Advertisement

தீபாவளிக்கு ருசிக்க வெள்ளியணை அதிரசம்

கரூர்: தீபாவளி பண்டிகைக்கு வெள்ளியணையில் தயாராகும் அதிரசத்துக்கு ஆர்டர்கள் குவிகிறது.

அல்வா என்றால் நெல்லை, பஞ்சாமிர்தம் என்றால் பழனி, லட்டு என்றால் திருப்பதி, முறுக்கு என்றால் மணப்பாறை என, ஒவ்வொரு உணவு பொருளுக்கும், ஒரு ஊர் ஞாபகத்துக்கு வரும். அந்த வகையில், அதிரசம் என்றாலே, கரூர் மாவட்டம் வெள்ளியணை தான் நினைவுக்கு வரும். கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன் வெள்ளியணையில் கோபால் நாயுடு என்பவர் அதிரசம் விற்பனையை துவக்கி வைத்தார். இன்று, 25க்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியில் அதிரசம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கரூரில் இருந்து திண்டுக்கல் செல்பவர்கள், வெள்ளியணையில் வாகனங்களை நிறுத்தி, அதிரசம் வாங்கிச் செல்வதைப் பார்க்கலாம். கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட உள்ளூர் தேவைகளுக்குப் போக, வெளியூர் விற்பனைக்காகவும் அதிரசம் தயாரித்து அனுப்பப்படுகிறது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், வெள்ளியணை அதிரசம் கட்டாயம் பரிமாறப்படும். மேலும், கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் கூடும் வாரச்சந்தைகளில் வெள்ளியணை அதிரசம் களைகட்டும். குறிப்பாக, தீபாவளி பண்டிகையின்போது, வெள்ளியணை அதிரசத்தை பொதுமக்கள் ஆர்டர் செய்து வாங்கிச் செல்வர். தீபாவளி வரும் அக்., 18ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, வெள்ளியணை அதிரசத்துக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.


இதுகுறித்து, அதிரசம் தயாரிப்பாளர்கள் கூறியதாவது: காவிரி மற்றும் அமராவதி ஆற்று தண்ணீர் காரணமாக வெள்ளியணையில் தயாரிக்கப்படும் அதிசரத்துக்கு தனிச் சுவை கிடைக்கிறது. அதிசரத்தில் வெள்ளை சர்க்கரை சேர்ப்பதில்லை. அச்சு வெல்லம் மட்டும்தான் பயன்படுத்துகிறோம். எனவே, இதை சர்க்கரை நோயாளிகளும் கூட அளவாக சாப்பிடலாம். பச்சரிசி, அச்சு வெல்லம், ஏலக்காய் மற்றும் சீரகம் கலந்த கலவையில், கால்சியம் உள்ளது. இதனால், எலும்பு பாதிக்கப்பட்டவர்கள் அதிரசம் சாப்பிட வேண்டும் என, டாக்டர்களே கூறுகின்றனர். பச்சரிசியை தண்ணீரில் ஊறவைத்து, பிறகு காயவைத்து கிரைண்டரில் அரைத்து மாவு தயாரிக்கிறோம். பிறகு, அச்சு வெல்லத்தை பாவு காய்ச்சி இரண்டையும் சேர்த்து ஏலக்காய் மற்றும் சீரகம் கலந்து அதிரசம் தயார் செய்யப்படுகிறது. இதற்கு கடலை எண்ணைதான் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை, மறுமுறை பயன்படுத்துவது கிடையாது. வழக்கமாக எண்ணையில் பொரித்து எடுக்கப்படும் பலகாரங்களில், எண்ணை அதிகளவில் இருக்கும். ஆனால், வெள்ளியணையில் தயார் செய்யப்படும் அதிரசத்தில் அவ்வளவாக எண்ணை இருக்காது. 50 நாட்கள் வரை, அதிரசம் கெடாமல் இருக்கும். எண்ணை வாடை வராது. தீபாவளி பண்டிகைக்காக ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement