Advertisement

இளைஞர்கள் சேட்டை பண்ணணும்

மதுரம் சிந்தும் மங்கை இவள் வாய்; அதரம் இரண்டும் ஆரஞ்சு பழமாய்; சிரம் தாழ்ந்த நாணம் கொண்டு, செந்துாரமாய் சிவந்த முகம் கண்டு, வரம் தந்த இறைவனே வாய் பிளந்து நிற்பதுண்டு; ஊக்கம் தரும் ரசிகர்களின் உறக்கம் கெடுப்பவள் என்ற வர்ணனைக்கு தகுதியானவர். சின்னத்திரை, வண்ணத் திரையென வலம் வரும் வாய்ப்பை பெற்றவர்; தொகுப்பாளினி, நடிப்பாளினியாகி வாலிப உள்ளங்களை வாட்டி வதைப்பவர் நடிகை நிஷா.
தினமலர் சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக நிஷா மனம் திறந்த நேரம்...

* உங்கள் ஊர்?
தேனி மாவட்டம் சின்னமனுார். சென்னையில் வசிக்கிறோம். படிப்பு விஷூவல் கம்யூனிகேஷன். மாடலிங்கில் பரிசு குவித்ததால், 'டிவி' தொகுப்பாளர். நெஞ்சம் மறப்பதில்லை உட்பட சில படங்களில் நடித்துள்ளேன்.

* பிடித்த ரோல்?
சீரியசாகவும், காமெடியாகவும் நடிப்பேன். கொடுக்கிற கதையை பொறுத்து அது அமையும். எந்தக் கதையானாலும் ஈடுபாட்டோடு நடித்தால், வாய்ப்புகள் தேடி வரும். இயக்குனர்களும் நம்மையே விரும்புவர்.

* நடிக்க தேவை...?
அழகை மட்டும் வைத்து எதையும் சாதிக்க முடியாது. அறிவும் இருந்தால்தான் அது எடுபடும். அதனால் நமது திறமைகளை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

* 'மேக் அப்' ஆர்வம்?
நான் மேக் அப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டேன். இயற்கை அழகே போதுமானது. அதை நாம் பராமரித்தால் அழகாகத்தான் தோன்றுவோம்.

* பெண்களின் ஆர்வம் அதுதானே?
யார் சொன்னது. இது தவறு. பெண்களை விட ஆண்கள்தான் 'மேக் அப்'பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பெண்களுக்கும் சற்றும் குறைவின்றி, ஆண்களுக்கும் ஏராளமான 'மேக் அப்' சாதனங்கள் சந்தைக்கு வந்துவிட்டது. பல ஆண்கள் 'மேக் அப்' இல்லை என்றால் சோளக்காட்டு பொம்மை மாதிரிதான் இருப்பர்.

* உங்கள் சினிமா...?
நான் சிவப்பு மனிதன், இவன் மாதிரி, என்ன சத்தம் இந்த நேரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளேன். பல 'டிவி'க்களில் தொடர்கள் மற்றும் தொகுப்பாளராக உள்ளேன்.

* ரசிகர்கள் தொந்தரவு உண்டா?
ரசிகர்கள் இல்லாவிட்டால் நமக்கு முன்னேற்றம் இல்லை. அவர்கள் இல்லை என்றால் நமக்கு சம்பளம் இல்லை, உயர்வு இல்லை. ரசிர்களை அன்பு தொல்லையாக கருத வேண்டும்.

* பொழுதுபோக்கு?
புத்தகங்கள் ஏராளமாக படிப்பேன். சூட்டிங் போனாலும் நான்கு புத்தகங்களுடன் தான் போவேன். இரவில் நெடுநேரம் படிப்பேன். உளவியல் சார்ந்த புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். படிப்பதில் உள்ள சுகத்தையும், அதனால் ஏற்படும் சிந்தனை வளர்ச்சியையும் படிப்பவர்கள்தான் அறியமுடியும்.

* சமையல் செய்வீர்களா?
சைவம் சமைப்பேன். நான் சமைத்து ஒரே ஒருமுறை நீங்கள் சாப்பிட்டீர்களானால், வாழ்க்கையில் அதை மறக்கவே மாட்டீர்கள்.

* பிற மொழிகள்?
பல மொழிகளை தெரிந்து கொள்வதில் தவறில்லை. எனக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஆறு மொழிகள் தெரியும். நான் முறையாக படித்து தெரிந்து கொள்ளவில்லை. நண்பர்கள் பேசுவதைக் கேட்டு தெரிந்து கொண்டேன். ஆனால் சரளமாக பேசுவேன். நான் கூடைப்பந்து வீரர். தடகளத்திலும் பரிசுகள் வாங்கி இருக்கிறேன்.

* இன்றைய இளைஞர்கள் குறித்து உங்கள் கருத்து
சேட்டைகள் செய்யாவிட்டால் அவர்கள் இளைஞர்களே இல்லை. தற்போதைய இளைஞர்கள் புத்திசாலிகள். எவ்வளவு சேட்டை செய்தாலும், அவர்களுக்கும் பொறுப்பு உள்ளது என்று நினைக்கின்றனர், என்றார்.
நிஷா நடிப்பை பாராட்ட... ishakrishnan89gmail.com ல் கிளிக் செய்யலாம்.

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement