Advertisement

மாரடைப்பை எதிர்கொள்வது எப்படி

இதயம், நம் உயிர்காக்கும் உறுப்பு. இதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அனைவருக்கும் அக்கறை இருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வை நம்மிடம் ஏற்படுத்துவதற்குத்தான், செப்டம்பர் 29 'சர்வதேச இதயநலம் நாள்' எனக் கொண்டாட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இதயத்தைப் பாதிக்கும் முக்கிய நோய், மாரடைப்பு. இந்தியாவில் மட்டும் ஐந்து கோடி பேர் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஆண்டுதோறும் ஒரு கோடி பேருக்குப் புதிதாக மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த நிலைமை நீடித்தால், இந்திய மக்களின் ஆரோக்கியம் மட்டுமல்ல; இந்தியப் பொருளாதாரமும் குறைந்துவிடும். இதயத் தசைகளுக்கு ரத்தம் வழங்கும் இதயத்தமனிகளில் அடைப்பு ஏற்படும்போது, இதயத்துக்கு ரத்தம் கிடைப்பது குறைகிறது. இதனால், இதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல், இதயம் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவுதான் மாரடைப்பு.

என்ன காரணம் : மாரடைப்புக்கு மிக முக்கியக் காரணம் புகைபிடிக்கும் பழக்கம். புகையிலையில் உள்ள நிகோடின் எனும் நச்சுப்பொருள் ரத்தக்குழாய்களைச் சுருங்கவைத்துவிடும். இந்தப் பாதிப்பு இதயத்தமனிகளில் ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
நாம் சாப்பிடும் உணவில் உள்ள அதிகக் கொழுப்பு ரத்தத்தில் கலந்து, உப்புத் தண்ணீர்க் குழாய்களில் நாட்பட நாட்பட உப்பு படிவதுபோல், ரத்தக்குழாய்களில் படிந்து அடைத்துவிடும். அப்போது இதயத்தமனிகளின் உட்புறம் சுருங்கிவிடும். இதனால், மாரடைப்பு ஏற்படும்.
ரத்தம் அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு இதயத்தின் சுவர்களும் ரத்தக்குழாய்களும் பாதிக்கப்படும். அப்போது அதிக சக்தியைச் செலவழித்து இதயம் இயங்க வேண்டியதுவரும். ஒரு கட்டத்தில் இதயம் இயங்க முடியாமல் போகும். இதன்விளைவாக மாரடைப்பு உண்டாகும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் கட்டுப்படுத்தாத ரத்தச் சர்க்கரை காரணமாக, பளிங்குபோல் பளபளப்பாக இருக்க வேண்டிய இதயத்தமனிகள், செங்கல் தளம்போல் சொரசொரப்பாகிவிடும். அப்போது அவற்றில் எளிதாகக் கொழுப்பு அடைத்துக்கொள்ளும்; ரத்த உறைவு ஏற்பட்டுவிடும். இதனால் இவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்பு மற்றவர்களைவிடப் பல மடங்கு அதிகம்.
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதுதான் அதிகம். அதீத மன அழுத்தம் காரணமாக, அட்ரீனலின் ஹார்மோன் அடிக்கடி சுரந்து, இதயத்துக்கு அதிக வேலைப் பளுவைத் தருகிறது. இது மாரடைப்புக்கு வழி கொடுக்கிறது.
உடற்பருமன் உள்ளவர்களுக்கும், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடல் உழைப்பு குறைந்தவர்களுக்கும் இதயத்தமனிகள் விரைவில் பாதிக்கப்பட்டுவிடும். வயோதிகத்தில் இயற்கையாகவே, இதயத்தமனிகள் சுருங்கிவிடும் அல்லது தடிமனாகிவிடும். இவற்றின் காரணமாக, இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

அறிகுறிகள் என்ன : இதயத்தசைகளுக்கு ரத்தம் கிடைப்பது குறையத் தொடங்கியதுமே இதயம் அதைக் காட்டிக்கொடுத்துவிடும். எடுத்துக்காட்டாக, மாடிப்படிகளில் ஏறும்போது, வேகமாக நடக்கும்போது இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கும். இதயம் துடிக்கச் சிரமப்படும். இதன் விளைவால், நடுநெஞ்சில் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துவிட்டால், நெஞ்சுவலி குறைந்துவிடும். அல்லது 'சார்பிட்ரேட்' மாத்திரையை நாக்கின் அடியில் வைத்துக்கொண்டாலோ, இந்த மருந்தை (GTN Spray) நெஞ்சில் தெளித்துக்கொண்டாலோ, நெஞ்சுவலி குறைந்துவிடும். இதற்கு 'இதயவலி' (Angina pectoris) என்று பெயர். மாரடைப்பின் ஆரம்பக்கட்டம் இது. இப்போதே சுதாரித்துக்கொண்டால், அடுத்து வரும் பேராபத்தைத் தவிர்த்துவிடலாம்.
சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் பெரிய சுமை வைத்து அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். அந்த வலி கழுத்து, தாடை, இடது தோள்பட்டை, கைவிரல்கள் ஆகிய பகுதிகளுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்த்துக் கொட்டும்; ஓய்வெடுத்தாலும் 'சார்பிட்ரேட்' மாத்திரை சாப்பிட்டாலும் நெஞ்சுவலி குறையாது. நேரம் ஆக ஆக நெஞ்சுவலி அதிகமாகிக்கொண்டே போகும். மயக்கம் வரும். மரணத்தின் அறிகுறிகள் எட்டிப் பார்க்கும். இதுதான் 'மயோகார்டியல் இன்பார்க் ஷன்' (Myocardial infarction) என அழைக்கப்படும் ஆபத்தான மாரடைப்பு.
சிலருக்கு - குறிப்பாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு - நெஞ்சில் வலி ஏற்படுவது தெரியாது. மாறாக, நெஞ்சில் எரிச்சல், குமட்டல், வாந்தி, படபடப்பு, மயக்கம், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படுவது உண்டு. இவையும் மாரடைப்புக்கான அறிகுறிகளே.
அதற்காக, நெஞ்சுவலி, நெஞ்செரிச்சல் என்றாலே மாரடைப்பு என்று முடிவுகட்டி பதற்றப்படவும் வேண்டாம். உணவுப்பாதையில் புண், நுரையீரல் நோய், எலும்புப் பிரச்னை உள்ளிட்ட மார்பு சார்ந்த மற்ற நோய்களாலும் நெஞ்சுவலி ஏற்படுவதுண்டு. அதேநேரம் எல்லாவகை நெஞ்சுவலிக்கும் வாயு உள்ளிட்ட சாதாரண காரணங்கள்தான் இருக்கும் என்று அலட்சியமாகவும் இருக்க வேண்டாம்.. நெஞ்சுவலி ஏற்படும்போது தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு நோயைத் தெரிந்து கொண்டு, அடுத்து ஏற்படவிருக்கும் ஆபத்துகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

என்ன பரிசோதனைகள் : ஒருவருக்கு மாரடைப்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் முதல்கட்ட பரிசோதனை இசிஜி. என்றாலும், அனைவருக்கும் இது சரியாக நோயைக் கணிக்கும் என்று உறுதிகூற முடியாது. பல நேரங்களில் இது மருத்துவர்களையும் நோயாளிகளையும் ஏமாற்றிவிடும். எனவே, நோயாளியின் தேவையைப் பொறுத்து டிரட் மில், எக்கோ, ஆஞ்சியோகிராம், டிரப்போனின் ரத்தப் பரிசோதனை எனப் பல பரிசோதனைகளை மேற்கொண்டு, மாரடைப்பை உறுதி செய்கின்றனர் மருத்துவர்கள்.

என்ன சிகிச்சை : மாரடைப்புக்கு முதல்கட்ட சிகிச்சையாக, ஹெப்பாரின் (Heparin), ஸ்ட்ரெப்டோகைனேஸ் (Streptokinase), டினெக்டிபிளேஸ் (Tenecteplase), ரெட்டிபிளேஸ் (Reteplase) போன்ற மருந்துகளில் ஒன்றைத் தேவைக்கேற்ப நோயாளிக்குச் செலுத்தினால், இதயத்தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்பு கொஞ்சம் விலகும். இதயத்துக்கு உண்டான ஆபத்து குறையும்.
ஆனாலும், இதை மாரடைப்புக்கான முழு சிகிச்சை என்று கூற முடியாது. சிலருக்கு இந்தச் சிகிச்சைக்குப் பிறகும் இதயத்துக்கு ஏற்பட்ட ஆபத்து விலகுவதில்லை. அப்படியானவர்களுக்கு, 'ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சை' மேற்கொள்ளப்படும். மொத்தமுள்ள மூன்று இதயத்தமனிகளில் ஒன்றோ, இரண்டோ அடைத்துக் கொண்டால், 'ஸ்டென்ட் சிகிச்சை'யும், மூன்றும் அடைத்துக் கொண்டால், 'பைபாஸ் அறுவை சிகிச்சை'யும் மேற்கொள்ளப்படும். பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ளமுடியாத அளவுக்கு உடல்நிலை மோசமாக இருந்தால், மூன்று அடைப்புகளையும் ஸ்டென்ட் சிகிச்சையில் சரியாக்குவதும் உண்டு.
இன்னொன்று, மாரடைப்பு ஏற்பட்ட 90 நிமிடங்களில் 'கேத் லேப்' வசதியுள்ள மருத்துவமனைக்கு நோயாளி சென்றுவிட்டால், அவருக்கு மருந்து சிகிச்சை தேவையில்லை. நேரடியாக ஸ்டென்ட் சிகிச்சையை மேற்கொண்டுவிடலாம். இதற்கு 'பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சை' எனப் பெயர். இதை மேற்கொள்கிறவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து வெகுவாக குறைந்துவிடும். மாரடைப்புக்குப் பிறகான இல்லற வாழ்க்கை உள்ளிட்ட வாழ்க்கைமுறைகள் ஏற்கனவே இருந்ததுபோல் தரமானதாக இருக்கும்.

தடுப்பது எப்படி : நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை இதயம் தொடர்பான மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்துகொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். புகைபிடிக்க வேண்டாம். ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள். ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு சரியாக இருக்க வேண்டும். கொழுப்பு உணவுகளைக் குறைத்து, உடற்பருமனைக் கட்டுப்படுத்த வேண்டும். எண்ணெய் அதிகமுள்ள உணவுகளையும் நொறுக்குத்தீனிகளையும் குறைத்துக் கொண்டு, காய்கறி, கீரை, பழங்கள் போன்றவற்றை அதிகப்படுத்துங்கள். தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்துங்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி/யோகா மேற்கொள்ளுங்கள். மன அமைதி மிக முக்கியம். தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் நிம்மதியாக உறங்கினாலே இதயம் புத்துணர்வுடன் இயங்கும். அப்போது மாரடைப்புக்கு இடமில்லாமல் போகும்.

டாக்டர் கு. கணேசன்
மருத்துவ இதழியலாளர்
ராஜபாளையம்.
gganesan95gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement