Advertisement

மனிதத்தின் புனிதம்

இந்திய மண்ணில் நாம்பிறந்ததற்கு இரண்டு வகையில் பெருமை கொள்ள வேண்டும். ஒன்று நம் பாரதத்தின் புனிதம்; மற்றொன்று மகாத்மாவின் மனிதம்.'பாருக்குள்ளே நல்ல நாடு, நம் பாரத நாடு' என பாரதத்தை பாங்காய்ப் பாடிய மகாகவி பாரதிக்கும் ஒருபடி மேலே சென்று, 'உலக நாடுகளெல்லாம் என் வீடானால், அதில் இந்தியாதான் பூஜை அறை' என்றார் வரலாற்றுப் பேராசிரியர் வில் தர்பன். இது நாம் வாழும் மண்ணின் சிறப்பு.

இம்மண்ணில் வாழ்ந்த மகத்தான மனிதரை, மானுடம் போற்றும் மகாத்மாவை, அரையாடைத் துறவியை, அவரது காலடி படாத நாடான அமெரிக்கா, முதன் முதலில் காந்தியின் தபால்தலையை 1961ம் ஆண்டு ஜனவரி 26ல் வெளியிட்டு பெருமை சேர்த்தது. அமெரிக்காவின் முதல் குடிமகனாய் பாரக் ஒபாமா முடிசூட்டிக்கொண்ட போது 'கடவுள் உங்கள் முன்னே தோன்றி உங்
களுக்கொரு வரம் தருவதாக கேட்டால் எதைக் கேட்பீர்கள்' என்ற வினாவிற்கு, 'என் வாழ்நாளில் மகாத்மா காந்தியுடன் ஒருநாள் இரவு உணவு அருந்தும்வாய்ப்பு வேண்டும் என்று கேட்பேன்' என்றார்.

இதன் மூலம் 1869 அக்., 2ம் தேதி நம் மண்ணில் தோன்றிய புனிதம், இன்னும் குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிர்விடுவது கண்கூடு.இளம் வயதில் செய்த தவறுகளையெல்லாம் காகிதத்தில் கசிந்துருகி தந்தையிடம் சமர்ப்பித்து தண்டனைக்காக காத்திருந்தபோது, தந்தை அவரது கண்ணீரால் அவரையே தண்டித்துக்கொண்டு, காந்திஜியை மன்னித்தபோது காந்தி கதறி அழுகிறார். 'அன்புக் கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அதன் சக்தியை அறிவான்' என்ற பாடல் வரிகளால் வாழ்வை காந்தி நிரப்ப, மனது லேசாகிப் போனது.

'உடல் உழைப்பும், மூளை உழைப்பும் சேரும்போதுதான் தனிமனித வளர்ச்சியும், சமூக வளர்ச்சியும் சாத்தியம்' என்னும்போது அவர் நவீன சாக்ரடீஸ்.'உண்மையான கல்வி என்பது தனிமனிதனின் மனதில் பண்பு, ஞானம், பொறுமை, உண்மை ஆகியவற்றை விதைப்பதில் அடங்கியிருக்கிறதே தவிர, இலக்கியப் பயிற்சியில் இல்லை' என்று கல்விக்கு இலக்கணம் வகுத்தபோது அவர் மகான்.

'செல்லும் பாதை சரியாக இருந்தால் அதன் முடிவும் சரியாக இருக்கும்' என்ற கோட்பாடு கொண்ட நவயுக புத்தர்.'நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றம் முதலில் நம்மிடம் நிகழவேண்டும்' என தன்னை பட்டறையாக்கிக்கொண்ட தங்கத் தாத்தா.

'பெண்கள் பொறுமையின் அவதாரம். அவர்களால் அன்பைப் பெருக்கமுடியும்' என்று பெண்மையை உன்னதமாக்கிய தந்தை.'கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை, உள்ளத்தில்தான் இருக்கிறான்' என்று உரைத்த ஆன்மிகத் துறவி.

தனது வாழ்க்கையைச் சோதனைச் சாலையாக்கி, தன்னை அறிந்துகொண்ட ஒரு தவ விஞ்ஞானி.'நம் தேசத்தின் தந்தை' என்று வீர சல்யூட் செய்த இந்திய தேசியப் படையின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸும், 'மகாத்மா' என்று வணங்கி மகிழ்ந்த ரவீந்தரநாத்தாகூரும், 'அண்ணல் அமர்ந்த இடம் ஆலயம். அவர் பாதம் பட்ட இடமெல்லாம் புனிதத் தலம்' என்று பண்டித ஜவஹர்லால்நேருவும், வீரத்திற்கு 'அஹிம்சை' என்னும் புதிய ஆயுதம் தந்த மாவீரனுக்கு அளித்த பரிசுகள்.

வாழ்க்கையோடு மகாத்மா வின் 'சத்திய சோதனை'யும் இருந்தால், 'நமக்குப்பின் வரும் சந்ததிகள் தசையோடும், ரத்தத்தோடும் இப்படி ஒரு மனிதர் பூவுலகில் உலவினார் என்பதை நம்பமாட்டார்கள்' என்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனின்வார்த்தைகள் பொய்யாகும்.

புதிய சிந்தனைகளோடு வாழ்வில் உயர்வினை எட்டத்துடிக்கும் பாரதக் குழந்தைகளுக்கு தனது வாழ்வில் மகாத்மா எழுதிய கடைசி வரிகளின் மந்திரத் தாயத்து இது தான்.'நீங்கள் குழப்பத்தில்
இருக்கும்போது, உங்களைப் பற்றியே எண்ணங்கள் உங்கள் உள்ளத்தை நிறைக்கும் போதும், நீங்கள் பின்வரும் சோதனையை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் இதுவரைப் பார்த்தவர்களிலேயே மிகவும் ஏழ்மையில் இருந்த அந்த மிக எளியவரின் முகத்தை நினைத்துப் பாருங்கள். அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறீர்களோ, அது அவருக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுமா? என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

அதனால் அவருக்கு நன்மை ஏதேனும் ஏற்படுமா? அவரது வாழ்க்கையையும், விதியையும் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை அவருக்கு அது திரும்பப் பெற்றுத் தருமா? வேறு சொற்களில் சொல்வதானால், பசியிலும் ஆன்மிக வறுமையிலும் வாடும் பல கோடி மக்களுக்கு அதனால் விடுதலை கிடைக்குமா?

இந்தக் கேள்வியில் உங்கள் குழப்பங்களும் தன்னுணர்வும் கரைந்தே போகும்'.உள்ளத்தில் உண்மை, பேச்சினில் வாய்மை,செயலில் துாய்மை என மூன்று உன்னதத் தன்மைகளால் வாழ்ந்து இவ்வுலகிற்கு மகாத்மா சொன்ன ஒற்றைவரிச் செய்தி, 'எனது வாழ்க்கையே நான் கூறும் செய்தி' என்பது தான்.

பள்ளிப் பருவத்தில்,மகாத்மாவின் பிறந்த நாளிலும்,சுதந்திர மற்றும் குடியரசு தினக் கொண்டாட்ட நாட்களிலும்,பார்த்து மகிழ்ந்த 'காந்தி' திரைப்படம், இன்று 'சத்திய சோதனை'யை வாசிக்கின்றபோது, புத்தகங்களில் போடும் அடிக் கோடுகள் போல், தேசப்பிதாவின் முகம் வாசிப்பவர் நெஞ்சினில் கற்பாறைச் சிற்பமாய் செதுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நாளில், நம் பாரத மண்ணில் வாழ்ந்த மகத்துவத்தை, இந்தியாவின் மணிமகுடத்தை மகாகவியின் வரிகளால்,'வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்தாழ்வுற்று வறுமை மிஞ்சிவிடுதலை தவறிக் கெட்டுபாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னைவாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!' என்று வாழ்த்துவோம், வணங்குவோம்.

-ஆர். திருநாவுக்கரசு

துணை ஆணையர் காவல்துறை, சென்னை

thirunavukkarasuipsgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Darmavan - Chennai,இந்தியா

    மஹாத்மவை அம்பேத்கார் ஏற்றுக்கொள்ளவில்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement