Advertisement

சகலகலாவல்லி - சாதனை பெண் ஆன்ஸி கிரேஷியஸ்

மழை மேகங்களின் முற்றுகையால் அருவியென கொட்டும் சிகை... புத்தம் புது பூவுக்குள் சிதறி முத்துக்களாய் பளிச்சிடும் பனித்துளி புன்னகை... சாதனையின் சிகரங்களை தேடி விரையும் மை விழிகள், காற்றில் கற்பூரமாய் கரையும் இவர் பேசும் மொழிகள்... சண்டை பயிற்சி, நடிப்பு, திரைக்கதை, இயக்கம் என்று திரையுலகின் அத்தனை விஷயங்களையும் தொட்டு, சாதித்து கொண்டிருக்கும் ஆன்ஸி கிரேஷியஸ், மலையாள திரையுலகின் புதுவரவு.
அம்மா, அக்கா வேடம் என்றாலும், ஹீரோயின் என்றாலும் நடிப்பை நடிப்பாகவே பார்ப்பதால், அத்தனை வேடங்களையும் பாரபட்சம் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார். ஹீரோயினாக நடித்த 'நிலாவு பெய்ந்ந தாழ்வாரம்' என்ற படம் 'கேன் வெஸ்ட்' திரைப்பட விழாவில் இடம் பெற்றது. சந்திரகிரி, சிப்பி என பத்து படங்களில் நடித்துள்ள இவர் 'மருபூமியிலே மழைத்துளி' என்ற படத்தில் நடித்து வருகிறார். பல குறும்படங்களை இயக்கி நடித்தும் இருக்கிறார். இவர் கதை எழுதி நடித்த 'நிச்சலம்' என்ற ஒரு மணி நேர விழிப்புணர்வு படம், கேரளாவில் பிரபலம். அங்கு பெருகி வரும் மதுபோதை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை தொழிலாளர் கொடுமை ஆகியவற்றை மையமாக வைத்து, இதனை உருவாக்கி இருந்தார். கேரளாவில் பொது இடங்களில் இந்த படம் தற்போது திரையிடப்பட்டு வருகிறது.
இவர் நடித்த 'பெனன்ஸ்' என்ற கல்லுாரி மாணவர்களின் குறும்படத்தை, யுடியூபில் இதுவரை 10 கோடி பேர் வரை பார்த்துள்ளனர் என்பது சாதனை. கேரளாவில் கண்ணுாரில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஆன்ஸியின், லட்சியம் மிக உயர்வானது. திரையுலகில் தனக்கென்று ஓரிடத்தை உருவாக்க வேண்டும் என்று நாளும் ஓடிக்கொண்டிருக்கிறார்.
அவர் கூறியது: பள்ளிக்காலங்களிலேயே நடிப்பு மீது அளவற்ற ஆசை உண்டு. 'ஆக்ஷன் கில்லாடிகள்' என்ற தொலைக்காட்சி 'ரியாலிட்டி ஷோவில்' பங்கேற்ற போது, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் 'மாபியா' சசியின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவி ஸ்டண்ட் மாஸ்டராக சேர்ந்தேன். பத்து படங்களில் பணியாற்றினேன். ஏற்கனவே கராத்தே பயின்றிருப்பதாலும், சாகசங்கள் பிடிக்கும் என்பதாலும் அது எளிதானது. ஹீரோயின் தொடர்பான சண்டைக்காட்சிகளில், தேவை இருந்தும் பெண் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அவ்வளவாக திரையுலகில் இல்லை. குறுகிய காலத்தில் சண்டை பயிற்சியின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். நான் பணியாற்றிய 'ஜக்கு தாதா' என்ற கன்னட படம் பெரிதும் பேசப்பட்டது. என்றாலும் நடிப்பு, இயக்கம் மீதான என் ஆர்வம் அதிகம். எனவே நடிப்புக்கு வந்து விட்டேன். ஏற்கனவே பல குறும்படங்களில் நடித்து உள்ளதால், எந்த கதாபாத்திரமானாலும் என்னால் எளிதாக நடிக்க முடிகிறது.
திரையுலகில் இயக்குனருக்கு தான் உயர்ந்த இடம். அந்த இடத்தை நான் அடைய வேண்டும். ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கி விட்டு, இயக்குனர் ஆக வேண்டும். மலையாள திரையுலகில், சில நேரங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் நாம் அறிந்ததே. பெண்ணே இயக்குனராகி விட்டால், பெண்களுக்கு பல வழிகளில் துணை நிற்க முடியும்.
சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற என் சிந்தனையின் வெளிப்பாடு இது. முதலில் திரையுலகிற்கு வந்த போது, என்னை சுற்றியிருப்பவர்கள் ஏளனம் செய்தார்கள். அந்த ஏளனமே என்னை வெற்றிப்படிகள் தொட ஏணியாக்கியது, என்கிறார் மன உறுதியுடன்! வாழ்த்த : vineeshaancygmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement