Advertisement

ஒத்துப்போகும் உணர்வை பெறுங்கள்!

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த
ஞானம் வந்தால் பிறகு நமக்கென்ன வேண்டும்'
என்பார் பாரதியார்.

மற்றவர்கள் எதை எதையோ ஞானம் என்று சொல்லும்போது, ஒற்றுமையாக இருப்பது ஞானம் என்று சொல்வதை எண்ணி பார்க்க வேண்டும். அதற்கு அவ்வளவு வலிவு உண்டு.
'எதிர்ப்பது எளிது, ஒத்துப்போவது மிக மிக அரிது' என்றார் டாக்டர் மு.வரதராஜனார்.
எதிர்ப்பு என்பது களை மாதிரிதானே, முளைத்துவிடும். ஒத்துப்போகும் குணம் என்பது பயிர் மாதிரி. நாம்தான் விதை போட்டு வளர்க்க வேண்டும். நமது வெற்றிக்கு அடுத்தவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எல்லாவற்றையும் நாமே செய்துவிட முடியும்.
என்னதான் ஒருவருக்கு ஆற்றலும், அறிவும் மிகுந்திருந்தாலும் மற்றவர்களின், அனுசரணையும் ஆதரவின்றி செயல்படுவது பணியை சுமையாக்கிவிடும்.

பரிவுடன் பரிமாறிக் கொள்ளுங்கள்

'விட்டுக் கொடுப்பது என்பது
வீழ்வது அல்ல, விதைப்பது'

என்பதை உணர வேண்டும். உங்கள் கருத்துக்களையும், எண்ணங் களையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சாதகமான உணர்வுகளை நீங்கள் எளிதில் வெளிப்படுத்த இயலும். பிறருடன்
சுமூகமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டுமானாலும் அவர்களிடம்
உங்களுக்கு படித்த கூறு எது? அவர்கள் செயல்பாட்டில் உங்களை கவர்ந்தது எது? என்பதை அவர்களிடம் கூறுங்கள். நீங்கள் பிறரை பற்றி கூறும் நல்ல கருத்துக்கள் உண்மையானவையாக இருக்க வேண்டும்.

பொய்யான புகழ்ச்சி வார்த்தைகள் : விரைவிலே கண்டுபிடிக்கப்பட்டுவிடும். பேசியவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மிகுந்த பலனை தரும். விரிசல் ஏதும் இருந்தால் அதை ஒட்டும் பசையாக அது மாறிவிடும்.
அனுசரணையாக இருப்பது ஒத்துப்போதல் என்பது தன்னுடைய தனித்தன்மையை இழப்பதல்ல, அனுசரித்து போவது.ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தனது புதிய பெண்
ஸ்டெனோவுடன் கடுகடுப்பாக இருப்பார். எதற்கெடுத்தாலும் குறை சொல்வார். கொஞ்சம் நேரம் சீட்டில் இல்லாமல் இருந்தால்கூட சிடுசிடுப்பார். அவரை சமாளிப்பது கடினம் என்று உணர்ந்த பெண், வேலையை ராஜினாமா செய்ய எண்ணினார்.தனது நலனில் அக்கறை கொண்ட ஒரு பெரியவரிடம் ஆலோசனை கேட்டாள். 'கொஞ்சம் அவரை அனுசரித்து போக பழகிக்கொள்' என்றார் பெரியவர். 'எப்படி' என்று கேட்டாள். 'அவரது எதிர்மறை குணங்களையே நினைத்து நீ விசனப்
படுகிறாய். அதனால் உனக்குள்ளேயே எரிந்துக்கொண்டிருக்கிறாய். முதலில் அந்த நிலையை மாற்று. அவரிடம் ஏதேனும் ஓரிரு சிறப்பு அம்சங்கள் இருக்கும். அவற்றை கண்டுபிடித்து பாராட்ட பழகிக்கொள். அவர் கொடுக்கிற வேலைகளை அதிகப்படியாக இருந்தாலும், முகம் சுளிக்காமல் செய். நல்ல அம்சங்களை பாராட்டு' என்றார்.இந்த ஆலோசனைகளை அவர் பின்பற்ற தொடங்கினாள். என்ன வேலை சொன்னாலும் புன்முறுவலோடு எதிர்கொண்டாள். ஒருநாள் அவர் கொடுத்த டிக்டேஷனை குறிப்பெடுத்துக்கொண்ட பின், 'சார், நான் ஒரு கருத்து சொல்ல அனுமதிப்பீர்களா' என கேட்க, அவரும் 'எஸ்' என்றார்.
'நீங்கள் டிக்டேஷன் கொடுக்கிற வேகமும், வார்த்தை வளமும், படிப்பவர் யாவரையும் கவர்ந்துவிடும். சொல்லுகிற நேர்த்தியும் ரொம்ப நல்லா இருக்கும் சார்' என்றாள்.
'ஓ! அப்படியா தேங்க்ஸ்' என்று அவர் நிறுத்திக் கொண்டாலும், அது அவருக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. அவள் சொன்னது உண்மையில் புகழ்ச்சியில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரது நடை, உடை, பாவனைகளை எல்லாம் பாராட்ட தொடங்கினாள்.
மூன்று மாதங்கள் கழித்து அந்த பெரியவரை சந்தித்தாள். மகிழ்ச்சி பூத்த அவளது முகத்தை கண்ட பெரியவர், 'என்னம்மா, நிலைமை எப்படி இருக்கு' என்றார்.
'எங்கள் தொடர்பு நட்பாகி, காதலாகி விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறோம்' என்றாள் அவள்.

பெருந்தன்மை வேண்டும்

'முரண்படுவது மிருக குணம்
உடன்படுவது மனித குணம்'

வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள், விரக்திகள், வேதனைகளால் அதிகம் பாதிக்கப்படாமல் இன்பமாக வாழ்ந்து இமயம் தொட நினைப்பவர்கள், பெருந்தன்மை குணத்தை பெற்றிருக்க வேண்டும்.பெருந்தன்மை குணம் என்பது முதிர்ச்சியின் வெளிப்பாடு. அனுபவத்தின் வெகுமதி, நிதானமும், பொறுமையும் இல்லாமல் ஆத்திரமாகவும், கோபமாகவும் பிரச்னைகளை அணுகினால், அவை இன்னும் வலுவாகி பெரும்பூதம் ஆகிவிடும்.மனிதன் என்பவன் தனக்காக மட்டும் இல்லாமல் பிறருக்காகவும், வாழப்பிறந்தவன். அவனது வாழ்க்கையும், இரக்கமாகவும், ஈகையாகவும், அன்பாகவும், அனுசரணையாகவும் மாற வேண்டியது அவசியம்.

இனிய இல்லறம்

இனிய இல்லறம் அமைய இந்த இணங்கிப் போகும் குணம் மிகவும் அவசியம். 'நீயா, நானா' என்று ஆணவத்தின் அடையாளங்களாய் வாழ்வதைவிட நாம், நமக்காக, பிறகு பிறருக்காக என்று வாழ்வை அமைத்துக்கொண்டால் இல்லறம் இனிக்கும். பிரச்னைகளை தீர்ப்பது
எப்படி என்பதை பற்றி யோசிக்காமல், பெரிதாக்குவது என்ற முனைப்பு வருவதால்தான் உடைந்த உள்ளங்கள் உருவாகின்றன.ஒரு திருமண வீட்டில் மணமக்களை வாழ்த்தி பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டேன்.

இல்லறத்தில் மகிழ்ச்சி எப்போது வரும்? புடவை பட்டு கொடுத்தால் வருமா வரதட்சணை பணம் கொடுத்தால் வருமா சீர்வரிசை தட்டுக்கொடுத்தால் வருமா அப்போதெல்லாம் விட, தம்பதியர்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் வரும். சரி, யார் விட்டுக்கொடுப்பது?இப்போது குறிப்பிடும் சம்பவத்தை படியுங்கள்.ஒரு வீட்டில் காலை நேரம் கணவர், முன் ஹாலில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார். அடுப்படியில் இருந்து காபி ரெடி என்று மனைவி குரல்
கொடுத்தார். பீங்கான் கப்பில் காபியும் வந்தது. பேப்பர் படித்தபடியே வலது கையை நீட்டினார் கணவர். கையில் காபி கோப்பையை வைத்தார் மனைவி. ஆனால், கப் நழுவி கீழே விழுந்து உடைந்தது.இப்போது ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கொள்ள சந்தர்ப்பம் உருவாகி
விட்டது. ஆனால், நடந்தது என்ன தெரியுமா? 'கப் உடைந்து போனதற்கு நான்தான் காரணம். பேப்பர் படித்துக்கொண்டே அலட்சியமாக கையை மட்டும் நீட்டியது தவறு. பேப்பரை கீழே வைத்துவிட்டு, உன் பக்கம் திரும்பி, இரு கைகளையும் நீட்டி கப்பை வாங்கியிருந்தால் கீழே விழுந்து
இருக்காது. என்னை மன்னித்துவிடு' என்றார் கணவர்.
'இல்லை! நான் தான் காரணம். நீங்கள் கையை நீட்டியதும், உங்கள் உள்ளங்கையில் சரியாக வைத்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் 'டிவி'யில் செய்தி வாசித்த பெண்ணின் புடவை புது டிசைனாக இருந்ததால் என் பார்வை அங்கு போய்விட்டது. அதனால் கையின்
ஓரமாக கப்பை வைத்ததால் கீழே விழுந்து
விட்டது. தவறுக்கு நான்தான் காரணம். என்னை மன்னித்து விடுங்கள்' என்றார் மனைவி.
பார்த்தீர்களா? பரஸ்பரம். இருவரும் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறார்கள். இருவரும் தோற்றுப்போக தயாராக இருந்தால் இல்லறம் ஜெயிக்கும்.
நீயா, நானா என்று போட்டியிட்டால் ஒருவர் ஜெயிக்கலாம். ஆனால் இல்லறம் தோற்றுப்போகும். உடல் ரீதியான கோளாறுகளுக்கு வேண்டுமானால் விவாகரத்து கேட்கலாம். மனரீதியான பிரச்னைகளுக்கு, ஒத்துப்போகும் உணர்வே மருந்து.

மாமியார் மருமகள் பிரச்னை : இருவருக்கும் இடையே உள்ள ஆணவ உணர்ச்சிதான் மோதலுக்கு காரணம். படித்த மருமகளுக்கு தன்னைவிட தற்கால அறிவு அதிகமாக இருக்கும் என்பதை மாமியார் உணர வேண்டும்.மாமியாருக்கு அனுபவ அறிவு அதிகம் இருக்கும் என்பதை மருமகள் உணர வேண்டும். இரண்டும் இணைந்தால் குடும்பம் சிறக்கும் என்ற ஒத்துப்போகும் உணர்வு இருந்தால் மோதலுக்கு அவசியம் இல்லையே! குழந்தை வளர்ப்பில் இருந்து குடும்ப நலன் மட்டுமே நோக்கமாயிருந்தால் வேண்டாத வெறுப்புணர்வு எதற்கு? சிறு சிறு பிணக்குகள் வந்தாலும் நயமாக பேசி தீர்த்துக்கொள்ளலாமே?உறவினர்கள், நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும் நண்பர்கள் மத்தியிலும் சிறு, சிறு பிரச்னைகள் தலைதுாக்கும்போது அவை விரிசலாக மாறிவிடாமல் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் மனோநிலையில் இருதரப்பும் இருக்க வேண்டும். சந்தேகமும், பிறர் சொல்வதை எல்லாம் நம்பும் குணமும் தேவையில்லாத பிரிவை ஏற்படுத்திவிடும். இருதரப்பினரும் திறந்த மனதோடு பேசி சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

கடித்து குதறுவது மிருக குணம் : அணைத்து மகிழ்வது மனித குணம்இதயங்களை இணைப்போம்இன்பமாய் வாழ்வோம்.

முனைவர் இளசை சுந்தரம்
எழுத்தாளர், மதுரை. 98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement