Advertisement

திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா

Share
திருப்பூர் : பொதுமக்களும், பொதுநல அமைப்பினரும், சுதந்திர போராட்ட தியாகி, திருப்பூர் குமரனின், 113வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க, வேண்டுமென, திருப்பூர் முத்தமிழ் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூர் மண்ணுக்கு பெருமை சேர்ந்த குமரனின், 113வது பிறந்த நாள், நாளை கொண்டாடப்படுகிறது. திருப்பூர் குமரன், 1904ம் ஆண்டு அக்., 4ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் நாச்சிமுத்து முதலியார், கருப்பாயி அம்மாள். குமாரசாமி எனும் இயற்பெயர் கொண்ட குமரன், ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, கைத்தறி நெசவு செய்தார். 1923ம் ஆண்டில், ராமாயி என்ற பெண்ணை மணந்தார். அதற்கு பிறகு, ஈரோட்டில் உள்ள பஞ்சு மில்லில் பணியாற்றினார். காந்திமீது பற்றுக்கொண்ட இவர், திருப்பூரில், 1932ம் ஆண்டு ஜன., 10ல் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். கையில் கொடியுடன் சென்ற குமரனை போலீசார் தடியால் தாக்கினர். மயங்கி விழுந்த போதும், கொடியை கீழே விடாமல் கெட்டியாக பிடித்திருந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரன், 11ல் உயிர்நீத்தார். இதனால், கொடிகாத்த குமரன் என்று போற்றப்படுகிறது. அவரது பிறந்த நாளை, அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு, 2015ல் உத்தரவிட்டது. தியாகி திருப்பூர் குமரனின், 113வது பிறந்த நாள் விழா குறித்து, திருப்பூர் முத்தமிழ் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:நாளை திருப்பூர் குமரனின், 113வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், குமரன் நினைவகத்தில், சிலைக்கு மாலை அணிவித்து, அரசு மரியாதை செலுத்தப்படும். திருப்பூரை சேர்ந்த பொது அமைப்புகள், பொதுமக்கள், இளைஞர்கள் பங்கேற்று, ஊர்வலமாக செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.குமரன் நினைவகத்தில் இருந்து, காலை, 9:00 மணிக்கு ஊர்வலமாக சென்று, குமரன் நினைவிடத்தில், மலர் மரியாதை செய்யப்படும். அங்கிருந்து குமரன் ரோடு, பார்க்ரோடு வழியாக, ஜெய்வாபாய் பள்ளியை ஊர்வலம் சென்றடையும். அங்கு, தியாகிகள் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவில், திருப்பூர் முத்தமிழ் சங்கம், சென்னை சில்க்ஸ் குழுமம், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற பொதுநல அமைப்புகள், திருப்பூர் வியாபாரிகள் சங்கத்தினர், கதர் வியாபாரிகள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம், பனியன் ஏற்றுமதியாளர் சங்கம், விவசாயிகள் சங்கம், பழைய சாக்கு வியாபாரிகள் சங்கம், ஸ்ரீகாமாட்சியம்மன் திருமண மண்டபம், ஸ்ரீகாமாட்சியம்மன் கல்வி அறக்கட்டளை, குமரன் மனமகிழ் மன்றம், தியாகிகள் நல பேரவை, அரசு பள்ளிகள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். பொதுமக்களும், பொதுநல அமைப்பினரும், சுதந்திர போராட்ட தியாகி, திருப்பூர் குமரனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இவ்விழாவில் பங்கேற்று பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement