Advertisement

பாலில் கலப்பு குற்றமென்றால் மொழி கலப்பும் குற்றமே - மனம் திறந்த மாத்தளை சோமு

தேசம் கடந்து சென்றாலும் கூட தமிழ் மீது நேசம் கொண்டிருப்பவர் இவர்; சிறுகதை, குறுநாவல், கவிதை, கட்டுரை என செல்லும் நாடெல்லாம் தமிழ் வளர்ச்சியை இலக்காக கொண்டிருப்பவர்; இவரின், 'அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்' நாவலுக்கு இலங்கையின் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது; இவரின் மற்றொரு நாவல், 'எல்லை தாண்டா அகதிகள்' இலங்கை அரசின் சுதந்திர இலக்கிய விருதை பெற்றது; அவர் ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் 'மாத்தளை' சோமு. மதுரை வந்தவர் தினமலர் வாசகர்களுக்காக பேசியதிலிருந்து...

* மலையகத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பு?
மலையகம் என்பது வடஇலங்கையின் மலைப்பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர் சார்ந்தது. தங்கள் வலி, வேதனைகள், அனுபவங்கள், மகிழ்ச்சிகளை இலக்கியமாக, கவிதையாக, நாட்டுப்புற பாடல்களாக, நாவல்களாக தந்துள்ளனர். தமிழர் பண்பாடு, கலாசாரம், மொழியின் சிறப்புகளை அறிந்து கொள்ள இந்த இலக்கியம் உதவியாக இருப்பது தான் சிறப்பு.

* பூர்வீகம் திருச்சியாமே?
ஆம். பல தலைமுறைக்கு முன்னால் இலங்கை சென்று விட்டோம். 1983ல் இலங்கையில் இனக்
கலவரம் உச்ச கட்ட நிலையில் இருந்த போது பாதிக்கப்பட்டதில் எங்கள் குடும்பமும் ஒன்று. அங்கிருந்து தப்பி ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தோம்.

* தமிழ் மீதான ஆர்வம் எப்படி?
இலங்கையில் பள்ளியில் பயின்ற காலங்களில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் கற்றிருக்கிறேன். ஆனால் மற்ற மொழிகளின் ஆதிக்கம் தமிழ் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது.

* படைப்பாளராக துாண்டியது?
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமியின் எழுத்துக்கள் தான். அவர்களது நுால்களை படிக்க, படிக்க எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.

* இலங்கை சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?
'அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்' என்ற நுாலுக்காக இலங்கை சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. ஈழக்கோமாளியின் சித்திரக்கதைகள், கருப்பன்னல், எல்லை தாண்டா அகதிகள்,
நமக்கென்ன ஒரு பூமி என சிறுகதை, நாவல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறேன்.

* எழுதியிருப்பவை?
தமிழர்களின் அறிவியல் திறனை விளக்கும் வகையில் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் என்ற நுால் ஐந்தாயிரத்திற்கு மேல் விற்றுள்ளது. திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ள அறிவியல் குறித்து நுால் எழுதியுள்ளேன்.

* தமிழகத்தில் தமிழ் எப்படி?
தமிழகத்தில் தமிழ் பயன்பாடு கவலையளிக்கிறது. ஆங்கில சொற்கள் கலப்பு தமிழில் அதிகமிருக்கிறது. தமிழில் அழகிய சொற்கள் பல இருக்கும் போது மற்ற மொழி சொற்களை ஏன் கடன் பெற வேண்டும்? பாலில் தண்ணீர் கலப்படம் செய்தால் குற்றம். ஒரு மொழியில் மற்ற மொழியை கலப்பது குற்றமில்லையா? ஆங்கிலம் படித்தால் மட்டுமே ஞானியாகி விட முடியாது. ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை கற்பதில் தவறில்லை. உலக தொடர்புக்கு ஆங்கிலம், உள்நாட்டு தொடர்புக்கு இந்தி படிப்பதுடன், தாய் மொழி அழியாமல் அடையாளம் காக்க தமிழை கட்டாயம் பயில வேண்டும். தமிழ் கட்டாய வழிக்கல்வியை கொண்டு வர வேண்டும்.

* தமிழின் சிறப்பாக கருதுவது?
ஆங்கிலம் பயின்று அமெரிக்கா கம்பெனியில் இயக்குனராக இருப்பதால் தனி நபருக்கு வேண்டுமென்றால் நன்மை பயக்கலாம். தாய் நாட்டிற்கு என்ன பயன்? அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் ரைஸ் என்றால் சாதத்தையும், அரிசியையும் குறிக்கும். ஆனால் தமிழில் சாதம், அரிசி,
நெல் என பல சொற்களாக குறிப்பிடுகிறோம். தொலைக்காட்சி என்ற தமிழ் வார்த்தை தொலைவில் காட்சி படுத்தும் கருவியை குறிக்கும் அழகான தமிழ் சொல். இப்படி தமிழின் சிறப்புகளை அடுக்கி கொண்டே செல்லலாம்.

*ஆஸ்திரேலியா தமிழ் சங்கத் தலைவராக செய்தது?
தமிழ் சங்கம் மூலம் மாதந்தோறும் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம். அங்குள்ள பல்கலையில் தமிழ் பாடம் கற்பிக்க முயற்சித்து வருகிறோம். ஆஸ்திரேலியா அரசு தன் ரேடியோவில் தமிழ் ஒலிபரப்புக்கு மூன்று மணிநேரம் ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ஓசை, தென்றல் என இரு மாத தமிழ் இதழ்கள் வெளியாகி தமிழ் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளன. மதுரை சித்திரை திருவிழா போல அங்கும் விழா எடுத்து தமிழ் இலக்கிய விழா நடத்தப்படுகிறது.
பாராட்ட: Mmathtalaisomugmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (1)

  • visweswaran a. subramanyam - Edmonton,கனடா

    தமிழகத்தில்இருந்து வெளியாகும் முக்கிய பத்திரிகைகள் பலவும் (பெயர் கூறாமலே புரியும்) தமிழில் ஆங்கில சொற்களை பெருவாரியாகக் கலந்து கட்டுரைகளை பொறுப்பேயில்லாமல் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. இவைகளின் போக்கு மாற வேண்டும். மற்றும் திராவிடம் திராவிடம் என்று வேடம் போடும் ஊடகங்களிலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பெருகி வருவது மிகவும் கவலையைத் தருகிறது. வடமொழி ஆதிக்கத்திலிருந்து மீள வேண்டும் என்று கூறும் 'திராவிடப் போர்வை' போற்றிக்கொண்டு பிதற்றும் நபர்கள் ஆங்கில ஊடுருவல்கள் பற்றி என்றைக்கும் கவலை பட இயலாது.... இதில் 'ழ' கரத்தையும் 'ல' கரத்தையும் 'ள' கரத்தையும் கலந்து அடிப்பது இன்னொரு பொருத்திக்கொள்ள இயலாத கூத்து. ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டிய தமிழைக் காக்கும் பொறுப்புணர்வு மட்டுமே இவற்றிற்கு எல்லாம் தீர்வினைத் தர இயலும். ஆதங்கத்துடன், ஓர் தமிழன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement