Advertisement

கல்வியே கலங்கரை விளக்கம்

கல்வி என்பது பரந்து, விரிந்து, ஆழ்ந்து கிடக்கும் ஓர் அறிவுக்கடல். அதன் கரையில் நின்று காற்று வாங்கி, மகிழ்ந்து செல்வோர் பலர். அங்கு கிடக்கும் கிளிஞ்சல்களை பொறுக்கி இன்புறுவோர் பலர். அதிலிருந்து மீன்பிடித்தும், உப்பு காய்ச்சியும் வாழ்வோர் சிலர். அதில் மூச்சை அடக்கி மூழ்கி முத்தெடுப்போர் உலகில் மிகச்சிலரே.கல்வி என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல் 'எஜூகேஷன்' என்பதாகும். இச்சொல் லத்தீன் மொழியில் உள்ள 'எஜூகேர்' என்ற மூலச்சொல்லிலிருந்து தோன்றியதாகும். இந்த மூல சொல்லின் பொருள் 'வளர்ப்பது' என்பதாகும்.இதே போல், 'எஜூகீர்' என்ற ஒரு சொல்லும் உண்டு. இச்சொல்லுக்கு 'வெளிக்கொணர்வது' என்பது பொருளாகும். கல்வி என்பதற்கு 'வளர்ப்பது, வெளிக்கொணர்வது' என்பது மேலை நாட்டு மொழிகளில்இருந்து புலப்படுகிறது.

கல்வி என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர்

''தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு'' என்று

கூறுகிறார். இதிலுள்ள 'ஊறும்' என்ற சொல் மேலை நாட்டு மூலச்சொல்லின் பொருளுடன் இயைந்திருப்பதை நோக்க வேண்டும். இதனால் திருவள்ளுவரும், 'கல்வி' என்பதற்கு உள்ளே மறைந்திருக்கும் ஆற்றல்களையும், திறன்களையும் வெளிக்கொண்டு வர முயல்வது என்றே பொருள் கொண்டு உள்ளார் என்பது உணரப்படுகிறது.

கல்வி என்பது, கல்லுதல், தோண்டுதல், துருவி ஆராய்தல் என்ற பொருண்மையின் அடிப்படையில் தோன்றியதே ஆகும். படித்து, படித்து அறிவு புலத்தில் முதிர்ச்சி காண்பது கல்வி. கேட்டு, கேட்டு வளர்ச்சி பெறுவது கேள்வி. கல்வி, கேள்வி இவைகளின் பயனாக அறிவு புலன் சாத்திர
தன்மையை பெறுவது பாண்டித்தியம். சிந்தனை சக்தியால், அறிவு புலமானது
கனிவையும், விரிவையும் பெறுவது புலமை. புதியன படைக்கும் சக்தியால்,
அறிவுப்புலமானது பெறுகின்ற ஒளியை தெய்வப்புலமை அல்லது அருட்புலமை என்பர் அறிஞர் பெருமக்கள்.

கல்வியின் பயன்பாடு : நாட்டின் முன்னேற்றத்திலும், நாகரிகத்திலும் கல்வியின் பங்களிப்பு மிக முக்கியமானது. அறியாமையிலிருந்து மனித குலத்தை அறிவுலகத்தை நோக்கி பயணிக்க வைப்பதே கல்வியின் பயன்பாடு. பண்பாடு என்ற தொட்டிலில் வளர்த்தெடுக்கப்படும் குழந்தையே கல்வி.நாகரிகம், பண்பாடு, சொல் மரபு, முந்தையோர் அனுபவம் இவை
அனைத்தையும் கட்டி காப்பதும் கல்வியே. தனி மனிதன் தனது வாழ்வில், சரியான பாதையில் செல்லவும், தம்மை தாமே வாழ்க்கை கலைக்கு தயார் செய்ய உதவுவதும் கல்வியே. உயர்ந்த கல்வி என்பது உயர்ந்த நாகரிகத்தின் அடையாளம்.நமது குறிக்கோள்களின் எல்லைகளை கல்வியின் மூலமாகத்தான் நாம் விரிவுபடுத்த முடியும். கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கும், பண்பாடு வளர்ச்சிக்கும் உதவுகிறது. அதே சமயம் வேலை வாய்ப்பிற்கும் உதவுகிறது. கல்வி என்பது தனித்த சிறப்புடையது. அது எதனாலும் அழியாது. மனிதன் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு
பருவத்திலும் கற்று கொண்டே இயங்குகிறவன்.

சமுதாய வளர்ச்சி : கல்விக்கு முளைக்கும் தன்மை உண்டு. மண்ணும், நீரும் கொண்டு விதை
உயிர்த்தெழுவதை போல மனமும் அறிவும் கொண்டு கல்வி உயிர்த்தெழுகிறது. கல்வி வறுமையை உடைத்தெறிகிறது. பொருளாதாரத்திற்கு அது அடிப்படை உரமாகவும் அமைகிறது. சமுதாய வளர்ச்சியின் அடிநாதமாகவும் அமைகிறது. அறம் நிலைத்து தழைக்க வேண்டுமானால், மக்கள் கல்வி அறிவு உடையவர்களாக திகழ வேண்டும்.கல்வியானது இந்திய மக்களின் அடிப்படை உரிமை என்று 2002-ல் சட்டம் இயற்றப்பட்டது. சட்டப்படி கல்வி உரிமையை கோரும் உரிமையை அனைத்து மக்களுக்கும் இந்திய குடியாட்சி வழங்கி உள்ளது. இன்றைக்கு கல்வி என்பது வாழ்க்கையை நடத்துவதற்கு உண்ணும் உணவு போலவும், உடுத்தும் உடை
போலவும் உயிர்நாடியாக முக்கியத்துவம் பெற்று வளர்ச்சி அடைந்து வருகிறது.
தீவிரவாதம், எய்ட்ஸ் நோய் ஒழிப்பு, புவி வெப்பத்தை தணித்தல், சுற்று சூழலை பாதுகாத்தல், குழந்தை வளர்ப்பு, சுகாதாரமாக வாழ்தல், உலக சகோதரத்துவம் பேணுதல் ஆகிய எல்லா பிரச்னைகளுக்கும் கல்வி என்பதே தீர்வாக இருக்கிறது.சமுதாய நோய்களுக்கு உரிய
அருமருந்தாகவும், சமுதாய முன்னேற்றங்களுக்கு ஏணிப்படியாகவும் கல்வி திகழ்கிறது.

பயங்கரவாதம் : உலக அளவில் தலைதுாக்கி நிற்கும் பயங்கரவாதம் வளர்வதற்கு காரணம் அதில் ஈடுபடும் இளைஞர்களுக்கு கல்வி பயிற்சி வழங்காததே. குழந்தை பருவத்திலிருந்தே மனித மனங்களுக்கு தகுந்த கல்வி பயிற்சியை வழங்கினால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். மனதில் வளரும் வெறுப்பும், பொறாமையும், தன்னலமும், தீவிரவாதமாக சுடர் விட்டு பலருக்கு தீமையாய் போய் முடிகிறது.பயங்கரவாதத்தை மாற்ற ஒரே வழி இளைஞர்களின் மனதுக்கு ஏற்ற அவரவர் விரும்பும் இனிமையான கல்வி சாலைகளில் அவர்களை ஒழுங்குபடுத்துவதே ஆகும். மனிதனை மூன்று வகையான உணர்வு ஆட்டி படைக்கின்றன. அவை, காமம், வெகுளி, மயக்கம். காமம் என்பது, ஆசைகளின் குவியல். வெகுளி என்பது கோபம். மயக்கம் என்பது உண்மையை உணராமல் தவறாக புரிந்து கொள்ளல்.

மனப்பயிற்சி : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளும், மனதை
அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது. மனத்திற்கு மூன்று வகையான வேலை உண்டு. முதலாவது சிந்தித்தல். இரண்டாவது அந்த சிந்தனைக்கு ஏற்ப மனதில் உணர்ச்சிகள் தோன்றல். மூன்றாவது அந்த உணர்வுகளுக்கு ஏற்ப செயல்படுதல். காமம், வெகுளி, மயக்கம் என்பன
வரையறை கடந்து சென்று விடக்கூடாது.இவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் பயிற்சியே கல்வி எனும் மனப்பயிற்சியாகும். மனம் நன்றாக சிந்திக்க, சிந்திக்க ஞானம் உண்டாகிறது. ஞானத்தின் மூலமாக புலனடக்கத்தை பெற்று, வாழ்வில் வெற்றி காணலாம். படிப்பும் பயிற்சியும் ஒரு மாணவனுக்கு இளமையில் சவாலாக இருக்க வேண்டும். அந்த சவாலை ஏற்று கொண்டு மாணவன் பக்குவப்பட்டானால் அது அவனுக்கு எதிர்காலத்தில் நன்மை
யாகவே அமையும்.கல்விக்கும் அது வழங்கப்படும் இடத்திற்கும் உள்ள மிக நெருக்கமான தொடர்பு மனித மனங்களில் பல பதிவுகளை ஏற்படுத்துகிறது. அதனால் தான் பாரதி, ''கல்வி தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்'' என்று முழங்கினான்.

மாணவர்களை செதுக்கும் கல்விபட்டறைகள் அவர்களின் உள்ளத்தில் பசுமை குன்றாத,
வாழ்நாள் முழுமையும் தொடர்கின்ற இனிய நிகழ்வுகளை அடித்தளமாக அமைத்து தருகின்றன.

ஆசிரியர் கடமை : கல்வியை கற்று தருகின்ற ஆசிரியர், உயர்ந்த கொள்கையை உடையவராக காலம் தவறாதவராக கற்றறிந்தவராக, ஒழுக்க சீலராக மாணவரை நெறிப்படுத்துவராக இருக்க வேண்டும். தீய நுால்கள் தீமையை பரப்பி விடும். தீய ஆசிரியர் தீமைகளை விதைத்து விடுவர். கல்வி கற்பதற்கு தேவையான மகிழ்ச்சியான சூழ்நிலை. உள்ளொளியை துாண்டுதல், எளிமையாக கற்பித்தல், கருத்து வெளிப்பாடு ஆகிய நான்கு அடிப்படை அம்சங்கள் ஆசிரிய பணிக்கு
இன்றியமையாதது.ஆசிரியர்கள் அறிவை விற்க வந்தவருமல்ல. மாணவர்கள் அறிவை வாங்க வந்தவர்களும் அல்ல. இருவரும் ஒரு சேர வாழ்க்கை பயணத்தில், சமதளத்தில் பயணிக்கின்ற
பயணிகளை போல, இருவருடைய உறவும் அன்பை அடித்தளமாக கொண்டு அமைய வேண்டும். ஆசிரியர் மாணவனின் எதிர்கால நோக்கத்தை பற்றி அறிந்து பெற்றோருக்கு எடுத்துரைக்க வேண்டும். அத்தொலை நோக்கு பார்வையினை மாணவன் எட்டி பிடிப்பதற்கு அவன் மனதை வழிப்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை எடுத்து கூறுபவராகவும் ஆசிரியர் திகழ வேண்டும்.குழந்தை பருவத்தில் தாயை பார்த்தும், இளமை பருவத்தில் ஆசிரியரை பார்த்தும், இளமை கடந்த பின்பு, உலகை பார்த்தும் மனிதன் வாழ்க்கை பயணம் முழுவதும் கற்று கொண்டே இருக்கிறான். அத்தகைய மனித வாழ்க்கை முழுவதுமே கல்வி
பயணமாக அமைகிறது. இந்த கல்வியே நம் வாழ்க்கை பயணத்துக்கு கலங்கரை விளக்கமாகவும் அமைகிறது.

மகா.பாலசுப்பிரமணியன்
கல்வியாளர், காரைக்குடி 94866 71830

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement