக்கு சென்ற குழந்தை விழுந்து இறந்தபின் தான், பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பள்ளிக்கூரை தீப்பிடித்து பச்சிளம் குழந்தைகள் கருகிபோன பின்தான், பள்ளி கட்டடங்களை கண்காணித்தனர்.
பெண்கள் மரணத்திற்கு பின்பு தான் ஈவ்டீசிங் கடுமையாக்கப்பட்டன. மருத்துவ மாணவர்
நாவரசுவின் மரணத்திற்கு பின் தான் ராகிங் என்பதே வெளி உலகிற்கு தெரியவந்தது.
இப்படியாக உயிர்களை பலி கொடுத்துத்தான் உரிமை, உணர்வுகளை மீட்டெடுத்து
இருக்கிறோம். அந்த வரிசையில் மதுரை மாணவனின் உயிரிழப்பு புளூவேல் விளையாட்டு
விபரீதத்தை, வீதி தோறும் எடுத்துரைத்து இருக்கிறது. இது போன்ற விபரீதமான
விளையாட்டுக்கள் வேண்டாம் என்று இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறி நல்வழிப்
படுத்துவது நம் கடமை. இதில், பெற்றோர், ஆசிரியர், சமூகம் என ஒவ்வொரு தளத்திற்கும் அந்த பொறுப்பு உண்டு. இது போன்ற விபரீத விளையாட்டுக்களை மறந்து ஆரோக்கியமான சமூகமாக இளம் தலைமுறையினர் வளர்ந்து, வாழவேண்டும்.

-எம்.ஜெயமணி
உதவி பேராசிரியர்
ராமசாமி தமிழ்கல்லுாரி
காரைக்குடி
84899 85231

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement